உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 08, 2011

சிதம்பரம் அரசினர் நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பராமரிப்பின்றி மோசமான நிலை

சிதம்பரம் :

             பராமரிப்பின்றி மோசமான நிலையில் உள்ள சிதம்பரம் அரசினர் நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மாணவர் விடுதியை சீரமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.  

 இது குறித்து சட்டப்பேரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கொறடாவும், சிதம்பரம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே. பாலகிருஷ்ணன் முதல்வர் ஜெயலலிதாவுக்கு புதன்கிழமை அனுப்பிய மனு:

          தாழ்த்தப்பட்ட மக்களுக்காக சுவாமி சகஜானந்தரால் சிதம்பரம் அரசு நந்தனார் பள்ளிகள் உருவாக்கப்பட்டன. இதனால் இப்பகுதியில் அதிகமான ஆதிதிராவிட மாணவர்கள் கல்வி அறிவு பெற்றார்கள்.  சிறப்பு வாய்ந்த இப்பள்ளிகள் மற்றும் விடுதிகள் இப்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளன. கடந்த 26-7-2011-ல் விக்னேஷ் என்ற மாணவனும், 17-11-2011-ல் விமல்ராஜ் என்ற மாணவனும் தற்கொலை செய்து கொண்டனர். அமைச்சர்களும், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகும் நிலைமை மாறவில்லை. 

             இப்பள்ளியினை சீரமைக்க ரூ. 17 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மொத்த பள்ளிகள் மற்றும் விடுதிகளை சீரமைக்க இந்த நிதி போதுமானதல்ல. சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டுள்ள ஒப்பந்ததாரர்கள் தாமதமாகவும், தரமற்ற முறையிலும் வேலைகளை செய்து வருகின்றனர்.  இடிந்த நிலையில் உள்ள பள்ளிகள் மற்றும் விடுதிகளின் கட்டடங்கள், கழிவறைகள், குளியலறைகள், சமையல் மற்றும் உணவு அறைகள், சோதனைக் கூடம், நூல் நிலையம் ஆகியவற்றை மேம்படுத்த பொறியாளர்களைக் கொண்ட குழு அமைக்க வேண்டும். இதற்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும். இதுவரை நடைபெற்றுள்ள மாணவர்களின் தற்கொலை வழக்குகளை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும். 

         தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்திட இத்துறையிலேயே தனி கல்வி இயக்குநரகத்தை உருவாக்க வேண்டும் என மனுவில் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
















Read more »

திட்டக்குடி வெலிங்டன் ஏரியிலிருந்து பாசனத்துக்கு நீர் திறப்பு




  கடல் போல் கட்சியளிக்கும் திட்டக்குடி வெலிங்டன் நீர்த்தேக்கம்.
 
விருத்தாசலம்:
 
          கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் கீழ்ச்செருவாய் கிராமத்தில் உள்ள வெலிங்டன் ஏரியிலிருந்து விவசாயத்துக்காக புதன்கிழமை தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 
 
           இதன்மூலம் 15,820 ஏக்கர் நிலம் பயன்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய நீர்த்தேக்கங்களில் திட்டக்குடி வட்டம் கீழ்ச்செருவாய் கிராமத்தில் உள்ள வெலிங்டன் நீர்த்தேக்கம் முக்கியமானதாகும். இந்த நீர்த்தேக்கத்தின் மூலம் திட்டக்குடி மற்றும் விருத்தாசலம் பகுதிகளிலுள்ள 63 கிராமங்களுக்கு உள்பட்ட 24,059 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன. நீர்த்தேக்க கரையின் ஒரு பகுதி பலப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு 27 அடி உயரத்திற்கு மட்டும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. 
 
             இந்த நீர்தேக்கத்தின் இப்போதைய கொள்ளளவாக 1,890 கனஅடி உள்ளது. இதன் மூலம் 15,820 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் வினாடிக்கு 13,561 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.  ஊரக தொழில்துறை மற்றும் சத்துணவுத் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், சமூகநலத் துறை அமைச்சர் செல்விராமஜெயம் ஆகியோர் தண்ணீரை திறந்து விட்டனர்.  விவசாயிகள் குறை: 24,059 ஏக்கர் பயன்பெறத்தக்க வகையில் அமைக்கப்பட்டுள்ள நீர்த்தேக்கத்தில் இருந்து இப்போது திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர், 15,820 ஏக்கர் மட்டுமே பாசன வசதி பெறக்கூடிய நிலையில் உள்ளது. 
 
              இதிலும் கூட கடைமடைப் பகுதியிலுள்ள நிலங்களுக்கு தண்ணீர் செல்வதற்கு முழுமையான வாய்ப்பு இல்லை. கரைகளைப் பலப்படுத்தினால் ஏரியில் முழு கொள்ளளவு தண்ணீரை தேக்க முடியும். இதனால் 24,059 ஏக்கர் நிலமும் பயன்பெறும்.  ஆனால் கரைகள் முழுமையாக சீரமைக்கப்படவில்லை. இதேபோல் பாசன வாய்க்கலை தூர்வாராததால் திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீரும் பாசன நிலங்களுக்கு முழுமையாக செல்லாத நிலையே உள்ளது. எனவே தமிழக அரசு ஏரியின் கரைகளை பலப்படுத்தி, வாய்க்கால்களை பராமரிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.  
 
            ஏமாற்றம்: ஒவ்வொரு முறையும் தண்ணீர் திறந்து விடப்படும்போது தண்ணீர் திறக்கப்படும் பகுதியில் மலர்கள் மற்றும் நவ தானியங்களை தண்ணீரில் போடுவது வழக்கம். இந்த ஆண்டு அவ்வாறு செய்யாதது ஏமாற்றம் அளித்ததாக விவசாயிகள் தெரிவித்தனர். 



















Read more »

கடலூரில் மழை வெள்ளத்தில் இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்

கடலூர்:

            மழை வெள்ளத்தினால் இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு, ரூ. 2 லட்சம் நிவாரண உதவியை சட்டப் பேரவை உறுப்பினர் சொரத்தூர் ராஜேந்திரன் புதன்கிழமை வழங்கினார்.  

            கடலூர் அருகே உள்ள வெள்ளக்கரை கிராமத்தைச் சேர்ந்த வாசுகி (14) மழை வெள்ளத்தில் சிக்கி அண்மையில் இறந்தார். அவரது குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகையாக, முதல் அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் வழங்கப் பட்டது.  இதற்கான காசோலையை வாசுகியின் தாயார் கலாவதியிடம் சொரத்தூர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. வழங்கினார். கடலூர் வட்டாட்சியர் எழிலன், ஊராட்சித் தலைவர் கே.கிருஷ்ணசாமி, கிராம நிர்வாக அதிகாரி தயாளு, அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் பழநிசாமி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தேவநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

மாடுகளுக்கு நிவாரணம்: 

          மழை வெள்ளத்தில் சிக்கி இறந்த இரு வண்டி மாடுகளுக்கு நிவாரணமாக அவற்றின் உரிமையாளருக்கு ரூ. 40 ஆயிரம் புதன்கிழமை வழங்கப்பட்டது.  கடலூர் தங்கராஜ் நகர் சம்பத்துக்குச் சொந்தமான இரு மாடுகள், கெடிலம் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தன. இதற்கு நிவாரணமாக ரூ. 40 ஆயிரத்தை சம்பத்திடம், மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி வழங்கினார். 















Read more »

கடலூர் மாவட்ட மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த சிறப்பு பாடத்திட்ட கையேடு

கடலூர்:

            தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க சிறப்பு பாடத்திட்ட கையேடுகள் தயாரித்து மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். 

            கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியாக ஜோசப் அந்தோனிராஜ் அண்மையில் பதவி ஏற்றார். தொடர்ந்து கடலூர் மாவட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம், முதன்மைக் கல்வி அதிகாரி தலைமையில் புதன்கிழமை நடந்தது.  

கூட்டத்துக்குப்பின் கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்  ஜோசப் அந்தோனிராஜ் கூறியது: 

            கடலூர் மாவட்ட மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த தலைமை ஆசிரியர்கள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சிறப்பு பாடத்திட்ட கையேடுகள் தயாரித்து மாணவர்களுக்கு வழங்கப்படும்.


            குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு காலை, மாலை வேளைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மாணவர்களின் தற்கொலை  எண்ணத்தை மாற்ற உளவியல் ரீதியான பயிற்சி வகுப்பு நடத்தப்பட இருக்கிறது. முதல் கட்டமாக கடலூர், சிதம்பரம், நெய்வேலி, விருத்தாசலம் ஆகிய இடங்களில் ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி அளிக்கப்படும். ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு உளவியல் பயிற்சி அளிப்பார்கள்.   

            அரசின் திட்டங்கள் மூலம் மாணவர்களுக்குக் கிடைக்கும் பலன்கள் முழுமையாகக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மாணவர்கள் பாதியில் படிப்பை நிறுத்தாமல் இருக்க அரசு வழங்கும் ஊக்கத் தொகைகள் மற்றும் உதவித் தொகையை முழுமையாகப் பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர் என்றும் முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்தார்.    மாவட்டக் கல்வி அலுவலர்கள் வசந்தா, கணேசமூர்த்தி, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் எம்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 











Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior