தானே புயல் கடந்தபோது கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் கடுமையாக பாதித்தன. புயலால் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன.
போர்க்கால அடிப் படைகளில் சீரமைப்பு பணிகள் அந்த மாவட்டங்களில் நடக்கின்றன. கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு ரூ. 5250 கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று முதல்- அமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காக மறு வாழ்வு அளிப்பதற்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கும்படி முதல்-அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பொது உணர்வு உள்ளவர்கள், தொழில் அதிபர்கள், அரசு சாரா அமைப்புகள், தர்ம சிந்தனையாளர்கள் நன்கொடை வழங்கும்படி கேட்டுக் கொண்டார்.
அவரது வேண்டுகோளை ஏற்று பல்வேறு அமைப்புகள், அரசு ஊழியர்கள் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகிறார்கள். முதலாவதாக தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய (என்.ஜி.ஒ.) மாநில தலைவர் இரா.சண்முகராஜா அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒருநாள் சம்பளத்தை வழங்குவதாக அறிவித்தார். அவர் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து அதற்கான கடிதத்தையும் கொடுத்தார்.
இதுபற்றி இரா. சண்முகராஜா கூறியது:-
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ உரிய நிவாரணம் வழங்குவதற்கு முதல்-அமைச்சர் நன்கொடை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று தமிழக அரசில் பணிபுரியும் 13 1/2 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் தங்கள் ஒருநாள் சம்பளத்தை நன்கொடையாக அளிப்பதற்கு முன் வந்துள்ளனர். ஒருநாள் சம்பளம் பிடித்தம் செய்தன் மூலம் சுமார் ரூ. 150 கோடிக்கு மேல் கிடைக்க வழிவகை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து பல்வேறு அரசு சங்கங்கள் தானாக முன்வந்து நிவாரண நிதிக்கு ஒருநாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய கடிதம் கொடுத்து வருகிறார்கள்.
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் ஒருநாள் ஊதியம் பிடித்தம் செய்ய அதன் தலைவர் டாக்டர் பாலகிருஷ்ணன் கடிதம் கொடுத்துள்ளார்.
தமிழ்நாடு அரசு அலுவலர் கழக தலைவர் பொ.சவுந்திரராஜன் கூறுகையில்,
புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்கும் பணியில் அரசுடன் இணைந்து செயல்பட அரசு அலுவலர் கழகம் சி மற்றும் டி பிரிவு விரும்புகிறது. முதல்-அமைச்சர் எங்களின் ஒருநாள் ஊதியத்தை ஏற்று மக்கள் துயரத்தில் பங்கேற்க வாய்ப்பு வழங்க வேண்டுகிறோம் என்றார்.
தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில சங்க தலைவர் கே.கணேசன் கூறியது:-
தானே புயல் நிவாரண நிதிக்கு எங்களது சங்கம் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ஒருநாள் சம்பளம் வழங்க முடிவு செய்து கடிதம் கொடுத்துள்ளோம். சங்கத்தில் 2 லட்சத்து 40 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். இதன் மூலம் சுமார் ரூ. 8 1/2 கோடி உதவி தொகை கிடைக்கும். மேலும் சங்கம் சார்பில் கடலூரில் புயலால் கடுமையாக பாதித்த 400 பேருக்கு வேட்டி-சேலையும், 10 கிலோ அரிசியும் வியாழக்கிழமை வழங்கப்பட்டது . அமைச்சர் எம்.சி. சம்பத் வழங்குகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் நலச்சங்கம் சார்பில் மாநில தலைவர் ரவி ரெங்கராஜ், பொதுச் செயலாளர் பாக்கியநாதன், இணை பொதுச்செயலாளர் வாசு ஆகியோர் கூறுகையில்,
கடலூர், விழுப்புரம் மக்களுக்கு உதவ கிராம நிர்வாக அலுவலர்கள் ஒருநாள் சம்பளத்தை வழங்க முடிவு செய்துள்ளோம் என்றனர்.
தலைமை செயலக சங்கம், தொடக்கப்பள்ளி, ஆசிரியர் கூட்டணி, வருவாய்த்துறை அலுவலர் சங்கம், அரசு பணியாளர் சங்கம், தமிழ்நாடு கூட்டுறவு தணிக்கைத்துறை அலுவலர் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் ஊழியர்களின் ஒருநாள் ஊதியத்தை வழங்க கடிதம் கொடுத்துள்ளனர்.
பல்வேறு சங்கங்கள் கொடுத்துள்ள கடிதங்கள் மூலம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரே நாளில் சுமார் ரூ. 200 கோடி குவிந்துள்ளது. தொடர்ந்து நிதி அளித்து வருகிறார்கள். நிதி உதவி அளிப்பவர்களுக்கு 100 சதவீத வரி விலக்கு அளிக்கப்படுகிறது.