உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 10, 2010

என் ஊரில் என் அனுபவம்

          
                கடந்த சனிக்கிழமை (03/07/210) அன்று சொந்த வேலை காரணமாக கடலூருக்கு வந்திருந்தேன்.

1 . கடலூர் பழைய அண்ணா பாலத்தில்

               நீண்ட நாட்களுக்கு பிறகு கடலூர் பழைய அண்ணா பாலத்தில் நடந்து செல்லும்  வாய்ப்பு கிடைத்தது. கல்லூரியில் படிக்கும் பொது வகுப்பை கட் அடித்துவிட்டு வந்து  இந்த பாலத்தில்தான் என் நண்பர்களோடு பெரும்பாலான நாட்களை கழித்து இருக்கிறேன். . . அந்த நாட்களில் அங்கே அன்னாசி பழம் விற்கும், கையில் இருக்கும் காசுக்களைஅந்த அன்னாசிபழங்களை வாங்கி சாப்பிடுவோம். அனால் இப்போது அந்த கடைகளை அங்கே காணவில்லை. அந்த நாட்கள் என் கண்முன்னே வந்து சென்றது.........

2 . பழைய புத்தக கடை

             அங்கே என் கணினி அறிவை வளர்த்த ஒரு பழைய புத்தக கடை ( இந்த கடையில் தான் முதன் முதலாக  நான் கம்ப்யூட்டர் உலகம் என்ற புத்தகத்தினை பாதிவிலைக்கு வாங்கினேன், இங்கேதான் என் கணினி புத்தகம் படிக்கும் பயணம் தொடங்கியது ) தற்போது தன் கடைக்கு  பெயர் பலகை வைத்து சற்று முன்னேறி இருக்கிறார். அவருக்கு என் நன்றியினை இங்கே சொல்லி கொள்வதில் ஒரு ஆத்ம திருப்தி. 

3. பிச்சாவரம் சுற்றுலா மையம்

             முதன் முதலாக சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா மையம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இயற்கையின் அழகான படைப்பு நம் ஊரில் என்ற பெருமை பட்டுக்கொண்டேன். நம் மாவட்டத்தின் இந்த சிறப்பையும் நாம் இழக்கும் நிலையில் இருக்கிறோம் என்பதை எங்கே சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால் அங்கே பராமரிப்பு நன்றாக இருந்தாலும் அங்கே வைத்துள்ள அரசாங்க எச்சரிக்கை பலகை எனக்கு வியப்பாக இருந்தது. தனியார் படகில் உலா வந்து ஏதேனும் உயிர் இழப்பு ஏற்பட்டால் நாங்கள் பொறுப்பில்லை......என்ற வரி தான் என்னை வியப்பில் ஆழ்த்தியது. தமிழக சுற்றுலாதுறையின் கீழ் இயங்கும் இச்சற்றுலா மையத்தில், தனியார் படகு எப்படி வந்தது என்றே தெரியவில்லை.. மேலும் தொலை நோக்கி வழியாக பிச்சாவரம் கடற்கரையை பார்க்கலாம் என்று சொன்னார்கள்,  நம்பி போய் பார்த்தேன் ஏமாற்றம்தான் மிச்சம், அதற்கு ஐந்து ருபாய் கட்டணம், வாகனங்கள் நிறுத்துவதற்கு கட்டணம் இல்லாதது கொஞ்சம் நன்றாக இருந்தது.

4 . கிள்ளை ரயில்வே நிலையம்

            கிள்ளை ரயில்வே நிலையத்தில் வைத்திருந்த ஊர் பெயரை காட்டும் பெயர் பலகையில் கிள்ளை (KILLAI) என்று இருக்க வேண்டிய ஆங்கில சொல் கில்லே (KILLE) என்று இருக்கிறது. ஒரு வேலை ஆங்கிலேயர் காலத்து சொல்லோ, இந்த மாதிரி (KILLE)  என்று மூன்று இடங்களில் எழுதப்பட்டு இருக்கிறது. கொஞ்சம் யாராச்சும் கவனிச்சு சொல்லுங்கப்பா, திருத்தம்  வந்தால் எனக்கு தெரியபடுத்தவும்.

5 .  சி. முட்லூர் அரசு கலைக் கல்லூரி 

  இங்கே வைத்துள்ள கல்லூரியின் பெயர்ப்பலகை அநேகமாக கல்லூரி ஆரம்பித்த காலத்தில் வைக்க பட்டது என்று நினைக்கிறேன். பெயர்ப்பலகையினை கொஞ்சம் புதிதாக எழுதி வர்ணம் பூசக்கூடதா? 

6 . பி. முட்லூர் - சிதம்பரம் பாலம் 

         இந்தப்பாலம் கடலூரில் இருந்து பி முட்லூர் வழியாக சிதம்பரம் செல்லும் மக்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். இதற்காக அரசாங்க அதிகாரிகளுக்கு என் நன்றியினை  தெரிவித்து கொள்கிறேன்.

7 . கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை

           இன்னும் மாறாத அந்த மூக்கை துளைக்கும் நாற்றங்கள். இதற்கு முடிவு எப்போது என்றே தெரியவில்லை, இங்கே புதிதாக பிரமாண்டமாய் கட்டப்பட்டு வரும் கெம் பிளாஸ்ட் சன்மார் நிறுவனத்தினை கண்டு வியந்தேன். சிப்காட் வரவேற்பு பலகை அருகே கொட்டப்பட்டுள்ள பிளாஸ்டிக் குப்பைகளுக்கு விடிவுகாலம் எப்போது?

8 . ஜாய் அலுகாஸ் நகை கடை 

        கடலூரில் லாரென்ஸ் சாலையில் பிரமாண்டமாய் ஜாய் அலுகாஸ் நகை கடை, நம்ம ஊரு மின்சாரம் இங்கே உள்ள குளிர் சாதன பெட்டிகளுக்கு பயன்படுத்துவதை கொஞ்சம் குறைத்தால் ன்றாக இருக்கும்.


குறிப்பு: இங்கே எழுதபட்டுள்ள வரிகள் அனைத்தும் யார் மனதையும்  புண் படுத்தாமல் என் அனுபவ வரிகள்.



Read more »

தனித்துப் போட்டியிடவும் தயார்: டாக்டர் அன்புமணி



                   சட்டப் பேரவைத் தேர்தலில் பென்னாகரம் ஃபார்முலாவை பின்பற்றவும் பாமக தயாராக இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சரும், பாமக இளைஞரணித் தலைவருமான டாக்டர் அன்புமணி தெரிவித்தார். சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கு  வழங்கப்பட்டது. 

கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது: 

            கூட்டணி பற்றி தெரிந்து கொள்வதில் அனைவரும் ஆர்வமாக இருக்கிறீர்கள். பாமக இந்தப் பக்கமா, அந்தப் பக்கமா என்று பத்திரிகைகள் எழுதுகின்றன.கூட்டணி குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். அதுகுறித்து ராமதாஸ் முடிவு செய்வார். தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் உள்ளது.தேவைப்பட்டால் பென்னாகரம் ஃபார்முலாவைக் கூட பின்பற்ற தயாராக இருக்கிறோம். செல்வாக்குள்ள 80 தொகுதிகளை அடையாளம் கண்டு அதில் கட்சியை பலப்படுத்த வேண்டும்.கட்சியை பலப்படுத்துவதுதான் நமது நோக்கமாக இருக்க வேண்டும். அதற்காக நாம் கூட்டணி அமைக்க மாட்டோம் என்றும் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றார்.கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது: பழைய நிர்வாகிகளும், தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள புதியவர்களும் போட்டி போட்டுக் கொண்டு கட்சிப் பணியில் ஈடுபட வேண்டும். அப்படி பணிபுரிபவர்களுக்கு என் மூலமாகவோ, அன்புமணி மூலமாகவோ மீண்டும் பதவி கிடைக்கும்.பாமகவில் ஏராளமான இளைஞர்களை சேர்க்க வேண்டும். 
            
               பாமகவை இளைஞர்கள் கட்சியாக மாற்ற வேண்டும். அதற்காகவே இளைஞரணித் தலைவராக அன்புமணி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சமூக நீதிக்காகவும், சுற்றுச்சூழலுக்காகவும் பாமகவைப் போல பாடுபட்ட கட்சி எதுவும் இல்லை. பசுமைத் தாயகம் அமைப்பு மூலம் நாங்கள் செய்துள்ள சாதனைகள் எண்ணற்றவை. பாமக ஒரு பசுமைக் கட்சியாகும்.பந்திக்காக அலைகிறோம் என்று நம்மைப் பற்றி பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். நாமும் பந்தி போடும் காலம் வரும்.பாமக தொண்டர்கள் அனைவரும் குறைந்தபட்சம் 10 மரக் கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும். அதற்கான சான்றிதழை கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து பெற வேண்டும். நானும், அன்புமணியும் 10 மரக் கன்றுகளை நட்டு சான்றிதழ் பெறப் போகிறோம் என்றார் ராமதாஸ். பென்னாகரம் இடைத் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்டு 40 ஆயிரம் வாக்குகளுடன் 2-வது இடத்தைப் பிடித்தது. அதுபோலவே 2011 சட்டப் பேரவைத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிடவும் தயங்க மாட்டோம் என்பதை அன்புமணி சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

Read more »

நெய்வேலியில் மனு கொடுத்தாலும் விசாரணை நடத்தாத மகளிர் காவல் நிலையம்!



நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையம்.
நெய்வேலி:
 
             நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போதிய போலீசார் இல்லாததால் பொதுமக்கள் அளிக்கும் புகார் மீது விசாரணை செய்வதில் தாமதம் நீடிக்கிறது.நெய்வேலி வட்டம் 19-ல் நெய்வேலி அனைத்து மகளிர் காவல்நிலையம் உள்ளது. இக்காவல் நிலையத்தில் தற்போது ஒரு உதவி ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர், 2 தலைமைக் காவலர்கள் மட்டுமே உள்ளனர். 
 
               ஆனால் இக்காவல் நிலையத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளோ அதிகமாக உள்ளன. குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி, வடலூர், நெய்வேலி, மந்தாரக்குப்பம் உள்ளிட்டப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இங்குதான் புகார் அளிக்க வேண்டும்.இங்கு புகார் அளிக்க வரும் பொதுமக்கள் புகார் மனுவைக் கொடுத்துவிட்டு மாதக் கணக்கில் விசாரணைக்காக காத்திருக்க வேண்டியுள்ளது.காவல் நிலையத்தில் மொத்தம் 4 பேர் உள்ள நிலையில் ஒரு தலைமைக் காவலர் நீதிமன்றப் பணிக்காக செல்ல வேண்டியுள்ளது. மேலும் ஒரு காவலர் எழுத்தர் பணியை பார்க்க வேண்டியுள்ளது. 
 
             புகார் மனு மீது விசாரணை செய்யும் உதவி ஆய்வாளர், புகாருக்கு உள்ளான நபரை அழைத்து வர போதிய போலீஸôர் இல்லாமல் திண்டாட்டத்துக்கு ஆளாகிறார். மேலும் சில நாள்களில்,போலீஸôர் பாதுகாப்புப் பணி என்ற பெயரில் வெளியூருக்கு சென்றுவிடுவதால், புகார் அளிக்கவரும் பொதுமக்கள் ஏமாற்றுத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.இக்காவல் நிலையத்துக்கு என்று தனி வாகனமும் இல்லை. இதனால் குற்றம்சாட்ட நபரை அழைத்து வர ஆட்டோவையே நம்பி இருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 
 
                     தற்போது இக்காவல் நிலையத்துக்கு என்று மாற்றம் செய்யப்பட்ட பெண் காவலர் ஒருவர், நெய்வேலி வட்டம் 8-ல் உள்ள காவல் நிலையத்தில் தான் பணிபுரிவேன் என்று கூறி அங்கு பணி புரிந்து வருகிறாராம்.இதனால் மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் மற்ற இரு பெண் காவலர்களும், "இரவு பகல் பாராமல் பணி செய்ய வேண்டியிருக்கிறது. எங்களுக்கு என்று குடும்பம், பிள்ளைகள் உள்ளனர். அவர்களை எப்போது நாங்கள் கவனிப்பது' என்று வேதனையுடன் கூறுகின்றனர். உறுதுணையாக பணிபுரியும் போதிய காவலர்கள் இன்றி அவதியுறும் பெண் காவலர்களின் நிலையையும், பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுவை விரைந்து விசாரணை நடத்தவும்  எஸ்.பி. நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Read more »

கடலூர் அருகே வகுப்பறையில் மாணவரை நிர்வாணப்படுத்திய ஆசிரியர்


 

பரங்கிப்பேட்டை : 

               கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வகுப்பறையில் பத்தாம் வகுப்பு மாணவரை நிர்வாணப்படுத்திய ஆசிரியர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

                கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டையைச் சேர்ந்தவர் ஹபீப் ரஹ்மான்; வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவரது மகன் உபைது ரஹ்மான் (15). இவர், பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 6ம் தேதி, கணித பாட ஆசிரியர் சுந்தர்ராஜன், பாடம் நடத்தும் போது, "ஒன்றில் அரை போனால் எவ்வளவு?' என கேட்டார். மாணவர் உபைது ரஹ்மான் சிரித்துக் கொண்டே, "அரை' என கூறியுள்ளார். வகுப்பில் இருந்த சக மாணவர்கள் சிரித்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர் சுந்தர்ராஜன், உபைது ரஹ்மானின் பேன்ட், சட்டையை சக மாணவர்கள் மூலம் கழற்றினார். ஜட்டியை பாதி அவிழ்த்தபோது, மாணவர் கதறி அழுததால் விட்டுள்ளார். பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்ற மாணவர் உபைது ரஹ்மான், நடந்த சம்பவம் குறித்து தனது தாயிடம் கூறினார். அவரது தாய், இதைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார். இதனால் மனம் வெறுத்த மாணவர் உபைது ரஹ்மான், இரண்டு நாட்களாக பள்ளிக்குச் செல்லவில்லை.

                   நேற்று முன்தினம் (8ம் தேதி) பள்ளிக்குச் சென்ற சக மாணவர்கள், ஆசிரியரை கண்டித்து வகுப்புக்கு செல்லாமல் புறக்கணித்தனர். அவர்களை மற்ற ஆசிரியர்கள் சமாதானம் செய்து வகுப்பறைக்குள் அனுப்பி வைத்தனர். மாணவரை நிர்வாணப்படுத்திய சம்பவம், பிற மாணவர்கள் மூலம் நேற்று வெளியே தெரியத் துவங்கியது. இதைத் தொடர்ந்து, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் முகமது யூனுஸ், ஜெகநாதன் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். தகவலறிந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட செயலர் முத்துராஜா தலைமையில் 50க்கும் மேற்பட்டோர், ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பள்ளி முன் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. டி.எஸ்.பி., மூவேந்தன், தாசில்தார் காமராஜ் ஆகியோர் பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பாலசுப்ரமணியத்திடம் விசாரணை நடத்தினர். இப்பிரச்னையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் சுந்தர்ராஜன் நேற்று பள்ளிக்கு வரவில்லை. கலெக்டர் சீத்தாராமன் உத்தரவின் பேரில், ஆசிரியர் சுந்தர்ராஜன் நேற்றிரவு சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

Read more »

டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் பயிரைக் காப்பாற்ற மேட்டூர் அணையை திறக்கக் கோரிக்கை

 


கடலூர்:

              டெல்டா மாவட்டங்களில் தற்போது பயிரிடப்பட்டு இருக்கும் குறுவை நெல் பயிரைக் காப்பாற்றவும் சம்பா நாற்றங்கால் பணிகளை முன்னரே தொடங்கவும் வசதியாக, மேட்டூர் அணையைப் பாசனத்துக்குத் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

அனைத்து விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பின் கடலூர் மாவட்ட அமைப்புச் செயலாளர் பி.ரவீந்திரன் தமிழக அரசுக்கு வெள்ளிக்கிழமை விடுத்த கோரிக்கை:

               தமிழகத்தில் 11 காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 3 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. கடலூர் மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு இருக்கிறது. இவை பெரும்பாலும் ஆழ்குழாய்க் கிணறுகளையும், தென்மேற்குப் பருவ மழையையும் நம்பியே உள்ளன. டெல்டா நிலங்களில் ஆழ்குழாய்க் கிணறுகளில் தண்ணீப் பெரும்பாலும் உவர் நீராக மாறிவருகிறது. இதனால் குறுவை நெல் வளர்ச்சி செழிப்பாக இல்லை. தென்மேற்குப் பருவ மழையும் எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. 

              எனவே காய்ந்து கொண்டு இருக்கும் குறுவை நெல்பயிரைக் காப்பாற்றவும், சம்பா சாகுபடிப் பணிகளை முன்னரே தொடங்கவும், விவசாயிகள் விரும்புகிறார்கள். எனவே இப்போதே மேட்டூர் அணையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் திறக்கலாம். கடந்த ஆண்டு ஜூலை 28-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. அதே நேரத்தில் வடகிழக்குப் பருவமழையும் தொடங்கிவிட்டது. இதனால் மழைநீரும் காவிரி நீரும் பெருளவுக்கு வீணாகக் கடலில் கலந்தது. கடந்த 10 ஆண்டுகளில் 4 முறைதான் மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட்டு இருக்கிறது. காலம் கடந்து திறக்கும் போதெல்லாம் வடகிழக்கு பருவ மழையின் பாதிப்புகளை விவசாயிகள் சந்திக்க நேரிட்டது. தற்போது மேட்டூர் அணையில் கணிசமான அளவுக்குத் தண்ணீர் உள்ளது. தென்மேற்குப் பருவமழை கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் பெய்து வருகிறது. கர்நாடக மாநில அணைகள் நிரம்பி வருகின்றன.

            எனவே இப்போதே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் விடுவிக்கப்பட்டால், குறுவை நெல் பயிரை நூறு சதவீதம் காப்பாற்ற முடியும், சம்பா பயிரை வடகிழக்குப் பருவ மழையின் தாக்குதலில் இருந்தும் காப்பாற்ற முடியும்.  காவிரி நடுவர் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், தமிழகத்துக்கு சட்டப்படி கர்நாடகம் வழங்க வேண்டிய காவிரி நீரைப் பெறுவதில், தமிழக அரசு தயக்கம் காட்டுவது ஏன் என்று புரியவில்லை. பருவ நிலைகள் பெரிதும் மாறிவருகின்றன. அதற்கு ஏற்ப டெல்டா மாவட்டங்களுக்கு மேட்டூர் அணை நீரை விடுவிப்பதிலும், அதிகாரிகள் விவசாயிகளின் கருத்தைக் கேட்டறிந்து புதிய அணுகு முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றார் ரவீந்திரன்.

Read more »

நெய்வேலியில் 13-வது புத்தகக் கண்காட்சி தொடங்கியது



நெய்வேலியில் வெள்ளிக்கிழமை துவங்கிய 13-வது புத்தகக் கண்காட்சியை திறந்துவைத்து, புத்தகங்களை பார்வையிடும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா (வலது)

நெய்வேலி:

              நெய்வேலி 13-வது புத்தகக் கண்காட்சியை என்எல்சி தலைவர் ஏ.ஆர்.அன்சாரி முன்னிலையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். 

              இந்திய அளவில் சென்னை, கொல்கத்தா, புதுதில்லி புத்தகக் கண்காட்சிகளுக்கு அடுத்தபடியாக திகழும் நெய்வேலி புத்தகக் கண்காட்சி இந்த ஆண்டு 13-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. நெய்வேலி வட்டம் 11-ல் உள்ள லிக்னைட் அரங்கில் அமைக்கப்பட்டுள்ள இப்புத்தகக் கண்காட்சியை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தொடங்கி வைத்தார்.கண்காட்சியைத் திறந்துவைத்த அவர் கண்காட்சி அரங்கினுள் மக்களோடு மக்களாக சென்று புத்தகக் கடைகளை பார்வையிட்டார். உடன் என்எல்சி தலைவர் ஏ.ஆர்.அன்சாரி, இயக்குநர்கள் பாபுராவ், கந்தசாமி, சேகர் உள்ளிட்டோர் சென்றனர்.

               இதையடுத்து லிக்னைட் ஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நிறுவனத் தலைவர் ஏ.ஆர்.அன்சாரி தலைமை வகித்தார். இதைத்தொடர்ந்து தினம் எழுத்தாளர் கெüரவிக்கப்படும் வரிசையில் முதல் நாளான வெள்ளிக்கிழமை காரைக்காலைச் சேர்ந்த பேராசிரியர் மு.சாயயு மரைக்காயர் கெüரவிக்கப்பட்டார். எஸ்.சந்த் கம்பெனி லிட். எனும் பதிப்பாளர் கௌரவிக்கப்பட்டார். முன்னணி எழுத்தாளர் ரா.சண்முகம் எழுதிய வாழ்க்கைப் பிரச்னைகள் எனும் நூலை நீதிபதி கே.என்.பாஷா வெளியிட அதன் முதல் பிரதியை என்எல்சி தலைவர் எ.ஆர்.அன்சாரி பெற்றுக்கொண்டார். இதையடுத்து நடந்த கலை, இலக்கிய நிகழ்ச்சியில் கோவை மதி சாரதா குழுவினரின் பாட்டு மன்றம் நடைபெற்றது. ஜூலை 9-ல் தொடங்கி 18-ம் தேதிவரை தொடர்ந்து 10 தினங்களுக்கு புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது.

Read more »

கடலூரை அடுத்த பள்ளிப்பட்டு கிராமத்தில்1030 பேருக்கு காஸ் அடுப்பு: எம்எல்ஏ வழங்கினார்

கடலூர்:

           மக்கள் கேட்காமலேயே நலத் திட்டங்களை அள்ளித் தந்தவர் முதல்வர் கருணாநிதி என்று, கடலூர் சட்டப் பேரவை உறுப்பினர் கோ.அய்யப்பன் பேசினார். கடலூரை அடுத்த பள்ளிப்பட்டு கிராமத்தில் அரசு நலத்திட்டங்கள் வழங்கும் விழா, வெள்ளிக்கிழமை நடந்தது. 

                பள்ளிப்பட்டு ஊராட்சியில் 550 பேருக்கும், அழகியநத்தம் கிராமத்தில் 480 பேருக்கும், இலவச காஸ் அடுப்புகளை அய்யப்பன் எம்.எல்.ஏ. வழங்கினார். பள்ளிப்பட்டு கிராமத்தில் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.3 லட்சம் செலவில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடத்தை அய்யப்பன் திறந்து வைத்தார். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் ரூ.3 லட்சத்தில் கட்டப்பட்ட கிராம நூலகத்தையும் அவர் திறந்து வைத்துப் பார்வையிட்டார். நிகழ்ச்சிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், பத்மநாபன், வட்ட வழங்கல் அலுவலர் குமார், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் செல்வி, திமுக ஒன்றியச் செயலாளர் ஜெயபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு வேண்டுகோள்: கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்

நெய்வேலி:

                பள்ளிகளில் உள்ள துறைகளில் உடற்கல்வித் துறைதான் மிகவும் ஒழுங்கீனமாக உள்ளது என கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கூறினார்.

                கடலூர் வருவாய் மாவட்ட மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கூட்டம், கடலூர் கல்வி மாவட்ட கலைக் கழகப் பொதுக்குழுக் கூட்டம்,  மாவட்ட உடற்றிறக் கழகப் பொதுக்கூட்டம் என முப்பெரும் கூட்டம் நெய்வேலி என்எல்சி பயிற்சி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் பங்கேற்ற கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவள்ளி  பேசியது. 

                மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டிய உடற்கல்வி ஆசிரியர்களின் செயல்பாடுகள் ஒழுங்கீனமாக உள்ளன. பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் அதற்குரியவராக தகுதியுடன் இருக்கத் தவறுகின்றனர். முன்பெல்லாம் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் விசில் அடித்தால் பள்ளியே நிசப்தமாக ஆகிவிடுவதோடு, மாணவர்கள் வகுப்பறைக்குள் இருந்து தலையை வெளியே நீட்டவே அச்சப்படுவர். ஆனால், தற்போது அதுபோன்ற நிலை உள்ளதா என்றால் கேள்விக்குறிதான் மிச்சம்.

              உடற்கல்வி ஆசிரியர்களிடையே போட்டிகள் இருக்கலாம். ஆனால் பொறாமை கூடாது. என் முன்னரே ஒருவரை ஒருவர் காழ்ப்புணர்ச்சியோடு பேசிக்கொண்டால், விளையாட்டரங்கில் நீங்கள் எவ்வாறு நடந்து கொள்வீர்கள். இதுபோன்று நீங்கள் நடந்துகொண்டால் மாணவர்களை நீங்கள் எப்படி கட்டுப்பாட்டுடன் வைத்திருக்கமுடியும். எனவே மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள் என்றார் அமுதவள்ளி. இக்கூட்டத்தின் போது 2010-2011-ம் ஆண்டின் உடற்றிறக் கழக பொதுமையமாக கடலூர் மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு செய்யப்பட்டது. குறுவட்ட மையங்களாக வள்ளியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி (கடலூர்), அரசு மேல்நிலைப்பள்ளி (காடாம்புலியூர்), எஸ்கேவி மேல்நிலைப்பள்ளி (குறிஞ்சிப்பாடி), திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி (ஓரத்தூர்). தலைமையாசிரியர்கள் சேதுராமன் (சிறுகிராமம்), தர்பாரண்யன் (சீதை ஆச்சி மேல்நிலைப்பள்ளி (அண்ணாமலை நகர்),  உடற்கல்வி இயக்குநர்கள் பிரபாகர், ஜோதிப்ரியா, சாமிக்கண்ணு, உடற்கல்வி ஆசிரியர்கள் பி.அருள்செல்வன், டி.ராஜேந்திரன், சுப்ரமணியன், டி.முடியழகன், காந்திமதி உள்ளிட்டோர் குறுவட்ட மையத்தின் செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை என்எல்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியை ஆர்.எஸ்.மணிமொழி செய்திருந்தார்.

Read more »

என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தர பெயர் பட்டியல் வெளியீடு



நெய்வேலி: 

                என்.எல்.சி.,யில் பணி நிரந்தரப்படுத்துதல் தொடர்பாக 7,500 ஒப்பந்த தொழிலாளர்கள் பெயர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. என்.எல்.சி., நிறுவனத்தில் 11 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர் கள் பணிபுரிகின்றனர். இவர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, மருத்துவம், குடியிருப்பு உள்ளிட்ட வசதிகள் கோரி, தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் எதிரொலியாக கடந்த 2008ம் ஆண்டு ஜூன் 16ம் தேதி டில்லியில் அப்போதைய மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் சந்தோஷ் பக்ரோடியா, ஏ.ஐ.டி.யு.சி., அகில இந்திய பொதுச் செயலர் குருதாஸ் தாஸ்குப்தா ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் போடப் பட்டது.

                    இதைத் தொடர்ந்து, ஒப்பந்த தொழிலாளர்கள் 10 ஆயிரம் பேருக்கு ஊதிய உயர்வு மற்றும் மருத்துவ வசதிக்கான மருத்துவ புத்தகம் வழங்கப்பட்டது. மேலும், தொழிலாளர்கள் நிரந்தரம் செய்வதற்கான முயற்சிகளை என்.எல்.சி., மேற்கொண்டது. ஆனால், இது தொடர்பான விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்றதால் நடவடிக்கைகள் முடங்கியது. இதையடுத்து, ஒப்பந்த தொழிலாளர்கள் மீண்டும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில், கடந்த மே மாதம் 30ம் தேதி முதல் ஜூன் 5ம் தேதி நள்ளிரவு வரை என்.எல். சி., நிரந்தர தொழிலாளர்கள் நடத்திய காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது ஒப்பந்த தொழிலாளர்கள் பணிக்கு சென்றனர்.

                  இதனால், நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி மற்றும் மின் உற்பத்தியில் பாதிப்பும் ஏற்படவில்லை. இதன் எதிரொலியாக, என்.எல்.சி., சேர்மன் அன்சாரியின் உத்தரவின் பேரில் பணி நிரந்தரப்படுத்துதல் தொடர்பாக 7,500 ஒப்பந்த தொழிலாளர்கள் பெயர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

இதுகுறித்து, ஏ.ஐ.டி.யு.சி., பொதுச் செயலர் குப்புசாமி கூறுகையில், 

                  "என்.எல்.சி., சேர்மன் அன்சாரியின் இந்த நடவடிக் கையை மனதார வரவேற்கிறோம். அதுபோலவே ஊதிய உயர்வு கோரிக்கைகளையும் விரைவில் நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும்' என்றார்.

Read more »

கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டப்படிப்பு விண்ணப்பங்கள் விற்பனை

கடலூர்: 

          எம்.ஜி.ஆர்., கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
 
இது குறித்து கூட்டுறவு ஒன்றிய தனி அலுவலர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

               பாரதியார் பல்கலைக் கழகத்துடன் அங்கமாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் மூலம் டாக்டர் எம்.ஜி.ஆர்., கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் குறைந்த கட்டணத்தில் பி.காம்., - பி.பி.ஏ., - பி.சி.ஏ., - எம்.சி.ஏ., மற்றும் எம்.பி.ஏ., ஆகிய இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் இரண்டாம் ஆண்டாக துவங்கப்படவுள்ளது. 

                        மேலும் டாக்டர் எம்.ஜி.ஆர்., கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் மூலம் பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் டி.சி.ஏ., - எம்.எஸ்.ஆபீஸ், டேலி 9.0 ஆகிய கம்ப்யூட்டர் பயிற்சிகளுக்கும் விண்ணப் பங்கள் வழங்கப்படுகிறது. பட்டப்படிப்புக்கான வகுப்புகள் சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் மட்டுமே நடத்தப்படவுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.

Read more »

பட்டதாரி ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதம்

சிதம்பரம்:

            அரசு அறிவித்த பட்டதாரி ஆசிரியர்கள் 15 ஆயிரம் பேரை உடனே நியமிக்க கோரி  10ம் தேதி சென்னையில் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர்.

இதுகுறித்து வேலை இல்லா பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் ரத்தினகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை:

               தமிழக அரசு 2008-09 ம் ஆண்டு கல்வி மானியக் கோரிக்கையில் அறிவித்த 6500 பணியிடங்கள், 2009-10ம் ஆண்டிற்கு 6300 பணியிடங்கள், தரம் உயர்த்தப்பட்ட பள் ளிகளில் 1400 பணியிடங்கள் என 15 ஆயிரம் பேரை நியமிப்பதாக அறிவித்து காலம் கடத்தி வருகின்றனர். இதனால் வயது முதிர்ந்து பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே 15 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களையும் ஒட்டு மொத்தமாக நியமனம் செய்ய வேண்டும். இடை நிலை ஆசிரியர்கள் பதவி உயர்வால் பாதிக்கப் பட்டுள்ள தமிழ், வரலாறு மற்றும் புவியியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு அதிகப் பணியிடங்கள் ஒதுக்க வேண்டும்.

                சமச்சீர் கொள்கையின் படி 6ம் வகுப்பு முதல் பொருளாதாரம் மற்றும் வணிகவியல் பட்டதாரிகளையும் ஆசிரியர்களாக பணி நியமனம் செய்ய வேண்டும் என்பன உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (10ம் தேதி) சனிக்கிழமை சென்னை காயிதே மில்லத் மணி மண்டபம் அருகில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மாநிலத் தலைவர் ரத்தினகுமார் தலைமையில் உண்ணாவிரதம் நடக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Read more »

மின் இணைப்பு துண்டிப்பு என்.எல்.சி. நகர அலுவலகம் முற்றுகை

கடலூர்: 

            மின்சாரம் துண்டித்ததைக் கண்டித்து பொதுமக்கள் என்.எல்.சி., நகர நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

              நெய்வேலி மந்தாரக்குப்பம் பகுதியில் உள்ள ஐ.டி.ஐ., நகர், எம்.ஜி. ஆர்., நகர், திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட ஐந்து நகர்களில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு முறையான அனுமதி பெறாமல் மின் இணைப்பு பெற்றிருப்பதாகக் கூறி நேற்று முன்தினம் என்.எல்.சி., நிர்வாகம் மின் இணைப்புகளை துண்டித்தது. இதனைக் கண்டித்தும், உடனடியாக மின் இணைப்பு வழங்கக் கோரி பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்று திரண்டு நேற்று காலை 11.30 மணி அளவில் நெய்வேலி 11ம் வட்டத் தில் உள்ள என்.எல்.சி., நகர நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் என். எல்.சி., நகர நிர்வாகத்தின் தலைமை பொது மேலாளர் செந்தமிழ்செல் வன் நாளை (இன்று) மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதனையேற்று பகல் 2 மணிக்கு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Read more »

சேத்தியாத்தோப்பை அடுத்த விருத்தாங்கநல்லூரில் நூலக கட்டடம் திறப்பு விழா

ஸ்ரீமுஷ்ணம்: 

         சேத்தியாத்தோப்பு அருகே புதிய நூலகக் கட்டடம், விளையாட்டு மைதானம் திறப்பு விழா மற்றும் இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழா நடந்தது.

           சேத்தியாத்தோப்பை அடுத்த விருத்தாங்கநல்லூரில் 3 லட்ச ரூபாய் செலவில் புதியதாக கட்டப்பட்ட நூலக கட்டட திறப்பு விழா, இலவச காஸ் அடுப்பு சிலிண் டர்கள் வழங்கும் விழா, விளையாட்டு மைதான திறப்பு விழா நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் வாசுகி செல்வராசு தலைமை தாங்கினார். வட்ட வழங்கல் அலுவலர் ராஜாராமன், கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் கலியமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர். ஊராட்சி எழுத்தர் செல்வராசு வரவேற்றார். கீரப்பாளையம் ஒன்றிய பெருந்தலைவர் செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய நூலக கட்டடம் மற்றும் விளையாட்டு மையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து 370 பேருக்கு இலவச காஸ் அடுப்புகளை வழங்கினார். இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் காவேரி, மக்கள் நலப்பணியாளர் ரவி, கீரப்பாளையம் வீரமணி மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

தகுதியான வாக்காளர்களை சேர்க்க கட்சியினருக்கு அமைச்சர் எம்.ஆர்.கே., பன்னீர்செல்வம் வேண்டுகோள்

 கடலூர்: 

                வாக்காளர் பட்டியலில் தகுதியான வாக்காளர் களை சேர்ப்பதில் கட்சி நிர்வாகிகள் முழு கவனம் செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டுமென அமைச்சர் எம்.ஆர்.கே., பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே., பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கை:
 
              தேர்தல் ஆணையம் சட்டசபை தேர்லுக்காக , கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் 1ம் தேதி வெளியிட் டப்பட்டது. தொடர்ந்து 11 மற்றும் 12ம் தேதிகளில் அந்தந்த ஓட்டுச்சாவடியில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது. முகாம்களில் ஜனவரி 1ம் தேதியன்று 18 வயது நிரம்பியவர்கள், முன்பு வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள், புதிதாக குடிவந்தவர்கள் தங்கள் பெயர்களை புதிய வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், இறந்தவர்கள் மற்றும் வேறு இடங்களுக்குச் சென்றவர்கள் பெயரை நீக்குவதற்கும் புகை படங்களை சரிபார்ப்பதற்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கட்சி அனைத்து நிர்வாகிகளும், தகுதியான வாக்காளர்களை சேர்ப்பதில் முழு கவனம் செலுத்த வேண்டும். ஜனநாயக கடமையை நிறைவேற்ற அனைத்து நிர்வாகிகளும் இப்பணியில் ஈடுபட கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Read more »

பண்ருட்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டட பணிகள்: நீதிபதி பார்வை

பண்ருட்டி,:

            பண்ருட்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டட பணிகளை ஐகோர்ட் நீதிபதி கே.என்.பாஷா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

             பண்ருட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டும் பணி கடந்த ஒரு ஆண்டாக நடந்து வருகிறது. இந்த புதிய கட்டட பணிகளை ஆய்வு செய்து திறப்பு விழா நடத்துவது குறித்து நேற்று ஐகோர்ட் நீதிபதி கே.என்.பாஷா ஆய்வு மேற்கொண்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ராமபத்ரனுடன் ஆலோசனை நடத்தினார். உடன் மகிளா கோர்ட் நீதிபதி அசோகன், சப் ஜட்ஜ் கலியமூர்த்தி, முன்சீப் லதா, மாஜிஸ்திரேட்கள் ஈஸ்வரன், வாசுதேவன் மற்றும் வக்கீல்கள் வடிவேலன், பார்த்தசாரதி, அசோகன், அரசு வக்கீல் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

Read more »

கடலூரில் போதை எதிர்ப்பு மனித சங்கிலி

கடலூர்: 

                உலக போதை எதிர்ப்பு தினத்தையொட்டி கடலூரில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற போதை எதிர்ப்பு மனித சங்கலி நடந்தது. கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர் ஆரோக்கியராஜ் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ரட்சகர் முன்னிலை வகித்தார். 

               செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற போதை எதிர்ப்பு மனித சங்கிலியை எம்.எல்.ஏ., அய்யப்பன் துவக்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் சேர்மன் தங்கராசு, துணை சேர்மன் தாமரைச்செல்வன், மாவட்ட திட்ட மேலாளர் கலைமதி, சென்ட்ரல் ரோட்டரி சங்க சண்முகம் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர். மனித சங்கிலியில் பங்கேற்ற கல்லூரி மாணவர்கள் போதை பொருட்களுக்கு எதிரான கோஷம் எழுப்பினர். மேலாளர் கதிரவன் நன்றி கூறினார்.

Read more »

கடலூரில் இலவச மூட்டுவலி சிகிச்சை முகாம்

கடலூர்: 

               கடலூரில் டாபர் ஆயுர்வேதிக் நிறுவனம் சார்பில் இலவச மூட்டுவலி சிகிச்சை முகாம் இன்று நடக்கிறது. மஞ்சக்குப்பம் பாஷ்யம் தெருவில் நடக்கும் முகாமில் மூட்டுவலி, இடுப்பு, கழுத்து, முதுகு வலிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. முகாம் காலை 11 மணி முதல் 3 மணி வரை நடக்கிறது. முகாமில் டாக்டர்கள் பானுப்பிரியா கோவிந்தராஜ், சங்கீதா மற்றும் மருத்துவக் குழுவினர் கிசிச்சை அளிக்கின்றனர். முன் பதிவு செய்யும் 50 பேருக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்படும் என ஆயுர்வேதிக் நேச்சுரபதி மேலாளர் ரவி தெரிவித்துள்ளார்.

Read more »

பரங்கிப்பேட்டையில் முதியவரிடம் ரூ. 50 ஆயிரம் அபேஸ்

பரங்கிப்பேட்டை:

                பரங்கிப்பேட்டையில் முதியவரிடமிருந்து நூதன முறையில் 50 ஆயிரம் ரூபாயை அபகரித்துச் சென்ற ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

                 பரங்கிப்பேட்டை ஆரியநாட்டு தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சக்கரபாணி (70). இவர் நேற்று காலை இந்தியன் பாங்க்கிலிருந்து 50 ஆயிரம் ரூபாய் எடுத்து பையில் வைத்துக் கொண்டு பாங்க் அருகே உட்கார்ந்து கொண்டிருந்தார். அப்போது மர்ம ஆசாமி ஒருவர் சக்கரபாணியின் சட்டையில் அசிங்கப்படுத்தினார். உடன் கைப்பையை கீழே வைத்து விட்டு பின் பக்கமாக துடைக்கும் போது மர்ம ஆசாமி பையை எடுத்துக் கொண்டு ஓடினார். இதுகுறித்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

Read more »

கடலூர் முதுநகர் அருகே ஆசிட் டேங்கரை சுத்தம் செய்ய முயன்ற டிரைவர், கிளீனரை விஷவாயு தாக்கியது

கடலூர் : 

            ஆசிட் டேங்கர் லாரியை சுத்தம் செய்ய முயன்ற கிளீனர் மற்றும் டிரைவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

             திருநெல்வேலி மாவட்டம் உக்கிரக்கோட்டையைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன். இவரது மகன் மகேந்திரன் (23). டேங்கர் லாரி டிரைவர். இவருடன் இவரது சகோதரர் மணிகண்டன் (24) கிளீனராக வேலை செய்து வருகிறார். இருவரும் நேற்று மாலை கடலூர் சிப்காட்டில் உள்ள கம்பெனியில் பாஸ்பாரிக் ஆசிட் ஏற்ற டேங்கர் லாரியை ஓட்டி வந்தனர். அதற்கு முன்பாக கடலூர் பச்சையாங்குப்பத்தில் டேங்கரை சுத்தம் செய்வதற்காக கிளீனர் மணிகண்டன் டேங்கரை திறந்த போது விஷவாயு தாக்கி மயங்கி டேங்கரில் விழுந்தார். அவரை காப்பாற்ற முயன்ற மகேந்திரனும் விஷவாயு தாக்கி விழுந்தார். இதனைக் கண்டு திடுக்கிட்ட அப்பகுதி மக்கள் டேங்கரின் அனைத்து கதவுகளையும் திறந்து தண்ணீரை பாய்ச்சி விஷவாயுவின் வீரியத்தை குறைத்து இருவரையும் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

கம்மாபுரம் அடுத்த பெருவரப்பூரில் ஆக்கிரமிப்பு அகற்றம்

விருத்தாசலம்: 

             கம்மாபுரம் அடுத்த பெருவரப்பூர் கிராமத்தில் குளம் ஆக்கிரமிப்பை அதிகாரிகள் அகற்றினர்.

          விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் அடுத்த பெருவரப்பூரில் இருந்த இரண்டரை ஏக்கர் பரப்பளவு குளத்தின் ஒரு பகுதியை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்து கரும்பு மற்றும் உளுந்து பயிரிட்டு வந்தார். அதேப்போல் 2 ஏக்கர் 36 சென்ட் பரப்பளவு கொண்ட மற்றொரு குளத்தையும் தனி நபர் ஆக்கிரமித்து நெல் பயிரிட்டும், சுடுகாட்டு இடத்தை ஒருவரும் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இதுகுறித்து ஊராட்சி தலைவர் கேசவபெருமாள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி வருவாய்த் துறையினரிடம் கோரிக்கை வைத்தார்.

               இதனையடுத்து தாசில்தார் ஜெயராமன் தலைமையில் துணை தாசில்தார் ராஜா, ஆர்.ஐ., செல்வியம்மாள், பி.டி.ஓ., புஷ்பராஜ், வி.ஏ.ஓ., மதியழகன், ஜெயசந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் நேற்று பொக்லைன் இயந்திரம் கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ஆக்கிரமிப்பு அகற்றும் இடத்தில் பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க இன்ஸ்பெக்டர்கள் ஸ்ரீதரன், திருமால் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Read more »

கடலூர் பள்ளி வளாகத்தில் பிடிபட்ட "புளியம்பூ' நாகப்பாம்பு

கடலூர்:

                தனியார் பள்ளியில் புகுந்த ஐந்தரை அடி நீளமுள்ள நாகப்பாம்பை சமூக ஆர்வலர் உதவியுடன் வனத்துறையினர் உயிருடன் பிடித்தனர். கடலூர் கம்மியம்பேட்டையில் உள்ள செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று மாலை 4 மணி அளவில் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அருகில் உள்ள கட்டடத்தில் அமைத்திருந்த மழைநீர் சேகரிப்பு குழாயில் உடைந்த பகுதியில் பாம்பு ஒன்று புகுந்தது. அதைக் கண்டு திடுக்கிட்ட மாணவர்கள் கூச்சலிட்டனர்.

                தகவலறிந்த மாவட்ட வன அலுவலர் துரைசாமி உத்தரவின் பேரில், வன சரகர் சீனிவாசன், வனவர் மணி மற்றும் பாம்பு பிடிப்பதில் பயிற்சி பெற்ற வனவிலங்கு ஆர்வலர் பூனம்சந்த் ஆகியோர் விரைந்து சென்று குழாயில் புகுந்த பாம்பை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டனர்.ஒன்றரை மணி நேர முயற்சிக்கு பின், குழாயில் புகையை செலுத்தியதும் ஐந்தரை அடி நீளமுள்ள "புளியம்பூ நாகம்' வகையைச் சேர்ந்த நாகப்பாம்பு மற்றும் ஒரு அடி நீளமுள்ள கட்டுவிரியன் குட்டி பாம்பு ஒன்றும் வெளியே வந்தன. அதை வனவிலங்கு ஆர்வலர் பூனம்சந்த் லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior