உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், செப்டம்பர் 28, 2011

தமிழகம் முழுவதும் வரும் கல்வியாண்டு முதல் பள்ளிகளில் மதிப்பெண்ணுக்கு பதில் கிரேடு முறை

   

          வரும் கல்வியாண்டு (2012-13) முதல் எட்டாம் வகுப்பு வரை மதிப்பெண்ணுக்கு பதில் கிரேடு முறை தமிழகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்படுகிறது.  

                 2013-14 கல்வியாண்டு முதல் 9, 10 வகுப்புகளில் இந்த கிரேடு முறை அமலுக்கு வரும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதேபோல், ஒரு கல்வியாண்டை மூன்று பருவங்களாகப் பிரித்தும் அரசு உத்தரவிட்டுள்ளது. ஜூன் முதல் செப்டம்பர் வரை முதல் பருவம், அக்டோபர் முதல் டிசம்பர் வரை இரண்டாம் பருவம், ஜனவரி முதல் ஏப்ரல் வரை மூன்றாம் பருவம் என ஒரு கல்வியாண்டு மூன்று பருவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.  

இதுதொடர்பாக, தமிழக பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி. சபீதா வெளியிட்டுள்ள அரசாணை விவரம்:  

            பள்ளி மாணவர்கள் மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் முறையை மாற்றி, அவர்களது சிந்தனைத் திறனை ஊக்குவிக்கும் வகையில் தொடர் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீட்டு முறையை அறிமுகம் செய்வது தொடர்பாக தமிழக அரசு நிபுணர் குழுவை அமைத்தது.  அந்தக் குழு, தொடர் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீட்டு முறை அறிமுகப்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்  துள்ளது. 

 பரிந்துரை விவரம்: 

             கட்டாயக் கல்வி உரிமைச் சட்டமும் இத்தகைய மதிப்பீட்டு முறையை கட்டாயமாக்கியுள்ளது.  இப்போதுள்ள தேர்வுமுறை, மாணவர்களின் நினைவாற்றலை மையப்படுத்தியே உள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு வினாத்தாள்கள் மாணவர்கள் கணித்துவிடக் கூடிய வகையில் உள்ளது. இதன் காரணமாக, மாணவர்கள் புத்தகங்களைத் தாண்டி வெளியே படிக்க முடியாது.  பொதுத்தேர்வுகள் காரணமாக அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. தேர்வில் தோல்வி பயம் பல தவறான முடிவுகளுக்கும் இட்டுச் செல்கிறது. இதைத் தவிர்க்க தொடர் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீடு அறிமுகப்படுத்தப்பட வேண்டியது அவசியம்.  சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை இந்த மதிப்பீட்டு முறை ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களும் இந்த முறையை அறிமுகப்படுத்தியுள்ளன.  

இரண்டு வகையான மதிப்பீடு:

           கல்வியாண்டுக்குப் பதில் மூன்று பருவ முறை அடுத்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்த வேண்டும். உடனடி மதிப்பீடு, பருவ மதிப்பீடு என இரண்டு மதிப்பீடுகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.  ஒவ்வொரு பருவத்துக்கும் உடனடி மதிப்பீட்டுக்கு 40 மதிப்பெண்ணும், பருவ இறுதியில் மதிப்பீட்டுக்கு 60 மதிப்பெண்ணும் வழங்கப்பட வேண்டும்.  பாடல்கள், விளையாட்டு, நாடகம், கற்பனைத் திறனை வளர்க்கும் நடவடிக்கைகள் போன்றவை உடனடி மதிப்பீட்டிலும், பருவ இறுதியில் நடைபெறும் தேர்வு பருவ இறுதி மதிப்பீட்டிலும் கணக்கில் கொள்ளப்படவேண்டும். 

              இதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்ணுக்கு ஏற்ப கிரேடுகள் வழங்கப்படும். ஏ1, ஏ2, பி1, பி2, சி1, சி2, டி, இ1, இ2 போன்ற கிரேடுகள் உள்ளன. ஒவ்வொரு கிரேடுக்கும் கிரேடு புள்ளிகளும் வழங்கப்படுகின்றன.  இதில் இ1, இ2 கிரேடுகளைத் தவிர அனைத்து கிரேடுகளுக்கும் கிரேடு புள்ளிகள் வழங்கப்படும்.  மூன்று பருவத்தின் முடிவில் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் கிரேடுகள் அடிப்படையில் ஆண்டு இறுதியில் மாணவர்களுக்கு கிரேடு மட்டும் வழங்கப்பட வேண்டும். 

              ஒரு பருவத்தில் தேர்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும் பாடங்கள், அடுத்த பருவத் தேர்வுக்கு வராது. இதனால், ஆண்டுத் தேர்வுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் குறைந்துவிடும்.  ஒவ்வொரு ஆண்டிலும் மூன்று முறை மாணவர்களின் திறன் மதிப்பிடப்படும். இதுதொடர்பான அறிக்கை ஆண்டு முழுவதும் பராமரிக்கப்பட வேண்டும்.  பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.  கல்லூரிகளில் பின்பற்றப்படும் செமஸ்டர் முறைக்கு எளிமையாக மாறும் வகையில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கும் செமஸ்டர் முறையை அறிமுகப்படுத்தலாம்.  

                 பள்ளிக் கல்வித் துறை இயக்குநர், தொடக்கக் கல்வித் துறை இயக்குநர், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் ஆகியோர் தொடர் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீட்டு முறை செயல்படுத்தப்படுவதைக் கண்காணிக்க வேண்டும் என்று பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த பரிந்துரைகளை ஆராய்ந்தபிறகு, 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை தொடர் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீட்டு முறையை அடுத்தக் கல்வியாண்டில் இருந்தும், 9, 10 வகுப்பு வரை 2013-14 கல்வியாண்டிலிருந்தும் அமல்படுத்த உத்தரவிடப்படுகிறது.  முப்பருவ முறையும் அடுத்தக் கல்வியாண்டில் இருந்து அனைத்துப் பள்ளிகளிலும் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிடுவதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.














Read more »

ஆண்மைக் குறைவைப் போக்குவதற்கு ரூ.25 லட்சம் மதிப்புள்ள "ஷாக் வேவ் தெரப்பி' கருவி


"ஷாக்வேவ் தெரப்பி' கருவி குறித்து விளக்குகிறார் டாக்டர் டி.காமராஜ். உடன் (இடமிருந்து) "மெடிஸ்பெக்' நிறுவன நிர்வாக இயக்குநர் எஸ்.ரகோத்தமன், மருத்துவமனை
   
               ஆண்மைக் குறைவைப் போக்குவதற்காக ரூ.25 லட்சம் மதிப்புள்ள "ஷாக் வேவ் தெரப்பி' கருவியை சென்னை ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மருத்துவமனை அறிமுகம் செய்துள்ளது. 
 
 இது தொடர்பாக மருத்துவமனையின் தலைவர் டாக்டர் டி.காமராஜ்  செவ்வாய்க்கிழமை கூறியதாவது:  
 
            ஆண்மைக் குறைவு காரணமாக 30 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஆணுறுப்பு விறைப்புத் தன்மை இல்லாமல் போகும் நிலையில் இதுவரை மருந்துகள் மட்டுமே கொடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் முதன்முறையாக "எரெக்டைல் டிஸ்ஃபக்ஷன் ஷாக்வேவ் தெரப்பி' என்ற ஒலி அதிர்வு கருவியை ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மருத்துவமனை இந்தியாவிலேயே முதன்முறையாக அறிமுகம் செய்துள்ளது.  வலி மற்றும் எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத இந்தக் கருவி மூலம் ஆண் உறுப்பின் பல்வேறு இடங்களில் ஒலி அதிர்வு ஏற்படுத்தப்படும். 
 
              ஆண்மைக் குறைவு உள்ளவருக்கு வாரத்துக்கு இரண்டு முறை வீதம் 12 தடவை சிகிச்சை அளிக்கப்படும். இந்த ஒலி அதிர்வு சிகிச்சை காரணமாக ஆண் உறுப்பில் புதிய ரத்தக் குழாய்கள் தோன்றி ரத்த ஓட்டம் மேம்படும். இதனால் தாம்பத்ய உறவின்போது ஆணுறுப்பு விறைப்புத் தன்மை அதிகரிக்கும். குழந்தைப் பேறின்மை சிகிச்சைக்கு இந்தக் கருவி பெரிதும் உதவியாக இருக்கும்.  ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தக் கருவியை ஏற்கெனவே 21 நாடுகளில் பயன்படுத்தி வருகின்றனர். இந்தக் கருவியை ஆண்மைக் குறைவு உள்ளவருக்கு 6 முறை பயன்படுத்திய உடனேயே சிகிச்சையில் முன்னேற்றம் தெரியும் என்றார் டாக்டர் காமராஜ்.
 
 
 
 

Read more »

நாசா-வுக்கு கல்விச் சுற்றுலா திட்டம்: தமிழகத்திலுள்ள பள்ளிகளைச் சேர்ந்த 400 மாணவர்கள் சென்றனர்


சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், "நாசா'-வுக்கு கல்விச் சுற்றுலா திட்டத்தின் கீழ் அமெரிக்கா செல்ல உள்ள மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினர் 
 
 
               நாசா'-வுக்கு கல்விச் சுற்றுலா திட்டத்தின் கீழ், தமிழகத்திலுள்ள பள்ளிகளைச் சேர்ந்த 400 மாணவர்கள் செவ்வாய்க்கிழமை விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றனர்.  முன்னதாக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தென்னிந்தியாவுக்கான அமெரிக்க துணைத் தூதர் ஜெனீஃபர் மெக்கின்டயர், மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தார்.  இந்த கல்விச் சுற்றுலாவுக்கு சென்னையைச் சேர்ந்த உலக பயணக் குழு (டபிள்யு.டி.சி.) ஏற்பாடு செய்து வருகிறது. 
 
               அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஆர்வமுள்ள பள்ளி மாணவர்கள் இந்தச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.  இந்த சுற்றுலா செல்ல விரும்பும் மாணவர்கள் ரூ. 1.50 லட்சம் செலுத்த வேண்டும். இந்த மாணவர்கள் கென்னடி விண்வெளி மையத்தில் 4 நாள்கள் தங்க வைக்கப்படுவதோடு, யுனிவர்சல் ஸ்டூடியோ, மேஜிக் கிங்டம், வெள்ளை மாளிகை, அமெரிக்க நாடாளுமன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் அழைத்துச் செல்லப்படுவர். விண்வெளி ஆராய்ச்சியாளர்களுடன் கலந்துரையாடவும் மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும். சுற்றுலா முடிந்து அவர்கள் 11-ம் நாள் இந்தியா திரும்புகின்றனர். 
 
 
 
 
 
 
 

Read more »

கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் பணியில் 27 ஆயிரம் பேர்

கடலூர்:

             உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் 27 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப் படுவார்கள். தேர்தல் பணிகளை ஏற்க மறுக்கும் அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி எச்சரிக்கை விடுத்தார். 

ஆட்சியர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

              உள்ளாட்சித் தேர்தலுக்கான அனைத்து பூர்வாங்கப் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. உள்ளாட்சித் தேர்தல் பணியில் 27 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப் படுகிறார்கள். இப்பணிகளில் அனைத்துத் துறை அலுவலர்களையும் ஈடுபடுத்தி, நல்ல முறையில் தேர்தலை நடத்திட மாநில தேர்தல் ஆணையச் செயலர் அறிவுறுத்தி உள்ளார். அரசு அலுவலர்கள் தங்களுக்கு அளிக்கப்படும் தேர்தல் பணிகளை, முழுமையான ஈடுபாட்டுடன் கவனித்திட அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வாக்குப் பதிவு அலுவலர்கள் போன்ற தேர்தல் பணிக்கு, அலுவலர்கள் நியமிக்கப்படும்போது, அப்பொறுப்புகளை தவிர்க்க முற்படுவோர், ஏற்க மறுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

 புதிய வாக்காளர் பெயர்: 

             உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் குறித்து, பெருமளவில் சந்தேகம் எழுப்பப் படுகின்றன. சட்டம் மற்றும் விதிகளின்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதலுக்கு, படிவம் தாக்கல் செய்த நாள் நீங்கலாக, 7 நாள்கள் அறிவிப்புக் காலஅவகாசம் கொடுக்கப்பட வேண்டும். மனுக்களைப் பரிசீலிக்க குறைந்தபட்சக் கால அவகாசமும் தேவைப்படும். 

             எனவே சமீபத்தில் பெயர்களைச் சேர்க்க, மனு அளித்தவர்களின் பெயர்களை, உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யக் கடைசி நாளான 29-9-2011க்கு முன்னால் சட்டப்படி சேர்க்க இயலாது. மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க தகுதிநாள் 1-1-2011 ஆகும். எனவே 1-1-2011க்குப் பிறகு 18 வயது நிறைவடையும் அனைவரும், 24-10-2011 அன்று தொடங்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் போதுதான், பெயர்களைச் சேர்த்துக் கொள்ள முடியும். அவ்வாறு பெயர்கள் சேர்க்கப்படும் வாக்காளர் பட்டியல்கள் 5-1-2011 அன்றுதான் வெளியிடப்படும். எனவே தற்போது நடைபெறும் தொடர் திருத்தத்தில் அத்தகைய நபர்களின் பெயர்களைச் சேர்க்க இயலாது என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.















Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior