கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பாசனப் பகுதிகள் உள்பட 2.5 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் பயிரிடப்பட்டு உள்ளது. தற்போது ஆழ்குழாய் கிணற்று பாசனப் பகுதிகள், டெல்டா பகுதிகளில் வடவாறு மற்றும் வடக்கு ராஜன் வாய்க்கால் பாசனப் பகுதிகளில் நெல் அறுவடை தொடங்கி விட்டது.
தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் நெல் அறுவடைக்கு தொடர்ந்து ஆள் பற்றாக்குறை நீடித்து வருகிறது. எனவே பெரும்பாலான நிலங்களில் இயந்திரங்கள் மூலமாகவே அறுவடை நடக்கிறது. ஆனால் கடலூர் மாவட்டத்தின் மொத்தத் தேவையில் 10 சதவீதம் அறுவடை இயந்திரங்கள் கூட இங்கு இல்லை. நெல் அறுவடை இயந்திரத்தின் விலை ரூ.25 லட்சத்துக்கு மேல் இருப்பதால், கடலூர் மாவட்ட விவசாயிகளால் அதை வாங்க முடியவில்லை என்று தெரிவிக்கிறார்கள். கடலூர் மாவட்டத்துக்குத் தேவையான 100-க்கும் மேற்பட்ட நெல் அறுவடை இயந்திரங்கள் கள்ளக்குறிச்சி, ஆத்தூர், சேலம் பகுதிகளில் இருந்தே வரவழைக்கப்படுகின்றன.அறுவடை இயந்திரத்துக்கு நாளொன்றுக்கு 500 லிட்டருக்கு மேல் டீசல் தேவைப்படும். தற்போது அறுவடை நடந்து வரும் பகுதிகளில் சேத்தியாத்தோப்பு, குமாரக்குடி, காட்டுமன்னார்கோவில் ஆகிய இடங்களில் மட்டுமே பெட்ரோல் நிலையங்கள் உள்ளன.திடீரென பல அறுவடை இயந்திரங்கள் வந்ததால், அவற்றுக்குத் தேவையான டீசலை இப்பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையங்களால் வழங்க முடிவில்லை என்று தெரியவந்துள்ளது. இதனால் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மாட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண் பணிகள்) மணியிடம் கேட்டபோது, இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதுபற்றி பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் ரவீந்திரன் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறையில் 3 அறுவடை இயந்திரங்கள் மட்டுமே உள்ளன. அவைகளும் தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் நெல் அறுவடைப் பணிகளில் ஈடுபட்டு உள்ளன. அறுவடைப் பணிகள் மற்றும் வேளாண் பணிகளுக்கு கூடுதலான இயந்திரங்களை, வேளாண் பொறியியல் துறை வாங்கி, விவசாயிகளுக்கு வாடகைக்கு விட வேண்டும். டயர் மாடல் அறுவடை இயந்திரத்துக்கு கடந்த ஆண்டு ஏக்கருக்கு ரூ.1,000 ஆக இருந்த வாடகை, இந்த ஆண்டு ரூ.1,300 ஆகவும், பெல்ட் மாடல் அறுவடை இயந்திரத்துக்கு வாடகை ரூ.1,200 ஆக இருந்தது ரூ.1,800 ஆகவும் அதிகரித்து விட்டது. எனவே வேளாண் பொறியியல் துறை இத்தகைய இயந்திரங்களை வாங்கி வைத்து இருந்தால், விவசாயிகள் அறுவடை போன்ற வேளாண் பணிகளை குறைந்த செலவில் மேற்கொள்ள முடியும் என்றார்.
Read more »