உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, அக்டோபர் 02, 2010

பாரத ஸ்டேட் வங்கி சேவையில் அதிருப்தியா? இனி எஸ்எம்எஸ் உதவும்


   
பாரத ஸ்டேட் வங்கி சேவையில் அதிருப்தி ஏற்படும் நிலையில், குறையைப் போக்கும் "எஸ்எம்எஸ்' சேவை தொடங்கப்பட்டுள்ளது.  செல்பேசியில் 'UNHAPPY' என "டைப்' செய்து, "8008202020' என்ற எண்ணுக்கு சேவை குறைபாட்டை எஸ்எம்எஸ் செய்தால், அதிகாரிகள் உடனடியாக  வாடிக்கையாளரைத் தொடர்பு கொண்டு குறையைத் தீர்க்க உதவுவார்கள்.  வாடிக்கையாளர்களின் குறையைத் தீர்க்கும் இத்தகைய முயற்சியை நாட்டிலேயே முதன்முறையாக பாரத ஸ்டேட் வங்கி தொடங்கியுள்ளது.

Read more »

பண்ருட்டி நகரப் பகுதியில் 600 நாய்களுக்கு கருத்தடை செய்ய திட்டம்: சுகாதார அலுவலர்

பண்ருட்டி:

                 பண்ருட்டி நகரப் பகுதியில் சுற்றித்திரியும் 600 தெரு நாய்களுக்கு நடப்பாண்டில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், இப்பணி இரு வாரத்தில் தொடங்கும் என சுகாதார அலுவலர் ராஜேந்திரன் கூறினார்.
 
                  பண்ருட்டி நகராட்சியின் நகரமன்ற அவசரக் கூட்டம் அதன் தலைவர் எம்.பச்சையப்பன் தலைமையில் மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடந்தது. 

கூட்டத்தில் நடந்த விவாதம்: 

கமலக்கண்ணன் (அதிமுக): 

               எனது வார்டில் சிமென்ட் சாலைகள் உடைந்துள்ளதால் அவ்வழியே செல்வோர் கீழே விழுந்து பாதிக்கப்படுகின்றனர். செயல் படாத எரிவாயு தகன மேடைக்கு பல லட்சம் செலவு செய்யும் நகர நிர்வாகம் ஏன் இந்த சாலையை சீர் செய்ய முன்வரவில்லை? 

எம்.பச்சையப்பன் (தலைவர்): 

                 சாலை பணிக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. 

 சண்முகம் (அதிமுக): 

                 எனது வார்டு பணிக்காக தீர்மானம் நிறைவேற்றியும் இதுவரையில் டெண்டர் வைக்கவில்லை. சப்பாணி தெருவில் விளக்கு அமைக்கப்படவில்லை. 

எம்.பச்சையப்பன் (தலைவர்): 

                  33 வார்டுகளில் தெரு விளக்கு போட விளக்கு ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் மின் வாரியத்திடம் கட்டியுள்ளோம். 

சரஸ்வதி (அதிமுக): 

                எனது வார்டில் ரூ.40 லட்சத்தில் பணி நடைபெறும் என கூறினீர்கள். அந்த வேலை என்னவானது? 

எம்.பச்சையப்பன் (தலைவர்): 

                   பொது நிதியில் செய்து தருகிறேன். இம்முறை அதிமுக கவுன்சிலர்கள் வார்டுக்கு மட்டும் ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

கார்த்திக் (அதிமுக): 

                கடந்த 4 ஆண்டுகளாக தெரு நாய்களைப் பிடிக்கவில்லை, இதனால் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளன.  

கோதண்டபாணி (துணைத் தலைவர்), 

தட்சிணாமூர்த்தி (திமுக): 

                    நாய்களை எப்போது பிடிப்பீர்கள் என கேள்வி எழுப்பினர். 

ராஜேந்திரன் (சுகாதார அலுவலர்):

                          நடப்பாண்டில் 600 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை செய்வதற்கான கட்டடம் கட்டும் பணி ரூ.2.90 லட்சம் செலவில் நடைபெறுகிறது. இன்னும் இரு வாரத்தில் பணி முடிந்தவுடன் அறுவை சிகிச்சை செய்யப்படும் என கூறினார்.

Read more »

தண்ணீருக்காக கண்ணீர் விடும் கடைமடை விவசாயிகள்



கடலூர்: 

                   கடலூர் மாவட்ட காவிரி டெல்டா சம்பா சாகுபடிப் பகுதிகளில், முறையான நீர் மேலாண்மை இல்லாததால், ஒரு புறம் தண்ணீர் பற்றாக்குறையும் மறுபுறம் தண்ணீர் வீணாகும் நிலையும் இருப்பதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.
 
 
                கடலூர் மாவட்டத்தில் 1.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் காவிரி நீரால் பாசன வசதி பெறுகின்றன. மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இருந்து, ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் முழுமையாகத் தண்ணீர் கிடைத்தால், அனைத்துப் பகுதிகளிலும் அக்டோபர் 15-ம் தேதிக்குள் சம்பா சாகுபடிப் பணிகள் நிறைவடைந்து விடும். இந்த ஆண்டு மேட்டூர் அணை ஜூன் 28-ல் திறக்கப்பட்டு, கடலூர் மாவட்டக் காவிரிப் பாசனத்துக்கு கீழணையில் இருந்து ஆகஸ்ட் 11-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.÷எனினும் போதிய தண்ணீர் திறக்கப்படாததால், சாகுபடிப் பணிகள் தாமதம் அடைந்து வருவதாக, விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.
 
                 வெள்ளிக்கிழமை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73 அடி. கடலூர் மாவட்ட டெல்டா பாசனப் பகுதிகளுக்குக் காவிரி நீரைப் பகிர்ந்து அளிக்கும் கீழணையில், வெள்ளிக்கிழமை நீர் மட்டம் 5 அடியாக இருந்தது. மொத்த உயரம் 9 அடி) அணையில் இருந்து வடவாறில் (வடவாறு நேரடிப் பாசனம், வீராணம் ஏரிப் பாசனம் மற்றும் சென்னை குடிநீருக்காக) 1,506 கனஅடி நீர் திறக்கப்பட்டு உள்ளது. வடவாறின் முழு விநியோகத்திறன் 2,200 கன அடி. வடக்குராஜன் வாய்க்காலில் 124 கன அடியும், குமிக்கி மண்ணியாறில் 96 கனஅடியும் திறக்கப்பட்டு உள்ளது. மேட்டுப் பாங்கான வடவாறு நேரடிப்பாசனப் பகுதிகள் மற்றும் வடக்குராஜன் வாய்க்கால் பகுதிகளில், 40 ஆயிரம் ஏக்கரில் தற்போது நாற்று நடவுப் பணிகள் நடந்து வருகின்றன.
 
                      உரிய நேரத்தில் போதுமான அளவுக்கு தண்ணீர் கிடைக்காததால், கடைமடைப் பகுதிகளான வீராணம் பாசனப் பகுதிகள், சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பாசனப் பகுதிகள் ஆகியவற்றில், தற்போதுதான் நாற்றங்கால் பணிகள் நடந்து வருகின்றன. கடைமடைப் பகுதிகளில் நடவுப் பணிகள் அக்டோபர் கடைசி வாரத்தில் அல்லது நவம்பர் முதல் வாரத்தில்தான் தொடங்க வாய்ப்பு இருப்பதாக என்று கடைமடைப் பாசன விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். நடவுப் பணிகள் தாமதம் ஆவதால், செம்மை நெல் சாகுபடி முறையைக் கடைப்பிடிக்க முடியாத நிலையும், புதிதாக நடப்பட்ட நெல்பயிர், வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்படும் வாய்ப்பும் இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கிறார்கள்.
 
உரிய நேரத்தில்...
 
                     வீராணம் ஏரிப் பாசன விசாயிகள் சங்கத் தலைவர் இளங்கீரன் கூறுகையில், "உரிய நேரத்தில் மேட்டூரில் தண்ணீர் திறந்தும், கடலூர் மாவட்ட பாசனப் பகுதிகளுக்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் நடவுப் பணிகள் நடைபெறும் வடவாறு நேரடிப் பாசனம், மற்றும் வடக்குராஜன் வாய்க்கால் பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை உள்ளது' என்றார்.
 
நடவுப் பணிகள் தாமதம்
 
பாசிமுத்தான் ஓடைப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் ரவீந்திரன் கூறுகையில்,
 
                      "தண்ணீர் பற்றாக்குறை, வேலைக்கு ஆள்கள் கிடைக்காத நிலை காரணமாக நடவுப் பணிகள் தாமதம் அடைந்து உள்ளன. வீராணம், சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு ஆகிய கடைமடைப் பாசனப் பகுதிகளில், நாற்றங்கால் பணிகள் தற்போதுதான் தொடங்கப்பட்டு உள்ளன. நாற்று நடவுப் பணிகள் நவம்பர் கடைசியில்தான் முடிவடையும் என்று எதிர்பார்க்கிறோம் நாற்று நடவுப் பணிகள் நடந்து வரும் பகுதிகளுக்கு போதிய தண்ணீர் இல்லை. ஆனால் நாற்றங்கால் பணிகள் நடந்து வரும் பகுதிகளுக்கு நிறைய தண்ணீர் திறந்து விடுவதால் நிறைய வீணாகிறது. இதற்கு நீர் மேலாண்மை சரி இல்லாததே காரணம்.
 
                 தற்போது நாற்றங்கால் பணிகள் நடந்து வரும் பகுதிகளுக்கு 24 மணி நேரமும் தண்ணீர் திறந்து வீணாகிக் கொண்டு இருக்கிறது. நாற்றங்கால் பணிகளுக்குக் காலை 8 முதல் இரவு 7 மணி வரை தண்ணீர் திறந்தால் போதும். இரவில் ஷட்டர்களை மூட வேண்டும். இதன் மூலம் நாற்று நடவுப் பகுதிகளுக்கு கூடுதல் தண்ணீர் கொடுக்க முடியும் என்றார்.
 
இது குறித்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ் கூறியது: 
 
                             "கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகம் திருப்திகரமாக உள்ளது. மழையும் பெய்து வருகிறது. கடைமடைப் பகுதிகளுக்கும் போதிய தண்ணீர் வழங்குகிறோம். நாற்றங்கால் பணிகள் நடைபெறும் பகுதிகளில் இரவு நேரங்களில் ஷட்டர்கள் மூடப்படுகின்றன. எனவே தண்ணீர் வீணாகவில்லை' என்றார்.

Read more »

தீபாவளி: புதுவை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கைத்தறித் துணிகள் விற்பனை இலக்கு ரூ.9.55 கோடி

கடலூர்:

                          புதுவை, காரைக்கால் மற்றும் கடலூர், விழுப்புரம், திருவாரூர், நாகை மாவட்டங்களை உள்ளடக்கிய கடலூர் மண்டலத்தில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ரூ.9.55 கோடிக்கு கைத்தறித் துணிகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.  

கடலூர் கோ-ஆப்டெக்ஸ் கைத்தறித் துணிகள் விற்பனை நிலையத்தில், வியாழக்கிழமை தீபாவளி சிறப்பு கைத்தறித் துணிகள் விற்பனையை ஆட்சியர் சீதாராமன் தொடங்கி வைத்துக் கூறியது:  

                   கடலூர் மண்டலத்தில் 21 கோ-ஆப்டெக்ஸ் கைத்தறித் துணிகள் விற்பனை நிலையங்கள் உள்ளன. இவற்றில் சென்ற ஆண்டு ரூ.7.65 கோடிக்கு கைத்தறித் துணிகள் விற்பனை செய்யப் பட்டன. கடலூர் மாவட்டத்தில் உள்ள 6 விற்பனை நிலையங்களில் ரூ.2.79 கோடிக்கு கைத்தறித் துணிகள் விற்பனை செய்யப்பட்டன. இந்த ஆண்டு கடலூர் மண்டலத்தில் ரூ.9.55 கோடிக்கு கைத்தறித் துணிகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள விற்பனை நிலையங்களில் ரூ.3.46 கோடிக்கு கைத்தறித் துணிகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.  

                      இந்த விற்பனைக் குறியீட்டை அடைய புதிய ரகங்களான கோவை மென்பட்டு சேலைகள், காஞ்சிபுரம், ஆரணி, சேலம், கோவை தூய பட்டுப் புடவைகள், புதிய டிசைன்களில் வரவழைக்கப்பட்டு உள்ளன. மற்றும் பல்வேறு ரக சேலைகள், சுடிதார் துணிகள், ஆண்களுக்கான ஆயத்த ஆடைகள், படுக்கை விரிப்புகள், திரைச் சீலைகள், வேட்டிகள், துண்டுகள், லுங்கிகள் ஏராளமாக விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன.  பொதுமக்கள், அரசு தனியார் நிறுவன ஊழியர்கள் அனைவரும் கைத்தறித் துணிகளை வாங்கி, ஏழை நெசவாளர்களின் வாழ்க்கைத்தரம் உயர ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

                     வழக்கம்போல் அரசு, பொதுத்துறை, தனியார் துறை ஊழியர்களுக்கு வட்டியில்லாக் கடன்வசதி உண்டு. அனைத்து ரகங்களுக்கும் 20 முதல் 30 சதம் வரை தள்ளுபடி அளிக்கப் படுகிறது. 15-9-2010 முதல் 5-11-2010 வரை அனைத்து விடுமுறை நாள்களிலும் விற்பனை நிலையங்கள் செயல்படும் என்றார்.  நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் பெ.பூபதி, மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் முத்தையா, ரோட்ராக்ட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை ஜெயந்தி ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior