தமிழகத்தில், 2,653 வி.ஏ.ஓ., பணியிடங்களுக்கு, மூட்டை மூட்டையாக விண்ணப்பங்கள் வந்து குவிகின்றன. அவற்றை உடனுக்குடன் பட்டுவாடா செய்ய வசதியாக, தபால் துறை சிறப்பு பணியை மேற்கொண்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் (டி.என்.பி. எஸ்.சி.,), 2,653 வி.ஏ.ஓ., பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 21ம் தேதி வெளியானது. இதுவரை 8.5 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. இவற்றில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு, தபால் நிலையங்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதுமிருந்து சென்னை கிரீம்ஸ் சாலை தபால் நிலையத்தில், விண்ணப்பங்கள் மூட்டை மூட்டையாக குவிந்துள்ளன. அவற்றை உடனுக்குடன் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்திற்கு டெலிவரி செய்யும் வகையில், தபால் நிலையங்களில் சிறப்புப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விடுமுறை நாளான நேற்று, விரைவு தபால் மூலம் வந்து சேர்ந்த விண்ணப்பங்களை பட்டுவாடா செய்வதற்காக, சிறப்புப்பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கூடுதலாக பயன்படுத்தப்பட்டனர்.
இதுகுறித்து சென்னை மத்திய கோட்டத்தின் முதல்நிலை அஞ்சல் கண்காணிப்பாளர் வெங்கட்ராமன் கூறியதாவது:
இவற்றை வினியோகம் செய்ய தபால் துறையில் சிறப்புப் பணி இன்று (நேற்று) முதல் துவக்கப்பட்டுள்ளது. கூடுதல் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் ஏழாயிரத்துக்கும் மேலான விண்ணப்பங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்., அலுவலகத்தில் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் வந்து சேர, 20ம் தேதி இறுதிநாள் என்பதால், அதுவரை சிறப்புப் பணியை மேற்கொள்ள உள்ளோம். வந்து சேரும் விண்ணப்பங்கள் உடனுக்குடன் பட்டுவாடா செய்யப்படும். இவ்வாறு வெங்கட்ராமன் கூறினார்.