
நெய்வேலி:
கடந்த 30-ந் தேதி வீசிய தானே புயலால் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த மாவட்டங்களில் மத்திய, மாநில அரசுகள் நிவாரண பணிகளை விரைவுபடுத்த கோரியும், என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் வலியுறுத்தி உண்ணாவிரதம் நடை பெறும் என முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகன் அறிவித்திருந்தார்.
அதன்படி நேற்று நெய்வேலி புதுநகர் தெர்மல் பஸ் நிலையம் அருகே வேல்முருகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சுமார் 3 ஆயிரம் பேர் உண்ணாவிரதமிருந்தனர். இதில் என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் சார்பில் அன்பழகன், தேவராஜன் உள்பட ஏராளமான ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். கோரிக்கைகள் நிறைவேறும்வரை உண்ணா விரதத்தை தொடர்வது என வேல்முருகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் முடிவு செய்தனர். அதைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக உண்ணாவிரதம் நீடித்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட பெண்களும் கலந்து கொண்டனர்.