காட்டுமன்னார்கோவில் அருகே முட்டம்-மணல்மேடு இடையே கடலூர்-நாகை மாவட்டங்களை இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலம்.
சிதம்பரம்:
காவிரி-கொள்ளிட ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி வீணாகக் கடலில் கலக்கும் நீரை தேக்கி வைக்க வேண்டும் என டெல்டா பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் மொத்த பாசனம் பெறும் நிலங்கள் 70 லட்சத்து 17 ஆயிரம் ஏக்கர் என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அதில் மழையை நம்பியே 59 லட்சத்து 27 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. காவிரி டெல்டா மாவட்டங்களான திருச்சி, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஏற்கெனவே 24 லட்சம் ஏக்கர் நிலங்களில் நெல் சாகுபடி நடந்துள்ளது. தற்போது நீர் பற்றாக்குறை, ஆள்பற்றாக்குறை, வேளாண் இடு பொருள்களின் விலையேற்றத்தால் விவசாயிகள் விவசாயத்தை விட்டுவருவதால் தற்போது அது குறைந்து 10 லட்சம் ஏக்கரில்தான் நெல் சாகுபடி நடைபெறுகிறது.
தமிழகத்தில் மொத்தம் 33 ஆற்றுப்படுகைகள் உள்ளன, இவற்றில் 12 ஆற்றுப்படுகைகளில் மழை மற்றும் வெள்ளக்காலங்களில் உபரிநீர் கடலில் கலந்து வீணாகிறது என ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான டி.எஸ்.விஜயராகவன் ஆய்வு கமிட்டி தெரிவிக்கிறது. எனவே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கல்லணையிலிருந்து கீழணை வரை நெச்சியாம், கூகூர், திருமழபாடி, ஏலாக்குறிச்சி, காமரசவல்லி, கோடாலிக்கருப்பூர் மற்றும் கீழணையிலிருந்து முட்டம், கொள்ளிடம் உள்ளிட்ட 10 இடங்களில் சுமார் 7.5 மீட்டர் உயரத்துக்கு தடுப்பணை கட்டப்பட வேண்டும். இந்த தடுப்பணைகள் மூலம் 200 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்கமுடியும்.
இதனால் 6 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயன்பெறுவார்கள். மேலும் 10 இடங்களில் தடுப்பணைகள் அமைத்தால் ஒவ்வொரு இடத்திலும் 8 மெகாவாட் வீதம் 80 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கலாம். காவிரியிலும், கொள்ளிடத்திலும் தடுப்பணைகள் கட்டினால் மேட்டூரில் அதிகளவு நீரை தேக்கி வைத்திருக்க முடியும் என ஓய்வுபெற்ற காவிரி பாசனப்பகுதி மேற்பார்வை பொறியாளர் என்.நடராஜன் தெரிவித்தார்.
999-ம் ஆண்டு வீராணம் விரிவாக்கத் திட்டத்தின்கீழ் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டப்பட உத்தேசிக்கப்பட்டு இருந்த தடுப்பணைகள் அமைக்கும்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றின் தண்ணீர் கடலில் கலப்பதற்கு முன்பு காட்டுமன்னார்கோவில் அருகே முட்டத்துக்கும், மணல்மேட்டுக்கு இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.48 கோடி செலவில் தற்போது கட்டப்பட்டு வரும் பாலத்தின்கீழ் தடுப்பணை அமைக்க வேண்டும். கொள்ளிடம் ஆறு அகலமான நதியாக இருப்பதால் அதிகளவு நீரை சேமிக்க முடியும்.
முட்டம்-மணல்மேடு பாலத்தின் கீழ் தடுப்பணை அமைத்தால் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என வீராணம் ஏரி பாசன விவசாய சங்கத் தலைவர் கே.வி.இளங்கீரன் தெரிவித்தார்.