உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 24, 2010

என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளி சாவு

நெய்வேலி:

                                    என்.எல்.சி. சுரங்க விபத்தில் ஒப்பந்தத் தொழிலாளி சுரேஷ் திங்கள்கிழமை இறந்தார்.  நெய்வேலி ஜி.கே. காலனியை சேர்ந்த செல்வராஜின் மகனான சுரேஷ், என்.எல்.சி. 2-ம் சுரங்கத்தில் பாவா எரெக்ஷன் எனும் தனியார் நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாக வேலைபார்த்துவந்தார். இந்நிலையில், திங்கள்கிழமை பணிக்குச் சென்ற போது, பிக்கப் வாகனத்தில் ஏற முயற்சித்தபோது தவறி கீழேவிழுந்தாராம். இதில் பலத்த காயமடைந்த சுரேஷ்,  புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மந்தாரக்குப்பம் போலீஸர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more »

அண்ணாமலைப் பல்கலை. கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தம்

சிதம்பரம்:
 
                      அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அமெரிக்காவில் உள்ள வெஸ்டேர்ன் யுனிவர்சிட்டி ஆஃப் ஹெல்த சயன்ஸ் என்ற நிறுவனத்துடன் கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அண்ணாமலைப் பல்கலை. துணைவேந்தர் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. துணைவேந்தர் டாக்டர் எம். ராமநாதன், அமெரிக்கா வெஸ்டர்ன் யுனிவர்சிட்டி, காலேஜ் ஆஃப் பார்மசி முதல்வர் டேனியல் ராபின்சன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.÷பொறியியல் புல முதல்வர் பி. பழனியப்பன், மருந்தாக்கியல் துறைத் தலைவர் இரா. மணவாளன், பேராசிரியர்கள் பி.கே. மன்னா, ஜி.பி. மொகந்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு பல்கலைக்கழக மாணவர்களும், ஆசிரியர்களும் இந்திய - அமெரிக்க மருந்து நடைமுறைகளை குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு பயனடையமுடியும்.÷அண்ணாமலைப் பல்கலைக்கழக மருந்தாக்கியல் துறையில் மாணவர்களுக்கு அமெரிக்காவில் வேலைவாய்ப்பு கிடைக்கும். 
 
                           இந்தியாவிலேயே முதன்முறையாக அண்ணாமலைப் பல்கலைக்கழக மருந்தாக்கியல் துறையில் டி.பார்ஃம் என்ற பாடப் பிரிவு இந்திய மருந்தாக்கியல் குழுமத்தின் அங்கீகாரத்துடனும், பல்கலைக்கழக மானியக் குழு நிதிஉதவியுடன் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த பாடப் பிரிவானது 1200 படுக்கை வசதி மற்றும் பல்வேறு வசதிகள் கொண்ட அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்து நடைபெற்று வருவதாக துணைவேந்தர் டாக்டர் எம். ராமநாதன் தெரிவித்தார்.

Read more »

வீடு, நிலம் வழங்கியோர் மறியல்

நெய்வேலி:
 
                என்.எல்.சி. நிறுவன விரிவாக்கப் பணிகளுக்கு வீடு, நிலம் வழங்கியோர்  அதற்கான இழப்பீட்டுத் தொகையை உயர்த்தக் கோரியும், அடிப்படை வசதிகள் செய்துதர வலியுறுத்தியும் மந்தாரக்குப்பம் பகுதியில் கடலூர் - விருத்தாசலம் சாலையில்  மார்க்கத்தில்  செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
 
               என்.எல்.சி. நிறுவன விரிவாக்கப் பணிகளுக்கு வீடு நிலம் வழங்கியுள்ள கீழக்குப்பம், கெங்கைகொண்டான், உய்யக்கொண்டராவி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 120 பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் இப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப் போராட்டத்துக்கு கெங்கைகொண்டான் பேரூராட்சித் தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார்.÷இதனால், அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது. இதைத் தொடர்ந்து, அங்கு வந்த நெய்வேலி டி.எஸ்.பி. மணி தலைமையிலான போலீஸôôர், சாலை மறியலில் ஈடுபட்டோரை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது போலீசார்ருக்கும், கிராம மக்களுóக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.பின்னர் அனைவரையும் அப்புறப்படுத்திய   போலீசார் அருகிலுள்ள தனியார் கல்யாண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அங்கு வந்த சிதம்பரம் கோட்டாட்சியர் ராமராஜு, விருத்தாசலம் வட்டாட்சியர் ஜெயராமன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஜெபமணி ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையில், இப் பிரச்னைக்கு என்.எல்.சி. நிறுவனத்தின்  தலைவரிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனிடையே, இப் போராட்டத்துக்கு ஆதரவாக நெய்வேலி மந்தாரக்குப்பம் வணிகர்களும் செவ்வாய்க்கிழமை ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

Read more »

சென்னை உண்ணாவிரதத்தில் பங்கேற்க பி.எட்., பட்டதாரிகளுக்கு அழைப்பு

சிதம்பரம்: 

                           தமிழ்நாடு பொருளியல் மற்றும் வணிகவியல் பி.எட்., பட்டதாரிகள் சென்னை உண்ணாவிரதத்தில் திரளாக பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பொருளியல் மற்றும் வணிகவியல் பி.எட்., பட்டதாரிகள் சங்க மாநில செயலாளர் அருளழகன் விடுத்துள்ள அறிக்கை: தமிழகத்தில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களில் 6 முதல் 8 வகுப்பு வரை பொருளியல் மற்றும் வணிகவியல் பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்ககோரியும், மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பொருளியல் மற்றும் வணிகவியல் பாடங்களுக்கு அதிகளவில் முதுநிலை ஆசிரியர்களை நியமிக்க கோரியும் வரும் 26ம் தேதி சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இந்த உண்ணாவிரதத்தில் பொருளியல் மற்றும் வணிகவியல் பி.எட்., பட்டதாரிகள் திரளாக பங்கேற்ற கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.

Read more »

மாணவர்கள் நலன் கருதி மின் நிறுத்தம் நேரம் மாற்றம்

நெல்லிக்குப்பம்: 

                     மாணவர்கள் நலன் கருதி மின்சார நிறுத்த நேரம் மாற்றப்பட்டது. தமிழகம் முழுவதும் தினமும் வெவ்வேறு நேரங்களில் இரண்டு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. கடலூர், நெல்லிக்குப்பம் பகுதிகளில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட்டு வந்தது. திடீரென கடந்த வாரம் காலை 6 மணி முதல் 8 மணி வரை மின்சாரத்தை நிறுத்த துவங்கினர். தேர்வு நேரம் நெருங்குவதால் மாணவர்கள் படிப்பு காலையில் பாதிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு பள்ளி செல்ல உணவு தயாரிப்பது சிரமமாக இருக்கிறது. காலையில் மின்சாரம் துண்டிக்க கூடாது என பெற்றோர் கள் கோரிக்கை விடுத்தனர். அதையேற்று நேற்று முன்தினம் முதல் மாலை 4 மணி முதல் 6 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதால் பெற் றோர் களும், மாணவர்களும் நிம்மதி அடைந்தனர்.

Read more »

போலீஸ் ஸ்டேஷன் அமைக்க எதிர்ப்பு: தாசில்தாரிடம் பொதுமக்கள் மனு

விருத்தாசலம்: 

                   கொல்லத்தங்குறிச்சி கிராமத்தில் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என ஊர் பொதுமக்கள் தாசில்தாரிடம் மனு கொடுத்தனர். விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட கொல்லத்தங்குறிச்சி கிராமத்தில் நியாயவிலை கடை அருகில் புறம் போக்கு இடம் உள்ளது. இந்த இடத்தில் ஊர் பொதுமக்களின் கோரிக்கை படி ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சிமெண்ட் களம் அமைக்க தொடக்க பணி நடந்து வருகிறது. இந்த இடத்தில் காவல் நிலையம் அமைக்க வருவாய்த் துறை மற்றும் அரசு அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். எனவே இந்த இடத்தில் காவல் நிலையம் அமைக்க அனுமதிக்கக் கூடாது என கிராம மக்கள் ஊராட்சி துணைத் தலைவர் செந்தில்நாதன் தலைமையில் தாசில்தாரிடம் மனு கொடுத்தனர்.

Read more »

மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டை

சிதம்பரம்: 

                        சிதம்பரம் 13வது வார்டில் உள்ள 1572 பயனாளிகளுக்கு மருத்துவ காப் பீட்டு திட்ட அடையாள அட்டை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். அடையாள அட்டையை கீரப்பாளையம் சேர்மன் செந்தில்குமார் வழங்கினார். வி.ஏ.ஓ., முத்துநாயகம், நகர இளைஞரணி அமைப்பாளர் அப்பு சந்திரசேகர், மணிகண்டன், ராஜலட்சுமி, ஜாபர் அலி, ராஜா, அப்பு சத்தியநாராயணன் உடனிருந்தனர்.

Read more »

மனித மேம்பாட்டில் கடலூர் மாவட்டத்திற்கு 16வது இடம்: கலெக்டர் சீத்தாராமன் தகவல்

கடலூர்: 

                    கடலூர் மாவட்டத்தில் மனித மேம்பாட்டு அறிக்கையின் அடிப்படையில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும் என கலெக்டர் சீத்தாராமன் கூறினார். 

இது குறித்து மனித மேம்பாட்டு திட்ட இயக்குனர் செல்வராஜன் நேற்று கடலூரில் கூறியதாவது: 

         அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநிலத் திட்டக்குழு இணைந்து தயாரிக்கப்பட்ட மனித மேம்பாட்டு அறிக்கையை கலெக்டரிடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தொடர்பான கருத்துக்களை அனைத்துத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கும் விதமாக கலெக்டர் தலைமையில் மாவட்ட உயர் மட்ட அதிகாரிகளுடனான கருத்து பரப்பு கூட்டம் நடந்தது. கடந்த 2003ம் ஆண்டு மாநில திட்டக்குழு வெளியிட்ட மனித மேம்பாட்டு அறிக்கைபடியும், கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரங்கள் அடிப்படையாகக் கொண்டு குறியீடு தயார் செய்யப்பட்டது. மற்ற மாவட்டங்களோடு ஒப்பிடுகையில் கடலூர் மாவட்டம் 16வது இடத்தில் உள்ளது.

                         இந்த அறிக்கை மாவட்டத்தில் மனித மேம்பாடு, பொருளாதாரம், சமூக முன்னேற்றம் வளர்ச்சிக்கு வழி வகுக்கும் சிறந்த மாவட்டமாக விளங்கவும், திட்டங்களை தயாரிக்கவும், உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார். 

இதைத் தொடர்ந்து கலெக்டர் சீத்தாராமன் கூறியதாவது: 

                             இந்த அறிக்கை அடிப்படையில் மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் பின்பற்றி திட்டங்களை தயாரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நல்லூர் ஒன்றியத்தில் இறந்து பிறக்கும் குழந்தைகளின் சதவீதம் 21.7 ஆக உள்ளது. குமராட்சியில் சிறு குழந்தைகள் இறப்பு 43.6 சதவீதமாக உள்ளது. பண்ருட்டி பகுதியில் குழந்தைகள் பிறப்பு சதவீதம் 14 சதவீதம் அதிகமாக உள்ளது. இது போன்ற குறியீடுகளை வைத்து குறைபாடுகள் உள்ள இடத் தில் அவற்றை போக்க மேல் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட் டுள்ளனர் என கலெக்டர் சீத்தாராமன் தெரிவித்தார்.

Read more »

முந்திரி தொழிலுக்கு ஊதியம் நிர்ணயம் கடலூரில் நாளை ஆலோசனை கூட்டம்

கடலூர்: 

                    முந்திரி தொழிலுக்கு குறைந்த பட்சம் ஊதியம் மறு நிர்ணயம் செய்யும் ஆலோசனைக் கூட்டம் கடலூரில் நாளை நடக்கிறது. முந்திரி தொழிலில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை மறு நிர்ணயம் செய்வது தொடர்பாக திருநெல்வேலி தொழிலாளர் துணை ஆணையர் தலைமையில் ஆலோனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் கடலூர் புதுப்பாளையம் மெயின்ரோட் டில் உள்ள தொழிலாளர் அலுவலர் அலுவலகத் தில் நாளை (25ம் தேதி) பகல் 10 மணிக்கு நடக்கிறது. இக்கூட்டத்தில் முந் திரி தொழிலில் ஈடுபட் டுள்ள வேலையளிப் போர், நிர்வாக சங்க பிரதிநிதிகள், தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

Read more »

வீனஸ் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

சிதம்பரம்: 

               சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளியில் கடந்த 2004-2005ம் ஆண்டில் படித்து தற்போது பல் வேறு பகுதியில் பணியாற்றி வரும் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் மகேஷ்சுந்தர் தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் வீனஸ்குமார், அவரது துணைவியார் ரூபியாள் ராணி சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். முன் னாள் மாணவர்கள் சார்பில் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அரவிந்தன், ஹரிபிரசாத், ஸ்ரீதர், கவியரசன் செய்திருந்தனர்.

Read more »

பேனர்களை முறைப்படுத்த அனைத்து கட்சி கூட்டம்

பண்ருட்டி: 

                  பண்ருட்டியில் டிஜிட்டல் பேனர் களை முறைப்படுத்த அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. பண்ருட்டி போலீஸ் சரகத்திற்குட் பட்ட பகுதியில் டிஜிட்டல் பேனர்களால் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் இது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்த அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் பண்ருட்டி போலீஸ் ஸ்டேஷனில் நடந்தது. டி.எஸ்.பி., பிரசன்னகுமார் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் செல்வம், பாண்டியன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அரசியல் கட்சியினர் தட்டி, டிஜிட்டல் பேனர்களை நகராட்சி, பேரூராட்சி அனுமதி பெற்று வைக்க வேண்டும். நிகழ்ச்சிக்கு முன் மூன்று நாட்களுக்கும், பின் இரண்டு நாட்களுக்கும் மொத்தம் ஐந்து நாட்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். அனுமதிக் கப்பட்ட பேனர்களுக்கு குறிப்பிட்ட அரசியல் கட்சியினரே பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும். அனுமதிக்கப்பட்ட நாட்களை மீறி பேனர்கள் அகற்றப்படாவிட்டால் நகராட்சி, போலீசார் இணைந்து பேனர்களை அகற்றுவர் என அறிவிக்கப்பட்டது.

Read more »

நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்

கடலூர்: 

               சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் முதுநகர் நகராட்சி நடுநிலைப் பள் ளிக்கு தண்ணீர் தூய் மைப்படுத்தும் இயந்திரம் வழங்கப்பட்டது. கடலூர் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார் பில் கடலூர் முதுநகர் சுண்ணாம்புகாரத் தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு தண்ணீர் தூய்மைப்படுத்தும் இயந்திரம் வழங்கும் விழா நடந்தது. ரோட்டரி சங்க தலைவர் ஆடிட்டர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ., அய்யப்பன் குடிநீர் இயந்திரத்தை வழங்கினார். சேர்மன் தங்கராசு, கமிஷனர் குமார், கவுன்சிலர் செந்தில், உதவி ஆளு னர் தாயுமானவன், பிறையோன், ராசன், உதயகுமார், தலைமை ஆசிரியர் குமாரவேல், ஆசிரியர்கள் புஷ்பகுளோரியா, பாரதி, உஷாராணி, மங்கலம், லதா உட்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

சி.முட்லூர் அரசு கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு போட்டி

கிள்ளை: 

                  சிதம்பரம் அருகே சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் செஞ்சுருள் இயக்கத்தின் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. சிதம்பரம் அருகே சி.முட்லூர் அரசு கல்லூரியில் செஞ்சுருள் இயக்கத்தின் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து போட்டிகள் நடத்தப் பட்டது. கல்லூரி முதல்வர் ராமசாமி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் அறிவழகன் வரவேற்றார். போட்டியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். நடுவர்களாக கல்லூரி பேராசிரியர்கள் சேகர், பிரேமாகுமாரி, சேரமான், விவேகானந்தன் பங்கேற்றனர்.

Read more »

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம்

புவனகிரி: 

                      புவனகிரி அருகே வண்டுராயன்பட்டு ஆதி திராவிடர் நடுநிலைப் பள்ளியில் தேசிய சுற்றுச் சூழல் விழிப்புணர்வு முகாம் நடந்தது. புவனகிரி அருகே வண்டுராயன்பட்டு ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளியில் நடந்த தேசிய சுற்று சூழல் விழிப்புணர்வு முகாமில் தட்ப வெப்ப மாற்றம் குறித்து பயிற்சியும், விழிப் புணர்வு பேரணியும் நடந் தது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரம் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் கலியமூர்த்தி முன்னிலை வகித்தார். புவனகிரி வட்டார வள மைய மேற்பார்வையாளர் கலைச்செல்வன் பங்கேற்று பேசினார். மாவட்ட சாரண அமைப்பாளர் பேரணியை துவக்கி வைத்தார். சாரண மாணவர்கள் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். ஆசிரியர் ராதாகிருஷ் ணன் நன்றி கூறினார்.

Read more »

இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்ட கடலூர் மாணவிக்கு சி.இ.ஓ., பாராட்டு

கடலூர்: 

                     தேசிய மகளிர் கால்பந்து போட்டியில் 14 கோல்கள் போட்டு சாதனை படைத்த கடலூர் முதுநகர் மகளிர் பள்ளி மாணவி சுமித்ரா இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் ஹால்த் வானில் நடந்த தேசிய மகளிர் (மிக இளையோர்) கால்பந்து போட்டியில் தமிழகத்தின் சார்பில் கடலூர் முதுநகர் அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவிகள் சுமித்திரா, பிரவீணா பங்கேற்று வெண்கல பதக்கம் வென்றனர். மேலும் ஒட்டுமொத்த போட்டியில் 14 கோள்கள் போட்டு சாதனை செய்த சுமித்ரா இந்திய அணிக்கு (மிக இளையோர்) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே போல் மத்தியப்பிரதேசம் மாநிலம் போபாலில் நடந்த தேசிய ஊரக விளையாட்டு மகளிர் கால்பந்து போட்டியில் இப்பள்ளியின் பிளஸ் 1 மாணவிகள் இந்துமதி, பிரதீபா தங்க பதக்கம் வென்றனர். அவுரங்காபாத்தில் நடந்த தேசிய கால்பந்து போட்டியில் தமிழக அணி சார்பில் மாணவிகள் சுபத்திரா, இந்துமதி, பிரதீபா, பிரவீனா ஆகியோர் இடம்பெற்றனர். கால்பந்து போட்டிகளில் சாதனை படைத்த மாணவிகளுக்கு பாராட்டு விழா நேற்று நடந்தது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி மாணவிகளை பாராட்டினார். பின்னர் வேர்ல்டு விஷன் சார்பில் அமைக்கப்பட்ட தானியங்கி நாப்கின் மிஷினை முதன்மை கல்வி அலுவலர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ராஜேந்திரன், கால்பந்து அணி பயிற்சியாளர் மாரியப்பன், வேர்ல்டு விஷன் ஒருங்கிணைப்பாளர் ஜோசப் பங்கேற்றனர்.

Read more »

பண்ருட்டி நகரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நாளை துவக்கம்

பண்ருட்டி: 

                       பண்ருட்டி நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நாளை 25ம் தேதி துவங்குகிறது. பண்ருட்டி நகரில் கடலூர் சாலை, ராஜாஜி சாலை, இந்திராகாந்தி சாலை, காந்திரோடு, காய் கறி மார்க்கெட் உள்ளிட்ட பகுதியில் ஆக்கிரமிப்புகள் காரணமாக பொதுமக்கள் செல்லமுடியாமல் கடும் பாதிப்படைந்து வந்தனர். பஸ்நிலையத்தில் தரைக்கடைகள் ஆக்கிரமிப்பால் பயணிகள் உட்காரக்கூட இடமில்லாமல் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் மற்றும் நகராட்சி உயரதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். இதனையடுத்து பண்ருட்டி நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நாளை 25ம் தேதி துவங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை நேற்று நகரின் முக்கிய வீதிகளில் "டாம் டாம் ' மூலம் நகராட்சி ஊழியர்கள் அறிவித்தனர்.

Read more »

அரசு ஊழியர் சங்கத்தினர் பிரசாரம்


திட்டக்குடி: 

                     திட்டக்குடி தாலுகாவில் அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை விளக்கி பிரசார இயக்கம் மேற்கொண்டனர்.

                      தமிழக அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஊதிய குறைபாடுகளை களைந்திட நியமிக்கப்பட்ட ஒரு நபர் குழு அறிக்கையினை உடனடியாக வெளியிடவும், 2006 ஜனவரி முதல் ஊதியம் நிர்ணயம் செய்து, நிலுவைத்தொகையை ஒரே தவணையில் வழங்கிட வேண்டும். காலிபணியிடங்களை காலமுறை ஊதியத்தில் முறையான நியமனங்கள் மூலம் நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசார இயக்கம் கடந்த 15 முதல் 25 வரை நடந்து வருகிறது. திட்டக்குடி தாலுகா அலுவலக ஊழியர்களிடம் வட்டத்தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் பிரசாரம் செய்யப் பட்டது.வட்ட துணைத்தலைவர் அண்ணா துரை, மாவட்டத் தலைவர் காசிநாதன், இணை செயலாளர் கோவிந்தராஜ், வட்ட செயலாளர் நாட்டுதுரை முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் அன்பழகன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியம் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

Read more »

பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்

விருத்தாசலம்: 

                   விருத்தாசலம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது. விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் தடைகளை தகர்த்தெறிவோம் என்ற தலைப்பில் பொதுத் தேர்வு எழுதவுள்ள பிளஸ் 2 மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது. அரிமா சங்கத் தலைவர் மற்றும் முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் அருணாசலம் தலைமை தாங்கினார். பொருளாளர் வக்கீல் பாலசந்திரன் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் பிரகாசம் வரவேற்றார். கோவையை சேர்ந்த கின்னஸ், லிம்கா சாதனையாளர் பிரதீப்குமார் மாணவர்களுக்கு தன்னம் பிக்கை, விடாமுயற்சி குறித்தும் பயிற்சி அளித்தார். அரிமா சங்க மண்டல தலைவர் ஜெய்சங்கர், வட்டார தலைவர் சுரேஷ் சந்த், பொருளாளர் சீனுவாசன், பள்ளி என்.சி.சி., ஆசிரியர் ராஜ்குமார், ரத்தின புகழேந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read more »

கல்லூரிகளுக்கு தன்னாட்சி அதிகாரம் அரசு கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக்

கடலூர்: 

                       அரசு கல்லூரிகளை ஒருமை வகை பல்கலைக்கழகங்களாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் பெரியார் அரசு கல்லூரி மாணவர்கள் நேற்று முன்தினம் வகுப்புகளை புறக்கணித்து ஊர்வலமாக சென்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர். தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளை ஒருமைவகை பல்கலைக் கழகங்களாக (தன்னாட்சி அதிகாரம்) மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனைக் கண்டித்து கடலூர் பெரியார் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் அனைவரும் ஊர்வலமாக சென்று கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் கோரிக்கை மனுவை மாணவ பிரதிநிதிகள் கலெக்டர் சீத்தாராமனை சந்தித்து மனு கொடுத்தனர்.

Read more »

மானிய விலையில் உளுந்து விதை வேளாண் உதவி இயக்குனர் தகவல்

புவனகிரி: 

          கீரப்பாளையம் வட்டாரத்தில் உளுந்து விதை மற் றும் உரங்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.

இது குறித்து வேளாண் உதவி இயக்குனர் விஜயகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 

                        சிதம்பரம் அடுத்த கீரப்பாளையம், நந்தீஸ்வரமங்கலம் வேளாண் விரிவாக்க மையங்களில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் உளுந்து "டி9' சான்று விதைகள் கிலோவிற்கு 20 ரூபாய் மானியத்திலும், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சிங்சல்பேட், நுண்ணுரம் 50 சதவீத மானியத்திலும், ஐசோபோம் எண்ணைவித்து, தேசிய உணவு பாதுகாப்பு திட்டங்களில் ஜிப்சம் 50சதவீத மானிய விலையிலும் வழங்கப்படுகிறது என கூறப்பட் டுள்ளது.

Read more »

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆளுமைத்திறன், நினைவாற்றல் பயிற்சி

திட்டக்குடி: 

                   திட்டக்குடி அடுத்த இறையூர் அருணா மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு ஆளுமைத்திறன் மற்றும் நினைவாற்றல் பயிற்சி முகாம் நடந்தது. பள்ளி செயலாளர் சிவராமசேது தலைமை தாங்கினார். பள்ளித்தலைவர் கொத்தட்டை ஆறுமுகம், அரிமா செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தனர்.

                        தலைமை ஆசிரியர் மயில்வாகனன் வரவேற்றார். பெண்ணாடம் அரிமா சங்க தலைவர் குலைதாசன் துவக்கி வைத்தார். பள்ளி பொருளாளர் திருஞானசம்பந்தம் வாழ்த்தி பேசினார். இதில் அரசு பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு நெய்வேலி உதயகுமார் ஆளுமைத்திறன் வளர்ச்சி, தேர்வினை எதிர்கொள்வது குறித்து ஒலி, ஒளி காட்சியுடன் மாணவர்களுக்கு கருத்துரை வழங்கினார். முகாமில் ஆசிரியர்கள் சிவகாமி, ராஜா, செல்வகுமார், அனிதா, முத்தமிழன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் தெய்வாணை நன்றி கூறினார்.

Read more »

கடலூர் பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் ஏப்ரல் மாதத்தில் முடிந்துவிடும்: கலெக்டர்

கடலூர்: 

              கடலூரில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் வரும் ஏப்ரல் மாதம் முடிக்கப்படும் என கலெக்டர் கூறினார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது: 

                        கடலூர் நகரில் செயல்படுத்தப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டத்தில் சிறிது தொய்வு ஏற்பட்டது. மழைக்காலமாக இருந்ததால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவியது. அதன் காரணமாக பணிகளை துரிதப்படுத்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினேன். அதில், இதுவரை பணிகள் துவங்காமல் உள்ள 24 தெருக்களில் 8081 மீட்டர் பணிகள் உடனே துவக்கப்படும். 66 தெருக்களில் 22479 மீட்டர் முழுமையாக முடியவில்லை. மொத்தமுள்ள 5412 மேனுவலில் 5120 முடிக்கப்பட்டுள்ளன. 15050 வீட்டு இணைப்புகளில் 13390 முடிக்கப்பட் டுள்ளன. இதுவரை 152.69 கி.மீ., குழாய் கள் பதிக்கப்பட்டுள்ளது. இன்னும் 27 கி.மீ., குழாய் பதிக்க வேண்டும். மேனுவல் (ஆளிறங்கும் குழிகள்), வீட்டு இணைப்பு ஆகியவற்றால்தான் சாலை போடும் பணி தாமதமாகி வருகிறது. சிமென்ட் சாலைகளுக்கு முன்னுரிமை கொடுத்து பணிகள் முடிக்க அறிவுறுத் தப்பட்டுள்ளது. இதுவரை 85 சதவீத பணிகள் முடிந் துள்ளன. இன்னும் 15 சதவீதம்தான் பாக்கியுள்ளன. இத்திட்டத்திற்கான திட்டமதிப்பீட்டு தொகை 66 கோடியில் இதுவரை 19.96 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் மாதத்தில் பணிகள் முழுவதும் முடிக்கப்படும் என்றார். குடிநீர் வடிகால்வாரிய செயற்பொறியாளர் ரகுநாத், சேர்மன் தங்கராசு, கமிஷனர் குமார், துணைச் சேர்மன் தாமரைச்செல்வன் உடனிருந்தனர்.

Read more »

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு சரக்கு விற்பதாக குடிபிரியர்கள் புலம்பல்

பரங்கிப்பேட்டை: 

                   பரங்கிப்பேட்டை பகுதி டாஸ்மாக் கடைகளில் பிராந்திகள் கூடுதல் விலைக்கு விற்பதாக குடிபிரியர்கள் புலம்புகின்றனர். பரங்கிப்பேட்டை, பு.முட்லூர், புதுச்சத்திரம், தச்சக்காடு, கொத்தட்டை உட்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் டாஸ்மாக் கடை உள்ளன. இங்கு பிராந்தி உள்ளிட்ட சரக்குகளுக்கு அரசு விலையைவிட கூடுதலாக விற்பனை செய்யப்படுவதாக குடிபிரியர்கள் புலம்புகின்றனர். பீர், பிராந்தி, ஓல்டு மங்க், விஸ்கி, வி.எஸ். ஓ.பி., ஆகிய பிராண்டுகள் குவாட்டருக்கு அரசு விலையைவிட கூடுதலாக 2லிருந்து 3 ரூபாய் கூடுதலாக வாங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் பல இடங்களில் விற்பனையாளருக்கும், குடிபிரியருக்கும் பிரச்னை ஏற்பட்டு வருகிறது. இதனால் டாஸ்மாக் அதிகாரிகள் விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடிபிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Read more »

அரசு மருத்துவமனையில் டாக்டர்கள்... பற்றாக்குறை!: சிதம்பரத்தில் நோயாளிகள் கடும் அவதி

சிதம்பரம்: 

                 சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு எலும்பு முறிவு மற்றும் மயக்க மருந்து பிரிவுகளுக்கு டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் கவலையடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம், சிதம்பரத்தை மையமாக கொண்டு 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையில் காமராஜ் அரசு மருத்துவமனை உள்ளது. மருத்துவமனை திறக்கப்பட்டு 34 ஆண்டுகள் ஆகிறது.  மாவட்ட மருத்துவமனைக்கு அடுத்த அந்தஸ்து என்பதால் எக்ஸ்ரே, ரத்த வங்கி, மகப்பேறு, தோல் சிகிச்சை, பல் சிகிச்சை, கண் சிகிச்சை, நரம்பியல், எலும்பு முறிவு மற்றும் சித்தா என அனைத்து பிரிவுகளும் உள்ளன.

                       எந்த நேரத்திலும் ஆபரேஷன் செய்யும் வகையில் அறுவை அரங்கம் உள்ளது. தினமும் சுமார் ஆயிரத்திற்கும் மேற் பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சமீபத்தில் சிக்குன் குனியா நோய் தாக்குதலால் நோயாளிகளின் வரத்து 2000 தாண்டியுள்ளது. மகப்பேறு மற்றும் பல்வேறு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் மகப்பேறு மற்றும் பெண்களுக்கென தனி கட்டடம் மற்றும் நோயாளிகள் சிகிச்சை பிரிவுக்கு 3 கோடி ரூபாய் செலவில் விஸ்தாரமான கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது. எல்லா வசதிகள் இருந்தும் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எலும்பு முறிவு, தோல் நோய், நரம்பியல், மயக்க மருந்து பிரிவுகளுக்கு டாக் டர்களே இல்லை. வாரத்திற்கு ஒரு நாள் காட்டுமன்னார்கோவிலில் இருந்து மருத்துவர் வந்து செல்வதாக கூறப்படுகிறது. அவசரத்திற்கு அண்ணாமலைப் பல்கலை மருத்துவ கல்லூரியில் இருந்து அழைக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் இரவு நேரங்களில் வரும் பிரசவ கேஸ்கள், முக்கிய விபத்து கேஸ்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அனுப்பும் அவல நிலை உள்ளது.

                     தற்போது மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், அனைத்து நோய்களுக்கும் சிகிச்சையளிக்கும் வகையில் டாக்டர் பணியிடங்கள் நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு காலி இடம் உள்ள பிரிவுகளுக்கு டாக்டர்கள் நியமிக்கப்பட்டால் சிதம்பரம் கிராம பகுதி மக்கள் அதிகம் பயனடைவார்கள். சிதம்பரம் மேம்பாலம் கட்டும்போது மருத்துவமனையின் மதிற்சுவர் இடிக்கப்பட்டது. ஆனால் இதுவரை கட்டப் படவில்லை. இதனால் மருத்துவமனை பாதுகாப்பின்றி திறந்த வெளி மைதானமாக உள்ளது. இதனால் மருத்துவமனை வளாகம் சுகாதாரமற்ற நிலையில் சேரும் சகதியுமாக உள்ளது. எனவே விரைவில் மதிற்சுவர் கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

Read more »

சன்பிளவர் தொண்டு நிறுவனத்தில் பண மோசடி நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி.,யிடம் மனு

கடலூர்: 

                       பண மோசடி செய்த தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நடுவீரப்பட்டு சுய உதவிக்குழுவினர் எஸ்.பி.,யிடம் மனு கொடுத்தனர்.

இது குறித்து நடுவீரப்பட்டு சிற்பி, முத்தமிழ், பாரதி ஆடவர் சுயஉதவிக் குழுவினர் எஸ்.பி., அஷ்வின் கோட்னீஷிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: 

                          கடலூர் அடுத்த நடுவீரப்பட்டில் சிற்பி, முத்தமிழ், பாரதி உள்ளிட்ட மூன்று ஆடவர் சுயஉதவிக் குழுவினர் 36 பேர் உள்ளனர். மூன்றுக் குழுக்களையும் கடலூர் தேவனாம்பட்டினம் சன் பிளவர் தொண்டு நிறுவனம் வழிநடத்தி வந்தது.

                       இந்த நிறுவனத்தின் நிறுவனர் தரணி மூன்று குழுக்களையும் இணைத்து "நியூடான் பேபரிக் பெடரேஷன்' என்ற சங்கத்தை உருவாக்கி அதற்கு கடலூர் விஜயா வங்கியில் கணக்கு துவக்கினார். இதில் சுனாமி மறுவாழ்வு நிதி மற்றும் சுனாமி அவசர கால நிதியில் இருந்து ஏழரை லட்சம் ரூபாய் மானியமும், வங்கி கடனாக ஏழரை லட்சம் ரூபாயும் சேர்த்து 15 லட்சம் ரூபாய் சங்கத்திற்கு கிடைத்தது. சங்க பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் வங்கியிலிருந்து ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்த போது அதிலிருந்து தரணி 60 ஆயிரம் ரூபாய் எடுத்துக் கொண்டார். இந்நிலையில் தரணி மற்றும் சங்க செயலாளர் ராஜ்குமார் சேர்ந்து சுயஉதவிக் குழுவின் பணம் ஆறரை லட்சம் ரூபாயை வங்கியிலிருந்து கையாடல் செய்துள்ளனர். இது குறித்து விஜயா வங்கி மேலாளர் தெரிவித்த பிறகுதான் எங்களுக்கு தெரிய வந்தது. இது குறித்து தரணியிடம் கேட்டால் அவர் எங்களை மிரட்டுகிறார். எந்த தகவலும் தர மறுக்கிறார். மோசடி செய்த தரணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

திட்டக்குடியில் அரசியல் விளம்பர போர்டுகள் தொண்டர்களை குஷிப்படுத்த போட்டா- போட்டி

திட்டக்குடி: 

                       திட்டக்குடியில் ஆளுங்கட்சி, எதிர்கட்சியினரின் பலத்தை நிரூ பிக்க போட்டி போட்டுக் கொண்டு விளம்பர போர்டு வைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள் ளனர். தமிழகம் முழுவதும் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், முக்கிய நிர் வாகிகளை தி.மு.க., தன்வசம் இழுக் கும் பணியில் முழு மூச்சில் இறங் கியுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் ஆதரவாளர்களுடன் தி.மு.க.,விற்கு தாவிய சிலரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கியும், சிலரது நடவடிக்கைகளை கூர்ந்தும் கவனித்து வருகிறார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா. உண்மையான விசுவாசிகளுக்கு கூடுதல் பொறுப்பும், சிலருக்கு அதே பொறுப்பும், புதிய நிர்வாகிகள் பலரையும் நியமித்து கட்சிக்கு பலம் சேர்க்கும் வேலைகளையும் செய்து வருகிறார். இதனால் புதியதாக நியமிக்கப் பட்ட மற்றும் அதே பொறுப்பினை மீண்டும் பெற்ற நிர்வாகிகள் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்தும், பிறந்த நாளுக்கு வாழ்த்தியும் விளம்பர போர்டுகள் வைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடலூர் லோக்சபா தொகுதியிலுள்ள திட்டக்குடி சட்டசபை தொகுதிக்கு புதியதாக நியமிக்கப்பட்ட தொகுதி பொறுப்பாளர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் சோர்வடைந்த கட்சித் தொண் டர்களை மீட்கவும், அ.தி.மு.க., கட்சி பலம் வாய்ந்த அணி என்பதை மாற்று கட்சியினருக்கு எடுத்துரைக்கும் விதமாக நன்றி மற்றும் பிறந்த நாள் வாழ்த்து பேனர்களை முக்கிய இடங்களான பஸ் நிலையம், கிருஷ்ணா பேலஸ் முகப்பு பகுதிகளில் வைப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். எதிர்கட்சியினரே பணத்தை வாரி இறைக்கும் போது, ஆளுங்கட்சி சும்மா இருந்தால் மாவட்ட செயலாளரிடம் டோஸ் விழும் நிலை ஏற்படும் என்பதால், ஆளுங்கட்சியினர் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்க அ.தி.மு.க.,வினர் போர்டு வைக்கும் இடங்களில் துணை முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து பிரம்மாண்ட போர்டுகள் வைத்து வருகின்றனர். ஆளுங்கட்சியோ, எதிர்கட்சியோ பல லட்சம் முதலீடு செய்த நமக்கு தினசரி வேலை வந்தால் சரிதான் என டிஜிட்டல் போர்டு தயாரிப்பாளர்கள் குஷியில் உள்ளனர்.

Read more »

கோவில் சொத்து முறைகேடு: 2 தீட்சிதர்கள் மீது வழக்கு

சிதம்பரம்: 

                            சிதம்பரம் நடராஜர் கோவில் சொத்துக்கள் முறைகேடாக விற்பனை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஐகோர்ட் உத்தரவுப்படி இரண்டு தீட்சிதர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவில் சொத்துக்கள் 6 ஏக்கர் நிலத்தை முறைகேடாக விற்பனை செய் வர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என புரட்சிகர மாணவர் இயக்க அமைப்பாளர் குழந்தைவேலு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.நகர இன்ஸ்பெக்டர் சுப்ரமணியனிடம் ஐகோர்ட்டில் நேற்று விசாரணை நடந்தது. சம்பந்தப்பட்ட தீட்சிதர்கள் மீது வழக்கு பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டதின் பேரில் , சொர்ண வெங்கடேச தீட்சிதர், தில்லை நடராஜர் தீட்சிதர் ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Read more »

வேலைவாய்ப்பு அலுவலகம் முன்பு போராட்டம்: கடலூரில் 20 பேர் கைது

கடலூர்: 

                      ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணியில் அமர்த்துவதைக் கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கடலூர் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு பூட்டுப் போடும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 20 பேரை போலீசார் கைது செய்தனர். ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணியில் அமர்த்துவதைக் கண்டித்தும், சத்துணவு, டாஸ்மாக், அங்கன்வாடி துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதில் மாவட்ட கலெக்டரின் நேரடி நியமனம் ஆளும் கட்சிக்கு சாதகமாகவும், ஊழலுக்கு வழி வகுக்கும். எனவே வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் வேலை வாய்ப்பு அலுவலகங்களுக்கும் பூட்டுப்போடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தது.

                    இதன்படி நேற்று அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட குழு சார்பில் கடலூர் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு பூட்டுப் போடும் போராட் டத்தில் ஈடுபட முயன்ற மணிவண்ணன், உலகநாதன், குமார், மணவாளன் உள் ளிட்ட 20 பேரை கடலூர் புதுநகர் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து வேனில் ஏற்றிச்சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Read more »

நெய்வேலி நிர்வாகத்தை கண்டித்து கெங்கைகொண்டானில் திடீர் மறியல்

நெய்வேலி: 

                   கெங்கைகொண்டான் பேரூராட்சி மக்கள் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கெங்கைகொண்டான் பேரூராட்சிக்குட்பட்ட இடங்களை என்.எல்.சி., நிறுவனத்தின் விரிவாக்க பகுதிகளுக்கு நில ஆர்ஜிதம் செய்ய கடந்த அக்டோபர் 5ம் தேதி மாவட்ட நிர்வாகத்தின் முன்னிலையில் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து மீண் டும் பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தியும், ஒரு சென்ட் வீட்டு மனைக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயும், ஒரு ஏக்கர் விவசாய நிலத்திற்கு 10 லட்சம் தர வேண்டும், வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்க என். எல்.சி., நிர்வாகம் தடை இல்லா சான்றிதழ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேரூராட்சி சேர்மன் சக்திவேல் தலைமையில் நேற்று காலை 10 மணியளவில் 500க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். நெய்வேலி டி.எஸ்.பி., மணி தலைமையில் இன்ஸ்பெக்டர் சேகர், குமார், சுப்புராயலு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதையொட்டி மறியலை கைவிட்டு அமைதி பேச்சு வார்த்தையில் பங்கேற்றனர். ஆர்.டி.ஓ., ராமராஜன் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையொட்டி பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Read more »

கழிவு நீர் குழாய் உடைந்ததால் நோய் பரவும் அபாயம்

நெல்லிக்குப்பம்: 

               நெல்லிக்குப்பத்தில் கழிவு நீர் ரோட்டில் ஓடுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையம் எதிரே இரண்டு ஓட்டல்கள் உள்ளன. இங்கிருந்து வெளியேறும் கழிவு நீர் குழாய் உடைந்து இரண்டு நாட்களாக ரோட்டில் கழிவு நீர் ஓடுகிறது. நகராட்சி இன்ஜினியர் புவனேஸ்வரி, மேற்பார்வையாளர் வாசு, சுகாதார அலுவலர் கிருஷ்ணகுமார் ஆகியோர் பார்வையிட்டு உடனடியாக கழிவுநீர் குழாயை சீர் செய்ய வேண்டும், இல்லாவிட்டால் கடைக்கு சீல் வைக்கப்படுமென எச்சரிக்கை செய்தனர்.

Read more »

திருட்டு, கொலை வழக்கில் சிறை சென்றவர் மீண்டும் கைது

நெல்லிக்குப்பம்: 

                         பல்வேறு திருட்டு, கொலை வழக்கில் சிறை சென்றவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். நெல்லிக்குப்பம் குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் சீத்தாராமன் தலைமையில் போலீசார் வானமாதேவி பகுதியில் வாகன சோதனைசெய் தனர். அப்போது போலீசார் சைகை காட்டியும், பைக்கில் சென்ற இருவர் நிறுத்தாமல் சென்றனர். போலீசார் விரட்டி பிடித்து விசாரணை செய்தபோது அந்த பைக்கை நெல்லிக்குப்பத்தில் திருடியதும், அதை ஓட்டி வந்தவர் திருக்கண்டேஸ்வரம் குருசாமி (28), விஸ்வநாதபுரம் கோபி (26) எனவும் தெரிய வந்தது.  இதில் கோபி மருதாடு கூட்டுறவு வங்கி காவலர் கொலை, பல்வேறு திருட்டு, வழிப்பறி வழக்குகளில் பலமுறை சிறை சென்றவர். நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து குருசாமி, கோபி ஆகியோரை கைது செய்தனர்.

Read more »

கண்தானம்

சிதம்பரம்: 
 
                           சிதம்பரத்தை அடுத்த வடகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ராமச்சந்திர நாயரின் துணைவியார் ஆர். ரோசாயாள் (80) செவ்வாய்க்கிழமை காலை காலமானார். சிதம்பரம் காயத்ரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த திரிபுரசுந்தரி (78) திங்கள்கிழமை காலை காலமானார். இவர்களது கண்கள் காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம் சார்பில் தானமாக பெறப்பட்டு ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி கண் வங்கிக்கும், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அரிமா சங்கத் தலைவர் எம்.கமல்கிஷோர் ஜெயின், தன்னார்வ ரத்ததானக் கழகத் தலைவர் எஸ். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் செய்தனர்.

Read more »

உணவு கலப்பட தடுப்பு அதிகாரிகள் திடீர் சோதனை

கடலூர்: 

                    நெய்வேலி பகுதியில் உணவு கலப்பட தடுப்பு அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். நெய்வேலி இந்திரா நகர் பகுதியில் உள்ள மளிகைக்கடை, பெட்டிக்கடைகளில் சுகாதார மேற்பார்வையாளர்கள் சுப்ரமணியன், ஆய்வாளர் ஜெயச்சந்திரன் திடீர் ஆய்வு செய்தனர்.  கடைகளில் போலி டீத்தூள் விற்பனை செய்யப்படுகிறதா, விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு ஐ.எஸ்.ஐ., முத்திரை உள்ளதா, அதன் பயன்பாடு காலத்திற்குள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை செய்தனர். மேலும் விற்பனை செய்யப்படும் சில பொருட்களில் கலப்படம் உள்ளதா என அறிந்திட பகுப்பாய்விற்கு அனுப்பினர்.

Read more »

கடலூரில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

கடலூர்: 

                சென்னையில் வக்கீல் படுகொலை செய்யப்பட் டதைக் கண்டித்து கடலூரில் வக்கீல்கள் நேற்று கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். சென்னை அண்ணா நகரை சேர்ந்தவர் வக்கீல் சம்பத். இவரை நேற்று முன்தினம் மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தது. இதனை கண்டித்தும், கொலை செய்தவர் கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் கடலூரில் வக்கீல்கள் தலைவர் லோகநாதன் தலைமையில் கோர்ட் புறக்கணிப்பு செய்தனர்.

Read more »

மங்களூர் ஒன்றிய கவுன்சிலர்கள் நீதி கேட்டு கலெக்டரிடம் முறையீடு

சிறுபாக்கம்: 

                  மங்களூர் ஒன்றிய கவுன்சிலர்கள் பகுதிகளில் தேவைகளை நிறைவேற்றிட நிதி ஒதுக்க வேண்டுமென கலெக்டரிடம் முறையிட்டனர். மங்களூர் ஒன்றிய சேர்மன் ரவிச்சந்திரன் தலைமையில், ஒன்றிய கவுன்சிலர்கள் கலெக்டர் சீத்தாராமனை நேரில் சந்தித்தனர். அப்போது ஊராட்சிகளுக்கு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்வது போல, ஒன்றிய கவுன்சிலர் பகுதிகளுக்கும் தலா 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். பின்தங்கிய பகுதியாக இருப்பதால் ஒன்றிய கவுன்சிலர்கள் மூலம் தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். அப்போது துணை சேர்மன் சின்னசாமி, கவுன்சிலர்கள் சந்திரபாபு, சேகர், கல்யாணி, அம்பிகா, ராஜன், பொன்முடி உட்பட பலர் உடனிருந்தனர்.

Read more »

சி.எஸ்.ஜெயின் கல்வி நிறுவனங்களின் விளையாட்டு போட்டிகள் துவக்க விழா

ஸ்ரீமுஷ்ணம்: 

                    ஸ்ரீமுஷ்ணம் சி.எஸ். ஜெயின் கல்வி நிறுவனங்கள் சார்பில் விளையாட்டு போட்டிகள் துவக்க விழா நடந்தது. ஸ்ரீமுஷ்ணம் சி.எஸ். ஜெயின் கல்விக்குழுமம் மற்றும் விருத்தாசலம் சி.எஸ்.எம்., கல்வியியல் கல்லூரி மாணவர்களுக் கான விளையாட்டு போட் டிகள் சன்மா 2010 துவக்க விழா ஸ்ரீமுஷ்ணத் தில் நடந்தது. விழாவிற்கு சி.எஸ்.ஜெயின் கல்வி குழுமங்களின் தாளாளர் மகாவீர்சந்த் தலைமை தாங்கினார். தலைவர் சந்தோஷ்சந்த் முன்னிலை வகித்தார். கல்வியியல் கல்லூரி முதல்வர் ராஜதுரை வரவேற்றார். விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் கவாஸ்கர் போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார். ஸ்ரீமுஷ்ணம் தேரடியில் இருந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றி முக்கிய வீதிகள் வழியாக வந்து விளையாட்டு போட்டிகள் நடந்தது. மருந்தாளுனர் கல்லூரி முதல்வர் அபிராமி, சி.எஸ்.எம்., கல்வியியல் கல்லூரி முதல்வர் ரமேஷ் குமார், ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் கலைவாணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். உடற்கல்வி விரிவுரையாளர் தியாகராஜன் நன்றி கூறினார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior