உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், நவம்பர் 19, 2009

கழிவுநீர் தேங்குவதால் திறக்க முடியாத பள்ளி வகுப்பறைகள்

பண்ருட்டி,நவ.18:

பண்ருட்டி அய்யனார் கோயில் தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியைச் சுற்றிலும் மழைநீர் மற்றும் கழிவு நீர் தேங்கி நிற்பதால் 15 நாள்களாக பள்ளி திறக்கப்படாமல், பழைய கட்டடத்திலேயே வகுப்புகள் நடைபெறுகின்றன.
பண்ருட்டி நகராட்சி அலுவலகத்தின் பின் பகுதியில், அய்யனார் கோயில் தெருவில் நகராட்சி நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 160-ம் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் இதன் அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 25 குழந்தைகள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளிகள் தாழ்வான பகுதியில் அமைந்துள்ளதுடன், இங்கு கழிவு நீர் கால்வாய்கள் முறையாக அமைக்காததாலும், கால்வாய்களை பராமரிக்காததாலும் மழைக் காலத்தில் மழை நீர் மற்றும் கழிவு நீர் பள்ளி வளாகத்தை சூழ்ந்து மாணவர்களோ, ஆசிரியர்களோ செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
அண்மையில் பெய்த மழையால் பள்ளி வளாகம் முழுவதும் நீர் சூழ்ந்ததால், கடந்த 15 நாள்களாக முருகன் கோயில் அருகில் உள்ள பழைய வகுப்பறை கட்டடத்தில் இட நெருக்கடியில் அனைத்து மாணவர்கள் படித்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலத்தில் இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களும், ஆசிரியர்களும் பெரும் அவதி அடைகின்றனர். நகராட்சி அலுவலகத்தின் பின் பகுதியில் உள்ள இப்பள்ளியின் நிலை குறித்து நக ர நிர்வாகத்திடம் பல முறை எடுத்துக் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இப்பகுதி பொது மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் குழந்தைகள் அதிக அளவில் படிக்கும் இப்பள்ளியை, நகர நிர்வாகம் சீரமைத்து சுகாதாரம் மற்றும் பாதுகாப்பான முறையில் மாணவர்கள் கல்வி கற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read more »

சிக்னல் விளக்கு எரியாததால் வாகன ஓட்டிகள் அவதி

பண்ருட்டி,நவ.18:

மின்சாரக் கோளாறு காரணமாக பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் உள்ள உயர்கோபுர விளக்கு, சிக்னல் புதன்கிழமை எரியாமல் இருள் சூழ்ந்து இருந்ததால் வாகன ஓட்டிகளும், பாத சாரிகளும் அவதி அடைந்தனர்.
நாள் தோறும் ஆயிரக்கணக்கானோர் வியாபார மற்றும் பணி நிமித்தமாக பண்ருட்டி வந்து செல்கின்றனர். இதனால் நகரின் மையப் பகுதியான நான்கு முனை சந்திப்பு எப்போதும் பரபரப்புடன் காணப்படும்.
மேலும் கடலூர்-சித்தூர், சென்னை-கும்பகோணம் செல்லும் நெடுஞ்சாலைகள் நான்கு முனை சந்திப்பை கடந்துதான் செல்ல வேண்டும். இதனால் இச்சந்திப்பில் நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கின்றன. காலை, மாலை வேளையில் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படும்.
இத்தகைய முக்கியம் வாய்ந்த நான்கு முனை சந்திப்பில் பொறுத்தப்பட்டுள்ள உயர்கோபுர விளக்கும், அண்மையில் அமைக்கப்பட்ட சிக்னலும் மின்சார கோளாறு காரணமாக புதன்கிழமை எரியவில்லை. இதனால் வாகன ஒட்டிகளும், பாதசாரிகளும் அப்பகுதியைக் கடந்து செல்ல பெரும் அவதி அடைந்தனர்.
இந்நிலையில் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் போலீஸôர் சிக்னல் இன்டிகேட்டர் இன்றி இருளில் போக்குவரத்தை சரி செய்ய படாதபாடு பட்டனர்.

Read more »

நவம்பர் 20ல் வடலூரில் வேலைவாய்ப்பு முகாம்

கடலூர்,நவ. 18:

தி.மு.க. சார்பில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் வடலூரில் நவம்பர் 20,21,22 தேதிகளில் நடைபெறும் என்று கடலூர் மாவட்ட தி.மு.க. செயலாளரும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் புதன்கிழமை அறிவித்தார்.
அமைச்சர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதல்வர் கலைஞரின் 86-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்தில் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு (18 வயது முதல் 35 வயது வரை) கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்பைப் பெற்றுதரும் நோக்கில் இந்த வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
ஏற்கெனவே பதிவு செய்து அடையாள அட்டை பெற்று உள்ளவர்களுக்கு மட்டும் நேர்முக் தேர்வு நடைபெற இருக்கிறது. 20, 21, 22 ஆகிய தேதிகளில் வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் இந்த வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில் 300 முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்க இசைவு தந்துள்ளனர். இதுவரை இந்த நிறுவனங்கள் 52 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை அளிக்க முன்வந்துள்ளன.
இதில் காக்னிஸண்ட், இன்போசிஸ் பி.பி.ஓ. போலரிஸ் மென்பொருள் நிறுவனம், போர்டு இந்தியா, விப்ரோ, ஹுண்டாய். நோக்கியா, ரிலையன்ஸ், செயின்ட் கோபெயின், டி.வி.எஸ்., எச்.சி.எல் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் அடங்கும்.
வடலூர் வேலைவாய்ப்பு முகாம் நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி கலந்துகொள்கிறார். ஏற்கெனவே பதிவு அட்டை பெற்றவர்களில், நவம்பர் 20-ம் தேதி ஏ பிரிவினருக்கும், 21-ம் தேதி பி பிரிவினருக்கும், 22-ம் தேதி சி பிரிவினருக்கும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும். இளைஞர்கள் கலந்துகொண்டு பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

ஆலப்பாக்கம் மேம்பாலத் திட்டம் கைவிடப்பட்டது ஏன்?

சிதம்பரம், நவ. 17:

சிதம்பரத்திலிருந்து கடலூருக்கு இடையே விழுப்புரம்-புதுவை-நாகப்பட்டினம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆலப்பாக்கத்தில் ரயில்வே கேட் உள்ளது.
அகல ரயில்பாதை அமைக்கும் திட்டத்தில் இங்கு ரூ.17.50 கோடி செலவில் மேம்பாலம் அமைக்க இடம் பெற்றுள்ளது.
ஆனால் தற்போது அகல ரயில் பாதை அமைக்கும் பணி முடிவுற்று ஆலப்பாக்கம் ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்காமலேயே சாலையை உயர்த்தி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு வரும் இவ்வேளையில் ரயில்கள் ஓடாத நேரத்தில் இங்கு ரயில்வே மேம்பாலத்தை எளிதாக அமைத்திருக்கலாம். தற்போது ரயில்வே நிர்வாகத்தால் மேம்பாலம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது எதனால்? எனத் தெரியவில்லை.
அகல ரயில்பாதையில் ரயில்கள் இயக்கப்பட்டால் அடிக்கடி ஆலப்பாக்கம் ரயில்வே கேட் மூடப்படும் நிலை உருவாகும். இதனால் கடலூர் மார்க்கத்திலிருந்து ஆலப்பாக்கம் கேட் வழியாக தேசிய நெடுஞ்சாலையில் சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, காரைக்கால், நாகை, நாகப்பட்டினம், வேதாரண்யம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கும்.
தற்போது கும்பகோணம் அருகே உள்ள அணைக்கரை பாலம் சேதமடைந்ததால் கனரக வாகனங்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டு அவ் வாகனங்கள் ஆலப்பாக்கம் கேட் வழியாக சிதம்பரம் நகருக்குள் புகுந்து செல்கிறது.
இது குறித்து சிதம்பரத்தைச் சேர்ந்த சமூகசேவகர் ஜி.கலியமூர்த்தி விழுப்புரம் கோட்ட நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளருக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்டு டிசம்பர் 2008-ம் ஆண்டு கடிதம் அனுப்பினார்.
அதற்கு கோட்டப் பொறியாளர் டி.ராஜேந்திரன் பதில் தெரிவித்து அனுப்பியுள்ள கடிதத்தில் விழுப்புரம்-புதுச்சேரி- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆலப்பாக்கம் ரயில்வே கேட்டில் ரூ.17.50 கோடி செலவில் மேம்பாலம் அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டு அரசின் பரிசீலனையில் உள்ளது என பதில் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம்-மயிலாடுதுறை வரை புதிதாக அமைக்கப்பட்டுள்ள அகல ரயில்பாதையில் ஜனவரி 15-ம் தேதி முதல் ரயில்கள் இயக்கப்படும் என திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பயணிகள் ரயில்கள் இப்பாதையில் இயக்கப்பட்டால் சிதம்பரத்துக்கும், கடலூருக்கும் இடையே உள்ள ஆலப்பாக்கம் ரயில்வே கேட்டில் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை கேட் மூடப்பட்டு தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து வெகுவாக பாதிக்கும் என பஸ் ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.

Read more »

சுகாதாரப் பணிகள் இல்லாததால் வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம்

பண்ருட்டி,நவ.17:

கன மழையின் காரணமாக தொற்று நோய் மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில், பண்ருட்டி நகரம், அண்ணா கிராம ஒன்றியப் பகுகளில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என பொது நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தின் பல பகுதியில் பலத்த மழை பெய்தது. இந்நிலையில் பண்ருட்டி வட்டத்தில் கடந்த வாரத்தில் பெய்த கனமழையால் பல்வேறு இடத்தில் மழை நீர் கழிவு நீருடன் கலந்து தாழ்வானப் பகுதியில் தேங்கி நின்றது. தேங்கிய நீரில் இருந்து நோய் பரவும் கிருமிகள் உற்பத்தியானதால் பொதுமக்கள் தொற்று நோய் மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.
இதனால் அரசு மருத்துவமனையில் வழக்கத்தை விட கூடுதலான நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த இரு தினங்களாக விடுபட்டிருந்த மழை வெள்ளிக்கிழமை இரவு முதல் மீண்டும் தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் பண்ருட்டி நகரின் முக்கிய முக்கிய சாலைகள், பஸ் நிலையம், வீதிகள் தண்ணீர் தேங்கி நிற்கின்றது. பல வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது.
மேலும் இப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளைச் சுத்தம் செய்து, தண்ணீரில் முறையாக குளோரின் பவுடர் கலப்பதில்லை என்றும் தொட்டிகளை சுத்தம் செய்து பல ஆண்டுகள் ஆகிறது என்றும் அப்பகுதியில் வசிப்பவர்கள் தெரிவித்தனர்.
பண்ருட்டி மற்றும் சுற்று வட்டப் பகுதியில் முறையான கழிவு நீர் கால்வாய் இல்லாததாலும், தேங்கியுள்ள மழை மற்றும் கழிவு நீரில் நோய் பரவும் கிருமி உற்பத்தியாவதாலும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் இல்லாததாலும் பொதுமக்கள் தொற்று நோய் மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட நகர மற்றும் ஒன்றியப் பகுதி மக்களுக்கு தேவையான சுகாதாரப் பணிகள் முழுமையாக, முறையாக அளிக்கப்படவில்லை என தெரியவருகிறது. எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுகாதார பணிகளை செய்ய நகர சுகாதாரத் துறை, வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் சுகாதார குழுக்களை முடுக்கிவிட்டு சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read more »

தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் விசாரணை

சிதம்பரம்,நவ.17:

கடலூர் மாவட்டத்தில் 3 கூட்டங்களுக்கு மேல் பங்கேற்காத ஊராட்சி மன்றத் துணைத்தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் தவறு செய்தவர்களிடம் தமிழக தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டார்.
3 கூட்டங்களுக்கு மேலாக பங்கேற்காத துணைத்தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கடலூர் மாவட்ட ஆட்சியர் தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பினார். அந்த அறிக்கையின்படி தேர்தல் அதிகாரி சந்திரசேகரை நீதிபதியாக நியமித்து விசாரணை நடத்த அரசு உத்திரவிட்டுள்ளது.
அதன்பேரில் சந்திரசேகரன் செவ்வாய்க்கிழமை சிதம்பரம் வந்தார்.
சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் பிச்சாவரம், காட்டுபரூர், சித்தேரிகுப்பம் ஆகிய ஊராட்சி தலைவர்கள், துணைத்தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.
புதன்கிழமை மங்களூர் ஒன்றியத்தைச் சேர்ந்த மங்களூர், ஆலம்பாடி, திருமுலை, வையங்குடி, நெடுங்குளம், கோடங்கு ஆகிய 6 ஊராட்சிகளில் விசாரணை மேற்கொள்கிறார்.
விசாரணை முடிவுற்று 15 தினங்களுக்குள் அரசுக்கு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளதாக சந்திரசேகரன் தெரிவித்தார்.

Read more »

ஓய்வு பெற்ற என்எல்சி ஊழியர்களுக்கு மருத்துவ உதவித் தொகை உயர்வு

நெய்வேலி நவ .17:

என்எல்சி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நிறுவனம் அளித்துவரும் மருத்துவ உதவித் தொகை அதிகபட்சம் ரூ. 6 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
என்எல்சி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்களின் நலன்கருதி நிர்வாகம் ஊழியருக்கும், அவரது மனைவிக்கும் 1995-ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் உதவித் தொகை வழங்கி வருகிறது.
இந்தத் தொகையை உயர்த்தி வழங்கவேண்டும் என்று ஓய்வுபெற்ற ஊழியர்கள் கடந்த சில ஆண்டுகளாக நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இந்நிலையில் ஓய்வுபெற்ற ஊழியர்களின் நலனை பரிசீலித்த நிறுவனத் தலைவர் ஏ.ஆர்.அன்சாரி, அவர்களின் மருத்துவ உதவித்தொகையை அதிகபட்டம் ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து ரூ.3500 பெற்றுவந்த ஊழியர்களுக்கு ரூ.6000-ம், ரூ.2300 பெற்றுவந்தவர்களுக்கு ரூ.4000-ம், ரூ.1700 பெற்றுவந்தவர்களுக்கு ரூ.3000-ம், ரூ.1200 பெற்றுவந்தவர்களுக்கு ரூ.2000-ம் வழங்க நிர்வாகம் முடிவுசெய்து அதற்கான உத்தரவையும் பிறப்பித்துள்ளது.
இந்த உயர்த்தப்பட்டத் தொகைககள் 2009-10-ம் நிதியாண்டைக் கணக்கிட்டு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து ஓய்வுபெற்றத் தொழிலாளர்கள் நிறுவனத்தலைவருக்கு தங்களது நன்றியையும் தெரிவித்துள்ளனர்.

Read more »

பாழாகி வரும் கடலூர் சாலைகள்

கடலூர்,நவ.17:

பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்காக கடலூரில் சாலைகள் தோண்டப்படுவதால் சாலைகள் பாழாகி வருகின்றன. இதனால் மக்கள் பெரிதும் அவதிக்கு ஆளாகிறார்கள்.
ரூ. 44 கோடி செலவில் கடலூரில் பாதாளச் சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதனால் தேசிய நெடுஞ்சாலை தவிர ஏனைய சாலைகள் அனைத்தும் தோண்டப்பட்டு குண்டும் குழியுமாகக் கிடக்கின்றன. பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்காக தோண்டப்படும் பள்ளங்களை, வேறு மணல் கொண்டு முறையாக நிரப்பி சாலை அமைக்க ஏதுவாக மாற்றி ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் பாதாளச்சாக்கடைத் திட்ட ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஆனால் குழிகளை நிரப்புவதில்தான் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. தோண்டி எடுக்கப்பட்ட சேறும் சகதியுமான களிமண்ணைக் கொண்டே குழிகளை நிரப்புவதுதான் பிரச்னையாக உள்ளது. மாவட்ட ஆட்சியர், நகராட்சித் தலைவர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்தும், இப் பணியைக் ஒப்பந்தம் எடுத்து இருக்கும் நிறுவனம் கண்டு கொள்வதே இல்லை. எந்த உத்தரவையும் காதில் போட்டுக் கொள்வதும் இல்லை, மதிப்பதும் இல்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
பாதாளச் சாக்கடைப் பள்ளங்களை, தொடர்ந்து சேற்றால் நிரப்பி வருவதுதான் மக்களை மேலும் கவலையில் ஆழ்த்தி வருகிறது. இவ்வாறு செய்வதால் இரு சக்கர வாகனங்கள் கஷ்டப்பட்டு சென்று கொண்டு இருந்த சாலைகள்கூட மறுநாள் எந்த வாகனமும் செல்ல முடியாத அளவுக்கு மாறிவிடுகின்றன. மக்கள் நடந்து செல்வதுகூட ஆபத்தான நிலையாகி விடுகிறது.
பள்ளங்களில் ஆற்று மணல் அல்லது கருங்கல் ஜல்லி கிரஷர்களில் வீணாகக் கிடக்கும் கருப்பு மணல் கொண்டு நிரப்ப வேண்டும் என்று உதரவிட்டும், பின்பற்றப் படவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள். இதன் விளைவாக சாலைகளில் மக்கள் விழுந்து காயம் அடையாத நாளே இல்லை. பள்ளங்களில் வாகனங்கள் சிக்கிக் கொள்ளாத நாளே இல்லை.
இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுப்பது என்றே தெரியாமல் மாவட்ட நிர்வாகமும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் கைகளைப் பிசைந்து கொண்டு இருக்கிறார்கள்.
பாதாளச் சாக்கடைக்கு தோண்டப்பட்ட சாலைகளில் மண்டிக் கிடக்கும் சேற்றை முற்றிலுமாக அகற்றிவிட்டு, பள்ளங்களில் கருங்கல் ஜல்லித் துகள்களைக் கொண்டு நிரப்பினாலன்றி, இப்பிரச்சினைக்குத் தீர்வு கிடையாது என்று நெடுஞ்சாலைத் துறைக்கும் நகராட்சி நிர்வாகத்துக்கும் தெரிந்து இருந்தும், அது உத்தரவாக ஒப்பந்ததாரரிடம் ஏனோ தெரிவிக்கப்படவில்லை. மழை நின்றால் எல்லாம் சரியாகிவிடும், அதற்கு முன் ஏன் இவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்பதுதான் சம்பந்தப்பட்ட துறை அலவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரரின் கணிப்பு. அதற்குள் மக்கள் படும் அவதிக்கு தீர்வு காண்பது யார்.

Read more »

திட்டக்குடி நூலகத்தில் கட்டணத்தில் கணினிச் சேவை

கடலூர், நவ.17:

திட்டக்குடி அரசு நூலகத்தில் வாசகர்களுக்கு குறைந்த கட்டணத்தில் (மணிக்கு ரூ.10) பிராட்பேண்ட் வசதியுடன் கணினிச் சேவை தொடங்கப்பட இருப்பதாக மாவட்ட நூலக அலுவலர் அசோகன் தெரிவித்தார்.
திட்டக்குடி அரசு நூலகத்தில் நமது உலகம் நூலக எழுச்சி ஆண்டு விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவில் மாவட்ட நூலக அலுவலர் அசோகன் கலந்து கொண்டு பேசியது:
நமது உலகம் நூலக ஆண்டு விழாவை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்தில் புரவலர் சேர்க்கை நடந்து வருகிறது. திட்டக்குடியில் ரூ.12 லட்சத்திலும், டி.நெடுஞ்சேரியில் ரூ.6 லட்சத்திலும், நூலகக் கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன. மேல்பட்டாம்பாக்கத்தில் ரூ.9 லட்சத்தில் நூலகக் கட்டடம் கட்டும் பணி நடந்து கொண்டு இருக்கிறது.
திட்டக்குடி நூலகத்தில் பெண்கள், முதியவர்கள், சிறுவர்களுக்கு எனத் தனித் தனி பிரிவுகள் அமைக்கப்பட இருக்கிறது. மேலும் வாசகர்களுக்கு மணிக்கு ரூ.10 கட்டணத்தில் பிராட்பேண்ட் வசதியுடன் கணினிச் சேவை விரைவில் தொடங்கப்படும் என்றார் அசோகன்.
விழாவுக்கு கிளை நூலகர் ராஜசேகரன் தலைமை வகித்தார். தொ.மு.ச. தலைவர் காமராஜ், இளைஞரணிச் செயலாளர் துரை முன்னிலை வகித்தனர். நகர தி.மு.க. செயலர் பரமகுரு புரவலராகச் சேர்ந்தார். நூலகர் சங்கர் வரவேற்றார். உதவி நூலகர் தங்கவேல் நன்றி கூறினார்.

Read more »

3 இடங்களில் இந்தியன் வங்கி ஏடிஎம் திறப்பு


கடலூர், நவ,17:


கடலுர் மாவட்டத்திóல் இந்தியன் வங்கியின் ஏ.டி.எம். மையங்கள் கடலூர் முதுநகர், நெல்லிக்குப்பம், குறிஞ்சிப்பாடி ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன.
முதுநகரில் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் குத்து விளக்கு ஏற்றி மையத்தைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இந்தியன் வங்கியின் தலைவர் எம்.எஸ்.சுந்தராஜன், துணைப்பொது மேலாளர் முத்துக் கருப்பையா உள்ளிட்ட வங்கி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Read more »

நெய்வேலி நகரியத்தில் பாலிதீன் பைகளை பயன்படுத்த தடை

நெய்வேலி நவ .17:

நெய்வேலி நகரியத்தில் பாலிதீன் பைகளை பயன்படுத்த என்எல்சி நகர நிர்வாகம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது
புவிவெப்பபம் காரணமாக சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவது உலகளவில் அதிகரித்துவருகிறது. இதைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுóக்க பல்வேறு நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகிறது.
அதன் ஒருபகுதியாக மத்தியப் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நெய்வேலி நகரியத்தில் பாலிதீன் பைகளை பயன்படுத்த நகர நிர்வாகம் தடைவிதித்துள்ளது. அதன்படி கடைகளில் பொருள் வாங்குவோருக்கு பாலிதீன் பைகளில் பொருள்களைக் கொடுக்கக் கூடாது, ஓட்டல்கள், டீக் கடைகளில் பிளாஸ்டிக் டம்பளர்களை பயன்படுத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தியிருப்பதோடு, மீறி செயல்படுவோருக்கு அபராதமும் விதிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து நெய்வேலி நகரியத்தில் கடந்த சில தினங்ளாக பாலிதீன் பயன்பாட்டை வணிக நிறுவனங்கள் குறைத்துள்ளன.

Read more »

காலி குடங்களுடன் முற்றுகை

சிதம்பரம்,நவ.17:

சிதம்பரத்தை அடுத்த கீரப்பாளையம் ஒன்றியக்குழு அலுவலகத்தை வேளப்பாடி கிராம மக்கள் குடிநீர் கோரி காலி பானைகளுடன் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.

சிதம்பரத்தை அடுத்த கண்ணங்குடி ஊராட்சி பகுதியைச் சேர்ந்த வேளப்பாடி, வால்காரமேடு, பெரியதெரு ஆகிய பகுதிகளில் போடப்பட்ட ஆழ்துளைக் கிணறு பழுதடைந்ததால் குடிநீரின்றி மக்கள் அவதியுற்றனர். இதையடுத்து புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்க ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் நிதியிலிருந்து ரூ.5லட்சம் செலவில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைத்து குடிநீர் வழங்க வேண்டும் எனக் கோரி அப்பகுதி மக்கள் தேவசகாயம் தலைமையில் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.


வட்டார வளர்ச்சி அலுவலர் நைனார்நாயுடு உடனடியாக மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்து 15 தினங்களுக்குள் ஆழ்துளைக் கிணறு அமைப்பதாக உறுதியளித்ததால் மக்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior