உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, அக்டோபர் 30, 2010

உயிரித் தொழில்நுட்பத்தில்தான் எதிர்கால விவசாயம்

             உயிரித் தொழில்நுட்பத்தில்தான் வேளாண் உற்பத்தியைப் பெருக்க முடியும் என்று தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பி.முருகேசபூபதி  தெரிவித்தார்.

பருத்தி சாகுபடிக்கு உயிரித் தொழில்நுட்பம் அடிப்படையிலான புதிய தொழில்நுட்பத்தின் (போல்கார்டு - 2 ரவுண்ட்அப் ரெடி ஃபிளக்ஸ்) அறிமுக நிகழ்ச்சியில் வியாழக்கிழமை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பி.முருகேசபூபதி   பேசியது: 

                  நாடு சுதந்திரம் அடைந்தபோது உணவு பற்றாக்குறை அதிகளவில் இருந்தது. உணவு தானியங்களுக்காக பிற நாடுகளை எதிர்பார்க்க வேண்டிய நிலையில் இருந்தோம். இப்போது தேவையான அளவுக்கு உணவுத் தானியங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால், வருங்காலத் தேவையைக் கணக்கிடும்போது உற்பத்தியை மேலும் பெருக்க வேண்டியது அவசியம். 2002-ல் பிடி பருத்தி அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பிறகு தற்போது பருத்தி உற்பத்தி அதிகரித்து வருகிறது. 

                மொத்த சாகுபடி பரப்பில் 90 சதம் பிடி பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. பசுமைப் புரட்சிக்குப் பிறகு, வேளாண்மை நிகழ்ந்த பெரும் புரட்சியாக பிடி பருத்தியைக் கூறுகின்றனர். பருத்தி சாகுபடிக்கான செலவில் 20 சதம் பூச்சி கட்டுப்பாட்டுக்காக செலவிடப்படுகிறது. அதோடு, களை கட்டுப்பாடு பெரும் சவாலாக உள்ளது. களைகளால் 42 சதம் சாகுபடி இழப்பு ஏற்படுகிறது. மரபணு மாற்று ரகங்களில் இத்தகைய பிரச்னைகள் ஏற்படுவதில்லை. சாகுபடிக்கான செலவு குறைவதோடு, உற்பத்தியும் அதிகரிக்கிறது. 

                    பிடி பருத்தி சாகுபடி காரணமாக பூச்சிக் கொல்லி மருந்துகளின் பயன்பாடு கணிசமாக குறைகிறது. பிடி கத்தரி குறித்து மக்களிடம் எதிர்மறையான கருத்து நிலவுகிறது. மரபணு மாற்று ரகங்களால் மனிதர்கள், விலங்குகள், சூழலுக்கு பாதிப்பு கிடையாது. சாதாரண கத்தரியில், அறுவடைக்கு முன்பு வரை பூச்சி மருந்துகள் அடிக்கப்படுகிறது. பிடி கத்தரிக்கு அதற்கான அவசியம் இல்லை என்றார். மான்சாண்டோ நிறுவன அறிவியல் வெளிவிவகாரத் துறை தலைவர் சாந்தனு தேஷ்குப்தா, மஹிகோ விதை நிறுவன அதிகாரி சந்திரசேகர் சபோர்கர், மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலைய இயக்குநர் கோபாலகிருஷ்ணன், வேளாண் பல்கலை. பதிவாளர் பி.சுப்பையன், உழவியல் துறைத் தலைவர் பி.முத்துகிருஷ்ணன், ஆராய்ச்சி இயக்குநர் எம்.பரமாத்மா உள்ளிட்டோர் பேசினர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடிப் பணிகள் தீவிரம்


கடலூர் அருகே நாணமேடு கிராமத்தில் நட்டு 15 நாள்கள் ஆன சம்பா நெல் வயலில் களையெடுக்கும் பெண்கள்.
 
கடலூர்:

             கடந்த 10 நாள்களாக அவ்வப்போது பரவலாக பெய்துவரும் மழை காரணமாக, கடலூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடிப் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.  

                   கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு, 2.41 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் பயிரிடப்படுகிறது. இதில் 1.25 லட்சம் ஏக்கர் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளாகும். இந்த ஆண்டு பி.பி.டி., பொன்னி, ஏடிடி 43 சம்பா நெல் ரகங்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. கடலூர் மாவட்டத்தில் குறிப்பாக டெல்டா பாசனப் பகுதிகளில் 10 நாள்களாக ஆங்காங்கே பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் நாற்றங்கால் பணிகளும் நடவுப் பணிகளும் தீவிரம் அடைந்துள்ளன. 

                 கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பாசனப் பகுதிகளுக்கும் சென்னை குடிநீருக்கும், கொள்ளிடம் கீழணையில் இருந்து 1,207 கன அடி வீதம் வெள்ளிக்கிழமை தண்ணீர் திறந்து விடப்பட்டது. வீராணம் ஏரி பாசனத்துக்காக வடவாறில் 862 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.  ÷வெள்ளிக்கிழமை கடலூர் மாவட்டத்தில் உள்ள பிரதான ஏரிகளில் நீர்மட்டம், வீராணம் 43.6 அடி (மொத்த உயரம் 47.5 அடி), பெருமாள் 4.8 அடி (மொத்த உயரம் 6.5 அடி), வாலாஜா 5 அடி (மொத்த உயரம் 5.5 அடி) என இருந்தது. கொள்ளிடம் கீழணையில் நீர்மட்டம் 7.8 அடி (மொத்த உயரம் 9 அடி).  

சம்பா சாகுபடி குறித்து வேளாண் துறை அளிக்கும் தகவல்: 

                 மாவட்டத்தில் 97 ஆயிரம் ஹெக்டேரில் சம்பா நெல் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இதுவரை 78,421 ஹெக்டேரில் நடவு முடிந்துள்ளது. காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் 44,988 ஹெக்டேரில் நடவுப் பணிகள் முடிந்துள்ளன.  

பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில், 

                ""வீராணம் ஏரியின் கடைமடைப் பகுதிகளில் நாற்றங்கால் பணிகள் முடிந்துள்ளன. நடவுப் பணிகள் தற்போது தொடங்கப்பட்டு உள்ளன. டெல்டா பாசனப் பகுதிகளில், சில நாள்களாக பெய்து வரும் மழை, கடைமடைப் பகுதிகளில் நடவுப் பணிகளுக்கு ஏற்றதாக உள்ளது. சம்பா நடவுப் பணிகள்  நவம்பர் 20 வாக்கில், முடிவடையும்'' என்றார்.  

சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு விவசாயிகள் சங்கத் தலைவர் விஜயகுமார் கூறுகையில், 

                   ""வீராணம் ஏரி பாசனப் பகுதிகளில் (50 ஆயிரம் ஏக்கர்) 20 சதவீதமும், சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பாசனப் பகுதிகளில் (44 ஆயிரம் ஏக்கர்) 5 சதவீதமும் மோட்டார் பம்ப்செட் வசதி உள்ளது. இப்பகுதிகளில் காவிரி நீரை எதிர்பார்க்காமல் முன்னரே சம்பா சாகுபடிப் பணிகள் தொடங்கப்பட்டன. அப்பகுதிகளில் நடவுப் பணிகள் முடிவுற்றுள்ளன.  தற்போது பெய்துள்ள மழை காரணமாக கடைமடைப் பகுதிகளுக்கு கூடுதலாக தண்ணீர் வரத் தொடங்கி இருக்கிறது. எனவே நாற்றங்கால் பணிகளும், நடவுப் பணிகளும் துரிதம் அடைந்துள்ளன'' என்றார்.  

                   டெல்டா பாசனப் பகுதிகள் அல்லாத ஆழ்குழாய்ப் பாசனத்தை நம்பி இருக்கும் மற்ற பகுதிகளில் தற்போது, நடவுப் பணிகள் முடிந்துவிட்டன. நட்டு 15 நாள்கள் முடிவடைந்த வயல்களில் முதல் களையெடுக்கும் பணி நடந்து கொண்டு இருக்கிறது.  கடலூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்குத் தேவையான விதைநெல், ரசாயன உரங்கள், நுண்ணுயிர் உரங்கள் முறையாக கையிருப்பில் உள்ளதால், சாகுபடிப் பணிகள் சிரமமின்றி நடைபெற்று வருவதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.  

                    தண்ணீர் முறையாகக் கிடைத்து, இயற்கைச் சீற்றம் மற்றும் பூச்சி, பூஞ்சாணம் தாக்குதல்கள் இன்றி இருந்தால் கடலூர் மாவட்டத்தில், சம்பா பருவத்து நெல் உற்பத்தி 45 லட்சம் குவிண்டாலுக்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Read more »

காண்பதற்கே அரிதாகிவிட்ட பூவரசம் மரங்கள்


காஞ்சிபுரம் மாவட்டம் விஷார் பகுதியில் உள்ள பூவரசம் மரம்.
 

         சில ஆண்டுகளுக்கு முன், கிராமங்கள்தோறும் தெருவுக்கு தெரு வளர்ந்து அழகாக பூத்துக் குலுங்கிய பூவரசம் மரங்கள் தற்போது காண்பதற்கே அரிதாகிவிட்டன.  

                 ஐந்து ஆண்டுகளுக்கு முன்புகூட அனைத்து கிராமங்களிலும் அழகிய மஞ்சள் நிற பூவுடன் பூவரச மரங்கள் ஆங்காங்கே இருந்தன.  இந்த மரங்கள் தெஸ்பீசியா பேரணித்தையும், தெ.பாபுல்னியா இனத்தையும் சார்ந்தவை. வெப்பவளையப் பகுதிகளில் காணப்படும் இந்த மரங்கள் 5 முதல் 10 மீட்டர் உயரம் வரை வளரும் தன்மை கொண்டவை.  

               இந்த பூவரசில் "நாட்டுப் பூவரசு' ஆண்டு முழுவதும் பூத்துக் குலுங்கும். பருவத்தில் மட்டும் பூக்கும் "கொட்டை பூவரசு' என்றொரு மற்றொரு ரகமும் உண்டு. தேக்கு, கோங்கு போன்ற மரங்கள் வரிசையில் சிறந்த மரம் இந்த பூவரசு மரம். இம் மரம் வீட்டு ஜன்னல்கள், கதவுகள் செய்வதற்கும், மரச்சாமான்கள் செய்வதற்கும் ஏற்றவை. இதற்கு மருத்துவ குணமும் உண்டு.  

                தற்போது கிராமப்புறங்களில் இந்த பூவரச மரம் காண்பதே அரிதாகிவிட்டது. குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இந்த மரங்களை காணவில்லை. இம் மரங்களை வீட்டு உபயோகத்துக்காகவும், ஏனைய பயன்பாட்டுக்காகவும் வெட்டியவர்கள், அதை வளர்க்க முன்வரவில்லை. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்த இந்த மரம் தற்போது காண்பதற்கு அரிதாக மாறிவிட்டது. பல்வேறு இடங்களில் பல்கிப் பெருகி இருந்த இம் மரங்கள் எங்கோ கிராமத்தின் ஒரு மூலையில் ஒன்றிரண்டு மரங்கள் மட்டுமே உள்ளன.  

                   இந்த மரங்களை மீண்டும் வளர்க்கவும், பாதுகாக்கவும் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் மூலம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.  

இது குறித்து இயற்கை விவசாயிகள் சங்கத்தின் அமைப்பாளர் அருங்குன்றம் தேவராஜ் கூறியது: 

                    "பூவரச மரம் வீடுகளில் உள்ள கதவு, ஜன்னல்கள் தயாரிக்க சிறந்த மரம். தேக்கு, கோங்கு மரங்களுக்கு இணையானது.  இம் மரத்தின் தழைகளை வெட்டி வயல்களில் போட்டால் நல்ல உரம். இம் மரத்தை விதையைக் கொண்டுதான் வளர்க்க வேண்டும் என்பதில்லை. கிளைகளை நட்டு வைத்தாலே எளிதில் வளர்ந்துவிடும்.  இந்த மரங்களை கிராமங்கள்தோறும் விவசாயிகள் வளர்க்க அரசு அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்'  என்றார்.

Read more »

தமிழகத்தில் பழைய கிழிந்த ரூபாய் நோட்டுகள் ரூ. 100 கோடிக்கு மாற்றம்: ரிசர்வ் வங்கி துணைப் பொது மேலாளர்

               தமிழகத்தில் மட்டும் கடந்த ஓராண்டில் பழையதும், கிழிந்ததுமாக இருந்த ரூபாய் நோட்டுகளை மக்களிடம் பெற்றுக் கொண்டு புதிய ரூபாய் நோட்டுகளை ரூ. 100 கோடிக்கு மாற்றிக் கொடுத்துள்ளோம் என இந்திய ரிசர்வ் வங்கியின் நோட்டு வழங்கல் துறையின் துணைப் பொது மேலாளர் காயா திரிபாதி வெள்ளிக்கிழமை தெரிவித்தார். 

                  ராமநாதபுரம் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக் கிளையும், இந்திய ரிசர்வ் வங்கியின் நோட்டு வழங்கல் துறையும் இணைந்து ராமநாதபுரத்தில் கிழிந்த நோட்டுகளை மாற்றும் முகாமை நடத்தினர்.  

முகாமில் கள்ள நோட்டுகளை எப்படிக் கண்டறிவது என்பதற்கான கையேட்டை வங்கியின் வாடிக்கையாளரிடம் இந்திய ரிசர்வ் வங்கியின் நோட்டு வழங்கல் பிரிவு துணைப் பொது மேலாளர் காயா திரிபாதி வழங்கிப் பேசியது: 

                    கிராமத்தில் வசிக்கும் பாமர மக்களும் பயன்பெறும் வகையிலும் கள்ள நோட்டுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழகம் முழுவதும் பல்வேறு வங்கிகளுடன் இணைந்து கிழிந்த நோட்டுகளை மாற்றி, புதிய நோட்டுகளை வழங்கும் முகாமை தொடர்ந்து நடத்தி வருகிறோம்.  கடந்த ஓராண்டில் மட்டும் தமிழகத்தில் நடத்திய முகாம்கள் மூலமாக  மொத்தம் ரூ. 100 கோடிக்கு கிழிந்த நோட்டுகளை மக்களிடம் பெற்றுக் கொண்டு புதிய நோட்டுகளை வழங்கியிருக்கிறோம்.  கள்ள நோட்டுகளை அடையாளம் காணுவது எப்படி என்ற கையேடு மற்றும் துண்டுப் பிரசுரங்களையும் முகாம்களின் போது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி விளக்கமளிக்கிறோம். 

                      இதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது.  அண்மையில் புதுச்சேரியில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக் கிளையில் இணைந்து நடத்திய முகாமில் மட்டும் ஒரே நாளில் ரூ. 35 லட்சத்துக்கு கிழிந்த நோட்டுகளை மக்கள் மாற்றிக் கொண்டனர்.  தமிழகத்தில் எந்த கிராம வங்கிகளும் அழைத்தால்கூட அந்தந்தப் பகுதி மக்களுக்காக நாங்கள் நேரில் வந்து கிழிந்த நோட்டு முகாம்களை நடத்தத் தயாராக இருக்கிறோம்.  அண்மையில் தங்க முலாம் பூசப்பட்ட ரூ. 5 நாணயங்களுக்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றார் காயா திரிபாதி.

Read more »

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சிதம்பரத்தில் போக்குவரத்து மாற்றம்

சிதம்பரம்:

                   தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க நவம்பர் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என டிஎஸ்பி ச.சிவனேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து டிஎஸ்பி ச.சிவனேசன் வியாழக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: 

                  சென்னை, பாண்டி, கடலூர், நெய்வேலி ஆகிய பகுதிகளிலிருந்து சிதம்பரம் வரும் பஸ்கள் வடக்கு வீதி, 16 கால் மண்டபத் தெரு, கமலீஸ்வரன் கோயில் தெரு, வேணுகோபால் பிள்ளைத் தெரு வழியாக பஸ் நிலையம் செல்ல வேண்டும். சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், காரைக்கால் பகுதிகளில் இருந்து சிதம்பரம் வழியாக கடலூர், பாண்டி, சென்னை செல்லும் பஸ்கள் பச்சையப்பன் பள்ளித் தெரு, சபாநாயகர் தெரு, தெற்குவீதி, கீழவீதி, வடக்குவீதி வழியாக வெளியே செல்ல வேண்டும்.

                  லாரி மற்றும் கனரக வாகனங்கள் சிதம்பரம் நகருக்குள் வராமல் புறவழிச்சாலை வழியாக செல்ல வேண்டும். அக்டோபர் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை மேலரத வீதியில் போக்குவரத்துத் தடை செய்யப்படுகிறது.மேற்கண்ட 5 தினங்களும் மேலவீதியில் ஆட்டோக்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. மேலவீதி, தெற்குவீதி, பஸ் நிலையம் ஆகிய 3 இடங்களில் உயர் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டும் போலீசாரால் கண்காணிக்கப்படும்.மேலும் சிதம்பரம் நகரில் எல்லைப் பகுதிகளில் போலீசார்  வாகனத் தணிக்கையில்  ஈடுபடுவர். 

                 அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் கடையை திறந்து வைத்து வைத்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎஸ்பி ச.சிவநேசன் தெரிவித்தார்.அப்போது இன்ஸ்பெக்டர்கள் எஸ்.கார்த்திகேயன், எம்.கண்ணபிரான் ஆகியோர் உடனிருந்தனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் வேலைநிறுத்தம்: 246 பேர் வேலைக்கு வரவில்லை

கடலூர்: 

                  கடலூர் மாவட்டத்தில் வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தைச் சேர்ந்த 350 பேரில் (பதிவுரு எழுத்தர் முதல் வட்டாட்சியர் வரை) 246 பேர் வேலைக்கு வரவில்லை. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், நிலஎடுப்பு வட்டாட்சியர் அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப் பட்டன. பல அலுவலகங்கள் வெறிச்சோடிக் கிடந்தன.

Read more »

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் ரூ. 25 லட்சத்தில் கூடைப்பந்து விளையாட்டு அரங்கம் திறப்பு

சிதம்பரம்:

                   சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் ரூ. 25 லட்சம் செலவில் கூடைப்பந்து விளையாட்டு அரங்கம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, உடற்கல்வித் துறை தலைவர் பேராசிரியர் ஜி.ரவீந்திரன் தலைமை வகித்தார். துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் விளையாட்டு அரங்கை தொடங்கி வைத்தார். விழாவில், மருத்துவப் புல முதல்வர் டாக்டர் என்.சிதம்பரம், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.விஸ்வநாதன், அறிவியல் புல முதல்வர் கண்ணப்பன், கலைப்புல முதல்வர் ராஜேந்திரன், மக்கள்-தொடர்பு அதிகாரி எஸ்.செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

விருத்தாசலம் ஜங்ஷனில் கூட்ஸ் ரயில் தடம் புரண்டது : ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்




விருத்தாசலம் : 

                     விருத்தாசலம் ஜங்ஷனில் நேற்றிரவு கூட்ஸ் ரயில் தடம் புரண்டதால் ராமேஸ்வரம் செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரயில் நடு வழியில் நிறுத்தப்பட்டது.

                        தூத்துக்குடியில் இருந்து 42 வேகன்களில் யூரியா மூட்டைகளை ஏற்றிக் கொண்டு கூட்ஸ் ரயில் நேற்று மதியம் விருத்தாசலம் ஜங்ஷன் வந்தது. அந்த கூட்ஸ் ரயில் 8வது டிராக்கில் நிறுத்தி, 20 வேகன்களில் இருந்த யூரியா மூட்டைகள் இறக்கப்பட்டது. பின் இரவு 8.30 மணிக்கு காட்பாடிக்கு புறப்பட்டது. ரயில் புறப்பட்ட 5 நிமிடங்களில் இன்ஜினில் இருந்து 18 மற்றும் 19வது வேகன்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியபடி 500 மீட்டர் தூரம் வரை சென்றது. 

                       சத்தம் அதிகமாக கேட்டதால் டிரைவர் இன்ஜினை நிறுத்தி கீழே இறங்கி வந்து பார்த்தபோது இரண்டு வேகன்கள் தடம் புரண்டிருப்பதை கண்டு, ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் கொடுத்தார். கூட்ஸ் ரயில் தடம் புரண்டு நின்ற டிராக்கில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதோடு, சிக்னலும் நிறுத்தப்பட்டது. இதனால் சென்னையிலிருந்து விருத்தாசலம் நோக்கி வந்து கொண்டிருந்த ராமேஸ்வரம் செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரயில் வயலூர் அருகே நிறுத்தப்பட்டது. அதேபோன்று இரவு 9.15 மணிக்கு வர வேண்டிய கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் விழுப்புரத்தில் நிறுத்தப்பட்டது.

                           ரயில்வே அதிகாரிகள் மற்றும் தொழில் நுட்ப வல்லுனர்கள் கூட்ஸ் ரயில் தடம் புரண்ட 8வது டிராக்கில் மட்டும் மின் இணைப்பை துண்டித்து விட்டு, பிற டிராக்குகளில் மின் இணைப்பு கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து வயலூரில் நிறுத்தப்பட்ட சேது எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 10.05க்கு விருத்தாசலம் ஜங்ஷனை கடந்து சென்றது.அதன் பிறகு கூட்ஸ் ரயில் தடம் புரண்ட ரயில் பாதையை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். அதில் விருத்தாசலம் ஜங்ஷனில் யூரியா மூட்டைகளை இறக்க நிறுத்திய போது, வேகன்களின் சக்கத்திற்கு இடையே கல் சிக்கிக் கொண்டதும், அதனைக் கவனிக்காமல் ரயில் இயக்கியதால் தடம் புரண்டிருக்கலாம் என தெரிகிறது.

Read more »

காட்டுமன்னார்கோவில் கூட்டுறவு வங்கியில் ரூ.11 லட்சம் முறைகேடு

கடலூர் : 

                   கூட்டுறவு வங்கியில் 11 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்தது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த ரெட்டியூர் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் வந்தன. 

                      மாவட்ட கூட்டுறவு வங்கியின் தனி அலுவலர் மிருணாளினி உத்தரவின் பேரில், கூட்டுறவு தணிக்கைத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். அதில் 11 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து வங்கிகளின் கணக்குகளை முடக்கம் செய்தனர். பின், முறைகேடு குறித்து வங்கியின் தனி அலுவலர் சுப்ரமணி, செயலர் ரங்கநாதன் மற்றும் அலுவலர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

சட்டசபை தேர்தலுக்காக விரைவில் பொதுத் தேர்வு:மாணவர், பெற்றோர் கலக்கம்

கடலூர்: 

                    சட்டசபை தேர்தல் காரணமாக பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளை முன்கூட்டியே நடத்தி முடிக்க அரசு ஆலோசித்து வருவதால், தேர்விற்கு போதிய கால அவகாசம் இருக்குமோ என மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர். 

                    தமிழக கல்வித்துறை சார்பில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட்டு வருகிறது. பிளஸ் 2 வகுப்பிற்கு மார்ச் முதல் வாரத்தில் தேர்வுகள் துவங்கி அந்த மாதத்திற்குள் முடிக்கப்படும். அதேபோல் 10ம் வகுப்பிற்கு மார்ச் கடைசி வாரத்தில் துவங்கி ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் முடிக்கப்படும். கடந்த (2009-10) கல்வி ஆண்டில்  பிளஸ் 2 தேர்வு மார்ச் 1ம் தேதி துவங்கி 23ம் தேதியும், 10ம் வகுப்பு மற்றும் ஓ.எஸ்.எஸ்.எல்.சி., மார்ச் 23ம் தேதி துவங்கி ஏப்ரல் 7ம் தேதியும், மெட்ரிக் பிரிவிற்கு மார்ச் 23ம் தேதி முதல் ஏப்ரல் 9ம் தேதிவரை  நடத்தப்பட்டது. 

                 பிளஸ் 2 விற்கான எட்டு தேர்வுகளை 23 நாளும், 10ம் வகுப்பு மற்றும் ஓ.எஸ்.எஸ்.எல்.சி.,கான 7 தேர்வுகளை 16 நாளும், மெட்ரிக் பிரிவிற்கான 10 தேர்வுகளை 18 நாளிலும் நடத்தியதால் ஒவ்வொரு தேர்விற்கும் இடையில் விடுமுறை இருந்ததால் மாணவர்கள் அடுத்த தேர்விற்கு தங்களை தயார் படுத்திக் கொள்ள வசதியாக இருந்தது.
 
                     ஆனால், இந்தக் கல்வி ஆண்டில் சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதால், பொதுத் தேர்வுகளை முன்கூட்டியே (மார்ச் இறுதிக்குள்) நடத்தி முடிக்க அரசு ஆலோசித்து வருகிறது.  இவ்வாறு பொதுத் தேர்வை தேர்தலுக்காக அவசரமாக நடத்தினால், தேர்வு நடைபெறும் மொத்த நாட்கள் குறையும் அபாயம் உள்ளது. 

                     இதனால் ஒவ்வொரு தேர்விற்கும் இடையே விடுமுறை நாட்கள் ஏதுமின்றி தொடர்ச்சியாக நடத்த வேண்டியிருக்கும். மாணவர்கள் தொடர்ச்சியாக தேர்விற்கு படிக்க வேண்டிய கட்டாயத்திற்கு  தள்ளப்படுவதால், அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டு மதிப்பெண் குறைய வாய்ப்பு உள்ளதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர் அச்சமடைந்துள்ளனர். அரசு பள்ளி  மாணவர்கள் பாவம்: பொதுத் தேர்வு எழுதவுள்ள பிளஸ் 2 மாணவர்களுக்கான பாடங்கள் அரையாண்டு தேர்விற்குள் நடத்தி முடிக்கப்படும். 

                  அதன்பிறகு பாடங்கள் "ரிவிஷன்' செய்யப்படும். தனியார் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகளை  "கிறிஸ்துமஸ்' விடுமுறையை கணக்கில் கொண்டு டிசம்பர் மாதத்தில் நடத்தி முடிக்கப்படும். ஆனால் அரசு பள்ளிகளில் பொங்கல் விடுமுறையை கணக்கில் கொண்டு டிசம்பர் இறுதியில் துவங்கி ஜனவரி இரண்டாம் வாரத்தில் முடிக்கப்படும்.
 
                 தற்போது சட்டசபை தேர்தலுக்காக பொதுத் தேர்வுகளை முன்கூட்டியே நடத்தினால் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளை ஜனவரி மாத இறுதியில் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அப்படி நடத்தினால், டிசம்பரில் அரையாண்டு தேர்வு முடித்த தனியார் பள்ளி மாணவர்கள் அடுத்த ஒரு மாதத்தில் பொதுத் தேர்விற்கு ஆயத்தமாக கால அவகாசம் உள் ளது. 

                           ஆனால் அரசு பள்ளிகளில் ஜனவரியில் அரையாண்டு தேர்வு எழுதி பொங்கல் விடுமுறை முடிந்ததும் செய்முறைத் தேர்வுக்கு தயாராக வேண்டியுள்ளது. இதனால் எழுத்துத் தேர்விற்கு தயாராக போதிய கால அவகாசம் இல்லை. இந்த ஏற்றத் தாழ்வுகளால் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் குறையும்.

Read more »

பண்ருட்டி அடுத்த அவியனூரில் மனுநீதி நாள் முகாம் ரூ.19 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி

பண்ருடடி: 

                  பண்ருட்டி அடுத்த அவியனூர் ஊராட்சியில் நடந்த மனுநீதி நாள் முகாமில்  19 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சீத்தாராமன்  வழங்கினார். பண்ருட்டி அடுத்த அவியனூரில் மனுநீதிநாள் முகாம் நடந்தது.  ஊராட்சி மன்ற தலைவர் பத்மாவதி தலைமை தாங் கினார். ஆர்.டி.ஓ., முருகேசன் முன்னிலை வகித்தார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பூவராகவன் வரவேற்றார். 

                     கலெக்டர் சீத்தாராமன் மனுக்களை பெற்று 19.26 லட்சம் மதிப்பில் 58 நபர்களுக்கு வீட்டுமனைபட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது: பசுமை, வளமை, நிறைந்த இப்பகுதி தொடர்ந்து பசுமையாகவும், வளமாகவும் இருக்க வேண்டும். தமிழக அரசு உயிர்காக்கும் காப்பீடு திட் டம், வரும்முன் காப் போம் உள்ளிட்ட பல் வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. மாற்று திறனாளிகளுக்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. ஊரக வளர்ச்சித்துறை சார்பில் வேளாண் களம் மற்றும் சாலை அமைத்து தரப்படும். போக்குவரத்து துறை சார்பில் பண்ருட்டி-அவியனூர்-விழுப்புரம் சாலையில் ஒரு மாதத்தில் கூடுதல் பஸ்வசதி செய்து தரப்படும். அவியனூர்- எனதிரிமங்கலம் சாலைக்கு தனியார் நிலம் தானமாக வழங்கியதால் 55 லட்சத் தில் ஊரக சாலை அமைக்கும் பணி விரைவில் துவங்கும் என்றார்.

                    இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன், தாசில்தார் பன்னீர் செல்வம், துயர்துடைப்பு தாசில்தார் மங்கலம்,  தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர்கள் ராமலிங்கம், பிரேமாவதி, மாற்று திறனாளி நல அலுவலர் சீனுவாசன்,போக்குவரத்து துறை பாஸ்கர், பஷீர்அகமது, கைலாசம், முன்னாள் ஒன்றிய தி.மு.க., செயலளர் பலராமன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior