கிள்ளை :
சிதம்பரம் அருகே சி.முட்லூர் கல்லூரி மாணவர்கள் விடுதி சாலையை சரிசெய்யக்கோரி நேற்று மாணவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். சிதம்பரம் அருகே சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் 1500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர்.
கல்லூரி வளாகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மாணவர் விடுதிகள் உள்ளன. இந்த விடுதியில் வெளியூர் மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். கல்லூரியில் இருந்து விடுதிக்கு செல்லும் சாலை சரியில்லாமல் இருப்பதால் மழைக்காலங்களில் மாணவர்கள் லுங்கியுடன் கல்லூரிக்கு வந்து உடைமாற்றினர். எனவே சாலையை சரிசெய்ய வேண்டும். கல்லூரி வளாகத்தில் விடுதியை சுற்றி மரங்கள், முட்புதர்கள் அதிகளவில் இருப்பதால் விஷ ஜந்துகள் நடமாட்டம் உள்ளது.
எனவே விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு கல்லூரி துவக்கத்தில் போராட்டம் நடத்தினர். அப்போது சிதம்பரம் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளித்தனர். ஆனால் இது நாள் வரை நடவடிக்கை எடுக்க வில்லை. தற்போது பெய்து வரும் மழையால் மாணவர்கள் தேர்வு நேரத்தில் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
நேற்று தேர்வு முடிந்து கல்லூரிக்கு வந்த மாணவர்கள் விடுதி மாணவர்களுக்கு ஆதரவாக வகுப்பை புறக்கணித்தனர். கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதிக்கு செல்லும் சாலையை சரிசெய்ய வேண்டும், கல்வி உதவித்தொகையை விரைந்து வழங்கவேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு வகுப்பை புறக்கணித்தனர்.