உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 04, 2011

விருத்தாசலம் சத்தியவாடி ஆலந்துறை ஈஸ்வரர் கோயில் சீரமைக்க கோரிக்கை


விருத்தாசலத்தை அடுத்த சத்தியவாடி கிராமத்தில் சீரமைக்கப்படாமல் காணப்படும் ஆலந்துறை ஈஸ்வரர் கோயில் கோபுரம்.
 
விருத்தாசலம்:

         விருத்தாசலத்தை அடுத்த சத்தியவாடி கிராமத்தில் உள்ள பழைமை வாய்ந்த சிவன் கோயில் சீரமைக்கப்படுமா? என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
 
             கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டாரம் சத்தியவாடி கிராமத்தில் மிகத் தொன்மை வாய்ந்த சிவன்கோயில் உள்ளது. கோயிலில் உள்ள சிவனை ஆலந்துறை ஈஸ்வரர் என அப்பகுதி மக்கள் அழைக்கின்றனர். இப்பழைமைவாய்ந்த ஆலந்துறை ஈஸ்வரர் கோயில் முகலாயர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகவும், சிலர் 200 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகவும் கூறுகின்றனர். 

         ஆனால் கோயில் எப்போது கட்டப்பட்டது என்பதற்கான கல்வெட்டு உள்ளிட்ட ஆதாரங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. இந்நிலையில் 200 அல்லது 800 ஆண்டுகளுக்கு முன்னதாகக் கட்டப்பட்டதாகக் கூறப்படும் சத்தியவாடி ஆலந்துறை ஈஸ்வரர் கோயில் தற்போது போதிய பராமரிப்பும் பாதுகாப்பும் இல்லாமல் பாழடைந்து வருகிறது.
 

 இது குறித்து சத்தியவாடி கிராம மக்கள் தெரிவித்தது: 


             "ஆலந்துறை ஈஸ்வரர் கோயிலில் ஆலந்துறை ஈஸ்வரர், அழகியபொன்மணி அம்மன், அஸ்திரதேவர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட சாமிகள் உள்ளன. இந்த கோயில் தற்போது இந்து அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. ஆலந்துறை ஈஸ்வரர் கோயில் கட்டி பல ஆண்டுகள் ஆகிறது. இதனால் தற்போது கோயில் வெளிப்புற கோபுரம், முன்பக்க கோபுர கதவு, மூலவர் கோயிலில் உள்ள கதவுகள் மிகவும் மோசமான நிலையிலும், உடைந்து விழும் நிலையிலும் உள்ளது.
 

          அதேபோல் கோயில் உள்பக்கம் கட்டப்பட்டுள்ள சிறுசிறு மண்டபங்களும் பாழடைந்து உள்ளது. புகழ்பெற்று விளங்கிய ஆலந்துறை ஈஸ்வரர் கோயில் தற்போது பராமரிப்பும், பாதுகாப்பு இல்லாமல் இருப்பதும் வருத்தமளிக்கிறது' என தெரிவித்தனர். எனவே இந்து அறநிலையத் துறை நிர்வாகம் அல்லது தொடர்புடைய அரசு நிர்வாகம் பழைமைவாய்ந்த சத்தியவாடி ஆலந்துறை ஈஸ்வரர் கோயிலை சீரமைக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு. 
 


 

Read more »

சிதம்பரம் பகுதியில் பலத்த காற்று, மழையில் வாழை சேதம்


பலத்த காற்று மழையால், சிதம்பரத்தை அடுத்த நடுத்திட்டு பகுதியிலிருந்து சேதமடைந்த வாழைக்காயை ஞாயிற்றுக்கிழமை சிதம்பரம் நகருக்கு டிராக்டரில் கொண்டு வந்து நகரில் விற்பனை செய்தனர்
சிதம்பரம்:

            சிதம்பரம் பகுதியில் கடந்த 2 தினங்களாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.   சனிக்கிழமை பலத்த காற்று மற்றும் இடிமின்னலுடன் மழை பெய்தது. இதனால் சிதம்பரத்தை அடுத்த வல்லம்படுகை, ஜெயங்கொண்டப்பட்டினம், நடுத்திட்டு உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை முற்றிலும் சாய்ந்து சேதமடைந்தது.   இதனால் விவசாயிகள் சேதமடைந்த வாழை மரத்திலிருந்த வாழைக்காயை டிராக்டரில் கொண்டு வந்து நகரில் விற்பனை செய்தனர்.



Read more »

நெய்வேலிப் புத்தகக் கண்காட்சியில் மாணவர்களை ஊக்குவிக்க உடனடித் திறனறிதல் போட்டி

 நெய்வேலி:

             நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி வளாகத்தில் என்.எல்.சி. கல்வித் துறை சார்பில் உடனடித் திறனறிதல் போட்டி நடத்தப்பட்டு, உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்படும் நிகழ்ச்சி பள்ளி மாணவ, மாணவியரை வெகுவாக கவர்ந்துள்ளது.

               புத்தகக் கண்காட்சியை காணவரும் பள்ளி மாணவ, மாணவியரை ஊக்குவிக்கும் விதமாக என்.எல்.சி. கல்வித் துறை உடனடித் திறனறிதல் போட்டியை நடத்தி வருகிறது. இதற்காக நாளொன்றுக்கு ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகையை வழங்கி, 10 தினங்களுக்கும் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசை வழங்கி வருகிறது. அதன்படி புத்தகக் கண்காட்சியின் முதல்நாளான வெள்ளிக்கிழமை 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும், 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிருக்கிடையே இரு பிரிவுகளாக கவிதைப் போட்டிகளை நடத்தியது.

இதில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான பிரிவில் 

முதல் பரிசு  எ.கல்கிப்ரியாவுக்கும், 
2-ம் பரிசு என்.அக்ஷ்யாவுக்கும், 
3-ம் பரிசு ஆர்.ரஞ்சித்குமாருக்கும் வழங்கப்பட்டது.

இது தவிர 

எ.அருள்மார்ட்டீன் ராஜா, 
கே.ஆர்.கார்த்திகா,
ஆர்.ஸ்ரீகாந்த், 
வி.வினோத், 
ஜே,கிரிதரன் ஆகிய 5 பேருக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டன.

இதேபோன்று 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பிரிவில் 

முதல்பரிசு ஆர்.அபிராஜுக்கும்,
2-ம் பரிசு பி.கீர்த்தனாவுக்கும், 
3-ம் பரிசு ஜி.எஸ்.சங்கமிக்கும்  வழங்கப்பட்டது.

இது தவிர பி.வீரமணி, ஏ.ஆஷிஷ், எஸ்.ஜெயஷ்குமார், எம்.தீபக்ராஜ், டி.ராஜேஷ் உள்ளிட்ட 5 பேருக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.

போட்டிக்கான ஏற்பாடுகளை என்.எல்.சி. கல்வித் துறையைச் சேர்ந்த கூடுதல் முதன்மை மேலாளர் ஜோதிக்குமார் முன்னின்று செய்துவருகிறார்.





Read more »

கடலூர் ரோட்டரி சங்கம் சார்பில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடத் திட்டம்

கடலூர்:

            ஓராண்டில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்குக் கடலூர் ரோட்டரி சங்கம் திட்டமிட்டு உள்ளது.

             கடலூர் ரோட்டரி சங்க புதிய தலைவராக இராம.சனார்த்தனம், செயலராக  பா.குணசேகரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா வெள்ளிக்கிழமை நடந்தது. ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் டி.ஜெயக்குமார் உள்ளிட்டோர் ரோட்டரி சாசனச் சான்றிதழை புதியத் தலைவர் ஜனார்த்தனம், செயலர் குணசேகரன் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

               அதைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் குழுவினர் பதவி ஏற்றுக் கொண்டனர். விழாவில், கடலூர் முதுநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி பிரியாவுக்கு, பொறியியல் படிப்புக்காக, 4 ஆண்டுகளுக்கான கல்விச் செலவுத் தொகையை கடலூர் ரோட்டரி சங்கம் ஏற்றுக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது. குறிஞ்சிப்பாடியை அடுத்த கன்னித் தமிழ்நாடு அரசு உயர்நிலைப் பள்ளி, தொடர்ந்து 3 ஆண்டுகளாக பொதுத் தேர்வில் 100 சதவீதம் மாணவர்களை வெற்றி பெறச் செய்தமைக்காக, பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் 6 ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசும், பாராட்டுப் பத்திரமும் வழங்கப்பட்டது.

               பள்ளியின் முதல் மாணவர் ஜான்சனுக்கு, 2 ஆண்டுகளுக்கான சீருடைகள் வழங்கப்பட்டன. இவற்றை புதிய தலைவர் சனார்த்தனம் வழங்கினார். இந்த ஆண்டுக்கான ரோட்டரியின் புதிய திட்டங்களை சனார்த்தனம் அறிவித்தார். ஓராண்டில் (2011-12) கடலூர் மற்றும் சுற்று வட்டாரங்களில், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்றும், தேர்வு செய்யப்படும் ஒரு பள்ளிக்கு, ரூ. 2 லட்சம் மதிப்பில், குடிநீர் வசதி செய்து கொடுக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். முன்னாள் தலைவர் டி.ஜெயக்குமார் தலைமை வகித்தார். முன்னாள்  செயலர் சண்முகம் அறிக்கை சமர்ப்பித்தார்.

                முன்னாள் கவர்னர் எல்.ஜெயச்சந்திரன், துணை கவர்னர் எஸ்.நடராஜன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் சிறப்புரை நிகழ்த்தினார்.  குணசேகரன் நன்றி கூறினார்.






Read more »

நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் மருத்துவ சேவை: மக்களிடையே பெரும் வரவேற்பு

நெய்வேலி : 

            நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் என்.எல்.சி., பொது மருத்துவமனை சார்பில் வழங்கப்பட்டு வரும் மருத்துவ சேவைகள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நெய்வேலி புத்தகக் கண்காட்சிக்கு வரும் பொதுமக்கள் அனைவருக்கும், குறிப்பாக 40 வயதை கடந் தவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி என்.எல்.சி., பொது மருத்துவமனை சார்பில் உயர்ரக மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

                    ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, எய்ட்ஸ் போன்ற அனைத்து விதமான நோய்கள் குறித்தும் நவீன மருத்துவ கருவிகள் மூலம் கண்டறியும் பரிசோதனை செய்யப்பட்டு உடனுக்குடன் பரிசோதனை முடிவுகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. என்.எல்.சி., பொது மருத்துவமனை முதன்மை மருத்துவ அதிகாரி சண்முகசுந்தரம், உள்துறை மருத்துவ நிபுணர் வெங்கட்ராமன், குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் ஜனார்த்தனம், பொது மருத்துவ நிபுணர் சுப்ரமணியம், ரத்த பரிசோதனை துறை நிபுணர் பிரகாஷ் என அனைத்து சிறப்பு பிரிவு களின் டாக்டர்களும் மாலை 6 மணி முதல் அரங்க வளாகத்திற்குள்ளேயே முகாமிட்டு நோய் வராமல் தடுக்கவும், பாதிக்கப்பட்டிருந்தால் சிகிச்சைக்கான வழிமுறைகளையும் வழங்கி வருகின்றனர். 

         புத்தகக் கண்காட்சியில் என்.எல்.சி.,யின் இந்த மருத்துவ சேவை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.






Read more »

நெய்வேலி புத்தகக் கண்காட்சி அகில இந்திய அளவில் முதன்மையானதாக வரும்: கலெக்டர் அமுதவல்லி நம்பிக்கை

  நெய்வேலி

              நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் சார்பில் 11-வது வட்டம் புத்தகக் கண்காட்சி வளாகத்தில் 14-வது புத்தகக் கண்காட்சி நடந்தது. விழாவில் கடலூர் மாவட்ட கலெக்டர் அமுதவல்லி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார்.   
 
 அப்போது கடலூர் மாவட்ட கலெக்டர் பேசியது:-

            நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் நடத்தும் இந்த புத்தகக் கண்காட்சி தமிழக அளவில் முதன்மையாக திகழ்ந்து வருகிறது. அடுத்த முறை இந்த புத்தகக் கண்காட்சி இந்தியாவில் நடத்தப்படும் புத்தகக் கண்காட்சியில் முதன்மையான புத்தகக் கண்காட்சியாக மாறும்.  புத்தகம் படிக்கும் பழக்கத்தை இளமைப்பருவம் முதலே தொடங்க பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும். கிராமப்புற ஏழை- எளியவர்களும் குறைந்த விலையில் தரமான புத்தகங்கள் கிடைக்க வழிவகை அமைத்துக் கொடுத்துள்ள என்.எல்.சி. நிறுவனத்தை மனதார பாராட்டுகிறேன்.  இவ்வாறு அவர் பேசினார்.

                     நிகழ்ச்சியில் மாற்று முறை மருத்துவங்கள் என்ற நூலின் ஆசிரியர் டாக்டர் ரேவதிக்கு கலெக்டர் கேடயம் மற்றும் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். நிதித்துறை இயக்குனர் சேகர் தலைமை தாங்கினார். டாக்டர் ரேவதியின் மாற்று முறை மருத்துவ நூலை மாவட்ட கலெக்டர் வெளியிட தலைமை விருந்தினர் சேகர் பெற்றுக் கொண்டார். கங்காராணி பதிப்பகத்தாரை கவுரவித்து பேசினார். தொடக்கத்தில் ஜெயச்சந்திரன் வரவேற்றார். உஷா நன்றி கூறினார். 
 
 
 

Read more »

விருத்தாசலம் அருகே என்ஜின் கோளாறால் பாண்டியன் எக்ஸ்பிரஸ் நடு வழியில் நின்றது

விருத்தாசலம்:
 
             மதுரையில் இருந்து சென்னைக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகளுடன் நேற்று இரவு புறப்பட்டு வந்தது. அதிகாலை 2 மணியளவில் ரெயில் விருத்தாசலம் அருகே ஈச்சங்காடு என்ற இடத்தில் வந்தபோது ரெயில் என்ஜினில் பழுது ஏற்பட்டு நின்று போனது.  

               இது குறித்து ரெயில் என்ஜின் டிரைவர் திருச்சி ரெயில்வே கோட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து ரெயில்வே அதிகாரிகள் விருத்தாசலத்தில் இருந்து மாற்று என்ஜினை வரவழைத்து அதன் மூலம் ரெயிலை இயக்கினர்.  ஒரு மணி நேர தாமதத்துக்கு பிறகு 3 மணிக்கு ரெயில் அங்கிருந்து சென்னை புறப்பட்டு சென்றது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் புறப்பட்டு வந்த கன்னியாகுமரி, பொதிகை, ராமேஸ்வரம், நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் உள்பட அனைத்து ரெயில்களும் அந்தந்த ரெயில் நிலையங்களில் 1 மணி நேரம் நிறுத்தப்பட்டது.  

               இதேபோல் சென்னையில் இருந்து சேலத்துக்கு நேற்று இரவு பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு வந்தது. இரவு 11.45 மணியளவில் மதுராந்தகத்துக்கும், திண்டிவனத்துக்கும் இடையே தொழுப்பேடு என்ற இடத்தில் வந்தபோது என்ஜின் கோளாறால் ரெயில் நின்று போனது. உடனடியாக இது குறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ரெயில்வே டெக்னீசியன்கள் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து என்ஜின் கோளாறை சரிசெய்தனர். சுமார் 2 மணி நேர தாமதத்துக்கு பிறகு ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. 
 
 
 
 
 

Read more »

திட்டக்குடி அருகே ஓடும் 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்

திட்டக்குடி:
 
           திட்டக்குடி அருகே பள்ளகாளிங்கராய நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பன், விவசாயி. இவரது மனைவி கலைவாணி (வயது 27) நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்தார்.

               இந்த நிலையில் சனிக்கிழமை   இரவு 7.15 மணியளவில் கலைவாணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.   ஆம்புலன்ஸ் வந்ததும் கலைவாணியை திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். சிறிது நேரத்தில் கலைவாணிக்கு பிரசவ வலி அதிகமானது.

          இதைத்தொடர்ந்து ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டது. ஆம்புலன்ஸ் டிரைவர் மணிகண்டன், உதவியாளர் வெங்கடேசன் ஆகியோர் அருகில் இருந்த பெண்களை அழைத்து பிரசவம் பார்க்க உதவினர். அப்போது கலைவாணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாயும்-சேயும் திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு இருவரும் நலமாக உள்ளனர். 
 
 
 
 

Read more »

திட்டக்குடி வெலிங்டன் ஏரி ரூ.20 கோடி செலவில் சீரமைப்பு: கலெக்டர் அமுதவல்லி பார்வையிட்டார்

 http://mmimages.mmnews.in/Articles/2011/Jul/63bf98bc-5f55-4219-96e1-f94d86855fa6_S_secvpf.gif

திட்டக்குடி:

              திட்டக்குடியை அடுத்துள்ள வெலிங்டன் ஏரியில் ரூ.20 கோடி செலவில் கரைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. இந்த ஏரி மூலம் 67 கிராமங்களை சேர்ந்த 24 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. திட்டக்குடி வந்திருந்த கடலூர் மாவட்ட கலெக்டர் அமுதவல்லி இந்த ஏரியை நேரில் பார்வையிட்டார்.

                மேலும் வாய்க்கால்களின் தற்போதிய நிலை, நீர் பிடிப்பு சீரமைக்கப்பட்டுள்ள கரை பகுதி குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து ஆனந்தகுடி, தேவங்குடி, டீ.வி. புத்தூர் வெள்ளாற்றங்கரையில் ரூ.15 கோடி செலவில் நடைபெற்று வரும் வெள்ள தடுப்பு பணிகள், இப்பகுதியில் இயங்கும் மணல் குவாரி ஆகியவற்றையும் கலெக்டர் பார்வையிட்டார் பொதுப்பணிதுறை செயற் பொறியாளர் பழனிகுமார், உதவி செயற் பொறியாளர் பொதுப்பணித்திலகம், உதவி பொறியாளர் பாலமுருகன் ஆகியோர் மாவட்ட கலெக்டரிடம் வெல்லிங்டன் ஏரி குறித்தும், வெள்ள தடுப்பு பணிகள் குறித்தும் விளக்கமளித்தனர்.

                   அரசு நீரினை பயன் படுத்துவோர் சங்கத்தலைவர் மருதாசலம் மற்றும் விவசாயிகள் மாவட்ட கலெக்டரிடம் விவசாயிகள் நலன் கருதி திட்டக்குடி பகுதி பகுதியில் இயங்கும் நெல் கொள் முதல் நிலையங்கள் தொடர்ந்து மேலும் 1 மாதத்திற்கு இயக்க வேண்டும் நெல் கொள்முதலில் வியாபரிகளின் தலையீட்டை தவிர்க்க வேண்டும் என முறையிட்டனர்.
மாவட்ட கலெக்டர் அமுதவல்லி விவசாயிகளிடம் பேசும் போது, 

               நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நலன் கருதிதான் அரசு நிதி ஒதுக்கி உள்ளது. இதில் வியாபாரிகளின் தலையீட்டை அனுமதிக்க முடியாது. தற்போது நெல் பயிரிடப்படும் பாசன பகுதி நெல் அறுவடை செய்யும் விவசாயிகளின் நலன் பாதிக்கபட்டுள்ளதா? ஆகியவை குறித்து ஆய்வு செய்து, அவசியம் ஏற்பட்டால் நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து இயங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்






Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior