தளவாடப் பொருள்கள் வந்திறங்கி ஒராண்டாகியும் மின்மாற்றி அமைக்காததால் ஆத்திரம் அடைந்த கட்டமுத்துப்பாளையம் கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சென்னை-கும்பகோணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
பண்ருட்டி வட்டம் அண்ணாகிராமம் ஒன்றியம் பூண்டி ஊராட்சியைச் சேர்ந்தது கட்டமுத்துப்பாளையம், இக்கிராமத்தில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் உள்ள மின்மாற்றியில் இருந்து மின் அழுத்தம் குறைவாக கிடைப்பதால், வீடுகளில் மின் விளக்குகள் வெளிச்சம் குறைவாக உள்ளது . மின் மோட்டார்கள் இயங்காததால் குடிநீர் தட்டுப்படும், விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதும் பாதிக்கப்பட்டு பொது மக்கள் அவதி அடைந்து வந்தனர்.இது குறித்து தகவல் அறிந்த மின்வாரியம் இப்பகுதியில் மற்றொரு மின்மாற்றியை அமைக்க தேவையான தளவாடப் பொருள்களை இறக்கி மின்மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபட்டது. இந்நிலையில் மின்கம்பம் நடவுள்ள சாலை புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளதாகக் கூறப்படும் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் ராஜாராம் எதிர்ப்பு தெரிவித்ததால் மின்மாற்றி அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது.இது தொடர்பாக கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் ஆகியோருக்கு பலமுறை மனு அளித்தும் எந்த பலனும் ஏற்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கட்டமுத்துப்பாளையம் கிராம மக்கள் பூண்டி ஊராட்சி மன்றத் தலைவர் ஜெ.குமார், அதிமுக பிரமுகர் கருணாகரன் ஆகியோர் தலைமையில் எல்.என்.புரம் மின்சார வாரிய அலுவலகம் முன், சென்னை-கும்பகோணம் சாலையில் சாலை மறியல் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த வட்டாட்சியர் ஆர்.பாபு, மின்சார வாரிய உதவி செயற் பொறியாளர் சாய்சுப்பிரமணியன் ஆகியோர் பொது மக்களிடம் சமரசம் பேசி, கட்டமுத்துப்பாளையம் சென்று பிரச்னைக்குறிய இடத்தைப் பார்வையிட சென்றனர். இதனைத் தொடர்ந்து பொது மக்கள் சாலை மறியலைக் கைவிட்டனர். இதனால் சென்னை-கும்பகோணம் சாலையில் 45 நிமிடம் போக்குவரத்து தடைபட்டது.