உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, டிசம்பர் 11, 2011

முல்லை பெரியாறு அணை பிரச்சினை: கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.சார்பில் உண்ணாவிரதம்

கடலூர்:
 
கடலூர் மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:-

               முல்லை பெரியாறு  அணை பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிட, மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம், நெல்லிக்குப்பம் ஆகிய 5 நகரங்களில் நாளை (12-ந் தேதி) காலை 8 மணி முதல் 5 மணிவரை உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெற உள்ளது.

சிதம்பரம் பஸ்நிலையம்
 
              காந்தி சிலை அருகில் எனது (எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்) தலைமையில், நகர செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர்கள் முத்துபெருமாள், பூபாலன், மாமல்லன், செயராமன் ஆகியோர் முன்னிலையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.  

கடலூர் மஞ்சக்குப்பம் 
 
           தபால் நிலையம் அருகில் மாநில மாணவரணி செயலாளர் புகழேந்தி தலைமையில் நகர செயலாளர் தங்கராசு, ஒன்றிய செயலாளர்கள் ஜெயபால், சிவகுமார், பொதுக்குழு உறுப்பினர் ஏ.ஜி.ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் பாஸ்கரன், நகர இளைஞரணி அமைப்பாளர் கே.எஸ்.ராஜா, வக்கீல் சிவராஜ் ஆகியோர் முன்னிலையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.

நெல்லிக்குப்பம் 
 
             போலீஸ் நிலையம் எதிரில் பண்ருட்டி ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சபா.ராஜேந்திரன், மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் நெல்லிக்குப்பம் புகழேந்தி தலைமையில் ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன், நகர செயலாளர் மணிவண்ணன், பேரூர் செயலாளர்கள் கலியமூர்த்தி, சடாட்சரம் செயலாளர் அணி பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.  

விருத்தாசலம் 
         
           உழவர்சந்தை எதிரில் மாவட்ட துணை செயலாளர் கணேசன், முன்னாள் எம்.எல்.ஏ. குழந்தை தமிழரசன் ஆகியோர் தலைமையில் நகர செயலாளர் தண்டபாணி, ஒன்றிய செயலாளர்கள் ராமு, ஞானமுத்து, கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.

பண்ருட்டி 
 
             பஸ் நிலையம் எதிரில் முன்னாள் எம்.எல்.ஏ. நந்தகோபால கிருஷ்ணன் தலைமையில் நகர செயலாளர்கள் ராஜேந்திரன், புகழேந்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தணிகைசெல்வம், ஜெயராமன் ஆகியோர் முன்னிலையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. 
 
           இந்த உண்ணாவிரத போராட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை, முன்னாள் எம்.எல்.ஏ., எம்.பி. மாணவரணி, மகளிரணி உள்பட அனைத்து நிர்வாகிகளும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்.  இவ்வாறு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தவறான கொள்கை: பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு

டலூர்:

         தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தவறான கொள்கைகளால் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு கடந்த 10 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளதாக பி.எஸ்.எஸ்.எல். அதிகாரிகள், ஊழியர்கள் சங்கங்களின் கூட்டு போராட்டக்குழு தெரிவித்துள்ளது.

 போராட்டக் குழுவின் பிரதிநிதிகள் கே.டி. சம்பந்தம், இளங்கோவன், ஜெயராமன், பி.வெங்கடேசன் ஆகியோர் புதன்கிழமை கடலூரில் கூறியது. 

            இந்தியாவில் அனைத்து தனியார் செல்போன் நிறுவனங்களும், 1998-ல் சேவை தொடங்க மத்திய அரசின் தொலைத் தொடர்பு ஒழங்குமுறை ஆணையம் அனுமதித்த போதிலும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு 2003-ல் தான் அனுமதி அளிக்கப்பட்டது. பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய கருவிகளை வழங்க மறுத்தது மத்திய அரசு. இதனால்  2004-ல் 2-ம் இடத்தில் இருந்த பி.எஸ்.என்.எல். நிறுவனம் இப்போது 4-வது இடத்துக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது. எனினும் தரைவழி தொலைபேசி இணைப்புகளைப் பொறுத்தரை பி.எஸ்.என்.எல். நிறுவனம் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.  பி.எஸ்.என்.எல். செல்போன் டவர்களின் ஒலிபரப்பு சக்தி 13-ல் இருந்து 20 வாட்ஸ் அளவுக்குள்தான் இருக்க வேண்டும்.

            அதுதான் மக்களுக்குப் பாதுகாப்பானது. எனவே 2 முதல் 3 கி.மீ. தூரத்துக்கு ஒரு செல்போன் டவர் வீதம்  பி.எஸ்.என்.எல். நிறுவுகிறது. இதனால் மூலத்தனச் செலவு அதிகரிக்கிறது. ஆனால் விதிகளை மீறி தனியார் செல்போன் நிறுவனங்கள் செயல்படுகின்றன. மக்களுக்குப் பாதகம் விளைவிக்கும் வகையில் செலவைக் குறைப்பதற்காக 40 வாட்ஸ் சக்தி கொண்ட செல்போன் டவர்களை அவை அமைக்கின்றன. இதனால் தனியார் செல்போன்கள் நிறுவனங்களின் சிக்னல்கள் நன்றாக இருப்பதாக பொதுமக்கள் கருதுகிறார்கள். ஆனால் 40 வாட்ஸ் ஒலிபரப்பு சக்தியால் மக்களுக்கு புற்றுநோய் போன்ற உடல் நலக்கோடு வரும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். 

            தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இதைக் கண்டு கொள்வதே இல்லை.  இந்த ஆண்டு பி.எஸ்.என்.எல். நிறுவனம் மத்திய அரசுக்கு ரூ.40 ஆயிரம் கோடி சேவைக் கட்டணம் செலுத்தி உள்ளது. ஆனால் தனியார் செல்போன் நிறுவனங்கள் சேவைக் கட்டணம் செலுத்துவது இல்லை. பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு ஆண்டுதோறும் சொத்துமதிப்பு குறைப்பு ரூ.10 ஆயிரம் கோடி. இதன் விளைவாக கடலூர் மாவட்ட தொலைத்தொடர்பு மேலாளர் அலுவலகத்தின் மதிப்பு ரூ.100 மட்டுமே. இதன் அடிப்படையில் சொத்து மதிப்பைக் கணக்கிடுவதால், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் இன்றைய மதிப்பு ரூ.60 ஆயிரம் கோடி. 

                ஆனால் உண்மையான மதிப்பு ரூ.1 லட்சம் கோடி.  பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு இந்த ஆண்டு மட்டும் ரூ. 11 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்படும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.   ஒழுங்குமுறை ஆணையம் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு விரோதமாக, தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ஆதரவாக மேற்கொண்ட கொள்கைகளால், கடந்த 10 ஆண்டுகளில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு ஏற்பட்ட நஷ்டம் ரூ.1 லட்சம் கோடி.  இந்த நிலையில் 2.75 லட்சம் ஊழியர்களைக் கொண்ட இந்த நிறுவனத்தில் 1 லட்சம் ஊழியர்களைக் குறைக்க, விருப்ப ஓய்வுத் திட்டம் கொண்டு வருவதை எதிர்க்கிறோம். 

           இதில் பணிபுரியும் ஐடிஎஸ். அதிகாரிகளை உடனே தொலைத் தொடர்புத் துறைக்கே அனுப்ப வேண்டும். நிறுத்தப்பட்ட போனஸ் உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும். ஸ்பெக்ட்ரம் கட்டணமாக வசூலிக்கப்பட்ட ரூ.8,313 கோடியை திருப்பிக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்தி வருகிறோம்.  வரும் 8-ம் தேதி கடலூரில் பேரணியும், 15-ம் தேதி வேலை நிறுத்தமும் செய்கிறோம் என்றனர்.












Read more »

ஸ்ரீமுஷ்ணம் துணை மின்நிலையத்தில் ரூ.1.91 கோடியில் புதிய மின் மாற்றி

சிதம்பரம்:

            கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் துணை மின்நிலையத்தில் ரூ.1.91 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய கூடுதல் திறன் மின்மாற்றிகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

              ஊரக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், புதிய மின்மாற்றிகளை இயக்கி வைத்தார். சமூக நலத்துறை அமைச்சர் செல்விராமஜெயம் முன்னிலை வகித்தார். ஆட்சியர் வே.அமுதவல்லி, காட்டுமன்னார்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் நாக.முருகுமாறன், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பி.அருள்காந்தி, சிதம்பரம் கோட்ட செயற்பொறியாளர் எஸ்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டதன் மூலம் ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் குறைந்த மற்றும் அதிக மின்அழுத்தம் இல்லாமல் சீரான மின்சார விநியோகம் கிடைக்கும் என மேற்பார்வை பொறியாளர் பி.அருள்காந்தி தெரிவித்தார்.














Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior