உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 02, 2012

50 ஆண்டுகளை நிறைவு செய்த என்.எல்.சி. முதல் அனல்மின் நிலையம்

நெய்வேலி:

ரஷிய தொழில்நுட்ப உதவியைப் பயன்படுத்தி அமைக்கப்பட்ட 600 மெகாவாட் திறன்கொண்ட என்.எல்.சி. முதல் அனல்மின் நிலையத்தின் 50 மெகாவாட் முதல் அலகு 50 ஆண்டுகளை நிறைவுசெய்த நிலையிலும் தொடர்ந்து முழு மின்னுற்பத்தி அளவான 50 மெகாவாட் மின்சாரத்தை தடங்கலின்றி உற்பத்தி செய்து சர்வதேச அளவில் சாதனை புரிந்துள்ளது.

காமராஜரின் முயற்சியால், 1956-ம் ஆண்டு நவம்பர் 14-ம் தேதி இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளன்று என்.எல்.சி. நிறுவனம் வர்த்தக நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து காமராஜரின் தொடர் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்துவந்த நேரு, 1957-ம் ஆண்டு மே 20-ம் தேதி நெய்வேலிக்கு வந்து, ஆண்டுக்கு 35 லட்சம் பழுப்பு நிலக்கரி வெட்டியெடுக்கும் சுரங்கத்தையும் மற்றும் மணிக்கு 6 லட்சம் யூனிட் மின்னுற்பத்தி செய்யும் அனல்மின் நிலையப் பணியையும் தொடங்கிவைத்தார்.

இதையடுத்து 1959-ம் ஆண்டு அனல்மின் நிலையத்தின் 50 மெகாவாட் திறன்கொண்ட முதல் அலகின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.
மாஸ்கோ நகரைச் சேர்ந்த டெக்னோபுரோம் எக்ஸ்போர்ட் என்ற நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன் கட்டுமானப் பணிகள் நடைபெற்றன.
இந்த முதல் அலகின் கட்டுமானப் பணிகள் முடிந்து 1962 மே 23-ம் தேதி 50 மெகவாட் மின்னுற்பத்தி தொடங்கப்பட்டது. மின்னுற்பத்தி தொடங்கப்பட்ட முதல் அலகின் 50 மெகாவாட் மின்னுற்பத்தியானது 1962-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ம் தேதி அப்போதய குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களால், அன்றைய என்.எல்.சி. தலைவர் டி.எம்.எஸ்.மணி அவர்களின் முன்னிலையில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அத்தகைய முதல் அனல்மின் நிலையத்தின் முதல் அலகு இம்மாதம் 22-ம் தேதியுடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

இதனிடையே 9 அலகுகளின் கட்டுமானப் பணிகளிலும் நடைபெற்று, அனல்மின் நிலையத்தின் முழு மின்னுற்பத்தித் திறனான 600 மெகாவாட் 1970-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ம் தேதி உற்பத்தி செய்யத் தொடங்கியது. முதல்அனல்மின் நிலையத்தின் முதல் அலகில் 23.05.1962-ல் தொடங்கி 22.05.2012 வரை ஒரு கோடியே 43 லட்சத்து 2 ஆயிரம் யூனிட் மின்சக்தியை உற்பத்தி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தகைய பெருமைவாய்ந்த முதல் அனல்மின் நிலையத்தின் முதல் அலகினை நினைவுகூறும் வகையில் முதல் அனல்மின் நிலைய வளாகத்தில் புதன்கிழமை நடந்த நிகழ்ச்சியில் என்.எல்.சி. தலைவர் ஏ.ஆர்.அன்சாரி கலந்துகொண்டு நினைவுக் கல்வெட்டை திறந்துவைத்தார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் விடுதியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு

கடலூர்:


 கடலூர் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மாணவர் மற்றும் மாணவியர்கள் விடுதியில் தங்கிப் படிக்க விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில்,

 தமிழக அரசால் கடலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கென 64 விடுதிகள் செயல்படுகின்றன. 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்கள் பள்ளி விடுதியிலும், பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் படிப்புக்கும் மாணவ, மாணவியர்கள் கல்லூரி விடுதியிலும் சேர தகுதி உடையவர்கள். விடுதியில் எந்த செலவும் இல்லாமல், உணவும், தங்கும் வசதியும் அளிக்கப்படும், 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இரண்டு செட் சீருடைகள், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும். 


விடுதியில் சேர தகுதிகள்:

 பெற்றோர், பாதுகாவலர் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து பள்ளி 8 கி.மீ. மேல் இருக்க வேண்டும். (தூர விதி மாணவிகளுக்கு பொருந்தாது).விண்ணப்பங்களை விடுதிக் காப்பாளர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பள்ளி விடுதி காப்பாளர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 15.6.2012-க்குள்ளும், கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை விடுதிக் காப்பாளர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 15.7.2012-க்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும். விடுதியில் சேரும்போது மட்டும் சாதி, வருமான சான்று வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கு தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே இச்சலுகையை மாணவ, மாணவிகள் பெற்று பயனடையுமாறு ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior