கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், காலையிலேயே வந்து, பள்ளி வளாகத்தை துப்புரவு செய்யும் மாணவிகள்.
கடலூர்:
சேவை மனப்பான்மையுடன் தொடங்கப்பட்ட கல்வி நிலையங்கள் கூட, அரசின் கல்விக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, தங்கள் நிலையை மாற்றிக் கொண்டு கட்டணம் வசூலிக்கத் தொடங்கி விட்டன. பல்லாயிரம் ரூபாயை மாணவர்களிடம், கல்விக் கட்டணமாக வசூலித்துக் கொண்டு, பள்ளி வளாகத்தைச் சுத்தம் செய்தல், கழிவறைகளைச் சுத்தம் செய்தல், வகுப்பறைகளை சுத்தம் செய்தல், அருகில் உள்ள உணவகங்களுக்குச் சென்று ஆசிரியர்களுக்கு உணவுப் பொட்டலங்கள், டீ, காபி, குளிர்பானங்கள் வாங்கி வருதல், ஆசிரியர்களின் உணவுப் பாத்திரங்களை சுத்தம் செய்தல் போன்ற பணிகளை, மேற்கொள்ளச் செய்து, மாணவ வேலைக்காரர்களாக அவர்களைப் பயன்படுத்தும் நிலையும் உருவாகி இருப்பது வேதனை அளிக்கும் விஷயமாகும்.
குழந்தைகளை வீட்டு வேலைகளைச் செய்ய வற்புறுத்துவதே, குழந்தைகளுக்கு எதிரான குற்றம் என்று குழந்தைகளுக்கான சட்டம் தெளிவாகத் தெரிவிக்கிறது. குழந்தைகள் குறிப்பாகப் பெண் குழந்தைகள், வீட்டு வேலைகளைச் செய்த காலம் எல்லாம் மலையேறிப் போய்க் கொண்டு இருக்கிறது. பொது சேவைக்காக கோயில் வளாகங்களையும், சாலைகளை சுத்தம் செய்வது வரவேற்கத் தக்கதுதான்.பெண் குழந்தைகள், வீட்டில் ராணிகளாய் சுதந்திரமாய் சுற்றிவரும் நிலை ஏற்பட்டு இருப்பதை பலர் மனப்பூர்வமாக அங்கீரித்து இருப்பது, சமூகத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்.
ஆனால் பல ஆயிரம் ரூபாய்களை கட்டணமாகச் செலுத்திவிட்டு, அதே பள்ளிகளில் நிர்ப்பந்தம் காரணமாக வேலையாள்களைப் போல், துடைப்பம் எடுத்து துப்புரவுப் பணிபுரியும் மாணவிகளின் நிலை மிகவும் பரிதாபகரமானது.கடலூரில் சில பள்ளிகளில் மாணவர்களை கட்டுமானப் பணிகளுக்கு செங்கல் எடுத்துக் கொடுக்கும் வேலைக்குக்கூட பயன்படுத்தப்பட்டதாக அண்மைக் காலத்தில் புகார் எழுந்தது. கல்வித்துறை எத்தனை கட்டுப்பாடுகளை விதித்தாலும், மாணவிகளை பள்ளியில் துப்புரவுப் பணிகளில் ஈடுபடுத்தும் நிர்வாகங்களின் போக்கில், எந்த மாற்றமும் இல்லை.
கடலூரில் சில பள்ளி நிர்வாகங்கள் தங்கள் பள்ளிகளுக்கு, அரசின் உயர் பதவி வகிக்கும் அதிகாரிகளை அழைத்து, விழாக்களை நடத்திவிட்டால் போதும், அதை வைத்துக் கொண்டு, அனைத்து விதிமீறல்களையும் அரங்கேற்றிக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து விடுகின்றன.பள்ளி நிர்வாகத்தின் அத்தகையை மனப்போக்குதான் மாணவிகளை பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய வைத்து இருப்பதாக பெற்றோர் புகார் தெரிவிக்கிறார்கள். பிள்ளைகள் அந்தப் பள்ளியில் முறையாகப் பயின்று வெளிவர வேண்டுமே என்ற ஆதங்கத்தில், கல்விக் கட்டண உயர்வைக்கூட எதிர்க்கும் துணிவு அற்றவர்களாய் இருக்கும் பெற்றோர், இத்தகைய செயல்களையும் எதிர்த்து போர்க்கொடி தூக்க முன்வருவது இல்லை.
பெற்றோர்களால்தான் முடியவில்லை, கல்வித்துறை அதிகாரிகளாவது அவ்வப்போது பள்ளிகளை ஆய்வு செய்து, பள்ளி நிர்வாகங்களின் இத்தகைய மோசமான செயல்களைத் தடுத்து நிறுத்த முன்வருவார்களா என்பதும் கேள்விக்குறியே.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
"மாணவர்களை கல்விப் பணி தவிர வேறெந்தப் பணிகளையும் செய்ய வற்புறுத்தக் கூடாது என்று, கல்வித்துறை விதிகளில் உள்ளது. புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.