உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 10, 2010

''பான்கார்ட்'' பெறுவது எப்படி ? => How to Get PAN Card

                              2005 முதல் வருமான வரித்துறை சம்பந்தப்பட்ட வரி செலுத்தும் சலான்கள், கடிதப் போக்குவரத்து என அனைத்திலும் பான் நம்பரைக் குறிப்பிடுவதைக் கட்டாயாமாக்கி இருக்கிறது மத்திய அரசாங்கம். அது என்ன PAN ??? ( Permanent Account Number )

                      பான் நம்பர் என்பது ஆங்கில எழுத்துக்களும், எண்களும் கலந்து உருவாக்கப்பட்ட ஒரு பத்து இலக்க எண். அது உங்களுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒரு எண். நாடு முழுக்க சல்லடை போட்டு சலித்தாலும், உங்களைப் போலவே முகச்சாயல் கொண்ட இன்னொருவரைக் கூட கண்டுபிடித்து விட முடியும். ஆனால், உங்களுடைய எண்ணையே பான் நம்பராகக் கொண்ட இன்னொருவரைப் பார்க்க முடியாது. அதே போல ஒருவர் இரண்டு பான் நம்பர்கள் வைத்திருப்பதும் சட்டப்படி தவறு.

                                         2005 ஜனவரி முதல் தேதியிலிருந்து வருமானவரித் துறையுடனான கடிதப் போக்குவரத்து, வருமான வரி ரிட்டர்ன், வருமான வரி செலுத்தும் சலான், 50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக வங்கிக் கணக்கில் பணம்போடும்போது, வங்கிகளில் ஃபிக்ஸட் டெபாஸிட் போடுகிறபோது, சொத்துக்கள் வாங்கும்போது,விற்கும்போது, அயல்நாட்டுப் பயணம் செய்கிறபோது என்று பல சமயங்களிலும் எண்ணைக் குறிப்பிட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. ஃபார்ம் 49 ஏ இதுதான் பான் கார்டுக்குரிய விண்ணப்பம். இதில் உங்களுடைய இனிஷியலுக்கான விரிவாக்கத்துடன், உங்களது பெயரைக் குறிப்பிட வேண்டியது அவசியம். இதில் ஏதாவது குளறுபடி என்றால் உங்கள் பான்கார்டு வழங்குவதில் தாமதமாகலாம் ; உங்களுக்கு வேறு ஏதாவது பெயர் இருந்தால், அதையும் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். தந்தையின் பெயர் என்ற இடத்தில் திருமணமான பெண்களும், தங்களது தந்தையின் பெயரையே குறிப்பிட வேண்டும் ; வீடு மற்றும் அலுவலக முகவரி, எஸ்.டி.டி., குறியீட்டுடன் டெலிஃபோன் நம்பர், மொபைல் எண், பிறந்த தேதி, அரசு ஊழியரா, தனியார் துறையா போன்ற விவரங்களைக் குறிப்பிட வேண்டும். பாஸ்போர்ட் விண்ணப்பிக்கத் தேவைப்படும் 3.5 செ.மீ. x 2.5 செ.மீ அளவுள்ள, தெளிவான புகைப்படத்தை விண்ணப்பத்தில் அதற்குரிய இடத்தில் ஒட்ட வேண்டும்.

விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய மிக முக்கியமான டாகுமென்ட்கள்

இரண்டு. அடையாள அத்தாட்சி.

மற்றும் வசிப்பிட முகவரி.

ரேஷன் கார்டு. பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ் அல்லது உங்கள் தொகுதிக்கான எம்.பி., எம்.எல்.ஏ., வார்டு கவுன்சிலர், கெசடட் அரசு அதிகாரி இவர்களில் யாராவது ஒருவர் வழங்கிய அடையாளச் சான்றிதழ் இவற்றில் ஏதாவது ஒன்றின் ஒரு பிரதியை இணைத்தால் அதுவே ஆள் அடையாளம் மற்றும் வசிப்பிட அத்தாட்சி இரண்டுக்கும் உரியதாக ஏற்றுக்கொள்ளப்படும். உங்களுடைய பிறந்த குழந்தைக்குக் கூட நீங்கள், பான் கார்டு கேட்டு விண்ணப்பிக்க முடியும். பிறந்த குழந்தைக்கு எதற்கு பான் கார்டு என்று நீங்கள் கேட்கலாம். சிலர், மைனர் குழந்தைகளின் பேரில் வங்கியில் டெபாசிட் போடலாம் ; சொத்து வாங்கலாம் ; ஷேர்களிலோ இதர வகைகளிலோ முதலீடு செய்யலாம். அப்போது பான் நம்பர் கேட்பார்கள். எனவே, தேவைப்பட்டால் குழந்தைகளுக்கும் பான் கார்டு வாங்கி வைத்துக் கொள்ளலாம். யு டி ஐ இன்வெஸ்டார் சர்வீஸ் லிமிட்டெட், நேஷனல் செக்கியூரிட்டிஸ் டெபாஸிட்டரி லிமிட்டெட் இவை வருமான வரித் துறையின் சார்பில் பான்கார்டு வழங்கும் பணியைச் செய்து வரும் முக்கிய இரண்டு நிறுவனங்கள்.

                                             எனவே, வருமான வரித்துறையின் www.incometaxindia.gov.in அல்லது இந்த நிறுவனங்களுக்கான www.tin.nsdl.com ஆகிய இணையதளங்களிலிருந்து 49ஏ விண்ணப்பத்தை டவுண்லோடு செய்து கொள்ளலாம்.

                       இணைய வசதி இல்லாது போனால், நாடெங்கும் இயங்கி வரும் இந்த நிறுவனங்களின், அதிகாரபூர்வ ஏஜெண்ட்களாக செயல்பட்டு வரும் கார்வி கன்சல்டன்சி போன்ற நிதி ஆலோசனை நிறுவன மையங்களை அணுகலாம். வரி சம்பந்தப்ப்பட்ட பல்வேறு விண்ணப்பங்களும் ஐந்து ரூபாயில் கிடைக்கின்றன. விண்ணப்பத்தை A4 அளவுள்ள தரமான தாளில் நகல் எடுத்தும் பயன்படுத்தலாம். அருகிலுள்ள வருமான வரித்துறை அலுவலகத்தை நாடி வேண்டிய உதவி பெறலாம். எப்போ கிடைக்கும் ? நாலே நாளில் பான் எண் கிடைக்கும். பத்தே நாட்களில் பான் கார்டு வந்துவிடும். கட்டணம் : ரூ.250. எவன்று நாளுக்கு, நாலு எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பும் அளவுக்கு நாடெங்கும் பான் கார்டு வாங்கித்தரும் சேவைக்கான ஏஜெண்ட்கள் நிறைந்திருக்கிறார்கள். விண்ணப்பத்திலோ கட்டணம் அறுபது ரூபாய், ப்ளஸ் வரிகள் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அதிகாரப் பூர்வ ஏஜென்சி நிறுவனங்கள் 94 ரூபாய் வசூலிக்கின்றன. உங்கள் விண்ணப்பத்தை வாங்கும்போது அதற்கான ரசீதில் ஓர் எண் குறிப்பிடப்பட்டிருக்கும். குறிப்பிட்ட காலத்துக்குள் பான் கார்டு வராமல் போனாலோ, வேறு பிரச்னை என்றாலோ கடிதம் எழுதும் போது இந்த எண்ணைக் குறிப்பிட வேண்டியது மிக அவசியம்.

மேலும் பான் கார்டு குறித்த தகவல்களுக்கு :

                            ஃபோன் : - 022-2721 8080 ; ஈ மெயில் : tininfo@nsdl.co.in

                        PAN என்று அடித்து ஒரு ஸ்பேஸ் விட்டு உங்களுக்கு தரப்பட்ட acknowledgement No ஐ டைப் செய்து, 53030 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி., பான் கார்டு எந்த நிலையிலிருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம்.

கடிதம் எழுத முகவரி :

Incometax PAN services
unit (managed by NSDL ) Third Floor, Sapphire Chambers,
Near Baner Telephone Exchange, Baner,Pune - 411 045.



Read more »

குரூப்-2 ​ வினாத்தாள் கசிந்ததா?

             தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ​(ஏப்.11) நடைபெறவுள்ள குரூப்-2 தேர்வுக்கான வினாத்தாள் வெளியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.​ தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர் உள்ளிட்ட பல்வேறு அரசுக் காலிப் பணியிடங்களுக்கு குரூப்-2 தேர்வு ஞாயிற்றுக்கிழமை ​(ஏப்.11) நடைபெறுகிறது.இத்தேர்வை 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர்.​ ​

                     தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில்,​​ வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகிருக்கலாம் என்ற தகவல் கிடைத்துள்ளது. வினாத்தாள் அனுப்புவது எப்படி?:​​ குரூப் 1,​ 2 போன்ற தேர்வுகளுக்கான ​வினாத்தாள்கள் வெளி மாநிலங்களில் அச்சிடப்பட்டு,​​ தமிழகத்துக்கு கொண்டு வரப்படும்.​ இந்த வினாத்தாள்கள் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் எந்த அளவுக்குத் தேவையோ,அந்த அளவுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படும்.​ அவ்வாறு அனுப்பப்படும்போது,​​ ஒரு உதவிப் பிரிவு அலுவலர்,​​ ஒரு உதவியாளர் உடன் அனுப்பப்படுவர்.​ வினாத்தாள்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காகவே அரசுப் பணியாளர் தேர்வாணையம் இந்த ஏற்பாட்டை ஆண்டுதோறும் செய்து ​வருகிறது.​ ​
                     
                      தஞ்சாவூர் மாவட்டத்தில்:​​ குரூப்-2 தேர்வு நடைபெறவுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் வினாத்தாள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.​ தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மொத்தம் 78 வினாத்தாள் கட்டுகள் அனுப்பப்பட வேண்டும்.​ இதில் 77 வினாத்தாள் கட்டுகள் மட்டுமே கடந்த செவ்வாய்க்கிழமை அங்கு போய் சேர்ந்தன.​ ஒரு வினாத்தாள் கட்டு வரவில்லை.​ இது குறித்து மாவட்ட தேர்வுப் ​பொறுப்பாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.​ இந்த அதிர்ச்சி தீருவதற்குள்,​​ ஒரு வினாத்தாள் கட்டு வியாழக்கிழமை வந்துசேர்ந்தது.​ அது பிரிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இது அந்த மாவட்ட தேர்வு மைய அதிகாரிகள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.​ கட்டு பிரிக்கப்பட்டது போல தெரியவந்திருப்பதன் மூலம் வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்பே வெளியாகி இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.​  இது குறித்து தேர்வு நடப்பதற்கு முன்பாகவே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் மற்றும் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

downlaod this page as pdf

Read more »

பி.எஸ்ஸி.​ நர்சிங் படிப்புக்கு முன்கூட்டியே கவுன்சலிங்: கிண்டியில் நடத்த முடிவு


 
              பி.எஸ்ஸி.​ ​(நர்சிங்),​​ பி.ஃபார்ம்.,​​ பி.பி.டி.​ ​(ஃபிஸியோதெரப்பி),​​ ​பி.ஓ.டி.​ ஆகிய மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு இந்த ஆண்டு முன்கூட்டியே கவுன்சலிங் நடத்த மருத்துவம் சார்ந்த கல்விக் குழு முடிவு செய்துள்ளது.​ ​ 
 
                     எம்.பி.பி.எஸ்.,​​ பி.டி.எஸ்.​ ​(பல் மருத்துவப் படிப்பு)​ ஆகியவற்றில் பிளஸ் 2 முடித்த மாணவர்களைச் சேர்க்க இந்த ஆண்டு மே மாத இறுதியில் விண்ணப்ப விநியோகம் தொடங்குகிறது.​ ஜூன் இறுதி வாரம் கவுன்சலிங் தொடங்குகிறது.​ ​ இதேபோன்று பி.எஸ்ஸி.​ ​(நர்சிங்)​ உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கும் ​மே இறுதியிலேயே விண்ணப்பத்தை வழங்கி,​​ எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ்.​ படிப்புகளுடன் இணைந்து கவுன்சலிங் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மருத்துவ கல்வி இயக்குநரும்,​​ மருத்துவம் சார்ந்த கல்விக் குழுவின் இயக்குநருமான டாக்டர் எஸ்.விநாயகம் தெரிவித்தார்.​ ​ 
 
                        "எம்.பி.பி.எஸ்.,​​ பி.டி.எஸ்.​ கவுன்சலிங் முடிந்து,​​ பி.எஸ்ஸி.​ ​(நர்சிங்)​ உள்ளிட்ட ​படிப்புகளுக்கு செப்டம்பர் மாதம்தான் கடந்த பல ஆண்டுகளாக கவுன்சலிங் நடைபெற்று வருகிறது.​ இதனால் உரிய நேரத்தில் மாணவர்கள் சேர முடியாமல்,​​ ​பி.பி.டி.,​​ பி.ஃபார்ம்.​ உள்ளிட்ட படிப்புகளை நடத்தும் கல்வி நிறுவனங்களில் ஆண்டுதோறும் அதிக அளவுக்கு காலியிடங்கள் ஏற்படுகின்றன.​ ​ காலியிடங்கள் மற்றும் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவின் நிர்வாகச் சுமை ​ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மருத்துவம் சார்ந்த கல்விக் குழு ​("ஃபார்மா போர்டு') என மருத்துவம் சார்ந்த படிப்புகளை நிர்வகிக்க தனிக் குழு ஏற்படுத்தப்பட்டது.​ ​சென்னை கிண்டி கிங் ஆராய்ச்சி மையத்தில் செயல்படும் இந்த கல்விக் குழு கடந்த கல்வி ஆண்டில் ​(2009-10) மருத்துவம் சார்ந்த படிப்புகளை நடத்தும் கல்வி நிறுவனங்களில் தேர்வுகளை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.கிங் ஆராய்ச்சி மையத்தில் கவுன்சலிங்:​​ இந்த கல்விக் குழு இந்த ஆண்டு முதன்முறையாக மே மாத இறுதியில் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோக தேதி குறித்து அறிவிக்கும்.​ எம்.பி.பி.எஸ்.,​​ பி.டி.எஸ்.​ விண்ணப்பங்களைப் போன்று அரசு மருத்துவக் கல்லூரிகளிலேயே பி.எஸ்ஸி.​ ​(நர்சிங்),​​ பி.பி.டி.​ ​
 
                    (ஃபிஸியோதெரப்பி),​​ பி.ஓ.டி.​ ஆகிய படிப்புகளுக்கும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.​ ​ சென்னை கீழ்ப்பாக்கத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ்.​ கவுன்சலிங் ஜூன் மாத இறுதியில் நடைபெறும்போதே,​​ பி.எஸ்ஸி.​ ​(நர்சிங்),​​ பி.பி.டி.​ உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த ​ படிப்புகளுக்கு சென்னை கிண்டி கிங் ஆராய்ச்சி மையத்தில் கவுன்சலிங் நடக்கும்'' என்றார் டாக்டர் எஸ்.விநாயகம்.

downlaod this page as pdf

Read more »

கடலூர் விவசாயிகளைக் கவரும் கோழிக் கொண்டைப் பூக்கள்


சிவப்பு,​​ மஞ்சள் கோழிக் கொண்டைப் பூக்கள்.
கடலூர்:
 
                   மல்லிகை,​​ முல்லை,​​ ரோஜா என மணம் வீசும் மலர்கள் மங்கையர் சூடிக் கொள்வதாலும் மாலைகளை அலங்கரிப்பதாலும் பெருமைப்படுகின்றன. ஆனால் வாசமில்லா மலர்கள் பல,​​ அவற்றின் கண்கவர் அழகு காரணமாக,​​ மாலைகளில் மற்ற மலர்களுடன் சேர்த்துத் தொடுக்கப்படுவதால் பெருமைப்படுகிறது. அந்த வரிசையில் முக்கிய மலராகக் கருதப்படுகிறது கோழிக் கொண்டை செடியின் பூக்கள்.​
 
                       கிரேக்க மொழியில் இருந்து வந்த இச்சொல்லுக்கு கொழுந்துவிட்டு எரிதல் என்று பொருள்.​ கோழிக்கொண்டை பூக்கள் சிவப்பு நிறத்தில் மட்டுமன்றி,​​ மஞ்சள்,​​ ஆரஞ்சு நிறங்களிலும் கிடைக்கின்றன. சிவப்பு ரோஜா மாலைகளில் இடையிடையே கோழிக் கொண்டை பூக்களும் சேர்த்து தொடுக்கப்பட்டு,​​ ரோஜா பூவைப் போன்ற தோற்றத்தையும் அந்தஸ்தையும் கோழிக் கொண்டப் பூக்கள் பெற்றுவிடுகின்றன.​ பல வண்ண மாலைகளில் கண்ணைக் கவரும் சிவப்பு,​​ மஞ்சள்,​​ ஆரஞ்சு நிறங்களுக்காக கோழிக் கொண்டைப் பூக்கள் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன.மேலும் கோழிக்கொண்டை பூக்கள் 8 நாள்கள் வரை வாடாமல் இருப்பதும் அதன் பயன்பாட்டுக்கு முக்கியக் காரணம் என்று பூக்கடைக் காரர்கள் தெரிவிக்கிறார்கள்.​ ​ சேவற்கோழியின் கொண்டை போன்ற தோற்றமும் நிறமும் இருப்பதால்,​​ இப்பூக்கள் கோழிக் கொண்டை பூக்கள் எனப் பெயர் பெற்றுள்ளன.​ மேலை நாடுகளில் கோழிக் கொண்டை பூக்கள் பூங்கொத்துகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.​ ​
                         
                            கோழிக்கொண்டைச் செடிகள் கீரை வகையைச் சேர்ந்தவை.​ உலகம் முழுவதும் வெப்பப் பிரதேசங்களில் பயிரிடப்படுகிறது.​ வெயில் காலத்தில் நன்றாகச் செழித்து வளரும் தன்மை கொண்டது.​ வட அமெரிக்காவில் ஆண்டு முழுவதும் கோழிக் கொண்டை பயிரிடப்படுகிறது.தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்திலும்,​​ கன்னியாகுமரி மாவட்டத்திலும் அதிகமாகப் பயிரிடப்பட்டு,​​ மலர்கள் பல மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.​ ​ மற்ற மாவட்டங்களிலும் பரவலாக காணப்படுகிறது.​ குறைந்த தண்ணீர் செலவு,​​ குறைந்த பராமரிப்பு சாகுபடி முறையால் கோழிக்கொண்டை செடிகள்,​​ விவசாயிகளைக் கவரத் தொடங்கி இருக்கின்றன.​ தற்போது கடலூர் மாவட்ட விவசாயிகளும் கோழிக் கொண்டை பயிரிடத் தொடங்கி இருக்கிறார்கள்.​ 

                       ​கடலூரை அடுத்த நாணமேடு,​​ ராமாபுரம் பகுதிகளில் இந்த ஆண்டு கோழிக் கொண்டை செடிகள் சுமார் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டு உள்ளன.​ திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் இருந்து கோழிக்கொண்டை பூக்களைத் தருவித்து வந்த கடலூர் மலர் வியாபாரிகள்,​​ தற்போது கடலூரிலேயே இப்பூக்களை வாங்கத் தொடங்கி உள்ளனர்.விவசாயிகள் கோழிக் கொண்டைச் செடிகளைப் பயிரிடுவதற்கு முன்பே,​​ பூ வியாபாரிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.​ கடலூரில் கோழிக் கொண்டை பூக்களின் விலை சாதாரணமாக கிலோ ரூ.10 முதல் ரூ.20 வரை இருக்கும்.​ ஆனால் சில காலங்களில் கிலோ ரூ.200 வரைகூட உயர்ந்து விடும் என்று பூ வணிகர்கள் தெரிவிக்கிறார்கள்.இதுகுறித்து கடலூர் தோட்டக்கலைத் துறை வேளாண் அலுவலர் ரவிச்சந்திரன் கூறுகையில்,​​ பூக்கடைக்காரர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டால் மட்டுமே கோழிக் கொண்டை செடிகளைப் பயிரிட முடியும்.​ கீரை வகையைச் சேர்ந்ததாக இருப்பதால் விதையைக் கொண்டு செடிகளை எளிதில் உற்பத்தி செய்து விடலாம்.​ 3 மாதப் பயிரான கோழிக்கொண்டை வறட்சியைத் தாங்கி வளரும் தன்மை கொண்டது.​ ஹெக்டேருக்கு 10 டன்கள் வரை பூக்கள் கிடைக்கும்.​ அதிக செலவு இன்றி ஹெக்டேருக்கு குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் வருவாய் கிடைக்கும் என்றார்.​ ​மேலை நாடுகளில் பூங்கொத்துகளில் அதிக அளவில் கோழிக்கொண்ட பூக்களைப் பயன்படுத்துவதால்,​​ இப்பூக்களை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளைக் கண்டறிந்தால்,​​ நல்லதொரு பணப்பயிராக கோழிக்கொண்டையை மாற்ற முடியும் என்பது விவசாயிகளின் கருத்து.

downlaod this page as pdf

Read more »

கலைஞர் வீட்டு வசதித் திட்டம்: இதுவரை 60,168 வீடுகள் கணக்கெடுப்பு

 கடலூர்:

               முதல்வர் கலைஞர் வீட்டுவசதி திட்டத்துக்காகத் தகுதி வாய்ந்த குடிசை வீடுகளைத் தேர்ந்து எடுக்க, கடலூர் மாவட்டத்தில் புதன்கிழமை வரை 60,168 குடிசை வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார். தமிழக கிராமங்களில் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றுவதற்கு கலைஞர் வீட்டுவசதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிதி ஆண்டில் 3 லட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. இத் திட்டத்தில் கடலூர் மாவட்டத்துக்கு கணிசமான வீடுகள் கட்ட நிதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.÷2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கடலூர் மாவட்டத்தில் 1.95 லட்சம் குடிசை வீடுகள் இருக்கலாம் என்று தெரிகிறது. கடலூர் மாவட்டத்தில் 681 ஊராட்சிகளில் குடிசைவீடுகள் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. 29-3-2010 அன்று கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி உதவியாளர், மக்கள் நலப்பணியாளர் அடங்கிய குழு இக் கணக்கெடுப்பை மேற்கொள்கிறது.

 கணக்கெடுப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

                     கணக்கெடுப்புப் பணி ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களால் மேற்பார்வை செய்யப்படுகிறது.  இப்பணியை 15-5-2010 க்குள் இறுதி செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. 7-ம் தேதி வரை 410 ஊராட்சிகளில் 60,168 குடிசை வீடுகள் கணக்கெடுப்பு செய்யப்பட்டு உள்ளது. 42 ஊராட்சிகளில் முழுமையாக நடைபெற்று உள்ளது. மண், சுடப்படாத செங்கல், சுட்ட செங்கல், போன்றவற்றால் சுவர்கள் அமைத்து ஓலைக்கூரை வேய்ந்த வீடுகளும் இத் திட்டத்தில் கணக்கெடுக்கப்படும். கணக்கெடுப்புக்கு அலுவலர்கள் வரும்போது குடும்ப உறுப்பினர்கள் கண்டிப்பாக வீட்டில் இருக்க வேண்டும். குடும்ப அட்டை, மின் இணைப்பு விவரம், வீட்டுவரி விதிப்பு எண், நில உரிமைக்கான பட்டா அல்லது பத்திரம் காண்பிக்க தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும். கணக்கெடுப்பின் போது வீடு பூட்டப்பட்டு இருந்தால், கணக்கெடுப்புக்குக்குழு தனது பணியை நிறைவு செய்யும் முன்போ, மேலாய்வுப் பணி நிறைவடையும் முன்போ, பூட்டிய வீட்டின் குடும்ப உறுப்பினர் திரும்பிய நிலையில், கணக்கெடுப்புக் குழு மேற்படி நபரிடம் ஆவணங்களைப் பெற்று உறுதி செய்யும். கணக்கெடுப்புக் குழுவிடம் சரியான தகவல்கள் மற்றும் ஆவணங்களைக் காண்பித்து, கணக்கெடுப்புப் பணி துல்லியமாகவும் விரைவாகவும் முடித்திட பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

downlaod this page as pdf

Read more »

அறைகள் ஒதுக்கும் வரை நீதிமன்றப் புறக்கணிப்பு தொடரும்

 பண்ருட்டி:

                  புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்துக்கு அறைகள் ஒதுக்கும் வரை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என வழக்கறிஞர் சங்க தலைவர் சி.அசோகன் தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞர் சங்க தலைவர் சி.அசோகன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளது:

                    பண்ருட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடம் ரூ.3 கோடி செலவில் கட்டப்பட்டு பணி நிறைவு பெற்றுள்ளது. இதில் வழக்கறிஞர்கள் சங்கத்துக்கு அறைகள் ஒதுக்கப்படாததால் வழக்கறிஞர்கள் வீதியில் நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மார்ச் 27-ம் தேதி நடைபெற்ற சங்கக் கூட்டத்தில் வழக்கறிஞர்களுக்கு அறை ஒதுக்க வேண்டும் என மாவட்ட நீதிபதிக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. 

                            ஆனால் மாவட்ட நீதிபதி பரிசீலிக்கவில்லை. இதனால் ஏப்ரல் 1-ம் தேதி முதல் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பணிகளும், பொது மக்களும் பாதிப்படைந்துள்ளனர். தொடர்ந்து ஏப்ரல் 8-ம் தேதி மூத்த வழக்கறிஞர் ஜி.குணாளன் தலைமையில் நடைபெற்ற மறு ஆய்வு கூட்டத்தில் வழக்கறிஞர் சங்க கோரிக்கையை மாவட்ட நீதிபதி பரிசீலிக்காத நிலையில் அறை ஒதுக்கும் வரை நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டம் தொடர்ந்து நடத்தப்போவதாக சங்கத் தலைவர் சி.அசோகன் தெரிவித்துள்ளார்.

downlaod this page as pdf

Read more »

ரூ.3.50 லட்சம் திருட்டு சிதம்பரம் அருகே மீண்டும் திருடர்கள் கைவரிசை

 சிதம்பரம்:

                  சிதம்பரம் அருகே பி.முட்லூர் மெயின்ரோட்டில் தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை நள்ளிரவு 3 வீடுகள் மற்றும் டாஸ்மாக் மதுபானக்கடை, ஜவுளிக்கடை ஆகியவற்றில் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் உள்ளே புகுந்து திருடிச் சென்றுள்ளனர். கொள்ளையர்களின் தொடர் கைவரிசையால் அப்பகுதி மக்களும், வியாபாரிகளும் நிம்மதி இழந்து அச்சத்தில் உள்ளனர். பி.முட்லூர் மெயின்ரோட்டில் உள்ள ரிசானா என்பவர் வீட்டில் ரூ.30 ஆயிரம் ரொக்கம், 10 பவுன் நகைகள், 300 கிராம் வெள்ளி பொருள் ஆகியவையும், ரஹ்மான்  வீட்டில் ரூ.11 ஆயிரம் ரொக்கம், 10 பவுன் நகைகள் ஆகியனவும், முக்தர்அலி வீட்டில் டிவிஎஸ் மோட்டார் சைக்கிள் ஆகியனவும் திருடப்பட்டன. மேலும் அருகில் டாஸ்மாக் மதுபானக்கடை, ஜவுளிக்கடை ஆகியவற்றின் பூட்டை உடைத்து திருட முயற்சி நடந்துள்ளது. தகவல் அறிந்த பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த மார்ச் 6-ம் தேதி புதுச்சத்திரத்தில் 3 கடைகளை உடைத்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் திருடப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.

                    இதேபோன்று கடந்த மாதம் பரங்கிப்பேட்டை போலீஸ் சரகத்தைச் சேர்ந்த பெரியப்பட்டு பகுதியில் 9 கடைகள் உடைக்கப்பட்டு ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள ரொக்கம் மற்றும் பொருள்களும், பி.முட்லூர் நெடுஞ்சாலையில் 9 கடைகளை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள ரொக்கம் மற்றும் பொருள்களும் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர் சம்பவங்களை பார்க்கும் போது போலீஸôருக்கு சவாலாக இந்த சம்பவங்கள் நடைபெறுகிறதோ என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

downlaod this page as pdf

Read more »

என்எல்சி ஊழியர்களுக்கு 35% ஊதிய உயர்வு

 நெய்வேலி:

                   என்எல்சி தொழிலாளர்களுக்கான ஊதிய மாற்று ஒப்பந்தத்தின் போது அடிப்படை சம்பளத்தில் 35 சதவீதம் உயர்வு வழங்க வேண்டும் என வெள்ளிக்கிழமை நடந்த தொமுச நிர்வாகக் குழுவில் முடிவு செய்யப்பட்டது.

                   மத்தியப் பொதுத்துறை நிறுவனமான என்எல்சியில் 5 ஆயிரம் பொறியாளர்கள் உட்பட, 19 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். இவர்களில் பொறியாளர் போக எஞ்சிய 14 ஆயிரம் தொழிலாளர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் ஊதியமாற்று ஒப்பந்தம் தொடர்பாக நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான தொமுச மற்றும் பாட்டாளித் தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் நிர்வாகத்துடன் கடந்த இரு மாதமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தொமுச நிர்வாகக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை சங்க அலுவலகத்தில் நடந்தது. இதில் சங்கத்தின் 2-ம் நிலை நிர்வாகிகள் 60 பேர் பங்கேற்றனர். இக்கூட்டத்தின் போது பேச்சுவார்த்தை விவரங்களைக் கேட்டறிந்த சங்கத்தின் 2-ம் நிலை நிர்வாகிகள், நிர்வாகம் நிர்ணயித்த ஊதிய உயர்வு சதவீதத்தை ஏற்க மறுத்துனர். பின்னர் அடிப்படை சம்பளத்தில் 30 முதல் 35 சதவீத ஊதிய உயர்வும், பொதுவான அலவன்ஸ் 46 சதவீத உயர்வும், சுரங்கத் தொழிலாளர்களுக்கு கூடுதலாக 23 சதவீத அலவன்ஸ், இன்கிரிமென்ட் 3 சதவீத உயர்வும், புதிய ஊதியமாற்று ஒப்பந்தம் 01-01-2007 முதல் 31-12-2011 என காலவரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதை ஏற்றுக்கொண்ட தொமுச தலைமை நிர்வாகிகள் 2-ம் நிலை நிர்வாகிகளின் கோரிக்கையை முன்வைத்து பேச்சு நடத்துவது எனவும், நிர்வாகம் பணிய மறுத்தால் போராட்ட நடவடிக்கையில் இறங்குவது எனவும் முடிவு செய்துள்ளனர்

downlaod this page as pdf

Read more »

புதுவையில் இருந்து காரில் கடத்தப்பட்ட 400 லிட்டர் பெட்ரோல் பறிமுதல்

 கடலூர்:

                  புதுவையில் இருந்து காரில் 400 லிட்டர் பெட்ரோல் கடத்தி வந்த ராஜேந்திரன் (54) வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்ட வணிகக் குற்றப் புலனாய்வு போலீஸ் உதவி ஆய்வாளர் திருவேங்கடம் மற்றும் தணிக்கைச்சாவடி போலீóஸ் உதவி ஆய்வாளர் தணிகாச்சலம் ஆகியோர் கடலூர் ஆல்பேட்டை தணிக்கைச் சாவடியில் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். புதுவையில் இருந்து கடலூருக்கு வேகமாக வந்த அம்பாசிடர் காரை நிறுத்தி போலீஸôர் சோதனையிட்டனர். இதில் காரில் 12 கேன்களில் மொத்தம் 400 லிட்டர் பெட்ரோல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விற்பனை வரி வித்தியாசம் காரணமாக கடலூரை விட புதுவையில் பெட்ரோல் விலை குறைவு என்பதால், 400 லிட்டர் பெட்ரோல் புதுவை மாநில எல்லையில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் இருந்து வாங்கி வரப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையொட்டி காரில் வந்த சிதம்பரம் வட்டம் கொட்டாப்புளிச் சாவடியைச் சேர்ந்த ராஜேந்திரன் கைது செய்யப்பட்டார். காருடன் 400 லிட்டர் பெட்ரோல் கைப்பற்றப் பட்டது.385 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணை சிக்கியது கடலூர் முதுநகரில் வெள்ளிக்கிழமை வணிகக்குற்ற புலனாய்வு போலீஸôர் நடத்திய திடீர் சோதனையில் 385 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணை சிக்கியது.  முதுநகர் அக்கரை கோரி கிராமத்தில் போலீஸôர் திடீர் சோதனை மேற்கொண்டனர். குட்டியாண்டி மகன் சதீஷ் (24) என்பவரது வீட்டில் சோதனையிட்டபோது, தோட்டத்தில் 11 கேன்களில் 385 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணை பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைப் போலீஸôர் பறிமுதல் செய்தனர். சதீஷ் கைது செய்யப்பட்டார்.

downlaod this page as pdf

Read more »

தேர்தலில் தி.மு.க.,வை மக்கள் தூக்கியெறிவார்கள் : செங்கோட்டையன் 'ஆரூடம்'

 சிதம்பரம்: 

               தி.மு.க.,வை வரும் தேர்தலில் மக்கள் தூக்கியெறிவார்கள் என மாஜி அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.
 
                  நெய்வேலிக்கு ஜெயலலிதா வரும் 18ம் தேதி வருவது தொடர்பாக கடலூர் மேற்கு மாவட்ட அ.தி. மு.க., செயல்வீரர்கள் கூட்டம் சிதம்பரத்தில் நடந் தது. மாவட்ட அவைத் தலைவர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். கட்சி அமைப்பு செயலாளர் செம்மலை, மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன் முன்னிலை வகித்தனர். நகர செயலா ளர் சுந்தர் வரவேற்றார்.  

தலைமை நிலைய செயலாளர் செங்கோட்டையன் சிறப்பாளராக பங்கேற்று பேசியதாவது: 

              நெய்வேலியில் ஜெயலலிதா பங்கேற்கும் விழா தமிழ்நாட்டில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும். கடலூர் மாவட்டத்தில் 9 சட்டசபை தொகுதியிலும் அ.தி.மு.க., விற்கு வெற்றி வாய்ப்பு ஏற்படும். ஜெயலலிதாவையோ, கட்சியையோ யாராலும் அழிக்க முடியாது. வரும் தேர்தலில் தி.மு.க., கூட்டணி உடைந்துவிடும். மக்கள் தி.மு.க.,வை தூக்கியெறிந்து விடுவார்கள். 2001- 2005 வரையிலான அ.தி.மு.க., ஆட்சியில் மின் வெட்டே இல்லை. ஆனால் கடந்த மூன்றரை ஆண்டுகளில் கடுமையான மின்வெட்டால் மக்கள் பாதிக்கப்பட்டுகின்றனர். பன்னாட்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால் மின்தட் டுப்பாடு ஏற்பட்டு தமிழகத்தில் சிறு, குறு விவசாயிகள், சிறு தொழில் நடத்துபவர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஜவுளி ஏற்றுமதியில் 4,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு செங்கோட்டையன் பேசினார். கூட்டத்தில் அமைப்பு செயலாளர் செம்மலை, எம்.எல்.ஏ., செல்விராமஜெயம், முன்னாள் எம். எல்.ஏ., அருள், ஜெ., பேரவை மாரிமுத்து, முன் னாள் நகர மன்ற தலைவர் குமார், முன்னாள் சேர்மன்கள் தேன்மொழி காத்தவராயசாமி, செஞ்சிலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர்.

downlaod this page as pdf

Read more »

விடைத்தாள் திருத்தும் மையத்தில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர்: 
 
                         பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் மையங்களில் ஆசிரியர்களுக்கு உரிய அடிப்படை வசதி செய்து தர வேண் டும். விடைத்தாள் ஒன் றுக்கு 10 ரூபாய் வழங்க வேண்டும். ஊதிய முரண் பாடுகளை நீக்க அமைக் கப்பட்ட ஒரு நபர் கமிஷன் அறிக்கையை வெளியிட வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும்.
 
                        மேல்நிலைப் பள்ளிகளில் புதிய கலைப் பிரிவு பாடங்களை துவங்க வேண்டும். போதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் விடைத்தாள் திருத்தும் மையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி மையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் சின்னதுரை தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் நரசிம்மன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் தனசேகரன் வரவேற்றார். மாநில செய்தி தொடர்பாளர் சீனுவாசன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.

downlaod this page as pdf

Read more »

நாளை குரூப் 2க்கான எழுத்துத் தேர்வு : 4 மையங்களில் 16,973 பேர் எழுதுகின்றனர்


கடலூர்: 

                   கடலூர் மாவட்டத்தில் நாளை 11ம் தேதி நடக்கவுள்ள குரூப் 2 நிலை அலுவலர்களுக்கான எழுத்து தேர்வில் மாவட்டம் முழுவதும் 4 மையங்களில் 16 ஆயிரத்து 973 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

                    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நாளை 11ம் தேதி தமிழகம் முழுவதும் குரூப் 2 அலுவலர்களுக்கான எழுத்து தேர்வு நடக்கிறது. கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெய்வேலி, விருத்தாசலம், சிதம்பரம் ஆகிய நான்கு மையங்களில் 38 பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வு நடக்கிறது. இதில் கடலூரில் 9,059 பேரும், விருத்தாசலத்தில் 2,591 பேர் உட்பட 16 ஆயிரத்து 973 பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு மையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் மாணவர்கள் எளிதில் மையங்களுக்கு செல்ல, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. தேர்வில் முறைகேடுகள் நடக்காமல் இருக்க சப் கலெக்டர், டி.எஸ்.பி., நிலையில் பறக்கும் படை அமைக்கப் பட் டுள்ளது. இதுவரை தேர்வு எழுதுவதற்கான நுழைவு அனுமதிச்சீட்டு கிடைக் காதவர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 'எம்' பிரிவில் நேரில் தொடர்பு கொண்டு மாற்று நுழைவுச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

downlaod this page as pdf

Read more »

கடலூரில் போலி இருமல் மருந்து தயாரிப்பு தி.மு.க., பிரமுகர் மகனிடம் விசாரிக்க முடிவு

 கடலூர்:

                       போலி மருந்து விற்பனை தொடர்பாக, தி.மு.க., பிரமுகர் மகனிடம் விசாரிக்க சி.பி. சி.ஐ.டி., போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போலி இருமல் மருந்து தயாரிப்பு குறித்த புகாரின் பேரில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்தனர். இது தொடர்பாக கோர்ட்டில் சரணடைந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் செல்வ விநாயகர் ஏஜன்சி என்ற பெயரில் மொத்த மருந்து வியாபாரம் செய்து வந்த வள்ளியப்பன் என்பவரை கடந்த 30ம் தேதி போலீசார் தங்கள் காவலில் வைத்து விசாரித்தனர்.  அதில் கிடைத்த தகவலின் பேரில், வள்ளியப்பனுக்கு உதவிய மருந்து விற்பனை பிரதிநிதி முருகேசன் (31), புதுச்சேரி ஆனந்த் ஆகியோரை கைது செய்து 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 35 ஆயிரம் போலி 'பெனட்ரில்' இருமல் மருந்து பாட்டில்களை பறிமுதல் செய்தனர். 
                     விசாரணையில், வள்ளியப்பன் உள்ளிட்ட மூவரும், 'அல்டெக்ஸ்' இருமல் மருந்தை வாங்கி, அதன் லேபிளை கிழித்து, சிவகாசியில் அச்சடித்து வைத்திருந்த 'பெனட்ரில்' லேபிளை ஒட்டி விற்பனைக்கு அனுப்பியது தெரிய வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு கடந்த 6ம் தேதி சி.பி.சி.ஐ.டி.,யிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வழக்கில் கைது செய்யப்பட்ட வள்ளியப்பன் உள்ளிட்ட மூவரையும் மேல் விசாரணை நடத்த நேற்று முன்தினம் கோர்ட் அனுமதி பெற்று விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே வள்ளியப்பன் போலியாக 'பெனட்ரில்' இருமல் மருந்து தயாரிக்க 'அல்டெக்ஸ்' மருந்து மொத்தமாக வழங் கிய சென்னை குரோம் பேட்டையில் மருந்து கம்பெனி நடத்தி வரும் கடலூர் தி.மு.க., பிரமுகர் மகனையும், போலி லேபிள் அச்சடித்துக் கொடுத்த சிவகாசியை சேர்ந்த அச்சக உரிமையாளரையும் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி., போலீசார் நடவடிக்கை மேற் கொண்டுள்ளனர்.

downlaod this page as pdf

Read more »

ஒருங்கிணைந்த பாடத்திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் : அண்ணாமலை பல்கலை மாணவர்கள் மறியல்

சிதம்பரம்: 

                 சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்  ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பாடத் திட்டத்திற்கு அரசு அங்கீகாரம் வழங்க கோரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

                    சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு கடந்த 2002ம் ஆண்டு துவங்கப் பட்டது. இப்பாடத் திட்டத்தில் பிளஸ் 2 முடித்தவர்கள் நேரிடையாக ஐந்தாண்டு படிப்பான எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., படிக்கலாம். ஆனால் இப்பாடத் திட்டத்திற்கு 2009ம் ஆண்டு வரை அரசு அங்கீகாரம் பெறப்படவில்லை. இதனால் கடந்த காலங்களில் படித்த மாணவர்கள் அரசு பணிக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மாணவர்கள் தரப்பில் பலமுறை கோரிக்கை வைக்கப் பட்டும் அங்கீகாரம் பெறப் படவில்லை. மூன்று ஆண்டுகள் முடித்தவர்களுக்கு இளங்கலை பட்டம் வழங்கப்படும் என கூறியும் தற்போது முடித்தவர்களுக்கு இதுவரை வழங்கப் படவில்லை.  இதனால் ஆத்திரமடைந்த ஒருங்கிணைந்த பாடத்திட்ட மாணவ, மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பல்கலை நுழைவாயில் முன் சாலையில் தடுப்புகளை போட்டு மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

                        ஒருங்கிணைந்த பாடத்திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும்.  மூன்றாண்டு முடித்தவர்களுக்கு இளங்கலை பட்டம் வழங்க வேண்டும் என பல்கலைக்கழகம், மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி  கோஷம் எழுப்பினர். இரண்டு மணி நேரம் மறியல் நடந்தது. துணைவேந்தர் ராமநாதன் மாணவர்களை சந்தித்து பேசினார். அப்போது 'அங்கீகாரம் தொடர்பாக அரசுக்கு முறைப்படி கடிதம் மூலம் கோரப் பட்டுள்ளது. வரும் 12ம் தேதி சென்னையில் உயர் கல்வித் துறை அமைச்சக அதிகாரிகளை நேரில் சந்தித்து பேச உள்ளோம். மறுநாள் செவ்வாய் கிழமை நல்ல முடிவு தெரிவிக்கப்படும்.
 
                      எங்கள் மேல் நம்பிக்கை இல்லையென்றால் மாணவ பிரதிநிதிகள் ஐந்து பேர் எங்களுடன் வரலாம். இனி வரும் காலங்களில் மூன்று ஆண்டு படிப்பு முடித்த உடன் இளங்கலை பட்டம் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.  இதற்கு முன் உள்ள மாணவர்களுக்கு மூன்றாண்டு பட்டம் வழங்க கவர்னர் ஒப்புதல் கோரப்படும்' என்றார். உடன் பதிவாளர் ரத்தினசபாபதி மற்றும் அனைத்து துறை தலைவர்கள் இருந்தனர். துணைவேந்தர் பேச்சுவார்த்தைக்கு பின் மறியல் கைவிடப்பட்டது.


downlaod this page as pdf

Read more »

கேள்வித்தாளில் தவறான அச்சடிப்பு பாலிடெக்னிக் மாணவர்கள் குழப்பம்


கடலூர்: 

                         பாலிடெக்னிக் தேர்வில் கேள்வித்தாளில் ஏப்ரல் என்பதற்கு பதில் அக்டோபர் என தவறாக அச்சடிக்கப்பட்டிருந்ததால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கடந்த ஏப்ரல்  6ம் தேதி முதல் பாலிடெக்னிக் கல்லூரிகளில் வாரிய பருவ தேர்வுகள் நடந்து வருகிறது. ஒவ்வொரு கேள்வித்தாளிலும் முதலில் கேள்வித்தாளின் குறியீடு எண் அதற்கு கீழ் எந்த ஆண்டு என அச்சடிக்கப்பட்டு இருக்கும். 8ம் தேதி மதியம் மூன்றாம் ஆண்டு (ஆறாம் பருவம்) மாணவர்களுக்கு எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் பிரிவு மாணவர்களுக்கு பவர் சிஸ்டம் - 2  தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்கு  வழங்கப்பட்ட கேள்வித் தாளில் கேள்வித்தாள் குறியீடு எண். 697 என்றும், அக்டோபர் 2010 என்றும் அச்சடிக்கப்பட்டிருந்தது. ஏப்ரல் 2010 என்பதற்கு பதிலாக அக்டோபர் 2010 என 'பிரிண்ட்' ஆகி இருந்ததால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழப்பமடைந்தனர். இதனால் தேர்வின் போது மாணவர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. பின்னர், அது தவறாக 'பிரிண்ட்' செய்யப்பட்டது என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அனைவரும் தேர்வு எழுதினர். கல்வித்துறை ஏற்படுத்திய இந்த குழப்பத்தால் மாணவர்கள்  மன உளைச்சலுக்கு ஆளாயினர்.

downlaod this page as pdf

Read more »

டாக்டர், நர்சுக்கு கொலை மிரட்டல் ஒருவர் கைது: 2 பேருக்கு வலை


கடலூர்: 

                      கடலூர் அரசு மருத்துவமனையில் பிரவச வார்டில் டாக்டர் மற்றும் நர்சை மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர். கடலூரை அடுத்த விலங்கல்பட்டு  மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜவேல். இவரது மனைவி சுந்தரி (25). இவருக்கு முதல் பிரசவத்தின் போது அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் சுந்தரிக்கு இரண்டாவது பிரசவமும் அறுவை சிகிச்சை மூலம் நடந்தது. இதனைத் தொடர்ந்து சுந்தரி மற்றும் அவரது கணவர் ராஜவேல் ஆகியோரின் ஒப்புதலுடன். டாக்டர் சுந்தரிக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தார்.
 
                     இந்நிலையில் நேற்று இரவு ராஜவேல், தனது தம்பி சந்திரசேகரன் (28) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு நபர் உள்ளிட்ட 3 பேருடன், பணியில் இருந்த டாக்டர் செந்தமிழ்ச்செல்வி, நர்ஸ் முத்துமாரி ஆகியோரிடம்  'என்னை கேட்காமல் எப்படி என் மனைவிக்கு குடும்பக் கட்டுபாடு அறுவை சிகிச்சை செய்யலாம்' என கேட்டு ஆபாசமாக திட்டி மிரட்டினர். இதை தொடர்ந்து நேற்று செவிலியர் சங் கத்தை சேர்ந்த செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் இணை இயக்குநர் டாக்டர் ஜெயவீரக்குமாரிடம், பாதுகாப்பு வேண் டும் என புகார் கூறினர். இணை இயக்குநர் போலீசில் புகார் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இந்த சம்பவத்தால் நேற்று காலை 45 நிமிடம் பணிகள் பாதிக்கப் பட்டது. இது குறித்து இணை இயக்குநர் ஜெயவீரக்குமார் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் சப் இன்ஸ்பெக்டர் துர்கா மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து சந்திர சேகரை (28) கைது செய்து ராஜவேல் உள்ளிட்ட 2 பேரை தேடிவருகின்றனர்.

downlaod this page as pdf

Read more »

விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டத்தில் மோதல் மாவட்ட செயலாளர் மீது வழக்கு


குறிஞ்சிப்பாடி: 

                  வடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டத்தில் தகராறு செய்த மாவட்ட செயலாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வடலூர் பரமேஸ்வரி மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகளின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் திருமாறன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் திருமாறன் பேச்சிற்கு, வடலூர்  நகர பொருளாளர் நிமிலிஸ் ராஜ்குமார் (34) எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கூட்டத்தில் தகராறு ஏற்பட்டு இருதரப்பினரும் மோதிக்கொண்டனர். இதில் நிமிலிஸ்ராஜ்குமார், சிவக்குமார் இருவர் காயமடைந்தனர். இதுகுறித்து, அவர் அளித்த புகாரின் பேரில் மாவட்ட செயலாளர் திருமாறன், துணை செயலாளர் திருமேணி ஆகியோர் மீது வடலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

downlaod this page as pdf

Read more »

காலாவதி மருந்துகள் எரிப்பு சிதம்பரம் அருகே பரபரப்பு

 கிள்ளை: 

                           சிதம்பரம் அடுத்த நக்கரவந்தன்குடி சாலையோரத்தில் காலாவதியான மருந்துகள் எரிக்கப்பட்டு கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் போலி மருந்து பிரச்னை எழுந்துள்ள நிலையில் தனியார் மருத்துவமனை, மருந்து கடைகளில்  சுகாதாரத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை சிதம்பரம் - கிள்ளை சாலையில் நக்கரவந்தன்குடி வளைவில் உள்ள கருவைகாட்டுப் பகுதியில் சாலையோரத்தில் காலாவதியான மருந்துகள் எரிக்கப்பட்டும், அருகே உள்ள முட்புதரில் மருந்துகள் கொட்டியும் கிடந்தது.  காலாவதியான மருந்துகளில்  டானிக் மற்று 'சிரப்' உள்ளிட்டவைகளில் பழைய லேபிள்களை நீக்கி 2010 மற்றும் 2011ம் ஆண்டு வரை செல்லுபடிக்கான போலி லேபிள்கள் ஒட்டப்பட்டிருந்தது.

downlaod this page as pdf

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior