உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 05, 2011

கடலூர் சிப்காட்டில் புற்றுநோய் கண்டறியும் மருத்துவ முகாமில் முறைகேடு : இணை இயக்குனர் மீது நடவடிக்கை

கடலூர் : 

           கடலூர் சிப்காட்டில் நடந்த மருத்துவ முகாமில் பங்கேற்றவர்களுக்கு புற்று நோய் இல்லை என அறிக்கை தருமாறு, டாக்டர்களை வலியுறுத்திய இணை இயக்குனர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, கிராமத்தில் மீண்டும் மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சிப்காட் பகுதி சமுதாய சுற்றுச்சூழல் கண்காணிப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ராமநாதன் கூறியது: 

           கடலூரில் பல்வேறு ரசாயன தொழிற்சாலைகள் இயங்கி வரும் சிப்காட் பகுதியை, சமீபத்தில் ஆய்வு செய்த மத்திய சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மையம், இப்பகுதி மக்களுக்கு புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு, 2,000 பங்கு வாய்ப்பு உள்ளதாகவும், இதைத் தவிர்க்க, புற்று நோய்க்கான சிறப்பு மருத்துவ முகாம் நடத்த பரிந்துரைத்தது. அதன்படி, மாவட்ட மருத்துவ இணை இயக்குனரகமும், கடலூர் சிப்காட் தொழிற்சாலைகளின் கூட்டமைப்பும் இணைந்து, கடந்த 29ம் தேதி குடிகாடு கிராமத்தில் புற்றுநோய் கண்டறிய, முதல் கட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. முகாமை, கலெக்டர் அமுதவல்லி துவக்கி வைத்தார்.

                ஐந்து டாக்டர்கள் கொண்ட குழுவினர், பொதுமக்களை பரிசோதித்துக் கொண்டிருந்தனர். முகாம் துவங்கிய ஒரு மணி நேரத்தில் மொபைல் போனில் பேசியபடி உள்ளே வந்த மருத்துவ இணை இயக்குனர் (பொறுப்பு) கமலக்கண்ணன், டாக்டர்களிடம் பரிசோதனை விவரங்களை ஒருங்கிணைந்து, "நில் ரிப்போர்ட்' (புற்றுநோய் அறிகுறி இல்லை என அறிக்கை) தருமாறு கூறிவிட்டுச் சென்றார். இணை இயக்குனரின் இந்த மறைமுக உத்தரவால், புற்று நோய் கண்டறிய முதல் கட்ட சோதனையில் முறைகேடு நடந்துள்ளதாக அறிகிறோம். அதை உறுதி செய்யும் வகையில், முகாமில் பங்கேற்ற பொதுமக்களை பரிசோதித்த டாக்டர்கள் புற்றுநோய் கண்டறிவது குறித்து, எந்த விவரங்களையும் கேட்கவில்லை; சோதனையும் செய்யவில்லை.

              எனவே, இந்த முகாம் அறிக்கையை ரத்து செய்வதோடு, இணை இயக்குனர் மற்றும் முகாமில் பங்கேற்ற டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட், வேலூர் சி.எம்.சி., சென்னை ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக் கழகங்களில் உள்ள புற்றுநோய் நிபுணர்களைக் கொண்டு, மீண்டும் சிப்காட் பகுதியில், விடுமுறை நாளில் முகாம் நடத்தி, சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பரிசோதித்து, அறிக்கை தயாரிக்க வேண்டும்.
 
             முகாமில் நடந்த முறைகேடு குறித்து வீடியோ ஆதாரத்துடன், முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர், தலைமைச் செயலர், சுகாதாரத்துறை முதன்மைச் செயலர், மருத்துவத்துறை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளோம். கலெக்டரை நேரில் சந்தித்து வீடியோ சி.டி., மற்றும் புகார் மனுவை கொடுத்துள்ளோம். இவ்வாறு ராமநாதன் கூறினார்.






Read more »

வீராணம் ஏரியில் குறைந்தளவு நீர்: விவசாயிகள் கவலை

குறைந்தளவு நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ள வீராணம் ஏரி.

சிதம்பரம்:

        கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியில் குறைந்தளவு நீர் உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.  

             இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு முதல்முறையாக ஜூன் 6-ம் தேதியே மேட்டூரிலிருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டார். ஆனால் காவிரி டெல்டா கடைமடைப் பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுக்காவில் பாசனத்துக்கு இதுவரை நீர் வந்து சேரவில்லை.  இதனால் விவசாயிகள் போர்வெல் மூலம் குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஜூன் 29-ம் தேதி கடலூர் மாவட்ட டெல்டா பாசனத்துக்கும், வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கும் அணைக்கரையில் உள்ள கீழணையிலிருந்து அமைச்சர்கள் எம்.சி.சம்பத், செல்விராமஜெயம் ஆகியோர் நீரை திறந்துவிட்டனர்.  

            குறைவான அளவு நீர் திறந்துவிடப்பட்டதால் அந்த நீர் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுக்கா விவசாயிகளுக்கு நீர் வந்து சேராததால் அவர்கள் பெருத்த கவலைக்குள்ளாகியுள்ளனர்.   குறிப்பாக வீராணம் ஏரியின் மொத்தக் கொள்ளளவு 47.5 அடியாகும். ஆனால் ஏரியில் குட்டை போல்தான் நீர் தேங்கியுள்ளது. பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஏரியில் ஒரு அடிக்கும் குறைவாக 9 மில்லியன் கனஅடி நீர் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.  வீராணம் ஏரிக்கு கீழணையிலிருந்து வடவாறு வழியாக 1200 கனஅடிநீர் திங்கள்கிழமை மதியம் முதல் கூடுதலாக அனுப்பப்படுகிறது என பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

             நீர் குறைவாக உள்ளதால் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நீர் குறைவாக உள்ளதை காட்டுமன்னார்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் நாக.முருகுமாறன் திங்கள்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். கூடுதலாக நீர் அனுப்ப பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ. தெரிவித்தார்.  

            எனவே கல்லணையிலிருந்து கீழணைக்கு அதிகளவு நீர் திறந்துவிட்டு கீழணையிலிருந்து கடலூர் மாவட்ட டெல்டா பாசனத்துக்கும், வீராணம் ஏரிக்கு கூடுதலாக நீரை அனுப்ப வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




Read more »

கடலூர் மத்திய சிறைக்கு மோப்ப நாய் பிரிவு தொடக்கம்

கடலூர்:
 
           கடலூர் மத்திய சிறையில் மோப்பநாய் பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது. பயிற்சி முடிந்ததும் மோப்ப நாய்கள் விரைவில் கடலூர் சிறைக்கு வரஇருக்கின்றன.

             தமிழகத்தில் உள்ள 9 சிறைகளில் கடலூர் மத்திய சிறையும் ஒன்று. இங்கு தீவிரவாதிகள், ஆயுள் கைதிகள் உள்ளிட்ட 1,500 கைதிகள் உள்ளனர். சிறைகளில் உள்ள கைதிகளிடம் அண்மைக்காலமாக கஞ்சா, பான்பராக், புகையிலை உள்ளிட்ட போதைப் பொருள்கள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. செல்போன்கள் சட்ட விரோதமாகப் பயன்படுத்தப்படுவதும் அவ்வப்போது கண்டறியப்பட்டு வருகிறது.

           எனவே இவற்றை ஒழிக்க மத்திய சிறைகளில் மோப்பநாய் கண்காணிப்புப் பிரிவு தொடங்க, தமிழக அரசு முடிவு செய்தது. கடந்த பிப்ரவரி மாதம் கடலூர், வேலூர், சென்னை புழல் சிறைகளில் மோப்பநாய் கண்காணிப்புப் பிரிவு தொடங்கப்பட்டது. கடலூர் மத்திய சிறை மோப்ப நாய் கண்காணிப்புப் பிரிவுக்கு பாரத், ரீனா என்ற இரு மோப்பநாய் குட்டிகள் வாங்கப்பட்டு, அவற்றுக்கு சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மோப்ப நாய்களைக் கையாளும் சிறைக் காவலர்களுக்கும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

           பயிற்சி முடிந்து கடலூர் மத்திய சிறையில், மோப்பநாய் கண்காணிப்புப் பிரிவு செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோப்பநாய் கண்காணிப்புப் பிரிவுக்காக கடலூர் மத்திய சிறையில் ரூ. 2 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டு இருப்பதாகவும், அனேகமாக நவம்பர் மாதத்தில் மோப்ப நாய்ப் பிரிவு செயல்படும் என்றும் சிறைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.





Read more »

கடலூர் மாவட்டப் பெண்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

கடலூர்:
 
          தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது பெறத் தகுதியான கடலூர் மாவட்டப் பெண்கள், விண்ணப்பிக்கலாம் என்று கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் கோ.திருமுகம் அறிவித்து உள்ளார்.
 
கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர்  வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
 
             வீர தீரச் செயல்கள் புரியும் மகளிருக்கு, ஆண்டுதோறும் தமிழக அரசு கல்பனா சாவ்லா விருது வழங்கி கௌரவித்து வருகிறது.தனது உயிரையும் பொருள்படுத்தாமல், மற்றவர்களின் உயிர் பாதுகாப்புக்காகவும், சாகசச் செயல்களை புரிந்ததற்காகவும், வீரதீரச் செயல்களை புரிந்த மகளிரைக் கெüரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவில், தமிழக அரசால் இந்த விருது வழங்கப்படுகிறது.
 
          இந்த ஆண்டு இவ்விருதை வழங்க, உரிய கருத்துருவை 8-7-2011-க்குள் வழங்க வேண்டும். இவ்விருதுக்கு விண்ணப்பிக்கத் தகுதியான, கடலூர் மாவட்டத்தைத் சேர்ந்த பெண்கள், மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலரை அணுகலாம் என்றும், செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
 
 
 

Read more »

பரங்கிப்பேட்டையில் ஆதிமூலேஸ்வரர் கோவில் தேர்: அதிகாரி அலட்சியத்தால் பாழ்

பரங்கிப்பேட்டை : 

            பரங்கிப்பேட்டை அருகே ஆதிமூலேஸ்வரர் கோவிலில் சேதமடைந்த தேரை புனரமைக்க நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியும் அதிகாரிகள் அலட்சியத்தால் தேர் உருக்குலைந்து மக்கி மண்ணோடு மண்ணாகி வருகிறது. 

           பரங்கிப்பேட்டை அடுத்த அகரத்தில் பழமை வாய்ந்த அமிர்தவல்லி சமேத ஆதிமூலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்குச் சொந்தமாக 100 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் உள்ளது. நிலம் மற்றும் நன்கொடையாளர்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் சூரிய பூஜை, மாசி மகத்தையொட்டி பத்து நாட்கள் திருவிழா, தை அமாவாசை, ஆடிப்பூர விழாக்கள் நடத்தப்படுகிறது.

            மாசிமக உற்சவத்தின் போது அமிர்தவல்லி மற்றும் ஆதிமூலேஸ்வரர் கோவிலைச் சுற்றியுள்ள நான்கு வீதிகள் வழியாக தேரோட்டம் நடப்பது வழக்கம். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் இக்கோவிலில் இருந்த இரண்டு தேர்கள் சேதமடைந்ததால் தேரோட்டம் நிறுத்தப்பட்டது. இதற்கிடையே சேதமடைந்த தேரை சீர்செய்யக் கோரி அறநிலையத் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். 

           அதன்பேரில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தேரை சீர் செய்ய 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், நிதி ஒதுக்கி நான்கு ஆண்டுகள் ஆகியும், அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் அந்த நிதி தற்போது அரசுக்கு திரும்பிப்போகும் நிலை உள்ளது. அதிகாரிகளின் அலட்சியத்தால் சீர் செய்யப்பட வேண்டிய தேர் உருக்குலைந்து மண்ணோடு, மண்ணாக மக்கி வருகிறது.




Read more »

விருத்தாசலம் அருகே ரசாயன கலவையின்றி விநாயகர் சிலைகள் செய்யும் பணி

விருத்தாசலம் : 

            விருத்தாசலம் அய்யனார்கோவில் தெருவில் ரசாயன கலவையின்றி மண்ணாலான விநாயகர் சிலைகள் செய்யும் பணி நடந்து வருகிறது. வரும் செப்டம்பர் 1ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. அன்று புதிய விநாயகர் சிலைகளை வைத்து, பக்தர்கள் பூஜை செய்து, பின்னர் பிரதிஷ்டை செய்யப்பட்டு மூன்றாம் நாள் கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பண்ருட்டி, விருத்தாசலம் உட்பட பல இடங்களில் விநாயகர் சிலைகள் செய்யும் பணி நடந்து வருகிறது.

          விருத்தாசலம் அய்யனார் கோவில் தெருவில் ரசாயன கலவையின்றி மண்ணாலான விநாயகர் சிலை செய்யும் பணி நடந்து வருகிறது. சிலைகளை கரைக்கும் போது தண்ணீர் மற்றும் மண் மாசுபடாமல் இருக்கும் வகையில் ரசாயன கலவையின்றி, சிலைகளுக்கு பெயிண்ட்டிற்கு பதில் சுண்ணாம்பு மூலம் வர்ணம் பூசப்படுகிறது. இச்சிலைகளை கடலில் கரைப்பதால் சுற்றுச் சூழல் பாதிப்பு தடுக்கப்படுகிறது.




Read more »

திட்டக்குடி தாகம் தீர்த்த புரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

 http://mmimages.mmnews.in/Articles/2011/Jul/2b1da5ce-7b08-4c4a-9526-48e5b32c9fb4_S_secvpf.gif

 
திட்டக்குடி:

           திட்டக்குடியை அடுத்துள்ள இறையூரில் புகழ் பெற்ற தாகம் தீர்த்த புரீஸ்வரர் கோவில் உள்ளது. இறையூர் கிராமமக்கள் இந்த கோவிலை சீரமைத்துள்ளனர். இந்த கோவிலின் கும்பாபிஷேகம் வருகிற 10-ந் தேதி காலை 9.30 மணி அளவில் நடக்கிறது. இதையொட்டி அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் அனுக்ஞை, விக்னேஸ்வரா பூஜையுடன் பூஜைகள் தொடங்கின.

              யாக சாலையில் சாமி, அம்மன், திருஞானசம்மந்ததிற்கு 15 பிரதான யாக குண் டங்களும், பரிவார தெய்வங்களுக்கு 10 யாக குண்டங்களும் அமைக்கப்பட்டுள் ளன. இவற்றை சுற்றி 274 கலசங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் தொடங்கின. முதல் கால பூஜை வரும் 7-ந் தேதி இரவும், மறுநாள் வெள்ளிக் கிழமை 2-ம் கால 3-ம் கால பூஜைகளும், 9-ந் தேதி 4-ம் கால 5-ம் கால பூஜைகளும் நடக்கின்றன, 10-ந் தேதி காலை 9.30 மணி அளவில் கும்பாபி ஷேகம் நடக்கிறது. 
 
            விழாவில் சமூக நலத் துறை அமைச்சர் செல்வி ராமஜெயம், புதுவை முதல்- அமைச்சர் ரங்கசாமி, பாராளுமன்ற உறுப்பினர் கே.எஸ். அழகிரி, திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் தமிழ் அழகன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
 
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior