உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 28, 2011

இறந்தவர்களின் உடலை இலவசமாக கொண்டு செல்ல "109 " ஆம்புலன்ஸ் திட்டம்

             தமிழகம் முழுவதும் இறந்தவர்களின் உடலை இலவசமாக கொண்டு செல்ல, "109' என்ற புதிய ஆம்புலன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 
 
              தமிழகம் முழுவதும், கடந்த தி.மு.க., ஆட்சி காலத்தில், உயிர் காக்கும் உன்னத சேவை திட்டம் என்ற பெயரில், "108' ஆம்புலன்ஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. விபத்து, மாரடைப்பு, பிரசவம் உள்ளிட்ட உயிர் காக்கும் அனைத்து உதவிக்கும், "108' என்ற டெலிபோன் எண் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்துக்காக, அதிநவீன முதலுதவி கருவிகளுடனும், 400க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட்டன. மாவட்டத்தின் பரப்பளவை கொண்டு, தலா, 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் அளிக்கப்பட்டன. 
 
              "108'ல் பணியாற்றும் ஊழியர்களின் அர்ப்பணிப்பால், இத்திட்டம் மக்கள் மனதில் தனியிடம் பிடித்தது. நகர்ப்புறங்களில் மட்டுமின்றி, கிராமப்புறங்களிலும், "108' ஆம்புலன்ஸ் திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. தற்போது, அரசு மருத்துவமனையில் உள்ள ஆம்புலன்சையும், "108'ல் இணைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அவசர சிகிக்சை தேவைப்படுவோருக்கு, "108' ஆம்புலன்ஸ் இயங்குவது போல், மருத்துவமனைகளில் இறந்தவர்களின் உடலை எடுத்து செல்ல, இலவச ஆம்புலன்ஸ் இயக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த உதவி வேண்டுவோருக்காக, "109' என்ற இலவச டெலிபோன் எண்ணை அறிமுகப்படுத்தவும் அரசு திட்டமிட்டு வருகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

"தானே" புயல் சின்னம் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

கடலூர் : 

             கடலூர் துறைமுகத்தில், 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னைக்கு கிழக்கு, தென் கிழக்கில், 800 கி.மீ., தூரத்தில், வங்கக் கடலில் உருவாகியிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மேலும் வலுவடைந்து, "தானே' புயல் சின்னமாக மாறியுள்ளது. இது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. "தானே' புயல் கடலூருக்கும், ஆந்திர மாநிலம் நெல்லூருக்குமிடையே, 30ம் தேதி கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. "தானே' புயல் உருவாகியுள்ளதை அடுத்து, கடலூர் துறைமுகத்தில் தூர எச்சரிக்கையைத் தெரிவிக்கும் வகையில், 2ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

          இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடலோரப் பகுதியில் கடல், கொந்தளிப்புடன் காணப்படுகிறது. வழக்கத்தைவிட அலை சீற்றம் அதிகரித்துள்ளது. கடலூரில், தாழங்குடா, தேவனாம்பட்டினம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில், நேற்று முன்தினம் இரவு திடீரென கடல் நீர், 300 மீட்டர் தூரத்திற்கு ஊருக்குள் புகுந்ததால், மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். நாளை, கடலூர் மாவட்ட கடலோர பகுதியில், 45 முதல், 55 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என, கடலூர் மீன் வளத்துறை அலுவலகம் எச்சரித்துள்ளது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குள் செல்லவில்லை. கடலூர் சில்வர் பீச்சில் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.

               படகுகள் சேதம்: கடலூர் மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு, கடல் நீர் திடீரென ஊருக்குள் புகுந்தது. இதனால் ஏராளமான படகுகள், ஒன்றோடு ஒன்று மோதியும், அதிலிருந்த வலைகள், இன்ஜின்கள் சேதமடைந்தன' என, வந்த தகவலின் பேரில், கடலூர் மீன்வளத் துறை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன், கடலூர் அடுத்த புதுக்குப்பம் கடலோரப் பகுதியில், நேற்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் புதுக்குப்பம் பகுதியில், 70க்கும் மேற்பட்ட படகுகளில் வைக்கப்பட்டிருந்த வலைகள், இன்ஜின்கள், படகுகள் சேதமடைந்தது கண்டறியப்பட்டது.
















Read more »

கடலோர கிராமங்களில் ஒருங்கிணைந்த உவர் நீர் பண்ணையம்: எம்.எஸ்.சுவாமிநாதன்

சிதம்பரம்:

           கடலோர கிராம மக்களின் வாழ்வாதாரம், வருவாயைப் பெருக்கும் வகையில் ஒருங்கிணைந்த உவர் நீர் பண்ணையம் தொடங்கப்படும் என விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

            சிதம்பரத்தை அடுத்த கிள்ளை பிச்சாவரத்தில் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் சுனாமி நினைவஞ்சலி நிகழ்ச்சி, கடலோர வள ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம் அடிக்கல் நாட்டு விழா, ஒருங்கிணைந்த உவர் நீர் பண்ணையம் தொடக்க விழா ஆகியவை திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவில் ஒருங்கிணைந்த உவர் நீர் பண்ணையத்தைத் தொடங்கி வைத்து ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் எம்.எஸ்.சுவாமிநாதன் பேசியது: 

               படிக்காத மீனவ இளைஞர்களுக்கு கடலோர வள பயிற்சி அளிக்கவும், புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் கடலோர வள ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. கடலோர கிராமங்களில் கடல் நீரிலிருந்து விவசாயம், மீன் வளர்ப்பு, மரங்கள் வளர்ப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டு அதற்கான பயிற்சியையும் வழங்கப்பட உவுள்ளது. இப்பகுதியில் உள்ள மக்களுக்குச் சத்துணவு இல்லை. எனவே இப்பகுதி மக்களுக்குச் சத்துணவு வழங்குவதற்கான நடவடிக்கையை எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்டுள்ளது.÷சுனாமி பேரலையின் போது அந்தமான் நிக்கோபார் தீவில் வசித்த பழங்குடியினர் மட்டும் உயிர் தப்பினர். 

               ஏனென்றால் சுனாமி வருவது குறித்த அறிகுறிகளை அறிந்து உயர்ந்த மரத்தின்மீது அமர்ந்து தப்பியுள்ளனர். எனவே நாம் பழமையான விஞஞானத்தையும், புதிய வஞ்ஞானத்தையும் இணைத்து செயல்படுத்த வேண்டும். மீண்டும் சுனாமி பேரழிவிலிருந்து கடலோர மக்களைக் காக்க கடலோரப் பகுதிகளில் சுரபுன்னை போன்ற காடுகளை வளர்க்க வேண்டும் என்றார் எம்.எஸ். சுவாமிநாதன். 

விழாவில் அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் அறிவியல் புல முதல்வர் டி.பாலசுப்பிரமணியன் பேசியது: 

             கடலோர கிராமமான இப்பகுதியில் பெண்கள் வீட்டில் இருந்தவாறு வருமானத்தை பெருக்கும் வகையில் கடல் வண்ண மீன் வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூ.10 ஆயிரம் வருமானம் கிடைக்கும்.  கடல் நீரில் வண்ண மீன் உற்பத்தி செய்யும் பணி ஓரிரு மாதங்களில் தொடங்கப்படும். அண்ணாமலைப் பல்கலைக்கழகம், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டத்தைத் செயல்படுத்த உள்ளது என்றார். 

              விழாவில் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பயனாளிகளுக்கு உமிரி மற்றும் கண்டல் செடிகளை வழங்கினார். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன கிராம வள மையம் சார்பில் தயாரிக்கப்பட்ட மீனவ சமுதாயத்திற்கான அரசு நலத்திட்டங்கள் விளக்க கையேடு, கட்டுமரம் மற்றும் பைபர் படகுகளில் பொருத்தப்பட்டுள்ள டீசல் எஞ்சின் பராமரிப்பு மற்றும் பழுது பார்ப்பதற்கான விளக்க கையேடு, மீனவர்களுக்கான செயல்முறை விளக்க கையேடு ஆகிய 3 நூல்கள் வெளியிடப்பட்டன.

               முன்னதாக சென்னை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன செயல் இயக்குநர் அஜய்பரீடா வரவேற்றார். சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்புத் துறை தேசியத் திட்ட இயக்குநர் ஏ.செந்தில்வேல், தமிழக அரசு சுற்றுச்சூழல் துறை இயக்குநர் டி.எஸ்.சீனுவாசமூர்த்தி, சேத்தியாத்தோப்பு ஆயக்கட்டு விவசாயிகள் சங்கத் தலைவர் கே.விஜயகுமார், மீனவர் கிராமத் தலைவர் ஏ.அன்புஜீவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  கடலோர வள ஆராய்ச்சி மைய இயக்குநர் வி.செல்வம் நன்றி கூறினார்.













Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior