சென்னை:
தமிழக அரசின் வேலைவாய்ப்புத் துறை விரைவில் மின் ஆளுமை (இ-கவர்னன்ஸ்) மயமாக்கப்பட உள்ளது.
செப்டம்பர் 15-ம் தேதி முதல் மாணவர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்களை இணையதளம் மூலம் ஆன்லைனில், பதிவு செய்து கொள்ள முடியும். தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 4 மண்டலங்கள் பிரிக்கப்பட்டு, 32 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான பின் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டவுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் நெரிசல் அதிகரித்து வருகிறது.
இதற்காக வட்டார அளவில் அந்தந்த பள்ளிக் கூடங்களுக்கே அலுவலர்கள் சென்று சான்றிதழ்களை பதிவு செய்யும் வகையில் சிறப்பு முகாம்களும் நடத்தப்படுகின்றன. எனினும், பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள் கூடுதலாக பல்வேறு உயர் கல்வி படிப்புகளில் தேர்ச்சி பெற்ற பின்னர், அதற்கான சான்றிதழ்களை உடனடியாக பதிவு செய்து, பதிவு மூப்பு பெற ஆர்வம் காட்டுகின்றனர். இதுதவிர, வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அட்டையை புதுப்பிக்கவும் ஏராளமானோர் தினமும் குவிகின்றனர்.
இதனால், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் நாளுக்கு நாள் நெரிசல் அதிகரித்து வந்தது. இதையடுத்து, கூடுதலாக அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டது. வேலைதேடுவோர் 62 லட்சம் பேர்: வேலைவாய்ப்புத் துறையின் உயிர்ப் பதிவேட்டின்படி, இப்போது பதிவு செய்து, காத்திருப்போர் எண்ணிக்கை 62 லட்சத்தை எட்டியுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகங்களில் சான்றிதழ் பதிவு உள்பட 95 சதவீத பணிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கணினிமயமாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் மின் ஆளுமை முறையை நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டது.
"எம்பவர்' (அதிகாரம் அளித்தல்) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்துக்கு |2.75 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது. எல்காட் நிறுவனத்தின் உதவியுடன் "லினெக்ஸ்' மென்பொருள் அடிப்படையில் முதல் கட்டமாக அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களும் மின் ஆளுமை முறையில் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. ஓரிரு நாள்களில், இந்தப் பணிகள் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வைரஸ் பாதிப்பு இல்லை: "லினெக்ஸ்' மென்பொருளைப் பயன்படுத்துவதன் மூலம் தனியாக கட்டணம் செலுத்த தேவையில்லை. மேலும் வைரஸ் தாக்குதலால் கணினியில் உள்ள பல்வேறு ஆவணப் பதிவு விவரங்கள் எதுவும் பாதிக்கப்படாது.
இதனால், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் உள்ள கணினியில் தொகுக்கப்பட்டுள்ள பதிவேட்டு விவரங்கள் அனைத்தும் மின்ஆளுமை முறைக்கு "லினெக்ஸ்' மென்பொருள் உதவியுடன் விரைவில் மாற்றப்பட உள்ளது. 2-வது கட்டமாக தமிழகம் முழுவதும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் உள்ள பெரும்பாலான அலுவலர்களுக்கு நவீன கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் மாத இறுதிக்குள் மின்ஆளுமை திட்டப் பணிகள் நிறைவடைந்த பின், தனி "சர்வர்' மற்றும் இணையதள தொடர்பு மூலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் ஒருங்கிணைக்கப்பட உள்ளன.
ஆன்லைனில் பதிவு செய்யலாம்:
இதன்பின் மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களை "ஸ்கேனர்' சாதனம் மூலம் பிரதி எடுத்து, வேலைவாய்ப்புத் துறையின் புதிய இணையதளத்தைப் பயன்படுத்தி "ஆன்லைன்' மூலம் பதிவு செய்யலாம். இதன்பின் 6 நாள்கள் செல்லுபடியாகும் வகையில் தற்காலிகமான அடையாள எண் கொடுக்கப்படும். விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவில் ஏதேனும் குறை இருந்தால் 6 நாள்களுக்குள் திருத்தம் ("எடிட்' வசதி மூலம்) செய்து கொள்ளலாம். 6 நாள்களுக்குள் வேலைவாய்ப்பு அலுவலர்கள், ஆன்லைனில் மாணவர்கள் பதிவு செய்த சான்றிதழ் விவரங்களை சரிபார்த்து, ஒப்புதல் வழங்குவர். இதன்பின் தங்களுக்கான வேலைவாய்ப்பு அலுவலக நிரந்தரப் பதிவு அட்டையை "பிரிண்டர்' சாதனம் மூலம் எளிதில் பெற்றுக் கொள்ளலாம்.
போலிகளுக்கு வாய்ப்பு இல்லை:
கல்வித் துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் மாணவர்களுக்கு வழங்கும் சான்றிதழ் எண் குறித்த விவரங்களும் தொகுக்கப்படும் என்பதால் எந்த விதமான முறைகேடு செய்ய வாய்ப்பு மிகவும் குறைவு. ரேஷன் அட்டை உள்ளிட்ட இருப்பிடச் சான்றுகளை சமர்ப்பித்து, வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை. "ஆன்லைன்' முறையில் தங்களது வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அட்டையையும் புதுப்பித்துக் கொள்ளலாம்.
வேலை தருவோரும் பயன்படுத்தலாம்...
வேலைவாய்ப்பு தரும் நிறுவனங்களும் இந்த இணையதளத்தை பயன்படுத்தி, தங்களுக்குத் தேவையான, தகுதியுள்ள பணியாளர்களின் பட்டியலைப் பெற இயலும். மாற்றுத் திறனாளிகள், முன்னுரிமை பட்டியலில் இடம் பெற்றோர், தொழிற்படிப்பில் தேர்ச்சி பெற்றோர், செவிலியர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த திட்டம் மூலம் எளிதில் பயன் பெறலாம்.இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தும் வகையில், 240 அலுவலர்களுக்கு முதல்கட்டமாக எல்காட் நிறுவனம் கணினி பயிற்சி அளித்துள்ளது. இதையடுத்து எம்பவர்' மின் ஆளுமை திட்டத்தை வேலைவாய்ப்புத் துறையில், அண்ணா பிறந்த தினமான வரும் செப்டம்பர் 15-ம் தேதி நடைமுறைப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
Read more »