சிதம்பரம் :
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த கூகுள் உலக அறிவியல் கண்காட்சி போட்டியில், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த மாணவி ஹரிணி பங்கேற்றார்.
கூகுள் கம்ப்யூட்டர் வலைதள நிறுவனம் முதல் முறையாக, உலக அறிவியல் கண்காட்சிப் போட்டியை, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், கடந்த ஜூலை 10 மற்றும் 11ம் தேதி நடத்தியது. அதற்காக உலகம் முழுவதும் இருந்து 90 நாடுகளைச் சேர்ந்த 13 முதல் 18 வயதுடைய 10 ஆயிரம் மாணவ, மாணவியர், தங்களின் அறிவியல் செய்முறை கண்டுபிடிப்புகளைச் சமர்ப்பித்தனர். அவற்றில் சிறந்தவையாக, 60 கண்டுபிடிப்புகள் தேர்வு செய்யப்பட்டன. அதில், இந்தியாவில் இருந்து 7 மாணவ, மாணவியர் தேர்வாகினர். அடுத்த சுற்றில், 60 கண்டுபிடிப்புகளில் 15 கண்டுபிடிப்புகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்ற உலக அறிவியல் கண்காட்சி போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில், கடலூர் மாவட்டம், சிதம்பரத்தைச் சேர்ந்த இன்ஜினியர் ரவிச்சந்திரனின் மகள் ஹரிணி தேர்வானார். இவர் தற்போது, ஐதராபாத்தில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவரது கண்டுபிடிப்பு, "பவர்லைன் கண்டிஷனிங் யூசில் சீரிஸ் வோல்டேஜ் ரெகுலேட்டர்' ஆகும். இறுதிப் போட்டியில் பங்கேற்க உலக அளவில் தேர்வு செய்யப்பட்ட 15 மாணவ, மாணவியரில் ஹரிணி மட்டுமே இந்தியர். தேர்வு செய்யப்பட்ட 15 பேரும், கலிபோர்னியா மகாணத்தில் கூகுள் தலைமையகத்தில், கடந்த மாதம் இரண்டு நாட்கள் நடந்த கூகுள் உலக அறிவியல் கண்காட்சிப் போட்டி இறுதிச் சுற்றில் பங்கேற்றனர்.
உலக அறிவியல் கண்காட்சி போட்டியில், மாணவி ஹரிணியின் கண்டுபிடிப்பை, நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி, கூகுள் உயர் அதிகாரிகள், உலகில் சிறந்த கண்டுபிடிப்பாளர்கள், கல்வியாளர்கள் பாராட்டியுள்ளனர்.
ஹரிணி கடந்த ஆண்டு இந்தியா சார்பில், நைஜீரியாவில் நடந்த ஜூனியர் சயின்ஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்று, வெள்ளிப் பதக்கம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.