கடலூர் :
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், என்.எல்.சி., சார்பில் நடந்த மாவட்ட அளவிலான மாரத்தான் ஓட்டப் போட்டியில் 405 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அடுத்த மாதம் சென்னையில் மாநில அளவிலான மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. இதில் பங் கேற்பதற்காக மாவட்ட அளவில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அதனையொட்டி கடலூர் மாவட்ட வீரர்களுக்கான தேர்வு போட்டி நேற்று கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடந்தது.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் சார்பில் நடந்த மாரத்தான் ஓட்டப் போட்டி துவக்க விழாவிற்கு எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., நடராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேராசிரியை ஜெயந்தி ரவிச்சந்திரன், டி.எஸ்.பி., ஸ்டாலின், டாக்டர் கணபதி உள்ளிட்டோர் பங் கேற்றனர்.
போட்டியில் மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் உட்பட 405 பேர் பங்கேற்றனர். சீனியர் ஆண்கள் 15 கி.மீ., தூரம் ( அண்ணா விளையாட்டரங்கம் முதல்- திருவந்திபுரம் சென்று திரும்பி வர வேண்டும்) பிரிவில் விருத்தாசலம் வெங்கடேசன், அண்ணாமலை பல்கலைக்கழக செந்தமிழ் செல்வன், காராமணிக் குப்பம் சாமிநாதன் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
சீனியர் பெண்கள் 10 கி.மீ., (அண்ணா விளையாட்டரங்கம் முதல் கே.என்.பேட்டை சென்று திரும்பி வர வேண்டும்) பிரிவில் கடலூர் பெரியார் கல்லூரி மாணவி அன்புச்செல்வி, அண்ணாமலை பல்கலைக் கழக மாணவி மாதவி, திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி பாரதி முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
ஜூனியர் ஆண்கள் ( 5 கி.மீ.,) பிரிவில் விருத்தாசலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் தமிழரசு, என்.எல்.சி., பள்ளி மாணவர் கார்த்திக், நடுவீரப் பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் துரையும், மாணவிகள் பிரிவில் திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி குணா, நெய் வேலி ஜவகர் மெட்ரிக் பள்ளி மாணவி ஸ்ரீதேவி, புதுப் பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி மோனிஷா முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
சீனியர் பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு முறையே 5000, 3000 மற்றும் 2 ஆயிரம் ரூபாயும், ஜூனியர் பிரிவிற்கு முறையே 3000, 2000, 1000 ரூபாயும், மேலும் அனைத்து பிரிவிலும் முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு ஆறுதல் பரிசாக தலா 500 ரூபாய் நாளை (26ம் தேதி) நடைபெறும் குடியரசு தினவிழாவில் பரிசு வழங்கப்படுகிறது.
முதல் 10 இடங்களை பிடித்தவர்கள் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான மாரத்தான் ஓட்ட போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
Read more »