கடலூர்:
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு இந்தியா முழுவதும் ஊராட்சிகளில் இலவச சட்ட ஆலோசனை மையங்கள் திறக்க உத்தரவிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊராட்சிகளில் இலவச சட்ட ஆலோசனை மையங்கள் திறக்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் இம்மையங்கள் விரைவில் துவங்குவதற்கான நடவடிக்கையை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மேற்கொண்டுள்ளது. இம்மையத்தில் பட்டதாரிகள், ஆசிரியர்கள், தொண்டு நிறுவனத்தினர் பணியாற்ற வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட அளவில் 100 பேரும், வட்ட அளவில் 50 பேரும் இலவச சட்ட பணிகள் ஆலோசனை மையத்தில் கிராம மக்களுக்கான சட்ட ஆலோசனைகள் வழங்க வழிகாணப்பட்டுள்ளது. இதற்காக வாரந்தோறும் 3 நாட்கள் ஒவ்வொரு ஊராட்சியிலும் 3 மணி நேரம் ஆலோசகர்கள் மக்களுக்கு தேவையான சட்ட ஆலோசனைகள் குறித்து எடுத்துரைக்க பணியாற்றுவர். இதற்காக சம்பளமும் வழங்கப்படவுள்ளது. கிராம இலவச சட்ட ஆலோசனை மையத்தில் திருமண சட்டம், குழந்தை திருமண சட்டம், குடும்ப நல நீதிமன்ற சட்டம், வரதட்சணை கொடுமை சட்டம், உள்ளூர் சட்ட- ஒழுங்கு சட்டம், பெண் கொடுமை தடுப்பு சட்டம், வருவாய் துறை சட்டம், தொழிலாளர் நல சட்டம், முத்திரை தாள் சட்டம் உள்ளிட்ட 29 சட்டப்பிரிவுகள் குறித்து ஆலோசனைகள் வழங்க வழிகாணப்பட்டுள்ளது.
வழக்கு தொடர விரும்பு பவர்களுக்கு இம்மையங்கள் வட்ட, மாவட்ட அளவிலான நீதிமன்றத்தில் உள்ள இலவச சட்ட மையத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள வழிகாட்டும். இது போன்று மாவட்டத்தில் உள்ள 52 காவல் நிலையங்களில் குழந்தைகள் சம்மந்தப்பட்ட வழக்கு தொடர்பாக ஒவ் வொரு காவல் நிலையத்தி லும் ஒரு சிறப்பு அதிகாரி நியமிக்கப்படவுள்ளார். கடலூரில் உயர்நீதிமன்ற நீதிபதி ஜெய்சந்திரன் ஊராட்சிகளில் இலவச சட்ட ஆலோசனை மையத்தில் பணியாற்றுவது மற்றும் காவல் நிலையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு மேற்கொள்ளவது தொடர்பாக பணியாற்றவுள்ளவர்களுக்கான பயிற்சியை துவக்கி வைத்தார். மாவட்ட முதன்மை நீதிபதி உத்திராபதி மற்றும் பயிற்சியாளர்கள் வழக்கறிஞர்கள் அருணாச்சலம், பாலதண்டாயுத பாணி, கிருஷ்ணமூர்த்தி, சிவக்குமார், வனராஜ், சந்திர சேகரன், ராஜசேகர், அமுதவள்ளி, ஜானகிராமன், ஆண்டாள், காவல்துறையினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.