உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 22, 2010

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு பாடல் செல்போனில் ஒலிக்கும்

                    பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது (செல் ஒன்) சந்தாதாரர்களுக்கு, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு பாடலை இலவச, விருப்ப கீதமாக (ஃபேவரைட் ட்யூன்) வழங்கும் சேவையை திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது.

                 ஆஸ்கர் விருது பெற்ற இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானின் இசையில், தமிழக முதல்வர் கருணாநிதி இயற்றிய பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்...செம்மொழியாம் தமிழ் மொழி... என்ற பாடலை டி.எம்.சௌந்தரராஜன், பி. சுசீலா உள்ளிட்ட 30 பாடகர்கள் பாடியுள்ளனர். இதுவே கோவையில் 23-ம் தேதி தொடங்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு பாடலாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது, இந்தப் பாடலை செல் ஓன் சந்தாதாரர்கள், கட்டணமின்றி, தங்களது செல் போன்களில் இலவசமாக பதிவிறக்கம் (டவுன் லோடு) செய்து கொள்ளும் சிறப்புச் சலுகையை பி.எஸ்.என்.எல். அறிமுகம் செய்துள்ளது. இதற்கு, 53733 என்ற எண்ணுக்கு தமிழ் என்று ஆங்கிலத்தில் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) அனுப்பினால் போதும் என்று பிஎஸ்என்எஸ் தெரிவித்துள்ளது.

Read more »

கவனிப்பாரற்று கிடக்கும் வள்ளலார் வீடு


இராமலிங்க அடிகளார் வாழ்ந்த வீட்டின் முன்புறத் தோற்றம். தற்போது பூட்டப்பட்ட நிலையில் உள்ள இராமலிங்க அடிகளார் வாழ்ந்த அறை.
              எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்று விரும்பிய இராமலிங்க அடிகள் சென்னையில் வாழ்ந்த வீடு கவனிப்பாரற்று அழிந்து வருகிறது. அதை அருங்காட்சியகமாக மாற்ற வேண்டும் என்று அவரது தொண்டர்கள் விரும்புகின்றனர்.
 
             சென்னை ஏழுகிணறு பகுதியில் எண். 31, வீராசாமி தெருவில் 1825 ஆம் ஆண்டு முதல் 1858 வரை 33 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார் இராமலிங்க அடிகளார். "திருவருட்பிரகாச வள்ளலார்' என அவரை மக்கள் அன்புடன் அழைத்தனர். அவரது பெயராலேயே தற்போது இந்தப் பகுதி "வள்ளலார் நகர்' என்று அழைக்கப்படுகிறது. இராமலிங்கர் இங்கு வாழ்ந்தபோதுதான் அவருக்கு ஞானம் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. அவர் இயற்றிய திருவருட்பாவின் 5 திருமுறைகளை இங்கிருந்துதான் இயற்றியதாகக் கூறப்படுகிறது. அதன் பின்புதான் அவர் வடலூர் சென்று "சமரச சுத்த சன்மார்க்க சங்க'த்தை நிறுவி ஆன்மிகத் தொண்டாற்றி முக்தியடைந்தார் என்பது வரலாறு.÷சிற்ப வேலைப்பாடு நிறைந்த ஒற்றை மரக்கதவு, முற்றம், தூண்கள் நிறைந்த இராமலிங்கர் வாழ்ந்த வீடு பழமை மாறாமல் இப்போதும் உள்ளது. ஆனால், அந்த வீடு பராமரிப்பில்லாமல் அழிந்துவருவது வருத்தம் அளிக்கிறது. அந்த வீட்டின் உரிமையாளர் அதை பலருக்கு வாடகைக்கு விட்டிருக்கிறார். ஆனால், இராமலிங்கர் இருந்த அறை மட்டும் பூட்டப்பட்டுக் கிடக்கிறது.
 
                 உரிமையாளர் வெளியூரில் இருப்பதால் எப்போதாவது வந்து அந்த அறையைச் சுத்தம் செய்து, விளக்கேற்றிவிட்டுச் செல்வாராம். அப்பகுதியில் உள்ள இராமலிங்க அடிகளாரின் தொண்டர்கள் "திருவருட்பிரகாச வள்ளலார் நற்பணி சங்கம்' நிறுவி ஆண்டுதோறும் தைபூச ஜோதி தரிசன விழா போன்ற விழாக்களையும், அவர் பெயரால் அன்னதானமும் செய்து வருகின்றனர். இராமலிங்கர் போதித்த சுத்த சன்மார்க்க நெறிகளைப் பின்பற்றி வரும் பலர் பல வெளிநாடுகளிலிருந்தும் இங்கு வந்து அந்த வீடு பூட்டப்பட்டு இருப்பதைப் பார்த்து வருத்தத்துடன் திரும்பிச் செல்கின்றனர். எனவே அந்த இல்லத்தை அரசுடைமையாக்கி அதை அருங்காட்சியகமாக மாற்ற வேண்டும் என்று விரும்பி அவரது தொண்டர்கள் எடுத்த முயற்சியின் பலனாக கடந்த ஆட்சியில் அந்த வீட்டை அரசுடைமையாக்க சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஆனால், எந்த காரணத்துக்காகவோ அது நிறைவேறவில்லை. இது அவரது தொண்டர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
                        தமிழுக்கு தொண்டாற்றிய கால்டுவெல் போன்ற அறிஞர்கள் வாழ்ந்த வீட்டை நினைவிடமாக்கியதைப் போல், திருவருட்பா மூலம் தமிழுக்கு அருந்தொண்டாற்றிய இராமலிங்கர் வாழ்ந்த வீட்டையும் அருங்காட்சியகமாக மாற்ற வேண்டும் என்று அவரது தொண்டர்கள் விரும்புகின்றனர். பழம் பெருமை வாய்ந்த தமிழின் வளர்ச்சிக்காக உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தும் இத்தருணத்தில், அரசு தங்கள் கோரிக்கையையும் நிறைவேற்ற வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகின்றனர். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய இராமலிங்கர் வாழ்ந்த வீட்டை அருங்காட்சியகமாக மாற்றி அவரது வழியைப் பின்பற்றுபவர்களின் வாட்டத்தைப் போக்குமா அரசு?
 
 

Read more »

நடைபாதை ஆக்கிரமிப்பாளர்களுக்காக: ரூ. 20 லட்சத்தில் அழகுபடுத்தி டைல்ஸ் (தரை ஓடு) பதிக்கும் பணி



கடலூரில் நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு எதிரில் கடற்கரைச் சாலையில், மக்கள் பயன்படுத்தும் நடைபாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகள்.
கடலூர்:
 
               நடைபாதையை ஆக்கிரமித்திருக்கும் கடைக்காரர்கள் மற்றும் லாரி ஓட்டுநர்களுக்கு வசதியாக, ரூ. 20 லட்சத்தில் அழகுபடுத்தி டைல்ஸ் (தரை ஓடு) பதிக்கும் பணியை கடலூர் நகராட்சி மேற்கொண்டு வருகிறது. கடலூர் உட்லண்ட்ஸ் பகுதியில் இருந்து சில்வர் பீச் வரை சுமார் 5 கி.மீ. தூரம், சுனாமி நிவாரண நிதியில் இருந்து, சாலையின் இருபுறமும் ரூ. 5 கோடி செலவில் வடிகால் வாய்க்கால் கட்டப்பட்டு உள்ளது. வாய்க்கால் மீது காங்கிரீட் தளம் அமைத்து மூடப்பட்டு, நடைபாதையாகப் மாற்றப்பட்டு உள்ளது. இப்பணி முடிந்து ஓராண்டு ஆகிவிட்டது. மாநில நெடுஞ்சாலைப் பட்டியலில் இச்சாலை உள்ளது.
 
                நடைபாதை அமைக்கும் பணிக்காக, ஒரு சில நாள்கள் காலி செய்து கொடுத்த வியாபாரிகள், பணி முடிந்ததும் நடைபாதை மீது, மீண்டும் கடைகளை அமைத்துக் கொண்டனர். தற்போது இந்த நடைபாதையை அழகுபடுத்தும் முயற்சியாக, கடலூர் நகராட்சி ரூ. 20 லட்சத்தில் டைல்ஸ் பதிக்கும் பணியைக் ஒரு வாரமாக மேற்கொண்டு வருகிறது. பிற்பட்ட பகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இப்பணி நடப்பதாக நகராட்சி அலுவலர் ஒருவர் தெரிவித்தார். இப்பணியும் மிகவும் தரமற்றதாக செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள். காங்கிரீட் தளத்தின் மீது 2 அங்குல உயரத்துக்கு ஆற்று மணல் கொட்டி, அதில் சிமென்டைக் கரைத்து லேசாகத் தெளித்துவிட்டு, அதன்மீது டைல்ஸ்கள் வைத்து வருகிறார்கள்.÷டைல்ஸ் பதிக்கப்பட்ட நடைபாதையில் மீண்டும் கடைகள் முளைத்து விட்டன. மேலும் நகராட்சி மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள நடைபாதையில், சில தினங்களாக லாரிகளையும் நிறுத்தத் தொடங்கி இருக்கிறார்கள். இதனால் டைல்ஸ்கள் நொறுங்கத் தொடங்கி விட்டன. ஏற்கெனவே கடலூர் நகர ஆட்டோக்கள், நடைபாதைகளைத்தான் ஆட்டோ ஸ்டாண்டாக பயன்படுத்தி வருகின்றன.
 
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 
 
                  இது நகராட்சிக்கு வேண்டாத வேலை. அங்கு டைல்ஸ் பதிக்க வேண்டிய அவசியமே இல்லை. ரூ. 15 கோடிக்கு மேல் தமிழக அரசு மானியமாக வழங்கினால்தான்  சாலைகளை செப்பனிட முடியும் என்ற நிலையில் இருக்கும் கடலூர் நகராட்சி, இந்த ரூ. 20 லட்சத்தைக் கொண்டு இரு சாலைகளைச் செப்பனிட முடியும் என்று  மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தார். கடற்கரைச் சாலையில் நடைபாதை முழுவதையும் ஆக்கிரமித்து வணிகர்கள் கடைகளை அமைத்து இருப்பதாலும் உட்லண்ட்ஸ் திருப்பத்தில் ஆட்டோக்களை இடையூராக நிறுத்துவதாலும், பள்ளி மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும்  இச்சாலையில், தொடர்ந்து போக்குரத்து நெரிசலும், விபத்துக்களும் தொடர் கதையாகி வருகிறது.  இந்நிலையில் கடலூரில் மாதம் ஒருமுறை  "நடைபாதை நடப்பதற்கே' என்ற போராட்டமும், வாரம் ஒருமுறை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரும் போராட்டமும் நடத்தப்போவதாக கடலூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புப் பேரவை எச்சரித்துள்ளது.
 
                     பேரவையின் நிர்வாகப் பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன் இது தொடர்பாக தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், நகராட்சிகளின் நிர்வாக ஆணையர், மாவட்ட ஆட்சியர் பெ. சீதாராமன் மற்றும் கடலூர் நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு வியாழக்கிழமை  கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
 
 

Read more »

கடலூர் மாவட்ட காவலர்கள் கோவை பயணம்

விருத்தாசலம்:

               கோவையில் நடைபெறும் செம்மொழி மாநாட்டுக்கு கடலூர் மாவட்ட  போலீசார்  பாதுகாப்புப் பணிக்காக ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டனர். கோவையில் ஜூன் 23 முதல் 27-ம் தேதி வரை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுகிறது.​ மாநாட்டு பாதுகாப்புக்காக தமிழகத்தின் பலவேறு பகுதிகளில் இருந்தும் 10,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.​ இதன்படி கடலூர் மாவட்ட  போலீசார் விருத்தாசலத்தில் இருந்து மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் தலைமையில் 14 ஆய்வாளர்கள்,​​ 50 உதவி ஆய்வாளர்கள்,​​ பெண் காவலர்கள்,​​ தலைமைக் காவலர்கள் மற்றும் பயிற்சி காவலர்கள் உள்பட 520 போலீஸôர் மாநாட்டு பாதுகாப்புப் பணிக்காக அனுப்பட்டனர். முன்னதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஷ் பாதுகாப்பு குறித்த அறிவுரைகளை காவலர்களுக்கு வழங்கினார்.


Read more »

கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு இன்று நிறைவு

கடலூர்:

                  கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று ​(செவ்வாய்க்கிழமை)​ நிறைவு அடைகிறது. கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் இளங்கலை வகுப்புகளில் பயில்வதற்கான மொத்த இடங்களில் 30 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்படுகிறது.​ முதலாம் ஆண்டு வகுப்புகளுக்கு மொத்த இடங்கள் 850.​ இவற்றில் சேர 4500 மாணவ மாணவியர் விண்ணப்பித்து இருந்தனர்.ஏற்கெனவே 17,​ 18 தேதிகளில் கலந்தாய்வு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.​ திங்கள்கிழமை அறிவியல் பாடப் பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடந்தது. இன்று  (செவ்வாய்க்கிழமை)​ கலைப் பாடப் பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடக்கிறது.​ பின்னர் காலியிடங்கள் ஏற்பட்டால் கலந்தாய்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.


Read more »

வனத்துறையிடம் மதிப்பீடு கோரப்படும் பழமை வாய்ந்த கட்டடம்

கடலூர்:

                  முதல் முறை டெண்டர் விடப்பட்டு அது ரத்தான பிறகு,​​ தொன்மை வாய்ந்த கட்டடத்துக்கு வனத்துறையிடம் இருந்து மதிப்பீடு கோரப்பட்டு உள்ளது. 

                கடலூர் நெல்லிக்குப்பம்,  சாலையில் பழமைவாய்ந்த ஊராட்சி ஒன்றியக் கட்டடம்.​ ஆங்கிலேயர்களின் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக கம்பீரமாக விளங்கும் இக் கட்டடம்,​​ ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில்,​​ கிழக்கு இந்தியக் கம்பெனியின் நிர்வாக அலுவலகமாக விளங்கியது. சுதந்திரத்துக்குப் பின் இக்கட்டடத்தில் பலவேறு அலுவலகங்கள் இயங்கி இருக்கின்றன.​ கடந்த 30 ஆண்டுகளாக கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகமாக இருந்து வந்தது.​ முறையான பராமரிப்பு இல்லாததால்,​​ இக்கட்டடத்தின் ஒருபகுதி 12-16-2009 அன்று இடிந்து விழுந்தது. 

                அதன் கட்டடக்கலை அம்சத்துக்காக,​​ தொன்மை வாய்ந்த இக்கட்டடத்தை பழுது பார்த்து,​​ பயன்படுத்தலாம் என்பது பெரும்பான்மையோரின் கருத்தாக உள்ளது.​ எனினும் இக்ககட்டடத்தை இடித்துவிட வேண்டும் என்பதில் ஊராட்சி ஒன்றியம் உறுதியாக உள்ளது.​ கட்டடத்தில் விலை உயர்ந்த பர்மா தேக்கு மரஉத்திரங்கள்,​​ தூண்கள்,​​ சட்டங்கள்,​​ ஜன்னல்கள்,​​ இரும்புப் பொருள்கள்,​​ செங்கற்கள் உள்ளன.மேலும் இக்கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு அதில் ரூ.​ 1.5 கோடியில் புதிய கட்டடம் கட்டவும் ஊராட்சி ஒன்றியம் திட்டமிட்டு உள்ளது.​ எனவே இக்கட்டடத்தை இடித்து அதில் உள்ள பொருள்களை எடுத்துக் கொள்ள,​​ கடந்த 7-ம் தேதி டெண்டர் விடப்பட்டது.குறைந்தபட்சத் தொகையாக ரூ.14,21,183 அறிவிக்கப்பட்டு இருந்தது.​ 

                விழுப்புரத்தைச் சேர்ந்த மாப்பிளை மைதீன்,​​ ரூ.​ 14.5 லட்சத்துக்கு ஏலம் எடுத்ததாகவும் அவர் உரிய நேரத்தில் பணம் செலுத்தத் தவறியதால்,​​ டெண்டர் ரத்து செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப் பட்டது.இந்நிலையில் இக்கட்டடத்தில் உள்ள தேக்கு மர உத்திரங்கள் உள்ளிட்ட பொருள்களின் தற்போதைய மதிப்பு என்ன என்று கண்டறிய வனத்துறைக்கு கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பரிந்துரை செய்து உள்ளார். மறு மதிப்பீடு வந்த பிறகு மீண்டும் டெண்டர் விடப்படும் என்று தெரிகிறது.​ இதற்கிடையே இக்கட்டடத்தை இடிக்காமல் அதன் தொன்மையைப் பாதுகாக்க வேண்டும் என்று,​​ சமூக அக்கறை கொண்ட நடுநிலையாளர்கள் பலர் கருத்து தெரிவிக்கிறார்கள்.

இது குறித்து கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலர் மு.மருதவாணன்,​​ தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச்செயலர் எம்.நிஜாமுதீன் ஆகியோர் கூறியது:

                 கடலூர் மாவட்டத்தில் பல பழமை வாய்ந்த கட்டடங்கள்,​​ அவற்றின் தொன்மைக் கட்டடக் கலையைக் கருத்தில் கொண்டு,​​ பெரும் பொருள் செலவில் பழுதுபார்த்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.அதைப் போல இக்கட்டடத்தையும் பழுதுபார்த்து,​​ வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் அருங்காட்சியகத்தை இங்கு அமைக்கலாம்.ஊராட்சி ஒன்றிய அலவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட,​​ இதே வளாகத்தில் போதிய இடம் உள்ளது.​ மேலும் 100 ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த எந்த ஒரு கட்டடத்தையும் இடிப்பதற்குத் தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் அனுமதி பெறப்பட வேண்டும். அவ்வாறு இக்கட்ட ​டத்தை இடிக்க,​​ அனுமதி பெறப்பட்டதா என்று தெரியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.


Read more »

என்எல்சி பெண் ஊழியர்களுக்கு மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை

நெய்வேலி:

               என்எல்சி நிறுவனத்தில் பணிபுரியும் 1500 பெண் ஊழியர்களுக்கு கருப்பை மற்றும் மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைத் திட்டத்தை என்எல்சி தலைவர் ஏ.ஆர்.அன்சாரி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார் .புற்றுநோய் மூலம் உலகில் ஆண்டுக்கு 3 லட்சம் பேர் இறப்பதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.​ 

                   இந்த ஆண்டு மட்டும் 79 ஆயிரம் பேருக்கு புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள் வரிசையில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது.​ இது தவிர்த்து ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும் ஓர் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்நிலையில் நெய்வேலி வாழ் மகளிர் புற்றுநோயால் பாதிக்கப்படுவதை தடுக்கும் பொருட்டு என்எல்சி பொது மருத்துவமனை பல ஆண்டுகளாக பல்வேறு தொடர் சிசிச்சை மற்றும் சோதனைகளை செய்து வருகிறது.

                 இந்நிலையில் என்எல்சி பெண் ஊழியர்களுக்கு மிகவும் நவீன முறையில் சிறப்பு மருத்துவக் கருவிகளைப் பயன்படுத்தி,​​ புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளும் திட்டத்தை தொடங்கிவைத்த என்எல்சி தலைவர் ஏ.ஆர்.அன்சாரி,​​ இப்பரிசோதனை என்எல்சி பெண் ஊழியர்களுக்கு மட்டுமில்லாது,​​ நிறுவன ஊழியர்களின் துணைவியர்கள் மற்றும் அவர்களை சார்ந்திருப்பவர்களுக்கும் மேற்கொள்ளப்படும் என்றார்.இப்பரிசோதனையில் என்எல்சி பொதுமருத்துவமனையுடன் இணைந்து சென்னையைச் சேர்ந்த பிரபல காமாட்சி மருத்துவமனை நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.​ இப்பரிசோதனை ஒரு நாளைக்கு 50 பெண்கள் வீதம் தொடர்ந்து 6 வாரங்களுக்கு நடத்தப்படவிருப்பதாக என்எல்சி மருத்துவமனையில் தலைமை மருத்துவர் பி.டி.சண்முகசுந்தரம் தெரிவித்தார்.​ 

                     தொடர்ந்து கருப்பை மற்றும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த கையேட்டினை என்எல்சி தலைவர் ஏ.ஆர்.அன்சாரி வெளியிட,​​ சென்னை காமாட்சி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் கோவிந்தராஜன் பெற்றுக் கொண்டார்.இந் நிகழ்ச்சியில்,​​ நிறுவன இயக்குநர்கள் பி.பாபுராவ்,​​ ஆர்.கந்தசாமி,​​ சேகர் மற்றும் காமாட்சி மருத்துவமனையின் மருத்துவர்கள் ராஜ்குமார் மற்றும் ஜோதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Read more »

கடலூரில் 25-ல் மின் நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம்

கடலூர்:

                   கடலூர் மாவட்ட மின் நுகர்வோர் தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம் என்று,​​ கடலூர் மின் வாரிய மேற்பார்வைப் பொறியாளர் ரவிராம் அறிவித்து உள்ளார்.

அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:​ 

                ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டுக்கான,​​ விழுப்புரம் மண்டல ​(கடலூர்,​​ விழுப்புரம்,​​ திருவண்ணாமலை மாவட்டங்கள்)​ நுகர்வோர் பாதுகாப்புக் குழுக் கூட்டம்,​​ மண்டலத் தலைமைப் பொறியாளர் தலைமையில்,​​ கடலூர் மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகத்தில் ​(கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்ச சலை அருகே துணை மின் நிலைய வளாகம்)​ 25-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற இருக்கிறது.கடலூர் மாவட்ட மின் நுகர்வோர் மின் துறை தொடர்பான குறைகள் இருப்பின் மனுக்களை,​​ கடலூர் மின் வாரிய மேற்பார்வைப் பொறியாளருக்கு அனுப்பி வைக்கலாம்.​ 25-ம் தேதி நடைபெறும் நுகர்வோர் குறைகேட்கும் கூட்டத்தில் கலந்து கொண்டும் தெரிவிக்கலாம் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.


Read more »

Regularise services of contract workers: Gurudas Dasgupta

CUDDALORE:

         General Secretary of the All India Trade Union Congress Gurudas Dasgupta, MP, has urged the Neyveli Lignite Corporation to regularise the services of contract workmen in a phased manner.

           Speaking at a public meeting at Neyveli near here on Sunday, the MP announced a series of agitational programmes during July and August to achieve the goal, which included token strike for a couple of days before going on an indefinite strike. The MP said that he was ready to participate in the strike and court arrest. The NLC could net a profit of over Rs 1,200 crore in the last fiscal because of the dedicated services of the employees.

Delaying tactics

             Therefore, to render social justice the management should regularise the services of the contract workmen without any hassles. The MP charged the NLC management with adopting delaying tactics in absorbing a section of contract workmen into the INDCOSERVE as a prelude to regularisation. Had the management taken any steps to vacate the stay in the court in this regard it would have found solution to the issue. Whenever there was a pay revision for regular employees the contract workmen should also be given reasonable wages. The MP pointed out that even though the NLC management had agreed to provide medical care to the contract workmen on par with regular employees it was yet to be fulfilled.

               He called for the Centre's intervention to run the NLC-promoted Rajasthan power plant efficiently and to expedite the work on the Tuticorin thermal plant to ease power situation. Meanwhile, a section of workmen broke open the lock of the AITUC office on the NLC premises that was kept closed by a court order following a dispute between two factions of the trade union over the right to the property. The NLC sources said that since court direction was violated in this regard it would take up the issue at the appropriate forum.


Read more »

உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில் இணை இயக்குனர் திடீர் ஆய்வு


பண்ருட்டி : 

                பண்ருட்டி உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில் பாட புத்தகங்கள் குப்பை போல் கிடந்தது தொடர்பாக இணை இயக்குனர் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.பண்ருட்டி உதவி தொடக் கக் கல்வி அலுவலக வளாகத்தில் முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான அரசு இலவச பாட புத்தகங்கள் அதிகாரிகள் அலட்சியம் காரணமாக மூட்டைகளாக கட்டி குப்பைகள் போல் கிடந் தது. தகவல் அறிந்த தொடக்ககல்வி இணை இயக்குனர் (நிர்வாகம்) பழனிசாமி, கடலூர் டி.இ.ஓ.,விஜயா, விழுப்புரம் டி.இ.ஓ., தனசேகரன் ஆகியோர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 

இணை இயக்குனர் பழனிசாமி ஆய்வுக்கு பின் கூறுகையில், 

               "ஒவ்வொரு ஆண்டும் துவக்கப் பள்ளிகளுக்குத் தேவையான புத்தகங்கள் வட்டார கிடங்கு வாயிலாக அஞ்சல் துறை மூலம் வழங்கப்படுகிறது. இதில் அதிகமாக வந்துள்ள புத்தகங்களை அப்பள்ளியில் இருந்து வட்டார அளவில் பெறப்பட்டு புத்தகங்கள் இல்லாத பள்ளிகளுக்கு அனுப்ப உத்தரவிடப் பட்டது. அதன்படி பள்ளிகளில் இருந்து பெறப்பட்ட புத்தகங்கள் பாதுகாப்பாக விநியோகம் செய்யாமல் இருந்தால் சம்பந்தபட்டவர்கள் மீது கல்வித்துறை நடவடிக்கை எடுக்கும். மேலும் நர்சரி பள்ளிகளுக்கு நிர்வாகிகள் கோரும் சமச்சீர் புத்தகங்கள் வழங்க உத்தரவிட்டுள்ளேன். கிடைக்கப் பெறாத பள்ளி நிர்வாகிகள் டி.இ.ஓ.,வை தொடர்பு கொண்டால் உடன் நடவடிக்கை எடுக்கப்படும். பெற்றோர்கள் குறைகளை களைய ஒவ்வொரு உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்திலும் கல்வித் துறை உயரதிகாரிகள் தொலைபேசி எண்கள் எழுதி வைக்கப்படும். அண்ணாகிராம ஒன்றிய அக்கடவல்லி துவக்கப் பள்ளியை அரசு பள்ளியாக மாற்ற தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

 

Read more »

என்.எல்.சி.,யில் காலவரையற்ற ஸ்டிரைக் குருதாஸ்குப்தா எம்.பி., எச்சரிக்கை


நெய்வேலி : 

            என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக நிரந்தர தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என எம்.பி., குருதாஸ் குப்தா கேட்டுக்கொண்டார். என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய உயர்வு, பணி நிரந்தரப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி நெய்வேலி டவுன்ஷிப் காமராஜர் சிலை அருகே நேற்று முன்தினம் பொதுக் கூட்டம் நடந்தது. என்.எல்.சி., ஏ.ஐ.டி.யு.சி., பொதுச் செயலர் குப்புசாமி தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி. யு.சி., ஒப்பந்த தொழிலாளர் சங்க தலைமை நிர்வாகிகள் உக்கிரவேல் மற்றும் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலர் தியாகராஜன், மாவட்ட செயலர் சேகர், மூர்த்தி, என்.எல்.சி., ஏ.ஐ.டி. யு.சி., தலைவர் தண்டபாணி, பொன்னுசாமி பங்கேற்றனர். 

ஏ.ஐ.டி.யு.சி., அகில இந்திய பொதுச் செயலரும், எம்.பி.,யு மான குருதாஸ்குப்தா பேசியதாவது :

                    என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்களுக்கு டில்லியில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணி நிரந்தரப்படுத்துதல் மற்றும் புதிய ஊதிய உயர்வு குறித்து உடனடியாக என்.எல்.சி., நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து சேர்மன் அன்சாரியிடம் பேசினேன். அதன் விளைவாக 750 ரூபாய் ஊதிய உயர்வும், நிரந்தர தொழிலாளர்களுக்கு இணையாக மருத்துவ சிகிச்சை அளிக்கவும் நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது. மேலும் 5000 ஒப்பந்த தொழிலாளர்களை இன்கோசர்வ் சொசைட்டியில் சேர்ப்பது குறித்த முடிவை சுப்ரீம் கோர்ட் டில் நடந்து வரும் வழக்கு முடிவின் அடிப்படையில் மேற்கொள்வதாக தெரிவித்தார். தற்போது நிரந்தர தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதே கால கட்டத்தில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் புதிய ஊதிய உயர்வு வழங்க நிர்வாகம் முன் வரவேண்டும். இந்த கோரிக்கைகளை முன்வைத்து வரும் 7ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபடுவர். 

                       அப்போதும் நிர்வாகம் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரா விட்டால் அடுத்ததாக இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும். இதிலும் முடிவு ஏற்படாத பட்சத்தில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது தவிர்க்க முடியாததாகி விடும். நிரந்தர தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஒப்பந்த தொழிலாளர்களும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக நிரந்தர தொழிலாளர்களும் போராட் டத்தில் ஈடுபட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

  

Read more »

சிதம்பரம் இரு சக்கர வாகனம் பழுது பார்ப்போர் நலச்சங்கம் சார்பில் மாணவர்களுக்கு புத்தகப் பை

சிதம்பரம் : 

              சிதம்பரம் இரு சக்கர வாகனம் பழுது பார்ப்போர் நலச்சங்கம் சார்பில் நகராட்சி பள்ளி மாணவர்களுக்கு புத்தகப் பைகள் வழங்கப்பட்டது. சிதம்பரம் கனகசபை நகர் நகராட்சி தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு சிதம்பரம் இரு சக்கர வாகன பழுது பார்ப்போர் நலச்சங்கம் சார்பில் இலவசமாக புத்தகப் பை வழங்கினர். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், சங்க கவுரவ தலைவர்கள் நடராஜன், சரவணன், அருள், தலைவர் சண்முகம், துணைத் தலைவர் பால்ராஜ், செயலாளர் தாஸ், துணை செயலாளர் முரளி, சங்க பொருளாளர் கோபு மற்றும் நிர்வாகிகள் செந்தில், சரவணன், அன்பழகன், சுரேஷ் பங்கேற்றனர்.

 

Read more »

மண்டல பனை பொருள் பயிற்சி மையம்... தள்ளாடுகிறது! நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை தேவை

கடலூர் : 

                கடலூரில் இயங்கி வரும் மண்டல பனை பொருள் பயிற்சி மையம் போதிய நிதி வசதியின்றி நலிவடைந்து வருகிறது. தமிழகத்தில் பனை தொழிலை ஊக்குவிக்கவும், அதனைச் சார்ந் துள்ள தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திடும் பொருட்டு தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் கீழ் தமிழ் நாடு மாநில பனை வெல்லம், தூரிகை (பிரஷ்) உற்பத்தி மற்றும் விற்பனை கூட்டுறவு இணையம் செயல்பட்டு வருகிறது. பனை சார்ந்த பொருட்களை மக்கள் விரும்பி வாங்கும் வகையில் கலை நயத்துடன் செய்திட தொழில் நுட்பங்களை கற்றுத் தருவதற்காக மண்டல பனை பொருள் பயிற்சி மையம் துவங் கப்பட்டது.

                 தென் இந்தியாவிற்கான மண்டல பயிற்சி மையத்தை கடந்த 1948ம் ஆண்டு கர்நாடகாவில் மத்திய அரசு துவங்கியது. ஓராண்டில் இந்த பயிற்சி மையம் தமிழகத்தில் உள்ள கடலூருக்கு மாற்றப்பட்டு 1955ம் ஆண்டு வரை இயங்கியது. பின்னர் இது மகாராஷ்டிரா மாநிலத்திற்கு மாற்றப்பட்டது .இருப்பினும் இந்தியாவில் பனை தொழிலில் முதலிடம் வகிக்கும் தமிழகத்தில் உள்ள பனை தொழிலாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களின் தொழில் வளர்ச்சிக்காக கடந்த 1961ம் ஆண்டு மாநில அளவிலான பனை தொழில் பயிற்சி நிலையம் கடலூர் கடற்கரை சாலையில் 4.39 ஏக்கர் பரப்பளவில் துவங்கப் பட்டது.மாநில அளவில் இயங்கி வந்த இந்த பயிற்சி மையம் 1970ம் ஆண்டு தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களை உள்ளடக்கிய மண்டல பயிற்சி நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது. 

               இங்கு மேற்கண்ட ஐந்து மாநிலங்களை சேர்ந்த பனை தொழிலில் ஆர்வமிக்க இளைஞர்களை ஆண்டிற்கு 110 பேரை தேர்வு செய்து பனை மரம் ஏறுதல், பதநீர் எடுத்தல், பனை வெல்லம், பனங் கற்கண்டு, சாக்லெட், குளிர்பானம் தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், பனை மற்றும் ஈச்சம் ஓலையிலிருந்து தட்டு, கூடை, தொப்பி, தென்னை நாரிலிருந்து கயிறு, மிதியடிகள், பனை நாரிலிருந்து சைக்கிள் கூடை, தரை சுத்தம் செய்யும் பிரஷ் உள்ளிட்ட பல்வேறு வகையான வீட்டு உபயோகப் பொருள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு உதவித் தொகை, போக்குவரத்து செலவு மற்றும் பயிற்சி மையத்தின் பயிற்சியாளர்கள், ஊழியர்களுக்கான ஊதியத்தை மத்திய கதர் கிராம தொழில் ஆணையம் தமிழக கதர் கிராம தொழில் வாரியத்திற்கு வழங்கி வந்தது. பயிற்சி மையத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் விலை குறைவாகவும், தரமாகவும் இருந் ததால் அரசு அலுவலகங்களில் அதிக அளவு வாங்கப்பட்டது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விற்பனை செய்வதற்காக முக்கிய நகரங்களில் விற்பனை மையங்களும் துவங்கப்பட்டது. இதன் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது.

                  கடந்த 95ம் ஆண்டு வரை சிறப்பாக இயங்கி வந்த இந்த பயிற்சி மையத்தில் 2 ஆயிரத்து 245 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். இவர்களில் பலர் சுய தொழில் புரிந்து வருகின்றனர். சிறப்பாக இயங்கி வந்த இந்த பயிற்சி மையத்திற்கு மத்திய கதர் கிராம தொழில் ஆணையம் வழங்கி வந்த நிதியை நிறுத்திக் கொண்டதால், பயிற்சி அளிப்பது நிறுத்தப்பட்டதோடு, உற்பத்தியும் மெல்ல மெல்ல குறைந்து தற்போது பெயரளவிற்கு இயங்கி வருகிறது. இந்த பனைபொருள் பயிற்சி மையத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யவும், மீண்டும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவும், பனை பொருள் உற்பத்தியை துவங்கவும், இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களை அரசு அலுவலகங்களில் கட்டாயம் வாங்கிட மாவட்ட நிர்வாகமும், அரசியல் பிரமுகர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Read more »

கடலூரில் இடியுடன் கூடிய பலத்த மழை மின் மாற்றிகள் சேதம்: போக்குவரத்து பாதிப்பு

கடலூர் : 

                 கடலூரில் நேற்று இரவு இடியுடன் பெய்த பலத்த மழை காரணமாக மின் மாற்றிகள் பழுதானதால் நகரம் இருளில் மூழ்கியது. சாலை குறுக்கே மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதித்தது.

                கடலூரில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் இருந்து வந்த நிலையில் நேற்று மாலை 5 மணி முதல் திடீரென குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இரவு 7.10 மணியளவில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. ஒன்னரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மழையில் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. மின்னல் தாக்கியதில் கடலூர் மின் மாற்றிகள் பழுதாகியது. பில்லாலி தொட்டி பகுதியில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. இதன் காரணமாக இப்பகுதிகளில் முழுவதும் இருளில் மூழ்கியது. மஞ்சக்குப்பம் பகுதியில் மட்டும் அரை மணி நேரத்தில் பழுது நீக்கம் செய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது.

                திருப்பாதிரிப்புலியூர் ஆற்றங்கரை பகுதியில் உள்ள மின் மாற்றியில் கடும் சேதம் ஏற்பட்டதால், உதவி பொறியாளர் மற்றும் மின் ஊழியர்கள் மின்சாரம் வழங்குவதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் திருவந்திபுரம் சாலையில் மரம் விழுந்ததில் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து மின் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் 

                    "மின்னல் அதிகளவில் தாக்கியதில் பெரும்பாலான மின் மாற்றிகள் பழுதாகியிருக்கலாம். மாற்று ஏற்பாடுகள் செய்து அனைத்து பகுதிகளிலும் விரைந்து மின் வினியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என தெரிவித்தார்.

தொழிலாளி காயம்: 

                   நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூர் காலனியில் தொகுப்பு வீட்டின் மேல் கூரை இடிந்து விழுந்ததில் கூலித் தொழிலாளி சின்னதுரை காயமடைந்தார்.

 

Read more »

நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் சுமை தூக்கும் பணிக்கு நேர்காணல்


கடலூர் : 

                    நுகர் பொருள் வாணிபக் கழக குடோன்களில் சுமை தூக்கும் பணியா ளர்களுக்கான நேர்முகத் தேர்வு நேற்று நடந்தது. கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம் மற்றும் திட்டக்குடி தாலுகாக்களில் உள்ள நுகர் பொருள் வாணிபக் கழக குடோன்களில் தானிய மூட்டைகளை லாரிகளில் ஏற்றி இறக்க தினக்கூலி அடிப்படையில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய பொருட்களை தடையின்றி அனுப்பிடும் நுகர்பொருள் வாணிபக் கழக குடோன்களில் கூடுதல் சுமை தூக்கும் தொழிலாளர் களை நியமித்திட அரசு உத்தரவிட்டது.

                 அதன்பேரில் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு குடோன்களுக்கும் கூடுதலாக 15 சுமை தூக்கும் தொழிலாளர்கள் என மொத்தம் 105 பேர் நியமிக் கப்பட உள்ளனர். இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 850 பேர் விண்ணப்பித்திருந்தனர்.இவர்களுக்கான நேர் காணல் கடந்த 18ம் தேதி முதல் கடலூரில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகத்தில் நடந்து வருகிறது. இரண்டாம் நாளான நேற்று நடந்த நேர்காணல் மண் டல மேலாளர் ராபின்சன் தலைமையில் நடந்தது. அதில் 300 பேர் பங்கேற்றனர். நேர்காணல் இன்றும் நடக்கிறது.



Read more »

நடராஜர் கோவில் பிரசாத கடை ஏலம் 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சிதம்பரம் : 

                  சிதம்பரம் நடராஜர் கோவில் பிரசாத கடை ஏலம் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட குறைவாக கேட்கப்பட்டதால் வரும் 29ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோவில் அரசு கட்டுப்பாட்டுக்கு வந்ததையடுத்து பிரசாத கடை வைப்பதற்கான ஏலம் கடந்த ஆண்டு நவ. 26ம் தேதி நடந்தது. கோவிலின் கிழக்கு, மேற்கு வாயிலில் பிரசாத கடை வைக்க 7 லட்சத்து 56 ஆயிரத்து 100 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. இதற்கான உரிமம் இம்மாதம் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. 

                   அதையொட்டி இந்த ஆண்டு பிரசாத கடை ஏலம் கோவில் நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அறநிலையத் துறை உதவி கமிஷனர் ஜெகன்நாதன் முன்னிலையில் செயல் அலுவலர் சிவக்குமார் உள்ளிட்டவர்கள் பங்கேற் றனர். ஏலம் கேட்பதற்கு மூவர் வந்திருந்தனர். புவனகிரி வடக்குத்திட்டு கோதண்டராமன் 10 லட்சத்து 50 ஆயிரத்திற்கு ஏலம் கேட்டார். டெண்டர் விண்ணப்பித்தவர்களில் 10 லட்சத்து 35 ஆயிரம் கேட்கப்பட்டிருந்தது. ஆனால் அறநிலையத்துறை சார்பில் 12 லட்சம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. நிர்ணயித்த தொகையை விட ஏலம் குறைவாக இருந்ததால் ஏலம் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.



Read more »

கடலூரில் சத்துணவு ஊழியர் சங்க கூட்டம்

கடலூர் : 

             சத்துணவு ஊழியர் சங்க கடலூர் நகர கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு யசோதா தலைமை தாங்கினார். செயலாளர் புஷ்பலதா வேலை அறிக்கையும், பொருளாளர் சுலோச்சனா நிதி நிலை அறிக்கையையும் சமர்பித்தனர். மாவட்ட செயலாளர் ரங்கசாமி, பொருளாளர் ராதாகிருஷ்ணன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் காசிநாதன், செயலாளர் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். கூட்டத்தில் கிளை தலைவராக கிருஷ்ணவேணி, துணைத் தலைவர்களாக கஸ்தூரி, பானு, செயலாளர் புஷ்பலதா, துணை செயலாளர்களாக சீத்தாலட்சுமி, வச்சலா, பொருளாளராக சுலோச்சனா தேர்வு செய்யப்பட்டனர்.

பின்னர் நடந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

                     சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக்குழுவால் வரையறுக்கப்பட்ட ஊதிய விகிதம் வழங்க வேண்டும். மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும். விலைவாசி உயர்விற்கு ஏற்பட சத்துணவு உண்ணும் மாணவர்களின் உணவூட்டு செலவின தொகையை நபர் ஒருவருக்கு 2 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



Read more »

பேட்டி கொடுக்க மட்டுமே கருணாநிதி தமிழை பயன்படுத்துகிறார் முன்னாள் அமைச்சர் வளர்மதி சாடல்

கடலூர் : 

                பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பதற்கும், அழகாக பேசுவதற்கும் மட்டும் தான் கருணாநிதி தமிழை பயன்படுத்துகிறார் என முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசினார். ஐகோர்ட்டில் தமிழில் வாதாட வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றத் தவறிய தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சம்பத், ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் பத்மநாபன், இந்திய கம்யூ., சேகர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் குமரன், முன்னாள் மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன், வக்கீல் பிரிவு செயலாளர் ரவீந்திரன், பொருளாளர் சரவணன், மாணவரணி செயலாளர் பாலகிருஷ்ணகுமார், ஜெயபாலன், மாசிலாமணி, தொழிற்சங்க செயலாளர் பாலகிருஷ்ணன், விவசாய அணி காசிநாதன், ஒன்றிய செயலாளர் கள் பழனிசாமி, முத்துக்குமாரசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

மாநில அமைப்புச் செயலாளர் வளர்மதி தலைமை தாங்கி பேசியதாவது:

                   ஐகோர்ட்டில் தமிழில் வாதாட வேண்டும் என்பது முக்கியமான பிரச்னை. கிராமத்தில் இருக்கும் ஒருவர் வழக்கு விசாரணைக்கு வரும் போது, வக்கீலும், நீதிபதியும் ஆங்கிலத்தில் பேசுகின்றனர். தீர்ப்பும் ஆங்கிலத்தில் சொல்லப்படுகிறது. இது பாமர மக்களுக்கு தெரியாது.

                என்ன சொன்னாலும் ஜனாதிபதி கேட்பார் என தம்பட்டம் அடித்துக் கொள்கிறார் கருணாநிதி. ஆனால், அவரிடம் தமிழில் வாதாட ஒப்புதல் வாங்க முடியவில்லை. பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பதற்கும், அழகாக பேசுவதற்கும் மட்டும் தான் கருணாநிதி தமிழை பயன்படுத்துகிறார். மகன், மகளை டில்லிக்கு அழைத்துச் சென்று தலைவர்களுடன் பேசுவதற்கும், ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய ராஜாவை காப்பாற்ற டில்லி சென்று பேச நேரம் உள்ளது. ஆனால் தமிழில் வாதாட ஒப்புதல் பெற டில்லிக்கு செல்ல நேரமில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கோர்ட்டுகளில் தமிழில் வாதாட உரிமைகளை பெற்று தருவேன் என கூறியுள்ள ஜெயலலிதாவிற்கு நீங்களும் ஆதரவு தாருங்கள். இவ்வாறு வளர்மதி பேசினார்.



Read more »

சி.என்.பாளையம் அரசு கால்நடை மருத்துவமனையில் மாதிரி தீவன புல் வளர்ப்பு

நடுவீரப்பட்டு : 

                    பண்ருட்டி அடுத்த சி.என்.பாளையம் அரசு கால்நடை மருத்துவமனையில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் பயன்பெறும் வகையில் மாதிரி தீவன புல் வளர்க்கப்படுகிறது.இது குறித்து கால்நடை மருத்துவர் கமலக்கண்ணன் கூறுகையில், "தற்போது கால்நடைகளுக்கு புல் அதிகளவு கிடைக்காமல் கால் நடை வளர்ப்போர் அவதிப்படுகின்றனர். அப்படியே கிடைத்தாலும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. இதை கருத்தில் கொண்டு விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் எளிதில் வளர்க்க கூடிய குறைந்த நாட்களில் வளரக்கூடிய ரகங்களான கோ 3, கினியா ஆகிய ரக புல்கள் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் மாதிரிக்காக வளர்க்கப்படுகிறது. இதை அனைத்து விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் வளர்த்து பயன் பெறலாம்' என கூறினார்.

 

Read more »

மரக்கன்றுகள் நடும் விழா

திட்டக்குடி : 

            திட்டக்குடி நகர இளைஞர் காங்., சார்பில் ராகுல் பிறந்த நாளில் மரக் கன்றுகள் நடும் விழா நடந்தது.

            நகர இளைஞர் காங்., தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர்கள் ஷேக்யூசூப் அலி, கர்ணன், முத்து, வார்டு தலைவர் தர்மா சின்னதுரை, ஞானசேகரன் முன்னிலை வகித் தனர். நகர துணைத் தலைவர் பாலமுருகன் வரவேற்றார். மாநில சேவாதள அமைப்பாளர் அன்பரசு, மனித உரி மைத் துறை நகர தலைவர் வேல்மணி, மாவட்ட அமைப்பாளர் சங்கர்லால், வக்கீல் பிரிவு நெடுஞ்செழியன் வாழ்த்திப் பேசினர்.

              இதையொட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரிய வகையைச் சேர்ந்த 40 மரக் கன்றுகள் நடப்பட்டது. தொடர்ந்து கோழியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 300 மாணவர்களுக்கு நோட்டு, பேனா, சிலேட்டுகளை தொகுதி துணைத் தலைவர் தரணிதரன் வழங்கினார்.விழாவில் தலைமை ஆசிரியர்கள் ராஜன், முல் லைநாதன், என்.சி.சி., சண்முகம், ஆசிரியர்கள் மதிவாணன், ராமலிங்கம், வேளாண் ஆசிரியர் வசந்தா, போத்தீஸ் ரமேஷ், அருள் முருகன், வளர்மதி, சுரேஷ், ராஜமாணிக்கம், மலர்க்கொடி, ரகு, மணி, தீபன் ராஜ்குமார், விஜயகுமார் உட்பட பலர் பங் கேற்றனர். முன்னாள் வட்டாரத் தலைவர் குணசேரகன் நன்றி கூறினார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior