உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 20, 2010

அரிய வகை வௌவால் பிடிபட்டது

விருத்தாசலம்: 
            
             விருத்தாசலத்தை அடுத்த தொரவளூர் கிராமத்தில் விவசாயி ஒருவரது நிலத்தில் திங்கள்கிழமை கரும்பு வெட்டிக் கொண்டிருந்த போது, சிவப்பு நிற வௌவால்குட்டியுடன் பிடிபட்டது.  இதனை அப்பகுதி மக்கள் இதுவரை கண்டதில்லை என்று கூறி ஆச்சரியத்துடன் பார்த்தனர். இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Read more »

திருமண கட்டாயப் பதிவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

சிதம்பரம: 

                   திருமண கட்டாய பதிவு சட்டம் முஸ்லிம் மக்களுக்கு எதிரானது. எனவே அச்சட்டம் அமலாக்குவதை நிறுத்தக் கோரி சிதம்பரம் மேலவீதி பெரியார் சிலை  அருகே அகில இந்திய இமாம் கவுன்சில் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

                              மாவட்டத் தலைவர் ஏ.முகமது அபுபக்கர் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலர் டி.சையது இப்ராஹீம் உஸ்மானி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்டத் தலைவர் ஏ.ஆபிருத்தீன், இமாம் கவுன்சில் மாவட்டப் பொருளர் ஒ.ஆர்.ஹஜ்ஜிமஹம்மது, லால்பேட்டை ஜமாத் அமைப்பாளர் எம்.ஒய்.முஹம்மது அன்சாரி, ஷேக்மொய்தீன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.இசட்.கலிலுர்ரஹ்மான் நன்றி கூறினார்.

Read more »

26-ல் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்: பொதுநல அமைப்புகள் அறிவிப்பு

கடலூர்: 

                  சீர்குலைந்து கிடக்கும் கடலூர் நகரச் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி, 26-ம் தேதி (குடியரசு தினம்) கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் மற்றும் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடத்த,பொதுநல அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

                        கடலூர் நகர பொது நல அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை மாலை நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: பாதாளச் சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். சிதைந்து கிடக்கும் சாலைகளை உடனடியாகச் சீரமைக்க வேண்டும். ரயில்வே சுரங்கப் பாதைப் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, 26-ம் தேதி அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் பொது நல அமைப்புகள் சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவது.

                           வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி கண்டனத்தைத் தெரிவிப்பது. இதுகுறித்து 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை தெருமுனைப் பிரசாரம் செய்வது. ரயில்வே சுரங்கப்பாதை கோரி, போராட்டக் குழு முடிவு செய்யும் தேதியில் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்வது. இப்போராட்டங்களால் பயன் கிடைக்காதபோது, கடலூரில் முழுஅடைப்பு நடத்துவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

                      கூட்டத்துக்கு கடலூர் மாவட்ட பேருந்து போக்குவரத்து பொதுத் தொழிலாளர் சங்கத் தலைவர் எம்.குருராமலிங்கம் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் பி.பண்டரிநாதன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்டச் செயலாளர் எம்.சேகர், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன், தமிழ் தேசிய விடுதலை இயக்க மாநில துணைச் செயலாளர் திருமார்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

பாடலீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ராபிஷேகம்

கடலூர் :

               கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் மஹந்யாச ஏகாதச ருத்ர ஜபம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

                 கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் மஹந்யாச ஏகாதச ருத்ர ஜபமும் சிறப்பு அபிஷேகமும் நடந்தது. இதில் 20க்கும் மேற்பட்ட வேதவிற் பன்னர்கள் பங்கேற்று ருத்ர ஹோமமும், வசோந்தார ஹோமம் நடத்தினர். 11 கலசங்களின் நீரால் பாடலீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப் பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை தக்கார் ஜெகன்நாதன், செயல் அலுவலர் மேனகா, நாகராஜ சாஸ்திரிகள், சந்திரா நாகராஜன் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

Read more »

மரவள்ளி கிழங்கு விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

சிறுபாக்கம் : 

                   சிறுபாக்கம், வேப்பூர் பகுதிகளில் மரவள்ளி கிழங்கு பலமடங்கு விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

                 சிறுபாக்கம், வேப்பூர், மங்களூர் பகுதிகளில் நீர்ப் பாசன விவசாயிகள் தங் களது விலை நிலங்களில் மரவள்ளி கிழங்கு பயிரான பர்மா, குங்கும ரோஸ் உள்ளிட்ட கிழங்கு வகைகளை பயிர் செய்வது வழக் கம். கடந்த சில ஆண்டுகளாக போதிய விலை இன்றி மரவள்ளி கிழங்கு பயிர் செய்வதை பெரும் பாலான விவசாயிகள் கைவிட்டனர். சில விவசாயிகள் மட் டும் மரவள்ளி கிழங்கு பயிரிட்டனர். சில மாதங்கள் முன்புவரை 100 கிலோ கிழங்கிற்கு 120 முதல் 140 ரூபாய் மட்டுமே கிடைத்தது. ஆனால் ஒரு மாதமாக மரவள்ளி கிழங்கு மூட்டை எப்போதும் இல்லாத அளவிற்கு விலை உயர்ந்து 650 முதல் 700 ரூபாய் வரை விற்பனையாகிறது. கிழங்கு உற் பத்தி குறைவால் ஆலைகளுக்கு போதிய அளவிற்கு கிழங்கு கிடைக்கவில்லை.

               இதனால் சேலம், தலைவாசல், காட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கிழங்கு ஆலை வியாபாரிகள், கிழங்கு புரோக்கர்கள் சிறுபாக்கம், மங்களூர் பகுதிகளில் முகாமிட்டு விவசாயிகளுக்கு கூடுதல் விலை கொடுத்து கிழங்கினை கொள்முதல் செய்து வருகின்றனர். கூடுதலான விலைக்கு மரவள்ளி விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர்

Read more »

குடியரசு தினத்தன்று கிராம சபை திரளாக பங்கேற்க வலியுறுத்தல்

கடலூர் :

                 குடியரசு தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் பொது மக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: 

மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிளிலும் குடியரசு தினத்தன்று கிராமசபைக் கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கூட்டத்தில், தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத் தில் வரும் நிதியாண்டில் செய்ய வேண்டிய பணிகள் முடிவு செய்து அங்கீகாரம் பெற வேண்டும். ஏரிகள், குளங்கள், கால்வாய் பணிகள் (ஆழப்படுத்துதல் மற் றும் தூர் வாருதல்) தேர்வு செய்ய வேண்டும்.

                     தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து ஊராட்சிகளிலும் சமூக தணிக்கையின் பொருட்டு அக்டோபர் 2009 முதல் இன்றைய தேதிவரை உள்ள இத்திட்டத்திற்கான வருகைப்பதிவேடு பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும். தினசரி வருகை பதிவேட்டில் பொய்யான நபர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதா? தனி நபர் அடையாள அட்டைகள் உரியவரிடம் இருக்க வேண்டும். அவ்வாறின்றி ஊராட்சி அலுவலகத்தில் உள்ளதா? அடையாள அட்டையில் தினசரி வருகை மற்றும் வாரந்தோறும் ஊதியம் வழங்குதல் குறித்த முறையான பதிவுகள் செய்யப்படுகிறதா? போன்ற கேள்விகள் கிராம சபைக் கூட்டத்தில் கேட்க வேண்டும். வரும் 26ம் தேதி நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில் பொது மக்கள், சுய உதவிக்குழுவினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

வணிக வளாகமாக திசைமாறி போகும் கடலூர் உழவர் சந்தை சீரமைக்கப்படுமா?

கடலூர் :

             கடலூர் உழவர் சந்தை சுய உதவிக்குழு போர்வையில் வணிக வளாகமாக மாறிக் கொண்டிருக்கிறது.

                  விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் இடையே தரகரின்றி நேரடியாக உற்பத்தி செய்த காய்கறிகளை விற்பனை செய்வதற்காக உழவர் சந்தை திட்டத்தை 1999ம் ஆண்டு தி.மு.க., அரசு அறிமுகப்படுத்தியது. முதற்கட்டமாக 100 உழவர் சந்தைகளை மாவட் டத் தில் முக்கிய இடங்களில் திறக்கப்பட்டது.  பின்னர் வந்த அ.தி.மு.க., அரசு உழவர் சந்தையை நடத்த ஆர்வம் காட்டவில்லை. அதனால் பல இடங்களில் உழவர் சந்தைகளுக்கு காய்கறி வரத்து அறவே நின்றுபோனது. இருப்பினும் நகரின் மையப்பகுதியில் அமைந்த உழவர் சந்தைகளை மூட விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. அதனால் உழவர் சந்தை சில இடங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது. அதேப்போன்று கடலூர் நகரில் மையப்பகுதியில் சந்தை அமைந்துள்ளதால் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

                      கடலூரில் உள்ள உழவர் சந்தையில் அதிகாரிகள் அலட்சியம் காரணமாக விவசாயிகள் வரத்து குறைந்து வருகிறது. பதிலாக வியாபாரிகள் வருகை அதிகரித்துள்ளது. தற்போது கடலூர் உழவர் சந்தையில் கரும்பு, மணிலா, வாழை வியாபாரிகள் அதிகளவில் விற்பனை செய்து வருகின்றனர். இது ஒரு புறமிருக்க சுயஉதவிக்குழு என்கிற போர்வையில் தனியார்கள் மலைக்காய்கறிக் கடைகளை நடத்தி வருகின்றனர். இவர்கள் விற் பனை செய்யும் காய்கறிகளின் விலையும் வெளிமார்க்கெட் விலையும் ஒரே மாதிரியாகவே உள்ளன. தற்போது உழவர் சந் தைக்குள் ஆவின், பிரியாணி ஓட்டல், பெட்டிக் கடை போன்றவைகளுக்கு அனுமதியளிக்கப்பட் டுள்ளன. இன்னும் ஏராளமான கட்சிக்காரர்கள் கடை கேட்டு விண்ணப் பித்துள்ளனர். ஏற்கனவே விவசாயிகள் போய் வியாபாரிகள் வந்துவிட்ட உழவர் சந்தை தற்போது வணிக வளாகமாக திசைமாறி கொண்டிருக்கிறது. நேர்மையான அதிகாரிகளை நியமித்து உழவர் சந்தையை கண்காணித்தால்தான் முதல்வரின் கொள்கை நிறைவேறும்.

Read more »

சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் டெல்டா விவசாயிகள் கவலை : நோய் தாக்கி விளைச்சல் குறைந்ததால் பாதிப்பு

சிதம்பரம் :

                     காவிரி டெல்டா பாசன பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் பகுதியில் நோய் தாக்கியதால் நெல் மகசூல் குறைந்ததாலும், போதிய விலை இல்லை என்பதாலும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

                   காவிரி டெல்டா பாசன பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் பகுதியில் ஒரு லட்சத்து 25 ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்படுகிறது. ஜூன் மாதம் துவங்கும் சம்பா சாகுபடி இந்த ஆண்டு தண்ணீர் தாமதமாக திறக்கப்பட்டதால் சாகுபடியும் தாமாகியது. சுமார் 70ஆயிரம் ஏக்கருக்கு மேல் இந்த ஆண்டு வீராணம் மற்றும் வடவாறு பாசனம் மூலம் பயிரிடப்பட்டது. ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங் களில் பெய்யும் மழை மற்றும் வெள்ளத்தால் கடந்த சில ஆண்டுகளாகவே சம்பா சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கடுமையான வெள்ள பாதிப்பு இல்லை என்றாலும் மழையால் நெற்பயிரில் பூ வெளியில் வரும் சூல் பருவத்தில் நோய் தாக்குதல் ஏற்பட்டு விளைச்சல் பாதியாக குறைந்துவிட்டதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

                      சம்பா பருவத்தில் நியாயமான விலை கிடைக்கும் என்பதால் 135 நாட்கள் விலையக்கூடிய பி.பி.டி., ரகம் பயிரிடப்படுகிறது. இந்த ரகம் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து என்பதால் கடந்த நவம் பர், டிசம்பர் மாதத்தில் பெய்த மழையால் நோய் தாக்குதலுக்குள் ளாகியது. இலை சுருட்டு புழு, தண்டு துளைப்பான், மற்றும் அறுவடை நேரத்தில் புகையான் தாக்குதல் என தொடர்ந்து நோய் தாக்கியது. நோயை கட்டுப்படுத்த மருந்து தெளிக்க ஏக்கருக்கு 2000 ரூபாய் வரை செலவு செய்தும் பயிரை காப்பாற்ற முடிந்ததே தவிர, நோயை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.
                   
                        சம்பா நெல் சாகுபடியில் நல்ல நிலையில் ஏக்கர் ஒன்றுக்கு 40 மூட்டைகள் வரை மகசூல் கிடைக்கும். இந்த ஆண்டு ஏக்கருக்கு 20 மூட்டைகள் கிடைப்பதே பெரிய விஷயமாக உள்ளதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். ஏக்கர் ஒன்றுக்கு மருந்து தெளிப்பு செலவு சேர்த்து குறைந்தது 15,000 ரூபாய் வரை செலவு செய்தும் குறைந்த மகசூல், விலையும் கடந்த ஆண்டை விட குறைவு, அறுவடைக்கு ஆட் கள் கிடைப்பதில்லை, இயந்திரம் வாடகையும் அதிகரிப்பு என விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக புலம்புகின்றனர்.

                    விவசாயத்தை நம்பி வாங்கிய பயிர் கடன், தனி நபர் கடன் உள் ளிட்ட பல்வேறு கடன்களும் அதிகளவில் விவசாயிகளை வாட்டி வதைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பயிர் இழப்புகளுக்கு பயிர் இழப்பீடு திட்டத்தின் மூலம் பிர்கா அளவில் மகசூல் பரிசோதனை அறுவடை மூலம் இழப்பீடு வழங்கும் நடைமுறையை பின்பற்றாமல், பாதிக்கப்பட்ட அனைத்து விவசாய நிலங்களையும் ஆய்வு செய்து அறுவடை மகசூல் பரிசோதனை செய்து இழப்பீட்டை ஈடுகட்டும் வகையில் பயிர்காப்பீடு திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என உழவர் மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் ரவீந்திரன் உள்ளிட்ட விவசாய சங்க நிர்வாகிகள் கலெக்டர், வேளாண் இயக்குநர், வேளாண் உற்பத்தி ஆணையருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

                      மழையால் நெற்பயிர்கள் சாய்ந்துவிட்ட நிலையில் ஆட்கள் வைத்து அறுவடை செய்ய வேண் டிய நிலை உள்ளது. ஆனால் ஆட்கள் கிடைப்பதில்லை. இதனால் பெரும்பாலான பகுதிகளில் பெரம்பலூர், அரியலூர் மாவட் டங்களில் இருந்து ஆட் களை அழைத்துவந்து கூடுதல் கூலி கொடுத்து அறுவடை செய்து வருகின்றனர். மேலும் சக்கரம் உள்ள இயந்திரம் வைத்து நெல் அறுவடை செய்தால் உளுந்து பயிர் பாதிக்கும் என்பதால் பெல்ட் உள்ள இயந்திரம் கொண்டு அறுவடை செய்கின்றனர். அந்த இயந்திரத்திற்கு கூடுதல் கட்டணம் கட்ட வேண்டியுள்ளது.

கலப்படத்தால் விலை குறைவு: 

                           தேசிய விதை கழகத்தில் இருந்து வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் நெல் விதைகள் வாங்கி தரப்படுகிறது. இந்த ஆண்டு வாங்கிக் கொடுக்கப்பட்ட பி.பி.டி.,ரக விதையுடன் 120 நாட்களில் விளையக்கூடிய ஜெ.ஜெ.எல்., ரக நெல்லும் கலந்துவிட்டதால் இந்த ஆண்டு நெல் விலை கடந்த ஆண்டை விட குறைந்துவிட்டதாக விவசாயிகள் புலம்புகின்றனர். கடந்த ஆண்டு பி.பி.டி., ரக நெல் 61 கிலோ மூட்டை 900 ரூபாய் வரையும் குவிண்டாலுக்கு 1440 வரை விலை கிடைத்தாகவும், இந்த ஆண்டு கலப்பட நெல்லால் 725 ரூபாய் வரைதான் விலை கிடைப்பதாக புலம்புகின்றனர்.

Read more »

என்.எல்.சி., நிர்வாகத்தை பலப்படுத்த நடவடிக்கை: மத்திய அமைச்சர் வாசன் பேட்டி

பண்ருட்டி :

                    என்.எல்.சி., நிர்வாகத்தை பலப்படுத்த எல்லா முயற்சிகளும் செய்யப்படும் என மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார்.இது குறித்து அவர் பண்ருட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது: காங்., கட்சியில் ராகுல் காந்தி வருகைக்கு பின் தமிழகத்தில் 14 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். காங்., கட்சி தமிழகத்தில் முதலிடம் பெற எல்லா முயற்சிகளும் செய்து வருகிறோம்.

                       கட்சி தேர்தல் 3 மாதத் தில் நடக்கும் வாய்ப்பு உள்ளது. அதன்பின் காங்., தமிழகத்தில் முதலிடம் பெற வாய்ப்புள்ளது. என்.எல்.சி., நிர்வாகத்தை பலப்படுத்த எல்லா முயற்சிகளும் செய்யப்படும். இதில் தொழிலாளர் பாதிக்காமல் அவர்களது நலன் பாதுகாக்கப்படும். நிசான் கார் கம்பெனியுடன் எண்ணூர் துறைமுகம் உடன்படிக்கை போடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் முதல் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கார் எண்ணூர் துறைமுகம் மூலம் ஏற்றுமதி செய்யப்படஉள்ளது. மத்திய அரசு ஏழை, எளிய மக்களின் தரத்தை உயர்த்தியுள்ளது. கடந்த 2004ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின் மக்களுக்கான பல திட் டங்களால் 2009ல் மீண்டும் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அரசு அமைந் துள்ளது. மத்திய அரசு நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத் திற்காக 39ஆயிரத்து 100 கோடி நிதி ஒதுக்கீடு செய் துள்ளது. இது கடந்த ஆண்டை விட 144 சதவீதம் கூடுதலாகும். கல்விக்காக 34 ஆயிரத்து 400கோடியும், சுகாதாரத்திற்காக 16 ஆயிரத்து 534 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார்.

Read more »

தினமும் ஒரு திட்டத்தை அறிவிக்கிறார் முதல்வர் : எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் பெருமிதம்

நெல்லிக்குப்பம் :

             பி.என். பாளையம் ஊராட்சியில் மட்டும் ஒரே நாளில் 50 லட் சம் ரூபாய் மதிப்பில் "டிவி'க்கள் வழங்குவதாக எம்.எல்.ஏ. சபா ராஜேந்திரன் கூறினார்.

                நெல்லிக்குப்பம் அடுத்த பி.என். பாளையம் ஊராட்சியில் இலவச டி.வி. வழங்கும் விழா நடந்தது. ஊராட்சி தலைவர் முத்தழகி தலைமை தாங்கினார். தாசில் தார் பாபு, பலராமன் முன்னிலை வகித்தனர். பாலகிருஷ்ணன் வரவேற்றார். பயனாளிகள் 2054 பேருக்கு இலவச "டிவி'க்களை வழங்கிய எம். எல்.ஏ. சபா ராஜேந்திரன் பேசியதாவது : இந்த ஊராட்சியில் மட்டும் ஒரே நாளில் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள "டிவி'க்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. கருணாநிதி எவ்வளவு திட்டங்களை கொண்டு வந்த பிறகும் திருப்தியில்லாமல் தினமும் ஒரு திட் டத்தை அறிவித்து கொண்டே இருக்கிறார்.

                   பெண்கள் சிரமத்தை தவிர்க்க எரிவாயு இணைப்பு, உலக அறிவு பெற "டிவி' வழங்குகிறார். கூரை வீடுகள் இல்லாத மாநிலமாக மாற்ற 21 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டி தரும் திட்டத்தை கொண்டு வந்தார். நடப்பு ஆண்டிலேயே மூன்று லட்சம் வீடுகள் கட்டப்பட உள்ளது. நெல்லிக்குப்பம் நகராட்சியில் கட்டப்பட்ட சமுதாய கூடங்கள் பயன்படுத்தபடாமல் உள்ளது. இதுபோல் இல்லாமல் மக்கள் பயன்படுத்தினால் இங்கு சமுதாய கூடம் கட்டப்பட உள்ளது என்றார். மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சியில் நடந்த விழாவில் ஆயிரத்து 691 பேருக்கு இலவச "டிவி'க் களை எம்.எல்.ஏ. சபா ராஜேந்திரன் வழங்கினார். பேரூராட்சி தலைவர் ஜெயமூர்த்தி, சடாட்சரம், செயல் அலுவலர் ராஜமாணிக் கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

பள்ளியில் 'டிவி' வழங்கல் : மாணவர்கள் படிப்பு பாதிப்பு

மேல்பட்டாம்பாக்கம்:

                மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சியில் இலவச "டிவி' வழங் கும் விழா அங்குள்ள பெண்கள் நடுநிலைப் பள்ளியில் நடந்தது. நேற்று பள்ளிக்கூடம் உண்டு என்பதால் வழக்கம் போல் காலையிலேயே மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். "டிவி' வழங்கும் விழாவுக்காக காலையில் இருந்தே ஒலிப்பெருக்கி மூலம் விளம்பரம் செய்ததால் மாணவிகள் படிக்க முடியவில்லை. விழா மதியம் ஒரு மணிக்கே துவங்கியது. எம்.எல்.ஏ., சபாராஜேந்திரன் விழாவில் கலந்துக் கொண்டதால் தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்கள் விழாவில் கலந்துக் கொண்டனர். வகுப்பறையை விட்டு வெளியே செல்லக்கூடாது என மாணவிகளை எச்சரிக்கை செய்திருந்தனர். இதனால் விழாவையும் பார்க்க முடியாமல். படிக்கவும் முடியாமல் மாணவிகள் சிரமப்பட்டனர்.

Read more »

மராத்தான் ஓட்டப்போட்டியில் பங்கேற்பவர்களுக்கு கடலூரில் வரும் 22ம் தேதி மருத்துவ பரிசோதனை

கடலூர் :

                 சென்னையில் நடக்கும் மாநில அளவிலான மராத் தான் ஓட்டப்
போட்டிக்கான தேர்வு போட்டியில் பங்கேற்க உள்ளவர்களுக்கு 22ம் தேதி கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் மருத்துவப் பரிசோதனை நடக்கிறது.

இது குறித்து கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் பத்மநாபன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

                     தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வரும் பிப்ரவரி மாதம் சென்னையில் மராத்தான் ஓட்டப் போட்டி நடக்கிறது. இதற் காக கடலூர் மாவட் டத்தில் பங்கேற்கும் வீரர்கள் தேர்வு போட்டி வரும் 24ம் தேதி கடலூரில் நடக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் டாக்டர்களிடம் மருத்துவச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். எனவே இதற்கான மருத் துவ பரிசோதனை கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனை டாக்டர்களை கொண்டு வரும் 22ம் தேதி மற்றும் 23 ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. பங்கேற்கும் போட்டியாளர்கள், பள்ளிகள் தத் தம் போட்டியாளர்களுடன் குழுக்களாக வந்து மருத் துவ பரிசோதனை மருத்துவச் சான்றுடன் கூடிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். போட்டியில் பங்கேற்பவர்கள் 24ம் தேதி காலை 6 மணிக்கு கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் ஆஜராக வேண்டும்.

Read more »

பயறு வகைகளில் அறுவடைக்கு பின் செய்ய வேண்டிய நேர்த்தி முறைகள்

விருத்தாசலம் :

           பயறு வகைகளில் அறுவடைக்குபின் நேர்த்தி முறைகளை கையாண்டு விவசாயிகள் அதிக லாபம் பெறலாம் என வேளாண் துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து வேளாண் துணை இயக்குனர் தனவேல், கோட்ட வேளாண் அலுவலர் அமுதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 

               உளுந்து, பச்சைபயறு, துவரை மற்றும் தட்டைபயறு ஆகிய வகைகளில் கூடுதல் வருமானம் பருப்பு சதவீதத்தை பொறுத்தே அமைகிறது. பயறு வகைகளில் 85 சதவீத பருப்பு அளவும், கூடுதல் விலையும் பெற அறுவடைக்கு பின் செய்ய வேண்டிய நேர்த்தி முறைகள். பயறு வகை காய்கள் நெற்றுகளாக மாறியும், இலைகள் பழுத்து உதிர ஆரம் பிக்கும் போது அறுவடை செய்ய வேண் டும். நெற்றுக்கள் காப்பிக்கொட்டை நிறமாகி இருந்தால் நெற்றுக்களைப் பிரித்து எடுக்க வேண்டும். செடியில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட நெற்றுக்களை காயவைத்து விதைகளை பிரித்து எடுத்து சுத்தம் செய்ய வேண்டும். பிரித்து எடுத்த விதைகளில் கலந்துள்ள கல், மண், தூசி மற்றும் சருகுகள், முதிராத விதைகள், பூச்சி நோய் தாக்கிய விதைகள், உடைந்த விதைகள் இவைகளை தனியாக நீக்க வேண்டும்.

                   விதைகளின் ஈரப்பதம் 9 சதவிகிதத்திற்கு இருக்குமாறு நன்கு காய வைக்க வேண்டும். ஊக்குவிக்கப்பட்ட களிமண்ணை பயறுவகைப் பொருட்களுடன் 1: 100 என்ற விகிதத்தில் கலந்து வைப்பதால் பூச்சிகள் வராமல் காப்பாற்றலாம். இதை தவிர வேப்பங்கொட்டை தூளை 1 கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் உபயோகித்து பயன் பெறலாம். துவரை விதைக்கு செம்மண் தடவி காயவைத்தும் சேமிக்கலாம். பயறு வகை விதைகள் ஸ்பெஷல், நல்லது, சுமார், சாதாரணம் என நான்கு தரங்களாக பிரிக்கப்படுகிறது. எனவே விவசாயிகள் ஒழுங்குமுறை கூடத்திற்கு பயறுகளை கொண்டு வந்து லாபம் அடையுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

Read more »

காங்., தமிழகத்தில் முதல் நிலை பெற வேண்டும்: மத்திய அமைச்சர் வாசன் விருப்பம்

பண்ருட்டி :

                      ஆதிதிராவிடர்கள் அதிகம் வசிக்கும் ஆயிரம் கிராமங்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசு புதிய திட்டம் செயல்படுத்த உள்ளது என மத்திய அமைச்சர் வாசன் கூறினார். பண்ருட்டியில் வாழப்பாடி ராமமூர்த்தியின் 70வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட காங்., தலைவர் நெடுஞ் செழியன் தலைமை தாங்கினார். நகர தலைவர் மணி வரவேற்றார். புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம், பி.ஆர்.எஸ்.வெங்கடேசன், அகில இந்திய காங்., கமிட்டி உறுப்பினர் கோவிந்தராஜ், முன் னாள் எம்.எல்.ஏ.,க்கள் வேலுசாமி, முத்தழகன், தாமேதரன் உள் ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

              மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் பேசியதாவது: மறைந்த தலைவர்கள் மூப்பனாரும், வாழப்பாடியாரும் தமிழகத் தில் காங்., கட்சிக்கு சிறந்த அடித்தளம் அமைத்துள்ளனர். தமிழகத்தில் 43 ஆண்டுகள் காங்., ஆட்சியில் இல்லை என்றாலும், பிற கட்சிகளின் வெற்றியை நிர்ணயிக்கும் நிலையில் உள்ளது. அதை மாற்றி காங்., தமிழகத்தில் முதல் நிலை பெற வேண்டும். இன்று இந்திய அளவில் சோனியா தலைமையில் வலுவான இயக்கமாக காங்., உள்ளது. 2004ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பா.ஜ.வை வீழ்த்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைத்து சோனியா வழி நடத்தினார். அதனை மக்கள் ஏற்று கொண்டு 2004ல் மன்மோகன் தலைமையில் காங்., ஆட்சி அமைந்தது. மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதால் 2009 லோக்சபா தேர்தலில் மீண்டும் காங்., தலைமையிலான ஆட்சி அமைய மக்கள் ஆதரவளித்தனர்.

                          தற்போது மத்திய அரசு கல்விக்காக 34 ஆயிரத்து 400 கோடி நிதியும், சர்வசிக்ஷா அபியான் திட்டத்திற்கு 13 ஆயிரத்து 200 கோடி ரூபாயும், உயர்கல்வி திட்டத்திற்கு 2 ஆயிரம் கோடி ரூபாயும், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு 39 ஆயிரத்து 100 கோடி ரூபாயும், சிறுபான்மை நலன் மேம்பாட்டிற்கு ஆயிரத்து 740 கோடியும், நகர்புற வளர் ச்சிக்கு 12 ஆயிரத்து 847 கோடியும், குடிசை இல்லாத நாடாக மாற்றிட 7 ஆயிரம் கோடியும், சுகாதாரத்திற்கு 21 ஆயிரத்து 113 கோடி ஒதுக்கியுள்ளது.

              ஆதிதிராவிடர்கள் அதிகம் வசிக்கும் ஆயிரம் கிராமங்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசு புதிய திட்டம் செயல்படுத்த படவுள் ளது. மத்திய அரசின் நல திட்டங்கள் குறித்து கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ராகுல்காந்தி வருகைக்கு பின் கட்சியில் எழுச்சி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் காமராஜர் ஆட்சி என்கிற லட்சியம் நிறைவேற வேண்டுமெனில் கிராம, வட்டார, மாவட்ட, மாநகரங்களில் கட்சியில் அடிப்படை தேர்தல் மூலம் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட வேண்டும். அப்படிப்பட்ட நல்லநிலை ஏற்பட்டால் தமிழகத்தில் காங்., கட்சி முதல் நிலை பெற வாய்ப்பு ஏற்படும் என்றார்.

                   முன்னதாக விழாவிற்கு வந்த மத்திய அமைச்சருக்கு பண்ருட்டி நகர எல்லையான பூங்குணத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் சேர்மன் பஞ்சவர்ணம், முன்னாள் எம்.எல். ஏ., ஜெயசந்திரன், துணை சேர்மன் கோதண்டபாணி, வேலுமணி, ராஜன், ஞானசேகரன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

Read more »

உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு : கலெக்டர்

கடலூர் :

                 ஊராட்சிக்கு ஆண்டிற்கு மூன்று லட்சம் ரூபாய் என்ற அடிப்படையில் பிரதி மாதம் 25 ஆயிரம் வீதம் மானிய நிதி பிரித்து வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

                   உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழக அரசு தன் சொந்த வருவாயிலிருந்து குறிப் பிட்ட தொகையை மாநில நிதிக்குழு மானியமாக வழங்கி வருகிறது. மாவட்ட ஊராட்சிக்கு மக்கள் தொகை அடிப்படையில் வழங்கப்படுகிறது. ஒன்றியங்கள் மற்றும் ஊராட்சிகளுக்கு குறைந்தபட்ச மானியத்துடன் மக்கள் தொகை அடிப்படையிலும் மானியம் சேர்த்து வழங்கப்படும்.

              ஒன்றியத்திற்கு குறைந்தபட்ச மானியம் ஆண்டிற்கு 30 லட்சம் ரூபாய் என்ற அடிப்படையில் பிரதிமாதம் 2.50 லட்சம் வழங்கப்படும்.ஊராட்சிக்கு ஆண்டிற்கு மூன்று லட்சம் ரூபாய் அடிப்படையில் பிரதி மாதம் 25 ஆயிரம் ரூபாய் பிரித்து வழங்கப்படும். தற்போது ஜனவரி 2010 மாதத்திற்குரிய மாநில நிதிக்குழு மானியம் மொத்தம் 4.10 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

Read more »

வேலை உறுதியளிப்பு திட்டத்தை கண்காணிக்க சமூக தணிக்கை குழு அமைக்க உத்தரவு

கடலூர் :

                    தமிழகத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை கண்காணிக்க, ஒவ் வொரு ஊராட்சியிலும், சமூக தணிக் கைக் குழு அமைக்க உத்தரவிடப்பட் டுள்ளது. ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், நியாயமாக மற்றும் சரியாக செயல்படுவதை கண்காணிக்க, ஒரு சமூக தணிக்கை குழு அமைக்க வேண் டும் என, ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள் ளார். இக்குழுவை, மூன்று வகைகளில் தேர்வு செய்ய அறிவுறுத்தப் பட் டுள்ளது. தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அனைத்து தொழிலாளர்களில், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் நிர்வாகிகள், சுய உதவிக்குழுக்களின் ஊக்குனர் கள் மற்றும் பிரதிநிதிகள், மகளிர் திட்டம் அல்லது வாழ்ந்து காட்டுவோம் திட்டங் களில் பயிற்சி பெற்றவர்களில் தேர்வு செய்யலாம்.

                         பள்ளி இறுதித் தேர்வு வரை படித்தவர்கள், அல்லது அதற்கு மேல் படித்தவர்கள், கடந்த 2008ம் ஆண்டு ஏப்., 1ம் தேதிக்கு பிறகு, 50 நாட்களுக்கு மேல் வேலை செய்தவர்கள் முன்மொழியப்படலாம். மூன்று வகைகளில் ஒவ்வொரு வகைக்கும் இரு உறுப்பினர்கள் வீதம், ஆறு பேரை ஊராட்சி தேர்வு செய்ய வேண்டும். சமூக தணிக்கை குழு பட்டியலில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி சமுதாய மக்களில் தகுதியானவர்கள் இல்லாமல் போனால், குறைந்தபட்சம் 50 நாட்கள் என்ற வரையறை, அவர்களுக்காக தளர்த் தப்பட வேண்டும். துணை வட்டார வளர்ச்சி அதிகாரி மற்றும் மேற்பார்வையாளர் கொண்ட குழு, மூன்று வகைகளில் தகுதியானவர்கள் அனைவரின் பட்டியல் தயாரிக்க வேண்டும். எந்த வகையிலும், ஊராட் சித் தலைவர் மற்றும் அவரின் இரண்டு அலுவலரிடமிருந்து பட்டியல் பெறக் கூடாது. வட்டார வளர்ச்சி அதிகாரி (கிராமஊராட்சிகள்) தன்னிடம் அளிக் கப்படும் பெயர் பட்டியல் மீது ஆய்வு செய்த பட்டியலை, ஊராட்சித் தலைவரிடம் அளிக்க வேண்டும்.வரும் 26ம் தேதி நடைபெறும் கிராம சபையின் போது, அந்த உறை திறக்கப் பட வேண்டும். ஒவ்வொரு ஊராட்சியின் சமூக தணிக்கை குழுவில் இடம்பெறும் ஆறு உறுப்பினர்களில், இரண்டு பெண்கள், தாழ்த்தப்பட்ட, பழங் குடியைச் சேர்ந்த ஒருவர் இருக்க வேண் டும். உறுப்பினர்கள் பட்டியல் வரும் பிப்ரவரி 10ம் தேதி இறுதி செய் யப்படும்.

Read more »

தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூல்: அதிகாரிகள் குழு ஆய்வு துவங்கியது

கடலூர் :

                        தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில், கட்டணங் ள் வசூல் குறித்த ஆய்வு துவங்கியது.

                      பள்ளி, கல்வி நிறுவனங்களில், முறையான கட்டணம் நிர் ணயம் செய்வதற்காக, நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. கடந்த 15 நாட்களுக்கு முன், பள்ளி கல்வி இயக்குனரகம் மூலம், அனைத்து மெட்ரிகுலேஷன், நர்சரி, சுய நிதி பள்ளிகள் மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் நடைபெறும் சுய நிதி வகுப்புகள் ஆகியவற்றுக்கு, 40 பக்கங்கள் கொண்ட படிவம் வழங்கப்பட்டது. அதில், பள்ளியின் கட்டமைப்பு, பணிபுரியும் ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் பற்றிய விவரம், வசூலிக்கப்படும் கட்டணம் உள் ளிட்ட பல்வேறு விவரங்கள் கோரப்பட்டிருந்தன. இப்படிவங்களை பூர்த்தி செய்து, சோதனைக்கு வரும் குழுவிடம் ஒப்படைக்க வலியுறுத்தப்பட்டது.

                  இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் முதல், அனைத்து பள்ளிகளிலும், அந்தந்த மாவட் டங்களைச் சேர்ந்த உதவி தொடக்க கல்வி அலுவலர், வட் டார வள மைய மேற்பார்வையா ளர், அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் என ஆறு பேர் வீதம் 11 குழுக் கள் அமைத்து ஆய்வு செய்யப் பட்டு வருகிறது. இதில், முக்கியமாக, பள்ளிகளில் மாணவ, மாணவியரிடமிருந்து வசூல் செய்த கட்டணத் தொகை முழு விவரம், ரசீது புத்தகங்கள், பள்ளி கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்படுகின்றன. இவை தவிர, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி, தொடக்கக் கல்வி மாவட்ட அதிகாரி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆய்வாளர் ஆகியோர் தலைமையிலான குழுவினர், தனியாக ஆய்வு செய்து வருகின்றனர். மூன்று நாள் தொடர் சோதனைக்குப் பின், வரும் 23ம் தேதி, ஆய்வறிக்கையை பள்ளி கல்வி இயக்குனர் மூலம், நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான குழுவிடம் ஒப்படைக் கப்படவுள்ளது. இதைத் தொடர்ந்து, பள்ளிகளில் முறையான கட்டணம் நிர்ணயம் செய் வது குறித்து, முடிவு செய்யப்படும் என தெரிகிறது.


பெற்றோர் ஆதங்கம்: 

                        பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள வெவ்வேறு மாவட்டங்களிலிருந்து  அதிகாரிகளை நியமித்தால், முறையானதாக இருக்கும். ஆனால், அந்தந்த மாவட்டங்களில் சி.இ.ஓ., மூலம் அதிகாரிகள், ஆசிரியர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் தெரிந்த முகமாக இருப்பதால், கண்டிப்பான ஆய்வுப்பணி நடக்குமா என்பது கேள்விக்குறி தான். அதுமட்டுமின்றி, பெரும்பாலான பள்ளிகளில் வசூலிக்கும் கட்டணத்திற்கு ரசீதும், நன்கொடைக்கு துண்டு சீட்டும், ஒரு சில பள்ளிகளில் நிர்வாகத்தால் தனியாக அச்சிடப்பட்ட ரசீதும் கொடுக்கப்படுகிறது. ஆய்வில், வெறும் ரசீதை பார்த்து சோதனை செய்வதால், ஒரு பலனும் இல்லை என்பதே பெற்றோர்களின் ஆதங்கம்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையில் டாஸ்மாக் மூலம் ரூ.7.30 கோடி சரக்கு விற்பனை

கடலூர் :

                   பொங்கல் பண்டிகையை யொட்டி கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் 7.30 கோடி ரூபாய்க்கு சரக்கு விற்பனையாகியுள்ளது.தமிழகத்தில் மது விற்பனையை அரசே ஏற்று டாஸ்மாக் கடைகள் மூலம் நடத்தி வருகிறது. இதிலி ருந்து கிடைக்கும் பெருந் தொகையை வைத்து தான் அரசு பல் வேறு இலவச திட்டங் களை மக்களுக்கு வழங்கி வருகிறது.

                கடலூர் மாவட்டத்தில் 229 டாஸ்மாக் கடைகள் உள்ளன. மது அருந்துவதற்காக 49 பார் கள் செயல்பட்டு வருகின்றன.இவைத் தவிர தனியார் ஓட்டல்கள் மூலம் 13 மதுக்கடையுடன் பார்கள் இயங்கி வருகின்றன. டாஸ்மாக் நிறுவனம் குடிப்பிரியர்களை வளைத்து போடுவதற்காக அவ்வப்போது பல புதிய மது வகைகள் அறிமுகப் படுத்தி வருகிறது. தற் போது 140க்கும் மேற்பட்ட மதுபான வகைகள் டாஸ் மாக் கடைகளில் விற் பனை செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கனவே மூன்று டிஸ்டிலரிகளில் அரசு மதுபாட்டில்களை கொள் முதல் செய்து வந்தது. தற்போது விற்பனை அதி கரித்திருப்பதையொட்டி மேலும் இரண்டு டிஸ்டிலரிகளில் மதுபாட்டில்களை கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் மதுபாட்டில்கள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடலூர் மாவட் டத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 1.25 கோடி ரூபாய்க்கு விற்பனையாகிறது. பண்டிகை காலங்களில் அதன் விற்பனை மும் மடங்காக அதிகரித்துள்ளது.

                 இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி மூன்று நாள் விற்பனை "களை கட்டியது'. போகி பண்டிகையன்று 1.59 கோடி ரூபாய்க்கு விற்பனையானது. பொங்கலன்று இந்த விற்பனை இருமடங்காகி 2.80 கோடியாக உயர்ந்தது. மாட்டுப் பொங்கல் அன்று திருவள்ளுவர் தினத்தையொட்டி விடுமுறை அளிக்கப்பட்டது. மீண்டும் காணும் பொங்கல் அன்று மூன்று கோடி ரூபாயாக உயர்ந்தது. இந்த மூன்று நாள் பண்டிகை காலங்களில் மொத்த விற்பனை 7.30 கோடி ரூபாய். கடந்த ஆண்டு பொங் கல் பண்டிகையின் போது 5.41 கோடி ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 1.89 கோடி ரூபாய் கூடுதலாக விற்பனையாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Read more »

ஊதிய உயர்வு நிர்ணயம் செய்ய 'கட்டிங்': கூட்டுறவு பணியாளர்கள் அதிருப்தி

கடலூர் :

                 தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களிடம், புதிய ஊதிய நிர்ணயம் செய்ய, தனி அலுவலர் கள் சதவீத அடிப்படையில், "கட்டிங்' கேட்பதால், அனைத்து பணியாளர்களும் நொந்து நூலாகியுள்ளனர். தமிழகத்தில் உள்ள 4,500 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், 27 ஆயிரம் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர் களுக்கு புதிய ஊதிய விகிதம் நிர்ணயித்து, ஏப்., 1, 2008 முதல் நிலுவைத் தொகை வழங்க, கடந்த 11ம் தேதி, அரசாணை பிறப்பிக்கப் பட்டது. ஏற்கனவே 7,000 கோடி ரூபாய் வரை, விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டதால், வறுமையில் வாடும் சங்கங்களின் நலன் கருதி, நிலுவைத் தொகையை, பணியாளர்களிடம் கொடுக்காமல், அவர்களின் வருங் கால வைப்பு நிதியில் சேர்க்க அறிவுறுத் தப்பட்டது. "இந்த பணத்தை வருங்கால வைப்பு நிதியில் சேர்க்க, ஒவ்வொரு பணியாளரும் 25 சதவீதம், "கட்டிங்' கொடுக்க வேண் டும்' என, தனி அலுவலர்கள், பணத்தை "கறந்து' வருகின்றனர்.

                 மாதந்தோறும் குறைந்தபட்சம் 25 ஆயிரம் ரூபாய், சம்பளம் பெறும் தனி அலுவலர்கள், மிக குறைந்தபட்ச சம்பளமாக 2,500 ரூபாய் பெறும் பணியாளர்களையும் விட்டு வைப்பதில்லை என்ற குற்றச் சாட்டு உள்ளது. மேலிடத்தில் புகார் தெரிவித் தால், பழிவாங்கப்படுவோமோ என்ற அச்சத் தில் உள்ளனர்.  "விவசாய கடன் தள்ளுபடியால், சம்பளம் முழுமையாக பெற முடியாமல் தவித்தோம். தற் போது சம்பளம் கொடுத்து, அத்துடன் ஊதிய உயர்வு அளித் தும், அதிகாரிகளின் அடாவடித்தனத்தால், முழு பலனை அடைய முடியவில்லை. ஒவ்வொரு முறையும் உயர்த் தப் படும் டி.ஏ., விற்குத் தான், "கட்டிங்' கேட்டு கழுத்தை அறுக்கின்றனர் என்றால், வருங்கால வைப்பு நிதியில் சேர்ப் பதற்கு கூட கேட்கின்றனரே...' என தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர் கள், நொந்து நூலாகியுள்ளனர்.

Read more »

ஒயர் திருட டிரான்ஸ்பார்மருக்கு தீ



திட்டக்குடி :

                 பெண்ணாடம் அருகே காப்பர் ஒயர் திருட டிரான்ஸ்பார்மரை கொளுத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.பெண்ணாடம் அடுத்த இறையூர் கைகாட்டியிலிருந்து கொத்தட்டை செல் லும் சாலையில் எண்.6, 100 கே.வி., திறனுடைய டிரான்ஸ்பார்மர் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் மின் இணைப்பை துண்டித்து, அதனுள் இருந்த 170 லிட்டர் ஆயிலை கீழே ஊற்றினர். எடை குறைவான பின்னர் டிரான்ஸ்பார்மரை கீழே இறக்கி காப்பர் ஒயர் திருட கொளுத்தினர். உள்ளே அலுமினிய காயில் இருந்ததால் டிரான்ஸ்பார்மரை போட்டுவிட்டு தப்பியோடினர். சேத மதிப்பு 35 ஆயிரம் ரூபாய். பெண்ணாடம் துணைமின் நிலைய இளமின் பொறியாளர் பன்னீர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read more »

பெற்றோர் கண்ணெதிரில் வேன் மோதி குழந்தை பலி

குறிஞ்சிப்பாடி :

                குள்ளஞ்சாவடி அருகே பெற்றோர் கண் எதிரே வேன் மோதி குழந்தை இறந்தது. குள்ளஞ்சாவடி அடுத்த கோரணப்பட்டை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மூத்த மகன் லெனின்குமார்(4) சத்திரம் விவேகானந்தர் நர்சரி பள்ளியில் எல். கே.ஜி. படித்து வருகிறார். இவர் தினமும் பள்ளிக்கு வேனில் சென்று வருவார். பள்ளி வேன் பழுதானதால் நேற்று காலை வாடகை வேன் வந்தது. லோகநாதன் மற்றும் மாணவர்கள் வேனில் ஏறியதும், டிரைவர் வேனை பின்னால் நகர்த்தினார். அப்போது ரோட்டில் விளையாடிக் கொண்டிருந்த லோகநாதன் இரண்டாவது மகன் தருண்குமார் (2) மீது வேன் மோதியது. தடுமாறி விழுந்த சிறுவன் தருண்குமார் மீது வேனின் பின் சக்கரம் ஏறியது. அதில் படுகாயமடைந்த தருண்குமாரை அவர து பெற்றோர் காப்பாற்ற கடலூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை தருண்குமார் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

பரங்கிப்பேட்டை கடற்கரையில் இறந்து கிடந்தவர் அண்ணாமலை பல்கலை., இன்ஜினியரிங் மாணவர்

பரங்கிப்பேட்டை :

              பரங்கிப்பேட்டை அருகே கடற்கரையில் இறந்து கிடந்தவர் அண்ணாமலை பல்கலை இன்ஜினியரிங் மாணவர் என தெரியவந்தது. பரங்கிப்பேட்டை அடுத்த புதுக்குப்பம் கடற் கரையில் கடந்த 14ம் தேதி அடையாளம் தெரியாத வாலிபர் உடல் கரை ஒதுங்கியது. அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை.

                 இதுகுறித்து கொத்தட்டை கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் கொடுத்த புகாரின்பேரில் பரங்கிப் பேட்டை சப் இன்ஸ் பெக் டர் செல்வராஜ் வழக்கு பதிந்து விசாரித்து வந்தார். வாலிபரின் உடல் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இந்நிலையில் இறந்து கிடந்த வாலிபர் நெய் வேலி பெரியாகுறிச்சி ஐ.பி.ஐ., நகரை சேர்ந்த சந்திரன் மகன் மனோபாலன் என்றும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார் என்றும் தெரியவந்தது. அதையடுத்து மனோபாலனின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.மனோபாலன் பொங்கலுக்கு அவரது வீட்டிற்கு வருவதாக பெற்றோரிடம் போனில் தகவல் தெரிவித் துள்ளார். அதற்குள் பொங் கல் அன்று மனோபாலன் புதுக்குப்பம் கடற்கரையோரம் இறந்து கிடந்தார். அவரது இறப்பு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதையொட்டி மனோபாலன் எப்படி இறந்தார், அவருடன் சென்றது யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read more »

100 நாள் திட்டத்தில் அமைத்த குளக்கரையை காணோம்: துண்டு பிரசுர போட்டியால் பரபரப்பு

பரங்கிப்பேட்டை :

                   சிதம்பரம் அருகே, 100 நாள் திட்டத்தில், புதிதாக அமைக்கப் பட்ட குளக்கரையை காணவில்லை என்று ஒரு தரப்பும், குளக்கரை கண்டுப்பிடிக்கப்பட் டது என்று மற்றொரு தரப்பும், துண்டு பிரசுரம் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

                    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே, பெரியகுமட்டி கிராமத் தில் 100 நாள் வேலை திட்டத்தில், நான்கு லட்சம் ரூபாய் மதிப்பில் நந்தவனம் குளம், சுடுகாட்டு குளம் புதிதாக அமைக்கப்பட் டது. குளத்தை சுற்றி, கரை பலப்படுத்தப்பட்டது. கிராமத்தை சேர்ந்த சிலர், குளத்தின் கரையில் இருந்த மண்ணை டயர் வண்டி மூலம் எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் குளக்கரை பலவீனமடைந் துள்ளது. ஊராட்சி நிர்வாகத்திற்கு தெரியவந்ததும், இனிமேல் குளக்கரையில் உள்ள மண்ணை யாரும் அள்ளக்கூடாது என, தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த வாலிபர் சங்கத்தினர், "காணாமல் போனது பற்றிய அறிவிப்பு' என்ற தலைப்பில், 100 நாள் திட்டத்தில் அமைக்கப்பட்ட குளக்கரை காணவில்லை என்று, துண்டு பிரசுரத்தை கிராமம் முழுவதும் ஒட்டினர். அதைத் தொடர்ந்து, ஊராட்சி முன்னாள் உறுப்பினர் கோவிந்தசாமி என்பவர், பெரியகுமட்டி ஊராட்சியில், காணாமல் போன குளக்கரை கண்டுப்பிடிக்கப் பட் டது என, போட்டிக்கு துண்டுப் பிரசுரம் ஒட்டினார். இதனால் பெரியகுமட்டி பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. துண்டுப் பிரசுரம் ஒட்டியவர் கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஊராட்சி தலைவர் ஜெய் சங்கர், பரங்கிப்பேட்டை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக் டர் புகழேந்தி, ஏட்டு மாரியப்பன் ஆகியோர் பெரியகுமட்டி கிராமத் திற்கு சென்று விசாரணை மேற் கொண்டனர்.

Read more »

போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை: பண்ருட்டி அருகே பரபரப்பு

பண்ருட்டி :

                   பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. பண்ருட்டி அடுத்த தொரப்பாடி ஒன்றாவது வார்டு மேட்டாமேடு மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு கும்பாபிஷேகம் தொடர்பாக கூட்டம் நடத்தினர். திருப்பணிக்கு கோவில் சார் பில் நடத்திய சீட்டு பணம் ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 960 ரூபாயை எடுத்துக் கொள்ளவும், கூடுதல் செலவை குடியிருப்புகளில் வரி வசூல் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.

                      இதற்கு அதே பகுதியைச் சார்ந்த தங்கவேல் மற்றும் அவரது மகன்கள் அரங்கநாதன், கருப்பன், தனசுலிங்கம், ராதாகிருஷ்ணன், சந்திரசேகரன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைக் கண்டித்த சக்திவேல் என்பவரை, தங்கவேல் குடும்பத்தினர் தாக்கினர். தங்கவேல் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மேட்டாமேடு பகுதியை சேர்ந்த 20 பெண்கள் உள்ளிட்ட 100 பேர் நேற்று காலை 11 மணியளவில் புதுப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் உறுதியளித்தார். அதனையேற்று பகல் 12.30 மணிக்கு கலைந்து சென்றனர்.

Read more »

விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா

பண்ருட்டி :

                பண்ருட்டி அடுத்த பனிக்கன்குப்பம், எல்.என்.புரம் ஊராட்சியில் பொங்கல் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. பண்ருட்டி அடுத்த பனிக்கன்குப்பம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பொங்கல் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா ஆர்.சி. நடுநிலைப்பள்ளியில் நடந்தது.

                 ஊராட்சி தலைவர் ஆரோக்கியதாஸ் தலைமை தாங்கி போட்டியில் வெற்றி மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். இதில் ஒன்றிய அலுவலக பிரதிநிதி கோதண்டபாணி, ஊராட்சி உதவியாளர் பாலமுருகன், மக்கள் நலப் பணியாளர் சரவணபாலன், உறுப்பினர்கள் லூர்துமேரி, பூபதி, வேம்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர். எல்.என்.புரம் ஊராட்சி சார்பில் பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு ஊராட்சி தலைவர் சேகர் தலைமை தாங்கினார். உறுப்பினர் சுதாமன், விஜயலட்சுமி, கோவிந்தராஜ், மலர்பூவன் முன்னிலை வகித்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior