உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 29, 2012

கடலூர் மாவட்ட கடலோர கிராமங்களில் "ஆபரேஷன் ஹாம்லா'

(1) கடலூர் தேவனாம்பட்டினத்தில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போலீஸார். (2) காரைக்கால் கடலோரப் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போலீஸார். 
கடலூர்:

         கடலூர் மாவட்ட கடலோர கிராமங்களில் போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
 
      ஆபரேசன் ஹாம்லா-2 என்ற பெயரில் தீவிரவாதிகளின் ஊடுருவலைத் தடுக்கும் வகையில் போலீஸார் இந்த ஒத்திகைத் தணிக்கையை மேற்கொண்டனர்
கிராமங்களில் கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளன. கடலோர கிராமங்களில் சந்தேக நபர்கள் வந்தால் உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். கடலோரப் பகுதிகளில் போலீஸ் தணிக்கைச் சாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்கும் வகையில், கடலோரப் பகுதி மக்களும், போலீஸாரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், இந்த ஹாம்லா ஆபரேசன் 2 என்ற ஒத்திகை நிகழ்த்தப்பட்டது.
           தமிழகத்தின் கடலோர கிராமங்கள் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவக் கூடும் என்ற அச்சம் உள்ளது. எனவே கடலோர கிராமங்களில் வசிக்கும் மீனவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன.
 செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் இந்த அதிரடி சோதனை, கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பகலவன் மேற்பார்வையில், கடலூர் மாவட்ட கடலோரக் கிராமங்களில் நடத்தப்பட்டது. வல்லம்படுகை முதல் நல்லவாடு வரை உள்ள கடலோரக் கிராமங்களில் தீவிர வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
 

     சந்தேகப்படும் நபர்கள் தீவிரமாக விசாரிக்கப்பட்டனர். கடலோர கிராமங்களுக்குச் செல்லும் சாலைகளில் உள்ள போலீஸ் தணிக்கைச் சாவடிகளிலும் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. கடலோர கிராமங்களுக்கு வரும் படகுகள், அவற்றில் பணிபுரியும் மீனவர்கள் அனைவரும் சோதனையிடப்பட்டனர். கடற்கரைப் பகுதிகள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டன. ÷கடலோரக் கிராமங்களை ஒட்டிய நகரப் பகுதிகளிலும் போலீஸார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
 தீவிரவாதிகள் போல் வேடமிட்டு இரு சக்கர வாகனத்தில் வந்த மூவர் கடலூர் துறைமுகம் சிங்காரத் தோப்புப் பகுதியில் சுற்றி வளைக்கப்பட்டனர். இந்த தீவிர வேட்டை வியாழக்கிழமை அதிகாலை வரை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
 புதுச்சேரியில்...
 

புதுச்சேரியில் தீவிரவாதிகள் ஊடுருவினால் அவர்களை எவ்வாறு பிடிப்பது என்பது குறித்து ஹாம்லா ஆபரேஷன் ஒத்திகை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
 காலாப்பட்டு அடுத்த பிள்ளைச்சாவடி பகுதி கடற்கரை வழியாக 8 பேர் ஊடுருவினர். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காலாப்பட்டு உதவி ஆய்வாளர் வெற்றிவேல் தலைமையில் போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். அவர்கள் 5 பேரை பிடித்தனர். மூவர் தப்பிவிட்டனர். அவர்களிடம் இருந்து டம்மி வெடிகுண்டுகள் மற்றும் ஜெலட்டின் குச்சிகளை போலீஸார் கைப்பற்றினர். இதேபோல் காரைக்கால், வம்பாகீரப்பாளையம், குருசுகுப்பம், தேங்காய்திட்டு, நல்லவாடு உள்ளிட்ட மீனவ கடற்கரை கிராமங்களில் ஹாம்லா ஆபரேஷன் ஒத்திகை நடைபெற்றது. இதில் தீவிரவாதிகளைப்போல் போலீஸாரே படகுகள் மூலம் கடற்கரை வழியாக ஊடுருவினர். அதை மற்றொரு போலீஸ் படை கண்டுபிடித்தனர். தீவிரவாதிகள் ஊடுருவினால் எச்சரிக்கையாக இருப்பதற்காக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.






Read more »

வாழைச் சாகுபடியில் புதிய சேமிப்பு முறைகள்


பதப்படுத்தப்படும் வாழைப்பழங்கள். பேக் செய்யப்பட்ட பழங்கள்.
சிதம்பரம்: 

           வாழை, அறிவியல் வகைப்பாட்டின் பூண்டு தாவரங்களைக் கொண்ட பேரினமாகும். உலகம் முழுவதும் வாழையின் தேவை வெகுவாக அதிகரித்து வருகிறது. சுமார் 9.6 மில்லியன் டாலர்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ள வாழை சந்தையில் நமது பங்களிப்பு 0.01 சதவீதம்தான்.
 
       கடந்த 2003-04-ல் வாழைப் பழங்களின் மொத்த ஏற்றுமதி மதிப்பு ரூ.11 கோடியில் இருந்து 2007-08ல் ரூ.26 கோடி ரூபாயாக உயர்ந்து, கடந்த ஆண்டு ரூ.55 கோடி வாழைப்பழம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி வளர்ச்சியம் தெரிவிக்கிறது. இந்நிலையில் வாழைப்பழத்தை புதிய முறையில் நீண்ட நாள்கள் கெடாமல் பதப்படுத்தி வாழை விவசாயிகள் ஏற்றுமதி செய்து அதிக லாபம் பெறலாம் என அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத் துறை உதவிப் பேராசிரியர் தி.ராஜ்பிரவீன் தெரிவிக்கிறார்.

         இந்தியாவின் உள்நாட்டு சந்தையில் வாழையின் தேவை அதிகம் உள்ளதால், ஏற்றுமதியில் கவனம் இல்லை எனக் கூறப்பட்டாலும், உலக சந்தையில் 2015-ம் ஆண்டுக்குள் நமது பங்கை இரண்டு சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டு அதற்குண்டான விரிவாக்க முயற்சிகள் தொடர்கின்றன தேசிய தோட்டக்கலை மிஷன் (சஏங) சில முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளதால் ஆண்டொன்றுக்கு வாழை சாகுபடி 10 முதல் 15 சதவீதம் அதிகரித்துள்ளதாக வேளாண் அமைச்சகம் தெரிவிக்கிறது.
 
           2007-ல் 6,04,000 ஹெக்டேரில் பயிரிடப்பட்ட வாழை 21 மில்லியன் டன் விளைச்சலைக் கொடுத்தது. இப்போது சாகுபடி பரப்பளவு 7,80,000 ஹெக்டேராக அதிகரித்து, விளைச்சலும் 27 மில்லியன் டன்களை தாண்டியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் நேந்திரன், ரஸ்தாளி, பூவன், ரோபஸ்டா, சினிசம்பா, செவ்வாழை போன்ற பல ரகங்கள் பயிரிடப்பட்டாலும், அவற்றின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தை தேவைகளை சந்திக்க புதிய சேமிப்பு முறைகள் முக்கிய பங்கு வகிக்கிறது.

புதிய சேமிப்பு முறைகள்:

 வாழைப் பழங்களை உள்நாட்டு சந்தை மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்ய புதிய சேமிப்பு முறைகளை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


 மாறுபட்ட சூழலில் சேமிப்பு முறை: 

       வாழைப் பழங்களைப் பாதுகாக்க இந்த சேமிப்பு முறையில் மிகவும் குறைந்தளவு குளிரில் சேமிக்கப்படுகிறது. சுமார் 90 நாள்கள் வரை வாழைப் பழங்கள் இம்முறையில் பாதுகாக்கப்பட்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்ய முடியும்.

         கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் சேமிக்கும் முறை: வாழை கட்டுப்படுக்தப்பட்ட சூழல் பாதுகாப்பு முறைக்கு மிகவும் உகந்ததாகக் காணப்படுகிறது. இப்பாதுகாப்பு முறையில் வாழைப் பழங்களின் பழுக்கும் தன்மை மற்றும் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு வெகுவாக கெடும் சூழல் குறைக்கப் படுகிறது. எனவே வாழை ஏற்றுமதியின்போது நீண்ட கடல் பயணத்தின்போதுகூட கெடாமல் பாதுகாக்கப்படுகிறது. இந்த பாதுகாப்பு முறையில் பழுக்காத வாழைப் பழங்களை 75 நாள்கள் வரை சேமித்து வைக்க முடியும், பின்னர் தகுந்த சூழலில் வைத்தால் 4 முதல் 5 நாள்களில் நன்றாக பழுக்க வைக்க முடியும்.

 
         இவ்வாறு இப்புதிய சேமிப்பு முறைகள் வாயிலாக வாழைப் பழத்தை சேமித்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தை தேவைகளை நிறைவு செய்து வாழை விவசாயிகள் மற்றும் வாழை வியாபாரிகள் அதிகளவு லாபம் அடைய முடியும் என்கிறார் முனைவர் தி.ராஜ்பிரவீன்.






Read more »

கடலூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை


கடலூர் :

     பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு இல்லாத மாவட்டமாக மாற்றிட முதல் கட்டமாக அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கலெக்டர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.


     முன்பெல்லாம் பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் கடைக்கு செல்லும் போது துணிப்பை கொண்டு செல்வது வழக்கம். ஆனால், இன்று எண்ணெய் கூட பாலித்தின் கவரில் வாங்கிச் செல்லும் நிலைக்கு மாறிவிட்டது. இவ்வாறு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை வீதிகளில் எறியப்படுகிறது. இவை எளிதில் மக்குவதில்லை. இதனால் மண்ணில் மழை நீர் இறங்குவதை தடை செய்வதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதோடு, மண்ணின் வளமும் குறைந்து வருகிறது. இயற்கை வளத்தை மாசுபடுத்தும் எளிதில் மக்காத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என இயற்கை வள ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூர் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றுள்ள ராஜேந்திர ரத்னு, மாவட்டத்தில் சுற்றுச் சூழலை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.


     அதனையொட்டி சுற்றுச் சூழலையும், மண் வளத்தையும் பாழ்படுத்தி வரும் மக்கா தன்மை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாத மாவட்டமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தத் தடை விதித்து நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளார். அதனையொட்டி அனைத்து அரசு அலுவலக வளாகங்களிலும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு நோட்டீஸ் மற்றும் ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தும் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக பள்ளி, கல்லூரி வளாகங்களிலும், அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கூடும் இடங்களான கோவில், பீச், பஸ் நிலையங்களில் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


              அதற்கு முன்பாக பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி விட்டு எறிவதால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்பை மக்கள் உணரும் வகையில் பள்ளி கல்லூரி மாணவர்களை கொண்டு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. கலெக்டரின் இந்த அதிரடி நடவடிக்கையை இயற்கை ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டுகின்றனர்.  மேலும், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு இல்லாத மாவட்டமாக்கிட கலெக்டர் மேற்கொள்ளும் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் தானாக முன்வந்து ஆதரவு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.













Read more »

முதியோர்களை ஆதரிப்பதில் கடலூர் மாவட்டம் முன்மாதிரி


கடலூர் :

       ""முதியோர்களை ஆதரிப்பதில் கடலூர் மாவட்டம் முன்மாதிரியாக உள்ளது'' என மாநில மகளிரணி ஆணையத் தலைவர் கூறினார்.


    மாநில மகளிர் ஆணையத்தில் கடந்த 2009 முதல் 2011 ஆகிய மூன்று ஆண்டுகளில் பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதான ஆய்வுக் கூட்டம் நேற்று கடலூர் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் நடந்தது. மகளிர் ஆணையத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமை தாங்கினார். கலெக்டர் ராஜேந்திர ரத்னு, எஸ்.பி., பகலவன் முன்னிலை வகித்தனர். சமூக நலத்துறை அலுவலர் புவனேஸ்வரி மற்றும் பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில் மகளிர் ஆணையத்தில் பெறப்பட்டு நிலுவையில் இருந்த 32 மனுக்கள் மீது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது மனு கொடுத்தவர்கள் மற்றும் அதில் குற்றம் சாட்டப்பட்ட இருதரப்பினரும் அழைத்து விசாரிக்கப்பட்டனர். அதில், போலீஸ் துறையில் நிலுவையில் இருந்த 24 மனுக்களில் 22ம், சமூக நலத்துறையில் நிலுவையில் இருந்த 8 மனுக்களில் நான்கும் தீர்வு காணப்பட்டன. மற்ற 6 மனுக்களின் முகவரி சரியாக இல்லாத காரணத்தினால் நிலுவையில் உள்ளது.


பின்னர் மகளிர் ஆணையத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி நிருபர்களிடம் கூறியது:


     நான் பொறுப்பேற்ற கடந்த 6 மாதத்தில் 9 மாவட்டங்களுக்கு நேரில் சென்று நிலுவை மனுக்கள் மீது ஆய்வு செய்து வருகிறேன். கடலூர் மாவட்டத்தில் நிலுவையில் இருந்த 32 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கலெக்டர், எஸ்.பி., மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயப்பட்டு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை மற்றும் வரதட்சணை தொடர்பான புகார்கள் மீது உரிய விசாரணை நடத்தி உடனுக்குடன் தீர்வு கண்டு வருவது பாராட்டுக்குரியது.


      நான் இதுவரை ஆய்வு கொண்ட 8 மாவட்டங்களில் இல்லாத வகையில் கடலூர் மாவட்டத்தில் முதியோர்களுக்கு என தனி இல்லம் அமைத்து ஆதரவற்ற முதியவர்களுக்கு மருத்துவம் மற்றும் குடும்பத்திலிருந்து பிரிந்து வந்தவர்களை மீண்டும் அவர்களது குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ்ந்திட உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. நான் இதுவரை ஆய்வு செய்த மாவட்டங்களில் திருவண்ணாமலை மாவட்டத்தில் வரதட்சணைக் கொடுமை அதிகமாக உள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு மகளிர் ஆணைய தலைவர் கூறினார்.














Read more »

சிதம்பரம் கீழமூங்கிலடி ராகவேந்திரா கல்லூரி சார்பில் ரத்ததான முகாம்


சிதம்பரம் :

       சிதம்பரம் கீழமூங்கிலடி ராகவேந்திரா கல்லூரி என்.எஸ்.எஸ்., அரிமா சங்கம், சிதம்பரம் காமராஜ் அரசு மருத்துவமனை சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.

      கல்லூரியில் நடந்த முகாமிற்கு கல்லூரி தாளாளர் மணிமேகலை கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். முதல்வர் பழனிவேல், அரிமா ஆளுனர் கல்யாண்குமார், மாவட்டத் தலைவர் நாகப்பன், அரிமா சங்கத் தலைவர் ரமேஷ்சந்த், கல்லூரி நிர்வாக அதிகாரி கோவிந்தராஜன் முன்னிலை வகித்தனர். சிதம்பரம் காமராஜ் அரசு மருத்துவமனை டாக்டர்கள் சிவக்குமார், பிரேம்குமார் பங்கேற்றனர். 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ரத்ததானம் செய்தனர். ஏற்பாடுகளை என். எஸ்.எஸ்., அலுவலர்கள் அப்பர்சாமி, பாலசுந்தரம் செய்திருந்தனர்.








Read more »

கடலூர் மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி


விருத்தாசலம் :

     கம்ப்யூட்டர் பயிற்சிக்கான இளைஞர்கள் தேர்வு முகாம் விருத்தாசலத்தில் நடந்தது. தமிழ்நாடு அரசு புதுவாழ்வு திட்டம், மகளிர் திட்டம் ஆகியவை இணைந்து கடலூர் மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளித்து வேலை வாய்ப்பினை பெற்றுத் தரும் நோக்கத்துடன் விருத்தாசலம் பூதாமூர் சூரியா ஐ.டி.ஐ., யில் பயிற்சிக்கான இளைஞர்கள் தேர்வு முகாமை நடத்தியது.


      முகாமிற்கு புதுவாழ்வு திட்ட மேலாளர் நித்தியானந்தம் தலைமை தாங்கினார்.  முகாமில் சி.எஸ்.சி., அப்பல்லோ கம்ப்யூட்டர் நிறுவனங்கள் பயிற்சிக்கான இளைஞர்களைத் தேர்வு செய்தனர். முகாமில் விருத்தாசலம், நல்லூர், காட்டுமன்னார்கோவில், மங்களூர் ஒன்றியங்களைச் சேர்ந்த 565 பேர் பங்கேற்றனர். உதவித் திட்ட அலுவலர் சக்திவேல், உதவித் திட்ட மேலாளர்கள் நாராயணசாமி, நாராயணன், மணிவண்ணன், கலைவாணி மற்றும் ஒன்றிய அணி தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.








Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior