உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, மார்ச் 04, 2012

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கைலாய இசைக்கருவிகள் வாசிப்பதற்கு தடை!

        விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கைலாய இசைக்கருவிகள் வாசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனை மீறி இசைக்கலைஞர்கள் இசைக்கருவிகளை வாசித்து கொண்டே கோவிலுக்கு நுழைய முயன்ற போது அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு பெண் உட்பட 24 பேரை போலீசார் கைது செய்தனர்.

          கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் கோவிலில் அர்த்தசாமபூஜை, பிரதோஷம், ஆருத்ரா தரிசனம், ஆடிப்பூரம் உள்ளிட்ட விழாக்காலங்களின்போது இசைக்கலைஞர்கள் கைலாய இசைக்கருவிகளை (கொம்பு ஊதுதல்) கொண்டு வாசித்து இறைப்பணியாற்றி வந்தனர். . இந்த நிலையில் கைலாய இசைகருவிகள் அதிகளவில் சப்தம் (ஒலி) ஏற்படுகிறது. எனவே அவற்றை கோவிலுக்குள் வாசிக்க கூடாது என , கடந்த 7 7 11 அன்று அறிவிப்பு பலகைகளில் நோட்டீசு ஒட்டப்பட்டது. இதைதொடர்ந்து, இசைகலைஞர்கள் கைலாய வாத்தியங்களை வாசிப்பதை தவிர்த்து வந்தனர். இருப்பினும் அத்தகைய இசைகருவிகளை வாசிக்க அனுமதி கேட்டு இந்து அறநிலைய துறை அதிகாரிகளிடம் சிவ காண பூத கன நாதர் இசை திருக்கூட்டத்தை சேர்ந்தவர்கள் கடிதமும் கொடுத்திருந்தனர்.

            ஆனால் அதற்கு சரியான பதில் கிடைக்காத காரணத்தினால் இசைக் கலைஞர்கள் கடந்த ஜனவரி மாதம் 8 ந் தேதி ஆருத்ரா தரிசனத்தன்று மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் ஆதரவுடன் கோவிலுக்குள் இசைக் கருவிகளை வாசிக்க தொடங்கினர். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் த சிவாச்சாரியார்கள் வீதியுலாவிற்கு தூக்கிச்சென்ற சாமியை கீழே இறக்கி வைத்து விட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வாசிக்கலாம் என முடிவு செய்யப்பட்டு, அன்று இரவு அர்த்த சாமபூஜைக்கு கைலாய இசைக்கருவிகள் வாசிக்கப்பட்டது.

             இந்த நிலையில், விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மக திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 03.03.2012 அன்று 6 ம் நாள்  கோவில் கட்டிய விபத்து முனிவருக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி' நடந்தது. இந்த விழாவில் சிவ காண பூத கன நாதர் இசை திருக்கூட்டத்தை சேர்ந்த இசைக்கலைஞர்கள் விருத்தாசலம் பஸ் நிலையத்திலிருந்து ஊர்வலமாக கைலாய இசைக்கருவிகளை வாசித்து கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு முன்பு வந்தனர். அப்போது, அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

            பின்னர், தாசில்தார் பிரபாகரன், இன்ஸ்பெக்டர் சீராளன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ரிஷபவாகனத்தில் சாமியும், அம்மனும் கோவில் வெளி மண்டபத்திற்கு வந்த போது, கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கைலாய வாத்திய இசைக்குழுவினர் இசை வாசிக்க ஆரம்பித்தனர். இந்நிலையில், நாங்களும் வாசிப்போம் என இசை திருகூட்டத்தை சேர்ந்தவர்கள் இசைக்கருவிகளை வாசித்து கொண்டே நடந்து சென்றனர். அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதில் போலீசாருக்கும், இசைக்கலைஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு தள்ளு முள்ளு நடந்தது. பின்னர், ஒரு பெண் உட்பட 24 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். இதையடுத்து, சாமி வீதியுலா வழக்கம் போல நடந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

           இந்த பிரச்சினை குறித்து திருவிழாவுக்கு முன்பே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய பேச்சுவார்த்தை நடத்தி துரித நடவடிக்கை எடுத்திருந்தால் இது போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது என பக்தர்கள் கருத்து தெரிவித்தனர்.



































Read more »

மிக விரைவில் கடலூரில் மிக பெரிய பேருந்து நிலையம்

கடலூர்:
 
        கடலூரில் விரைவில் விசாலமான பஸ் நிலையம் அமையும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது.  
 
            3 ஆயிரத்துக்கும் அதிகமான பஸ்கள் வந்துபோகும் கடலூர் திருப்பாப்புலியூர் பஸ்நிலையம் இடநெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. மேலும் இந்த பஸ் நிலையத்தை பஸ் நிலையம் என்று சொல்வதை விட வணிக வளாகம் என்று கூறுவதே மிகவும் பொருத்தமாக இருக்கும். இங்கு வணிகர்களின் ஆதிக்கம்தான் மேலோங்கி காணப்படுகிறது. இதனால் பஸ் பயணிகளின் நலன்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது.  எனவே இதை நகர பஸ் நிலையமாக்கி விட்டு, கரும்பு ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள இடத்தில் புதிய விசாலமான பஸ் நிலையத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்து பலமாகப் பேசப்பட்டு வந்தது. கடலூர் நகராட்சியிலும் புதிய பஸ்நிலையம் வேண்டும் என்ற தீர்மானம் ஏற்கெனவே 6 ஆண்டுகளுக்கு முன் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. 
 
          இந்த நிலையில் கடலூர் செம்மண்டலத்தில் 130 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில் புதிய பஸ்நிலையம் அமைக்கலாம் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது. கரும்பு ஆராய்ச்சி நிலைய நிலத்தில் நிலத்தடி நீர், உவர் நீராகி விட்டதால் பயிர்கள் சரியாக வளர்வதில்லை என்று கூறப்படுகிறது.   எனவே இங்குள்ள வேளாண் துறை அலுவலகங்கள், வேளாண் பல்கலைக்கழக அலுவலகம் ஆகியவற்றுக்கான கட்டடங்கள் அமைந்து இருக்கும் நிலங்களை மட்டும் விட்டு விட்டு, மீதம் உள்ள நிலத்தை பஸ் நிலையத்துக்காக எடுத்துக் கொள்ளலாம் என்று ஆலோசனை தெரிவிக்கப்பட்டு உள்ளது.  
 
          கரும்பு ஆராய்ச்சி நிலையத்துக்கு வெள்ளப்பாக்கம் பகுதியில் உள்ள அரசுக்குச் சொந்தமான 90 ஏக்கர் நிலத்தை வழங்கலாம் என்றும் ஆலோசனை கூறப்பட்டு உள்ளது. இதுகுறித்து வேளாண் பல்கலைக்கழக அதிகாரிகளுக்கும் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கும் இடையே கடந்த இரு நாள்களாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.  புதிய பஸ்நிலையம் அமைக்கும் திட்டத்தை, வணிகப் பெருமக்கள் எவ்வாறு எடுத்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. ஏற்கெனவே லாரன்ஸ் சாலையில் ரயில்வே மேம்பாலம் வரவிடாமல் தடுத்த பெருமையும், ரயில்வே சுரங்கப்பாதை வரக்கூடாது என்று நீதிமன்றம் வரை சென்ற பெருமையும் அவர்களுக்கு உண்டு.  
 
          தற்போதைய பஸ்நிலையம் அமைந்திருக்கும் லாரன்ஸ் சாலையில் பெரும்பகுதி நிலங்கள், கோயில்களுக்கும் நகராட்சிக்கும் சொந்தமானவை. இதில்தான் பெரும்பகுதி வணிகர்கள் கட்டுமானங்களைச் செய்து கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். இவர்களின் வர்த்தகத்தால் கோயில்களுக்கோ, நகராட்சிக்கோ பெரிய வருவாய் எதுவும் இல்லை என்பதுதான் குறிப்பிடத்தகுந்தது.
 
 
 
 
 
 
 

Read more »

தமிழகத்தில் விளையாட்டில் சிறந்த மாணவர்களுக்கு ரூ.1.94 கோடி உதவித் தொகை அறிவிப்பு

கடலூர்:

         தமிழகத்தில் விளையாட்டில் சிறந்த மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க அரசு ரூ. 1.94 கோடி ஒதுக்கி இருப்பதாக கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் கே.திருமுகம் தெரிவித்தார்.  

 
         கடலூர் கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வியாழக்கிழமை நடந்தது. இதில் 6, 7, 8-ம் வகுப்புகளில் பயிலும், மாணவ மாணவிகள் 750 பேர் பங்கேற்றனர். மாணவ மாணவிகளுக்கு தனித்தனியாக 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.  இதில் தேர்ந்தெடுக்கப்படும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தவர்களும், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 29-ம் தேதி நடந்த போட்டிகளில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தவர்களும், திருவண்ணாமலையில் நடைபெற இருக்கும், மண்டல விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.  

         கடலூரில் வியாழக்கிழமை நடந்த விளையாட்டுப் போட்டிகள் பரிசளிப்பு விழாவுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் கே.திருமுகம் தலைமை வகித்தார். வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை கடலூர் மாவட்டக் கல்வி அலுவலர் செ.சாந்தி பரிசுகளை வழங்கி பாராட்டினார்.  

விழாவில், மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் பேசுகையில், 

         திருவண்ணாமலையில் நடைபெற இருக்கும் போட்டிகளில் வெற்றிபெற்று, முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் மாணவ மாணவிகளுக்கு, தலா ரூ. 6 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். மேலும் இவர்கள் விளையாட்டு விடுதிகளில் தங்கி இலவசமாக மேல்படிப்பு பயிலவும் அரசு உதவி செய்கிறது.  விளையாட்டில் சிறந்த மாணவர்களைத் தேர்வு செய்யவே, இப் போட்டி மாநிலம் முழுவதும் நடத்தப் படுகிறது. இவர்களுக்கு பரிசு, உதவித் தொகை வழங்குவதற்காக, வரும் கல்வியாண்டுக்கு மட்டும் தமிழக அரசு ரூ.1.94 கோடி நிதி ஒதுக்கி இருக்கிறது என்றார்.







Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior