உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 07, 2011

விருத்தாசலத்தில் சிட்கோ தொழில் வளாகம் அமைக்க கோரிக்கை

விருத்தாசலம் :

          விருத்தாசலத்தில் சிட்கோ தொழில் வளாகம் அமைக்க வேண்டும் என எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார்.
 

இதுகுறித்து முத்துகுமார் எம்.எல்.ஏ., கலெக்டர் அமுதவல்லிக்கு அனுப்பியுள்ள மனு: 

          விருத்தாசலத்தில் அடித்தட்டு மக்களின் வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை காத்திடவும், புதிய தொழில் முனைவோர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும் விருத்தாலம் பகுதியில் சிட்கோ தொழில் வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விருத்தாசலம் அரசு தொழிற்பேட்டையில் தொழில் முனைவோர்களுக்கு மூலப்பொருட்கள் அரசால் வழங்கப்பட்டது. கடந்த 2001ம் ஆண்டு முதல் திடீரென எவ்வித முன் அறிவிப்பும் இன்றி மூலப்பொருட்கள் வழங்குவது நிறுத்தப்பட்டது. அதன் காரணமாக தொழிற்சாலைகள் முடப்பட்டன.
             தமிழகத்திலேயே விருத்தாசலத்தில் மட்டும் தான் அரசு பீங்கான் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. எனவே தொழிற்சாலை மீண்டும் இயங்கவும், தொழிற்பேட்டைக்கு உள் கட்டமைப்பு வசதிகள் செய்து தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.








Read more »

மாநில அளவிலான நீச்சல் போட்டியில் கடலூர் மாவட்ட மாணவ, மாணவிகள் 6 தங்கம் வென்றனர்

கடலூர் : 

           சென்னையில் நடந்த மாநில அளவிலான நீச்சல் போட்டியில் கடலூர் மாவட்ட மாணவ, மாணவிகள் 6 தங்கம் வென்றனர். தென்மாநில நீச்சல் போட்டிக்கான தேர்வு போட்டி, மாநில அளவிலான நீச்சல் போட்டி சென்னை, வேளச்சேரி நீச்சல் குளத்தில் நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 30 அணிகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். கடலூர் மாவட்டம் சார்பில் 12 பேர் பங்கேற்றனர். போட்டிகள் 7, 8, 10, 12, 14, 17 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர் என 7 பிரிவுகளில் நடத்தப்பட்டது.

           கடலூர் சி.கே.பள்ளி மாணவி ரக்ஷனா 3 தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் தலா ஒன்றும், செபி பிராங்களின் தங்கம், வெள்ளி, வெண்கலம் தலா ஒன்றும், டேவிஸ் நிரஞ்சன் தங்கம், வெள்ளி தலா ஒன்றும், 2 வெண்கலம் பெற்றனர். ஏ.ஆர்.எல்.எம். பள்ளி மாணவன் சுபாஷ்சந்தர் ஒரு தங்கம், அபிஷேக் ஒரு வெண்கலம் வென்றனர்.  புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி லட்சுமி சுவாதிகா மூன்று வெண்கலம், ஆரோ சைல்டு பள்ளி மாணவன் விமல் 2 வெண்கலம், அக்ஷரா வித்யாஷரம் பள்ளி மாணவன் சஞ் சய்பால் தினகர் ஒரு வெண்கலப் பதக்கம் பெற்றனர்.

            இவர்களின் சி.கே.பள்ளி மாணவன் செபா பிராங்களின் தென் மாநில போட்டிக்காக தேர்வு செய்யப்பட்டார். மாணவி ரக்ஷனா தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றார். மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்ந்த மாணவ, மாணவிகளை கலெக்டர் அமுதவல்லி பாராட்டினார். பி.ஆர்.ஓ., முத்தையா, மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம், நீச்சல் பயிற்சியாளர் அருணா உடனிருந்தனர்.











Read more »

கடலூர் பெருமாள் ஏரியிலிருந்து நாகார்ஜூனா ஆயில் நிறுவனத்திற்கு தண்ணீர் கொண்டும் செல்லும் திட்டம்: கைவிடக்கோரி முதல்வருக்கு மனு

கடலூர் : 

          பெருமாள் ஏரியிலிருந்து தனியார் நிறுவனத்திற்கு தண்ணீர் கொண்டும் செல்லும் திட்டத்தை கைவிட வேண்டும் என தமிழக முதல்வருக்கு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளன.

         கடலூர் அடுத்த குண்டியமல்லூரில் கடந்த 12ம் நூற்றாண்டில் பராந்தக சோழ மன்னரால் 16 கி.மீ., நீளத்திற்கும் ஒரு கி.மீ., அகலத்திற்கு வெட்டப்பட்ட பெருமாள் ஏரி மூலம் சுற்று வட்டாரத்தில் உள்ள 50 கிராமங்களைச் சேர்ந்த 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.மாவட்டத்தின் பெரிய ஏரிகளில் ஒன்றான இந்த ஏரி, கடந்த 50 ஆண்டுகளாக என்.எல்.சி., நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரில் அடித்து வரும் மணல் மற்றும் நிலக்கரி சகட்டினால் 8 கி.மீ., அளவிற்கு தூர்ந்து விட்டதால் தற்போது ஒரு போகம் நெல் பயிரிடவே தண்ணீர் தட்டுப்பாடாக உள்ளது. இதனால் ஏரியை தூர் வாரி கொள்ளளவை உயர்த்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

            இந்நிலையில் திருச்சோபுரத்தில் செயல்படவுள்ள நாகார்ஜூனா ஆயில் நிறுவனம், தங்களது தண்ணீர் தேவைக்கு பெருமாள் ஏரியிலிருந்து தினசரி 1.8 மில்லியன் காலன் (ஒன்றரை கோடி லிட்டர்) தண்ணீரை குழாய் மூலம் எடுத்துச் செல்ல பொதுப்பணித்துறையிடம் அனுமதி கோரியுள்ளது. அதன்பேரில், குறிஞ்சிப்பாடி தாசில்தார் கடந்த 24ம் தேதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். விவசாய பாசனத்திற்கு பயன்பட்டு வரும் பெருமாள் ஏரியிலிருந்து, நாகார்ஜூனா ஆயில் நிறுவனம் தண்ணீர் எடுத்துச் செல்ல அனுமதித்தால், 50 கிராமங்களில் 10 ஆயிரம் ஏக்கரில் நடைபெற்று வரும் விவசாயம் பாதிக்கும்.

           நாகார்ஜூனா ஆயில் நிறுவனம், கடல் நீரை பயன்படுத்தப் போவதாக கூறியது. அதற்கு கூடுதல் செலவாகும் என்பதால் தற்போது, விவசாய பாசனத்திற்கு பயன்பட்டு வரும் பெருமாள் ஏரியிலிருந்து தண்ணீர் எடுத்துச் செல்ல முயல்கிறது. இதுகுறித்து தெளிவான அறிவிப்பும் இல்லை .இப்பகுதியில் ராட்சத போர்வெல் மூலம் தண்ணீர் எடுத்தாலும், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைவதோடு, கடல் நீரும் உட்புகும். இப்பகுதி விளை நிலங்கள் உவர் தன்மையடைந்து தரிசு நிலமாகுவதோடு 50 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

              எனவே, இத்திட்டத்தை உடனடியாக தடுத்து நிறுத்துவதோடு, மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ளப் பாதிப்பை தவிர்க்க ஏரியை ஆழப்படுத்தவும், பரவனாற்றிலிருந்து கடலுக்கு நேரடியாக 2 கி.மீ., தூரத்திற்கு சிறிய ஆறு வெட்டித் தர வலியுறுத்தி பெருமாள் ஏரி நீர்ப்பாசன விவசாயிகள் சங்கச் செயலர் சண்முகம், தலைவர் பாஸ்கரன், தாய் மண் விவசாய - மீனவ ஜீவாதார நலச் சங்க செயலர் கிருஷ்ணமூர்த்தி, தலைவர் ராமசாமி மற்றும் நிர்வாகிகள் கூட்டாக தமிழக முதல்வர், அமைச்சர்கள் சம்பத், செல்வி ராமஜெயம், எம்.எல்.ஏ., ராஜேந்திரன், தலைமைச் செயலர், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் மனு அனுப்பியுள்ளனர்





















Read more »

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

கடலூர் : 

        கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

கூட்டுறவுத்துறை பதிவாளர் அண்ணாமலை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

         தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பில் கடலூர், விழுப்புரம், திருச்சி, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் வேலை வாய்ப்பு பெறக்கூடிய கூட்டுறவு மேலாண்மை, கணினி மேலாண்மை மற்றும் நகை மதிப்பீடு ஆகிய மூன்று பட்டயப் பயிற்சிககள் நடத்தப்பட்டு வருகிறது.

              ஒன்பது மாத இப்பயிற்சி வகுப்பு வரும் ஜனவரி 18ம் தேதி அனைத்து கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் துவங்கப்பட உள்ளது. பயிற்சியில் சேர விரும்புவோர் 50 ரூபாய் செலுத்தி விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.பயிற்சிக் கட்டணம் 6,000 ரூபாய். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட , ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு உதவித் தொகை பெறலாம். மேலும் விவரம் வேண்டுவோர் தங்கள் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர், கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வரை தொடர்பு கொள்ளலாம்.










 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior