உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 07, 2010

சாலை பாதுகாப்பு வார விழா

நெய்வேலி: 
                   
               நெய்வேலியில் சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி விழிப்புணர்வுக் கூட்டம் வேலுடையான்பட்டு சமுதாயக் கூடத்தில் புதன்கிழமை நடைபெற்றது. நெய்வேலி நகரம், வடலூர், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி, ஊத்தங்கால் பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட ஆட்டோ மற்றும் வாடகை வேன் ஓட்டுநர்கள் இக் கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் பேசிய நெய்வேலி டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் சேகர், போக்குவரத்து விதிகளை கடைபிடித்து வாகனங்கள் ஓட்டும்போது விபத்து தவிர்க்கப்பட வாய்ப்புள்ளது. வாகன ஓட்டிகள் கவனமுடன் வாகனங்களை இயக்கவேண்டும் என்றார்.

              நெய்வேலி மோட்டார் வாகன ஆய்வாளர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், ரேவதி உள்ளிட்டோர் சாலை பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தினர். இதையடுத்து விக்கிரவாண்டி-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டும் பணி நடைபெற்றது.

Read more »

இலவச கால்நடை மருத்துவ முகாம்

விருத்தாசலம்: 
 
          விருத்தாசலம் அருகில் உள்ள க.இளமங்கலம் கிராமத்தில் சிறப்பு கால்நடை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஆடு, மாடு மற்றும் கோழிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பசுமாடுகளுக்கு குடற்புழு நீக்கம், மலட்டுத்தன்மை நீக்கம், செயற்கை கருவூட்டல், சினை ஆய்வு ஆகியன செய்யப்பட்டன. மேலும் மாடுகளுக்கு சப்பை நோய் தடுப்பூசி போடப்பட்டது. கால்நடை ஆய்வாளர்கள் வீரப்பன், பொன்வேலன், திலிபன், மருத்துவர் சரவணன், பராமரிப்பு உதவியாளர் செல்வராஜ் ஆகியோர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிததனர். ஊராட்சித் தலைவர் பழனியம்மாள் முகாமை தொடங்கி வைத்தார். சுப்ரீம் அரிமா சங்க தலைவர் முத்துக்குமார் தலைமை வகித்தார். கோட்ட கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் லட்சுமணன் முன்னிலை வகித்தார்.

Read more »

கடலூர் தனியார் கல்லூரியில் விடைத்தாள் திருத்தும் பணி தாற்காலிகமாக நிறுத்தம்

கடலூர்: 

                      கடலூர் புனித வளனார் கல்லூரியில் நடைபெற்று வந்த திருவள்ளுவர் பல்கலைக் கழக விடைத்தாள் திருத்தும் பணி தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

                    கலைப் பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி இக் கல்லூரியில் டிசம்பர் 22-ம் தேதி முதல் நடைபெற்று வந்தது. பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 160 ஆசிரிய ஆசிரியைகள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். டிசம்பர் 19-ம் தேதி பல்லைக்கழகத்தில் நடைபெற்ற அகாடெமிக் கவுன்சில் தேர்வு தொடர்பாக, தனியார் கல்லூரி ஆசிரியர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட துண்டறிக்கை ஆசிரியர்களிடையே திங்கள்கிழமை விநியோகிக்கப்பட்டது. கடலூர் புனித வளனார் கல்லூரி முதல்வர் ரட்சகர் அடிகள் பெயரையும் துண்டுப் பிரசுரத்தில் இணைத்து இருந்தனராம். விடைத்தாள் திருத்தும் மையத்தில் துண்டறிக்கை வெளியிட்டதை முதல்வர் ரட்சகர் அடிகளும் கல்லூரியின் மற்ற ஆசிரியர்களும் கண்டித்தனர். இதில் எழுந்த பிரச்னை காரணமாக, கல்லூரி ஆசிரியர்கள்  விடைத்தாள் திருத்தும் பணியை திங்கள்கிழமை பிற்பகல் முதல் புறக்கணித்து வருகிறார்கள்.

              இதுகுறித்து விசாரணை நடத்த வந்த பல்கலைக்கழகப் பதிவாளர் அமலதாஸிடம் தாங்கள் தொடர்ந்து, புனித வளனார் கல்லூரி மையத்தில் விடைத்தாள் திருத்த மாட்டோம், மையத்தை மாற்ற வேண்டும் என்று தெரிவித்து விட்டனர். ஆனால் விடைத்தாள் திருத்தும் மையத்தை மாற்றக் கூடாது என்று புனித வளனார் கல்லூரி ஆசிரியர்கள் ரொசாரியோ உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.  துண்டறிக்கை வெளியிட்ட ஆசிரியை உஷா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுயநிதிக் கல்லூரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இப்பிரச்சினை காரணமாக விடைத்தாள் திருத்தும் பணி தாற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. விடைத்தாள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருக்கும் அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது.

               புதன்கிழமை காலை அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் கல்விக்குழு உறுப்பினர்கள், பல்கலைக்கழக துணை வேந்தரைச் சந்தித்து மனு அளித்தனர். அதில் ஆசிரியர்களை இழிவாகப் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விடைத்தாள் திருத்தும் மையத்தை மாற்ற வேண்டும் என்றும் கோரி இருந்தனர். இதுகுறித்து திருவள்ளுவர் பல்கலைக்கழகத் துணை வேந்தர் விசாரணை நடத்தி, விரைவில் நடவடிக்கை எடுப்பார் என்று கூறப்படுகிறது.

Read more »

சி.ஐ.டி.யூ., பேரணியால் கடலூரில் போக்குவரத்து பாதிப்பு

கடலூர் :

               கடலூரில் சி.ஐ.டி.யூ., தமிழ் மாநில மாநாட்டையொட்டி நேற்று நடந்த 2.30 மணி நேர பேரணியால் புதுச்சேரி, பண்ருட்டி  போக்குவரத்து பாதிக் கப்பட்டது.

                 இந்திய தொழிற் சங்க மையத் தின் 11 வது தமிழ்மாநில மாநாடு கடலூரில் கடந்த 4ம் தேதி துவங் கியது. நிறைவு நாளான நேற்று பேரணி நடந்தது. கடலூர் பாதிரிக்குப்பத்தில் மாலை 4.40 மணிக்கு  துவங்கிய பேரணி இரவு 7.20 மணிக்கு மஞ் சக்குப்பம் மைதானத்தை அடைந் தது.  சிதம்பரம், விருத்தாசலம் செல்லவேண்டிய பஸ்கள் இடையூறின்றி சென்றன. பேரணி லாரன்ஸ் ரோடு வழியாக வந்ததால் பஸ் நிலையத்திலிருந்து புதுச்சேரி, பண்ருட்டி மார்க்கம் செல்ல வேண்டிய பஸ்கள்  வழியில்லாமல் நிறுத்தப்பட்டன. அதாவது அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள புறவழிச்சாலை, வண்டிப் பாளையம் சாலையிலும் குறுக் கிட முடியாதபடி பேரணி சென்றதால் பஸ்போக்குவரத்து நிறுத்தப் பட்டன. கடலூர்-புதுச்சேரிக்கு 2 நிமிடத்திற்கு ஒரு பஸ் வீதம் செல்ல வேண்டிய பஸ் முழுவதுமாக நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட் டனர். மாலை 7 மணிக்கு மேல்  போக்குவரத்து சீரானது.

Read more »

சி.ஐ.டி.யூ., மாநாடு பேரணி தொழிலாளர்கள் பங்கேற்பு

கடலூர் :

                   கடலூரில் நடந்த சி.ஐ. டி.யூ., தமிழ் மாநில மாநாட்டு பேரணியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் பங்கேற்றனர்.

           சி.ஐ.டி.யூ., 11 வது தமிழ் மாநில மாநாடு கடலூரில் கடந்த 4ம் தேதி துவங்கியது. நிறைவு நாளான நேற்று பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.  பாதிரிக்குப்பத்தில் மாலை 4.40 மணிக்கு  பேரணியை மாநிலத் தலைவர் பத்மநாபன் துவக்கி வைத்தார். கேரள செண்டை மேள, தாளத்துடன் 11 செங்கொடியேந்தி பெண்கள் அணிவகுத்து சென்றனர். சீருடை அணிந்து சிறுவர், சிறுமியரும், தொண்டரணி மற்றும் பல்வேறு பிரிவு தொழிற் சங்கத்தினர் அணிவகுத்து வந்தனர்.

              கடலூர் அண்ணாப்பாலம் சிக்னல் அருகே அமைக்கப்பட்ட மேடையில் இருந்து அகில இந்திய தலைவர் எம்.கே.பாந்தே,  ரங்கராஜன், செயலர்கள் சிங்கராவேலு, குமார் ஆகியோர் பேரணியை பார்வையிட்டு கையசைத்து தொழிலாளர் களை உற்சாகப்படுத்தினர். பேரணி இரவு 7.20 மணிக்கு மஞ்சக்குப்பம் மைதானத்தை வந்தடைந்தது. பேரணியில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

Read more »

மதிய உணவு சாப்பிட்ட 40 மாணவர்களுக்கு வாந்தி

புவனகிரி :

                    பல்லி விழுந்த மதிய உணவை சாப்பிட்ட 40 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

                   கடலூர் மாவட்டம் புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று மதியம்  மாணவர்களுக்கு முட்டையுடன் உணவு வழங்கப்பட்டது. சாப்பிட்ட மாணவர்கள் செந்தமிழ்ச்செல்வன், பாலாஜி, புவேனந்திரன், இளையராஜா உட்பட 40 மாணவர்கள் சில நிமிடங்களில் வாந்தி எடுத்து மயங்கினர்.

                அவர்களை உதவி தலைமையாசிரியர் நடராஜன், சத்துணவு பொறுப் பாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள்  ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். 10ம் வகுப்பு மாணவர் ராஜமனோகரன், பிளஸ் 1 மாணவர் நிஷாந்தன் ஆகியோருக்கு குளுகோஸ் ஏற்றப் பட்டது. மற்ற மாணவர்கள் சிகிச்சை பெற்று மீண்டும் பள்ளிக்கு திரும்பினர்.  சிதம்பரம் ஆர்.டி.ஓ., ராமராஜ், தாசில்தார் காமராஜ் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Read more »

பஸ் நிறுத்தாததைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

பண்ருட்டி :

                  பஸ் நிறுத்தத்தில் பஸ் நிறுத்தாததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

                    பண்ருட்டி அடுத்த பக்கிரிப்பாளையம் கிராமத்தில் அரசு டவுன் பஸ்கள் காலை நேரத்தில் நிற்காமல் செல்வதை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த 50 பேர் நேற்று காலை 9.15 மணி அளவில் பண்ருட்டி- கடலூர் சாலை பக்கிரிப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த பண்ருட்டி நிலவரித் திட்ட தாசில்தார் பன்னீர்செல்வம்,  தனிப்பிரிவு குணசேகரன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பஸ்சை நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனையேற்று 9.45 மணிக்கு மறியல் கைவிடப்பட்டது.

Read more »

டிப்பர் - மினி லாரி மோதல் போக்குவரத்து பாதிப்பு

சிதம்பரம் :

               சிதம்பரத்தில் டிப்பர் லாரி மீது மினி லாரி மோதி நடுரோட்டில் கவிழ்ந்ததில் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

              கீரப்பாளையத்திலிருந்து செம்மண் லோடு ஏற்றிய டிப்பர் லாரி நேற்று அதிகாலை சிதம்பரம் நோக்கி வந்து கொண்டிருந்தது. புறவழிச்சாலை அடுத்த  சிலுவைபுரம் அருகே சென்றபோது பின்னால் வந்த மினி லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற டிப்பர் லாரி மீது  மோதி  நடுரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகத்தைச் சேர்ந்த மினி லாரி டிரைவர் ராமச்சந்திரன் படுகாயமடைந்தார். உடன் அவர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்தினால் சிதம்பரம் சாலையில் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

Read more »

வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பு : தாசில்தார் திடீர் ஆய்வு

கடலூர் :

               கடலூர் அடுத்த கீழ் அழிஞ்சிப்பட்டில் நடந்த வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும் பணியை தாசில் தார் ஆய்வு செய்தார்.

           கடலூர் தொகுதியில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் வீடு, வீடாக சென்று வாக்காளர் பட்டியில் சரிபார்க்கும் பணி மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் அடுத்த கீழ் அழிஞ்சிப் பட்டு, செல்லஞ்சேரி, புதுக்கடை பகுதிளில் நடந்த வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியை தாசில்தார் தஷ்ணாமூர்த்தி மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். துணை தாசில்தார் முத்துக்குமரன், வருவாய் ஆய்வாளர் கீதா, வி.ஏ,ஓ.,க்கள் கொண்டைய நாயுடு, உமாமகேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.

Read more »

அனுமதியின்றி மணல் அள்ளிய மாட்டு வண்டிகள் பறிமுதல்

பண்ருட்டி :

                      சிறுகிராமம்  மலட்டாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய மாட்டு வண்டிகளை கிராம மக்கள் பிடித்து தாசில் தாரிடம் ஒப்படைத்தனர்.

                       பண்ருட்டி அடுத்த சிறுகிராமம் மலட்டாற் றில் இருந்து தினமும் 50 மாட்டு வண்டி மூலம் மணல் எடுத்து சென்று நத்தம் ஊராட்சி பகுதியில் கொட்டி வைத்து லாரிகள் மூலம் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆற்றில் மணல் அள்ளுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இருப்பினும் தொடர்ந்து மாட்டு வண்டிகளில் மணல் அள் ளப்பட்டு வந்தது. ஆவேசமடைந்த கிராம மக்கள் நேற்று ஆற்றில் மணல் அள்ளிக் கொண்டிருந்த 7 மாட்டு வண்டிகளை பிடித்து பண்ருட்டி தாசில் தார் பாபுவிடம் ஒப்படைத்தனர். அனுமதியின்றி மணல் அள்ளிய மாட்டு வண்டிகளுக்கு அபராதம் விதிக்க ஆர்.டி.ஓ.,விற்கு தாசில் தார் பரிந்துரை செய்தார்.

Read more »

குழாய்கள் இருந்தும் குடிநீரின்றி ஓடாக்கநல்லூர் கிராம மக்கள் அவதி

சேத்தியாத்தோப்பு :

                ஓடாக்கநல்லூரில் குடிநீர் குழாய்கள் பராமரிப்பின்றி போனதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

                  கீரப்பாளையம் ஒன்றிய ஓடாக்கநல் லூர் ஊராட்சியில் 10க்கும் மேற்பட்ட குடிநீர் குழாய்கள் அமைக்கப் பட்டுள் ளன. இவைகளில் பெரும்பாலான குழாய் கள் திறக்க முடியாமல் துரு பிடித்துள்ளன. இக்குழாய்களில் 24 மணி நேரமும் தண் ணீர் வடிந்த வண்ணம் உள்ளது.  நூறுநாள் வேலை திட்டத்தில் நடந்த முறைகேடு காரணமாக ஊராட்சி நிர்வாகத்தை ஒன்றிய அதிகாரிகளே நிர்வகித்து வருவதாகவும், இதனால் கூறப்படும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளதாகவும் கூறுகின்றனர்.

            பொதுமக்கள் குடிநீர் பிடிக்க பயன்படுத்தப்படும் குடிநீர் குழாய்களை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்பதாலும், தேவையற்ற புல், பூண்டுகள் புதர்மண்டி கிடப்பதாலும் அப்பகுதி கொசு உற்பத்தி கூடமாக மாறிவிட்டன. குடிநீர் குழாய்கள் இருந்தும், அதனை பயன்படுத்த முடியாமல் கிராம மக்கள் குடிநீருக்கு அவதிப்பட்டு வருகின்றனர். இதனை ஒன்றிய அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

குண்டும், குழியுமானது நடுவீரப்பட்டு சாலை

நடுவீரப்பட்டு :

          நடுவீரப்பட்டு-பாலூர் கெடிலம் ஆறு வரை உள்ள  தார்சாலை கடந்த 15 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளதால் கிராம மக்கள் தினம், தினம் அவதிப்பட்டு வரகின்றர்.

             நடுவீரப்பட்டு - பாலூர் கெடிலம் ஆறு வரை உள்ள  தார்சாலை குண்டும், குழியுமாகி உள்ளதால் விபத்துகள் அதிகரித்து வருகிறது. இந்த சாலை வழியாக இப்பகுதியை சுற்றியுள்ள விவசாயிகள் தங்கள் நிலங் களில் பயிரிடப்படும் கரும்புகளை நெல்லிக் குப் பம் கரும்பு ஆலைக்கு எடுத்து செல்கின்றனர்.

                 குறிஞ்சிப்பாடி நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் உள்ள இந்த சாலையை 23 கி.மீ., தூரத்திற்கு அகலப் படுத்தி புதிய தார் சாலை போடும் பணி மூன்றாண் டுகளுக்கு முன் துவங்கியது. பத்திரக்கோட்டை வரை உள்ள 15 கி.மீ., தூரத்திற்கு புதிய தார் சாலை போடப்பட்டது. மீதி உள்ள 8 கி.மீ., தூரம் பணி செய்யாமல் கிடப் பில் உள்ளது. பொதுமக்களின் போராட்டத்தை தொடர்ந்து 10 மாதங்களுக்கு முன் பத்திரக் கோட் டையிலிருந்து நடுவீரப்பட்டு நைனார்பேட்டை வரை உள்ள 2.80 கி.மீ., தொலைவிற்கு சாலையை அகலப்படுத்தாமல் கடமைக்கு அப்பளம் கணத் தில் போடப்பட்ட தார் சாலை சில மாதங்களில் கந்தல் சாலையாக மாறியது.

                    இந்த 23 கி.மீ., தூர சாலை பண்ருட்டி, கடலூர், அண்ணாகிராமம் ஆகிய மூன்று ஒன்றியங்களில் உள்ளது. கெடிலம் பாலத்திலிருந்து பாலூர் வரை அண்ணாகிராம ஒன்றியத்தில் உள்ளதால் அவர்கள் அந்த ஏரியாவை மட்டும் அகலப்படுத்தாமல் ரோடு போட்டனர். இதனால் ரோட்டின் இருபுறமும் பள்ளங்கள் உள்ளதால் எதிரில் வரும் வாகனங்களுக்கு வழி விட முடியாமல் பஸ் டிரைவர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் அவதிப்படுகின்றனர். நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் இப்பகுதி மக்களின் 15 ஆண்டு கால கனவான ஆக்கிரமிப்புகள் அகற்றி  தரமான அகலப்படுத்தப்பட்ட தார்சாலை அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

வேகமாக வளரும் பார்த்தீனிய செடிகளால் கிராம மக்கள் தோல் வியாதிகளால் அவதி

சிறுபாக்கம் :

              சிறுபாக்கம் பகுதிகளில் வேகமாக பரவி வரும் பார்த்தீனியம் விஷ செடிகளால் மக்கள் தோல் வியாதிகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.

                 சிறுபாக்கம் அதனை சுற்றியுள்ள அரசங்குடி, எஸ்.புதூர், மங்களூர், அடரி உள்ளிட்ட ஐம்பதுக் கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த சில ஆண்டுகளாக வயல் வெளி மற்றும் காலி இடங்களில் பார்த்தீனியம் விஷ செடிகள் வளர்ந்து வருகின்றன.  இதன் பூக்கள் மற்றும் இலைகள் கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் உரசும் போது ஆரம்பத்தில் கடுமையான எரிச்சலுடன் அரிப்பு ஏற்படுகிறது. சில நாட்களில் உடல் முழுவதும் தடிப்புகள் தோன்றி, நாளடைவில் விஷக்கடி போன்று (அலர்ஜி) மாறுகிறது. பாதிக்கப்படும் கிராம மக்கள் உள்ளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உட்பட பல்வேறு நகர்ப் புற மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகளவு பரவி வரும் பார்த்தீனிய விஷ செடிகளால் கிராம மக்களை அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்த செடிகளை அழிக்க வேளாண் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

மருத்துவக் காப்பீட்டு திட்டத்தால் பயனில்லை : சவுந்தரராசன் குற்றச்சாட்டு

கடலூர் :

             காப்பீட்டு திட்டத்திற்கு கோடிக் கணக்கில் செலவு செய்யும் மருத்துவத் துறையில் நாய்க் கடிக்கு மருந்து இல்லை என சி.ஐ.டி.யூ., மாநில பொதுச் செயலாளர் பேசினார்.

                   கடலூரில் நடந்த சி.ஐ.டி.யூ., மாநில மாநாடு நிறைவு விழா பொதுக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் சவுந்தரராசன் பேசியதாவது: மத்திய, மாநில அரசுகள் தொழிலாளர்களுக்கு எந்த சலுகைகளையும் செய்யவில்லை. ஆனால் முதல்வர் கருணாநிதி போக்குவரத்து தொழிலாளர்கள் திருடுகின்றனர் என குற்றம் சாட்டியுள்ளார். பெரிய திருட்டை மறைக்க கருணாநிதி இது போன்று கூறுகிறார். சாதாரணமாக வாழ 50 ஆயிரம் ரூபாய் தேவைப்படும் என கூறி எம்.எல்.ஏ.,க்களுக்கு மாத சம்பளமாக 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்திய முதல்வர் கருணாநிதி, டேங்க் ஆபரேட் டர்களுக்கு 480 ரூபாய், டாஸ்மாக் ஊழியர்களுக்கு மூவாயிரம், சத்துணவு ஊழியர்களுக்கு 2,500 ரூபாய் என சம்பளம் வழங் குகிறார்.

          அரசின் இலவச திட்டங்கள் அனைத்தும் டாஸ்மாக் வருவாயிலிருந்துதான் வழங்கப்படுகிறது. இந்தாண்டு 12 ஆயிரம் கோடி விற்பனை இலக் காக நிர்ணயித்துள்ளனர். தமிழக அரசின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தால் தனியார் மருத்துவமனை முதலாளிகளுக்குதான் லாபம். காப்பீட்டு திட் டத் திற்கு கோடிக் கணக்கில் செலவு செய்யும் மருத்துவத் துறையில் நாய்கடிக்கு ஊசியில்லை.

             சில தினங்களுக்கு முன் என் மகனை நாய் கடித்து விட்டது. அரசு மருத்துவமனைக்கு சென்றால் ஒரு ஊசி போட் டுவிட்டு மேலும் இரண்டு ஊசியை வெளியே வாங்கி போட்டுக் கொள்ளுமாறு கூறினர்.  இந்த அளவிற்கு சுகாதாரத்துறை உள்ளது. நடந்து முடிந் துள்ள இடைத்தேர்தல்களில் தி.மு.க., விலை கொடுத்து வெற்றியை வாங்கியுள்ளது. இது தி.மு.க.,வினர் பலவீனத்தையே காட்டுகிறது.

                தமிழகத்தில் குறைந்த பட்ச கூலி, 8 மணி நேர வேலை உத்தரவாதம், தொழிற்சங்க உரிமை, விலைவாசி உயர்வை கட்டுபடுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப்ரவரி 9ம் தேதி 100 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு சவுந்தரராசன் பேசினார்.

Read more »

சி.முட்லூரில் கிளாடியோலஸ் பண்ணை துவக்கம்

கிள்ளை :

              சிதம்பரம் சி.முட்லூரில் கிளாடியோலஸ் மாதிரி பண்ணை துவக்க விழா நடந்தது.

              சிதம்பரம் சி.முட்லூரில்  முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன் பெயரில் கிளாடியோலஸ் மாதிரி பண்ணை துவக்க விழா நடந்தது. அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் செங்குட்டுவன் பெயர் பலகையை திறந்து வைத்தார்.

       அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத் துறை விரிவுரையாளர் ராஜ் பிரவின் கிளாடியோலஸ் மலர் பற்றி மாணவர்களுக்கு விளக்கி சந்தேகங்களுக்கு பதில் அளித்தார். பாசிமுத்தான் ஓடை பாசன விவசாயிகள் சங்க தலைவர் ரவீந்திரன், ஆசிரியர் மோகன், சீனுவாச பெருமாள், கணேசன், அருளானந்தனன், வேளாண் ஆசிரியை சாந்தி மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Read more »

கம்ப்யூட்டர் பயிற்சி பள்ளியில் சான்றிதழ் வழங்கும் விழா

பண்ருட்டி :

           பண்ருட்டி ஹஜரத் நூர் முகமது அவுலியா தர்கா நிர்வாக கமிட்டியின் கம்ப்யூட்டர் பயிற்சி பள்ளியில் பயின்ற 50 மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா நடந்தது.

               விழாவிற்கு நிர்வாக கமிட்டி தலைவர் தாஜீதீன் தலைமை தாங்கி பயிற்சி மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். செயலாளர் முகமதுகுத்தூஸ் முன்னிலை வகித்தார். பொருளாளர் ஷேக்பாஸித், துணை செயலாளர் ஹபிபுன்னிசா, உறுப்பினர்கள் ஷர்மிளா மற்றும் வக்பு வாரிய கண்காணிப்பாளர் முகமது இஸ்மாயில்,ஆய்வாளர் முஸ்தபா  உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆசிரியர் கவிதா நன்றி கூறினார்.

Read more »

மரக்கன்று நடும் விழா

குறிஞ்சிப்பாடி :

           வடலூர் ஓ.பி.ஆர். நினைவு ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவிகள் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. கல்லூரியில் நடந்த விழாவிற்கு வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி தாளாளர் டாக்டர் செல்வராஜ் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் சோலை முன்னிலையில் மரக்கன்றுகள் நடப்பட்டது. மாணவிகளுக்கு மரக்கன்று நடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து  எடுத்து கூறப் பட்டது.

Read more »

திட்டக்குடியில் போக்குவரத்து துறை சார்பில் கண்காட்சி பஸ் மூலம் சாலை விழிப்புணர்வு

திட்டக்குடி :

               திட்டக்குடியில் போக்குவரத்துத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது.

             திட்டக்குடி அரசு போக் குவரத்துக் கழக பணிமனை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா சாலை விழிப்புணர்வு கண்காட்சி பஸ் மூலம் விளக்கப் பட்டது. விழாவிற்கு பணிமனை கிளை மேலாளர் ரவி தலைமை தாங்கினார். கடலூர் ஓட்டுநர் ஆசிரியர்கள் ஜான்பாஸ்கோ, ராமையா முன்னிலை வகித்தனர். திட்டக்குடி கிளை ஓட்டுநர் ஆசிரியர் ஜெயராமன் வரவேற்றார்.

                     சப் - இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் கண்காட்சி பஸ்சினை துவக்கி வைத்தார். தொடர்ந்து சாலை விழிப்புணர்வுகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள், அரசு பஸ் டிரைவர்கள், மினிடெம்போ டிரைவர்களுக்கு வழங்கி சாலை விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. திட்டக்குடி அரசு பெண்கள், ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சாலை விதிகள் விளக்கப்பட்டது. விழாவில் பஸ் கன்ட்ரோலர்கள் ஜெயராமன், ஆறுமுகம், பணிமனை ஊழியர்கள் பன்னீர்செல்வம், ஜெயபால், ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். கொரக்கவாடி ராமசாமி நன்றி கூறினார்.

Read more »

கரும்பு தோகையை தூளாக்கும் இயந்திரம் செயல்விளக்கம்

திட்டக்குடி :

              கரும்பு தோகையை வயலிலேயே தூளாக்கும் இயந்திரத்தின் செயல் விளக்க முகாம் நடந்தது.

           பெண்ணாடம் அடுத்த மாளிகைகோட்டம் ஊராட்சியில் இறையூர் அம்பிகா சர்க்கரை ஆலை நிர்வாகம் சார்பில் கரும்பு தோகையை தூளாக்கும் இயந்திரத்தை அறிமுகம் செய்து, செயல்விளக்க கூட்டம் நடந்தது. ஆலை கரும்பு அதிகாரி நட ராஜன் தலைமை தாங் கினார். கரும்பு ஆய்வாளர் கள் சதாசிவம், ராஜேந் திரன் முன்னிலை வகித் தனர். கரும்பு ஆய்வாளர் தெய்வசிகாமணி வரவேற்றார். இதில் கரும்பு தோகையை வயலிலேயே தூளாக்குவதால் மண் ணிற்கு இயற்கை உரம், மண் வளம் கூடுதலாகி அதிக மகசூல் மற்றும் ஈரப்பதமும் கிடைப்பதை செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். கூட்டத் தில் ஊராட்சி தலைவர் வசந்தா, சுந்தரம், அ.தி. மு.க., கொளஞ்சி உட்பட பலர் கலந்து கொண்டனர். கரும்பு ஆய்வாளர் வசந்தகுமார் நன்றி கூறினார்.

Read more »

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

கடலூர் :

                 ஆட்டோ ஓட்டுனர் உரிமையாளர் நல கூட்டமைப்பு சார்பில் கடலூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

               சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி அரசு போக்குவரத்து துறை, நகர ஆட்டோ ஓட்டுனர் உரிமையாளர் நல கூட்டமைப்பு, போக்குவரத்து போலீஸ்  சார்பில் கடலூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. போக் குவரத்து பிரிவு இன்ஸ் பெக்டர் ராமதாஸ் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். சப் இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், பிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர். கடலூர் உழவர் சந்தையில் துவங்கிய ஊர்வலம் அண்ணாபாலம், பாரதி ரோடு வழியாக சென்று கலெக்டர் அலுவலகத்தில் முடிந்தது.

Read more »

க.இளமங்கலம் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம்

விருத்தாசலம் :

                விருத்தாசலம் அடுத்த க.இளமங்கலம் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.

                  சுப்ரீம் அரிமா சங்கம், சாய் மைக்ரோ எலக்ரானிக் சென்டர் இணைந்து நடத்திய முகாமிற்கு சுப் ரீம் அரிமா சங்க தலைவர் முத்துகுமார் தலைமை தாங்கினார். கோட்ட கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் லட்சுமணன் முன்னிலை வகித் தார். ஊராட்சி தலைவர் பழனியம்மாள் முகாமை துவக்கி  வைத்தார். முகாமில் மாடு, செம் மறி ஆடு, வெள்ளாடு மற்றும் கோழிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பசுக்களுக்கு செயற்கை  முறை கருவூட் டல், குடற்புழு நீக்கம், மலட்டுதன்மை நீக்கம், சினை ஆய்வுகள் செய்யப் பட்டன. டாக்டர் சரவணன், கால்நடை ஆய் வாளர்கள் வீரப்பன், திலிபன், பொன்வேலன், பராமரிப்பு உதவியாளர் செல் வராஜ் அடங்கிய குழுவினர் சிகிச்சை அளித்தனர். அரிமா மாவட்ட தலைவர் புகழேந்தி, செயலாளர் சக்திவேல், பொருளாளர் அய்யாசாமி, தேவநாதன், ஆனந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

வேட்டி, சேலை வழங்கும் விழா

சேத்தியாத்தோப்பு : 

                  ஓரத்தூரில் இலவச வேட்டி, சேலை வழங்கப் பட்டது. ஊராட்சி தலைவர் செல்வராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் துணை சேர்மன் முருகதாஸ், பாலு, பாலகிருஷ் ணன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் நலங்கிள்ளி வரவேற்றார். கீரப்பாளையம் ஒன்றிய சேர்மன் செந்தில்குமார் இலவச வேட்டி, சேலை வழங்கும் பணியை துவக்கி வைத்தார். சிதம்பரம் தாசில்தார் காமராஜ், வருவாய் ஆய்வாளர் பன்னீர் செல்வம், கிளியனூர் ஊராட்சி தலைவர் கல்யாணம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கிராம நிர்வாக அலுவலர் கற்பகவள்ளி நன்றி கூறினார்.

Read more »

இலவச வேட்டி, சேலை வழங்கும் விழா

திட்டக்குடி :

                       திட்டக்குடி அடுத்த கோடங்குடி ஊராட்சியில் இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தி.மு.க., கிளை செயலாளர் முத்துசாமி தலைமை தாங்கினார். ஊராட்சி துணைத் தலைவர் செல்வி, ஆசைத்தம்பி, செல்வராஜ், கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். தி.மு.க., இளைஞரணி அன்பானந்தம் வரவேற் றார். ஊராட்சி தலைவர் பெரியசாமி வேட்டி, சேலையினை வழங்கினார். வி.ஏ.ஓ., தங்கம், உதவியாளர் நாட்டான் பங்கேற்றனர். வெண் ணிலா நன்றி கூறினார்.

Read more »

நகராட்சி ஊழியர்களுக்கு கண் பரிசோதனை முகாம்

நெல்லிக்குப்பம் :

                 நெல்லிக்குப்பம் நகராட்சி ஊழியர்களுக்கு கண் பரிசோதனை முகாம் நடந்தது. நெல்லிக்குப்பம் நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் அவர் களது குடும்பத்தினருக்கு அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் கண் பரிசோதனை முகாம் நடந்தது. சேர்மன் கெய்க்வாட், மேலாளர் சம்பந்தம் முகாமை துவக்கி வைத்தனர். டாக்டர் பாஸ்கர் தலைமையிலான குழுவினர் 73 பேருக்கு கண் பரிசோதனை செய்தனர். இதில் மூன்று பேர் கண் புரை அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

Read more »

குறிஞ்சிப்பாடியில் எய்ட்ஸ் கலந்துரையாடல்

குறிஞ்சிப்பாடி :

                      குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செஞ்சுருள் சங்கம் சார்பில் எய்ட்ஸ் பற்றிய கலந்துரையாடல் நடந்தது.

                       குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செஞ்சுருள் சங்கம் சார்பில் மாணவர்களுக்கு எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. கல்லூரி முதல்வர் முத்துக் குமரன் தலைமை தாங்கினார். கதிரவன், செஞ்சுருள் சங்க மாவட்ட மேலாளர் செந்தில்முருகன் எய்ட்ஸ் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடினர். கடலூர் அரசு மருத்துவமனை டாக்டர் ரவி உள்ளிட் டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்., அலுவலர் எழிலன் செய்திருந்தார்.

Read more »

பண்ருட்டியில் சாலை பாதுகாப்பு வாரவிழா

பண்ருட்டி :

                 பண்ருட்டி போக்குவரத்து போலீஸ் நிலையம் சார்பில் நடந்த சாலை பாதுகாப்பு வாரவிழாவில் வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

               போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தணிகாசலம் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் பச்சையப்பன் முன் னிலை வகித்தார். இன்ஸ்பெக்டர் செல்வம் சாலை போக்குவரத்து விதிமுறைகள் குறித்து பேசினார். இதில் தனியார் பஸ் ஓட்டுநர்கள் சங்க தலைவர் காமராஜ், பஸ் உரிமையாளர் சங்க தலைவர் கோபால், ஆட்டோ ஓட்டுநர் சங்க தலைவர் கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் ஆட்டோ, வேன், பஸ், மோட்டார் சைக்கிள்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

Read more »

தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி

சிதம்பரம் : 

                அண்ணாமலை பல்கலைக்கழத்தில் தாழ்த்தப் பட்ட பெண்களுக்கு உணவு பதப்படுத்துதல் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி துவக்க விழா நடந்தது.

               அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் பொருளாதாரத்துறை, புது டில்லி மத்திய உயிர் தொழில் நுட்பத் துறை நிதி உதவியுடன் தாழ்த் தப்பட்ட பெண்களுக் கான உணவு பதப்படுத் தும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சியை பல்கலைக்கழக வேளாண்புல அரங் கில் நடத்தியது.

                    வேளாண் பொருளாதாரத்துறை பேராசிரியர் சுந்தரவரதராஜன் வரவேற்றார். முகாமை வேளாண் புல முதல்வர் நாராயணசாமி துவக்கி வைத்தார். ஐந்து நாள் நடைபெறும் பயிற்சியில் 75 பெண்கள் பங்கேற்றனர். பயிற்சியின் துவக்க விழாவில் சென்னை ரெப்கோ வங்கியின் திட்ட இயக்குனர் மாணிக்கசுந்தரம் தலைமை தாங்கி பேசுகையில், இந்த பயிற்சியை முடிக்கும் பெண்களுக்கு கடன் வழங்க வங்கிகள் தயாராக உள்ளன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கிராமப்புற பெண்கள் சாதனை படைக்க வேண் டும் என்றார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், வங்கி அதிகாரிகள், சுய உதவிக் குழுவினர் பங்கேற்றனர்.

Read more »

மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி

சிதம்பரம் :

                சிதம்பரம் அடுத்த அண்ணாமலைநகர் ராணி சீதை ஆச்சி மேல்நிலை ப்பள்ளியில் 6ம்வகுப்பு மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி துவக்க விழா நடந்தது.

                   சிதம்பரம் அடுத்த அண்ணாமலைநகர் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளியில் 6 ம்வகுப்பு மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சியளிக்கும் வகையில், அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளரும் பள்ளியின் செயலருமான டாக்டர் ரத்தினசபாபதி 10 கம்யூட்டர்களை வழங்கினார். இதற்கான துவக்க விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. தலைமை ஆசிரியர்  தர்பாரண்யன்  பயிற்சி முகாமை துவக்கி வைத்தார். கம்யூட்டர் ஆசிரியர்கள் பாலசுப்ரமணியன், சரவணன் ஆகியோர் பயிற்சியளித்தனர். மேலும் 6ம்வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் முதல் தமிழ் மற்றும் ஆங்கில கையெழுத்துப் பயிற்சி, ஆங்கில இலக்கண வகுப்பு, ஆங்கில ஸ்போக்கன் வகுப்பு, ஓவியப் பயிற்சி, யோகா வகுப்பு தொடந்து நடத்தப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.

Read more »

பொங்கல் பண்டிகைக்காக கரும்பு வெட்டும் பணி துவக்கம்

சிதம்பரம் :

          சிதம்பரம் அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விற்பனைக் காக கரும்பு வெட்டும் பணி துவங்கியது.

             சிதம்பரம் அருகே வேளக்குடி, கடவாச்சேரி, பழையநல்லூர் உள்ளிட்ட சுற்றுப்பகுதியில்  அப்பகுதி விவசாயிகள் பொங் கல் பண்டிகைக்காக கரும்பு பயிரிட்டிருந்தனர். தற்போது பொங்கலுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில் நேற்று கரும்பு வெட்டும் பணி துவங்கியுள்ளது.

              இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், பொங்கலை நம்பி தான் இப்பகுதியில் கரும்பு பயிரிட்டோம். கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டது. எஞ்சிய கரும்புகளை வியாபாரிகளிடம் மொத்தமாக விற் பனை செய்து விடுகின்றோம். தற்போது 20 கரும்பு கொண்ட கட்டு 100 முதல் 125 ரூபாய் வரை வயலிலேயே விலை பேசி விற்பனை செய்கின்றோம். இப்பகுதியில் வெட்டப்படும் கரும் புகள்  கடலூர், புதுச்சேரி, செஞ்சி, விழுப்புரம், திண்டிவனம், சென்னை மற்றும் சிதம்பரம் பகுதிகளுக்கு கொண்டு செல்லப் படுகிறது என்றனர்.

Read more »

மருத்துவக் காப்பீட்டு திட்டம் சிதம்பரத்தில் புகைப்பட பணி

சிதம்பரம் :

                 சிதம்பரம் பகுதியில் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் விடுபட்ட பயனாளிகளுக்கு புகைப்படம் எடுக்கும் பணி நாளை வரை நடக்கிறது. தமிழக அரசின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் புகைப்படம் மற்றும் கைரேகை பதிவு செய்யும் பணி 2ம் கட்டமாக கடந்த 5ம் தேதி துவங்கியது. நாளை ( 8ம் தேதி) வரை இப்பணி நடைபெறுவதால் தகுதி உள்ளவர்கள் குடும்பத்துடன் குறிப்பிட்ட மையத் திற்கு சென்று புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.

Read more »

செம்மேடு கிராமத்தில் 28ம் தேதி மனு நீதி நாள்

கடலூர் :

                 செம்மேடு கிராமத்தில் வரும் 28ம் தேதி மனு நீதி நாள் முகாம் நடக்கிறது.

                    பண்ருட்டி அடுத்த செம்மேடு கிராமத்தில் வரும் 28ம் தேதி  கலெக்டர் சீத்தாராமன் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடக்கிறது. அதனையொட்டி பொதுமக்கள் மனுக்கள் கொடுக்க வசதியாக கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் தபால் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. மனு கொடுக்க விரும்புவோர் இந்த பெட்டியில் போடலாம்.

                மேலும், இன்று (7ம் தேதி) வருவாய் மற்றும் பிற துறை அலுவலர்கள் செம்மேடு கிராமத்தில் முகாமிட்டு பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெறுகின்றனர். இவ்வாறு பெறப்படும் மனுக்களின் மீது எடுக்கப்படும் நடவடிக்கை விபரம் மனுநீதி நாளன்று தெரிவிக்கப்படும். மேலும் மனுநீதி நாளன்று கிராமத்தில் பொது மக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ முகாம், விவசாய திட்டங்களின் செயலாக்கம், ஊட்டச்சத்து மற்றும் சிறுசேமிப்பு ஆகிய துறைகளின் கண்காட்சிகள் நடக்கிறது.

Read more »

திட்டக்குடியில் நாளை அமைப்புசாரா நல வாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

கடலூர் :

              திட்டக்குடியில் நாளை (8ம் தேதி) அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் நடக்கிறது.

            இது குறித்து தொழிலாளர் நல அலுவலர் (சமூக பாதுகாப்பு திட்டம்) புனிதவதி விடுத்துள்ள செய்தி குறிப்பு:

                   உடலுழைப்பு, கட்டுமானம், ஆட்டோ, தையல், சலவை, பனைமரம், கைவினை, கைத்தறி, காலணி, ஓவியர், மண்பாண்டம், பொற்கொல்லர், வீட்டு பணியாளர், விசைத்தறி உள்ளிட்ட அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கான நல வாரியங்களில் உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் நாளை (8ம் தேதி) திட்டக்குடி செங்குந்தர் திருமணமண்டபத்தில் நடக்கிறது. முகாமில் பயனடைய விரும்பும் திட்டக்குடி தாலுகாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் மூன்று புகைப்படங்கள், ரேஷன் கார்டு நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல் ஆகியவற்றுடன் வரவேண்டும்.  மேலும் தொழிலாளர் துறையின் கீழ் செயல்படும் 15 அமைப்புச் சாரா நல வாரியங்களில் உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்கள் மாதந்தோறும் 2வது வெள்ளிக்கிழமைகளில் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தாலுகாவிலும் நடத்தப்பட உள்ளது.

Read more »

பெண்களுக்கு பயிற்சி

பண்ருட்டி :

         பண்ருட்டி வேளாண் வட்டாரத்தில் எண் ணெய்வித்து சாகுபடி குறித்து பெண்களுக்கான இருநாள் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து பண் ருட்டி வேளாண் உதவி இயக்குனர் ஹரிதாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு :-

              பண்ருட்டி வேளாண் வட்டாரத்தில் எண் ணெய்வித்து பயிர்கள் சாகுபடி குறித்து 50 பெண்களுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம் வரும் 11,12ம் தேதிகளில் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடக்கிறது.  இதில் மணிலா, எள், சூரியகாந்தி மற்றும் சோயா மொச்சை போன்ற எண்ணெய் வித்து பயிர்களின் சாகுபடி முறைகள் குறித்து, அறுவடைக்கு பின் செய்ய வேண்டிய நேர்த்தி முறைகள் குறித்து பயிற்சி அளிக் கப்படுகிறது. பயிற்சியில் தொழில் நுட்ப செயல் விளக்கங் கள் மற்றும் கருத்துகாட்சி ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. பயிற்சியில் பங்கேற்க ஆர்வமுள்ள பெண் விவசாயிகள் வேளாண் துறை அலுவலர்களை அணுகி பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

Read more »

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் : சி.ஐ.டி.யூ., மாநில மாநாட்டில் வலியுறுத்தல்

கடலூர் :

            அனைத்து வகை  தொழிலாளர்களையும், நலவாரிய உறுப்பினர்களாக அனுமதிக்க புதுச்சேரி அரசு உத்தரவிட வேண்டும் என தமிழ் மாநில சி.ஐ.டி.யூ., வலியுறுத்தியுள்ளது.

                கடலூரில் கடந்த 4ம் தேதி முதல் நடந்து வரும் சி.ஐ.டி.யூ., தமிழ் மாநில 11வது மாநாட்டின் இறுதி நாளான நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

               கடந்த 2003ல் பா.ஜ., அரசு புதிய பென்ஷன் மசோதாவை தாக்கல் செய்து 2004ல் அமல்படுத்தியது. பின் வந்த காங்., அரசு புதிய பென்ஷன் மசோதாவை சட்டமாக்க முயன்றபோது, ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து வந்த கம்யூ., கட்சிகளின் எதிர்ப் பால் நிறுத்தி வைத்தது. இருப்பினும் நிர்வாக உத்தரவுகள் மூலம் மத்திய அரசு அதைதொடர்ந்து அமல்படுத்தி வருகிறது.

                            பென்ஷனை தனியார் மயமாக்கி ஓய்வு பெறுப வர்களின் எதிர்காலத்தை உத்தரவாதமற்ற நிலைக்கு தள்ளும் இத்திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இதற்காக நாடு தழுவிய போராட்டத்திற்கு ரயில்வே உள்ளிட்ட பொதுத் துறை மற்றும் அனைத்து அரசு ஊழியர்களும்  தயாராகும்படி இம் மாநாடு அழைக்கிறது.

                   கடந்த 83ம் ஆண்டிற்கு பிறகு கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 350 பேர் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட் டுள்ளனர். 800க்கும் மேற்பட் டோர் காயமடைந்துள்ளனர். பல கோடி ரூபாய் மதிப் புள்ள மீனவர்களின் படகுகள், வலைகள் இலங்கை கடற்படையினரால் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
 
             பாரம்பரியமாக கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்து வந்த தமிழக மீனவர்களின் நிலை தற்போது கேள்விக்குறியாக உள்ளது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தி வரும் தாக்குதலை தடுத்து மத்திய அரசு, இலங்கை அரசை நிர்ப்பந் திக்க வேண்டும்.

               புதுச்சேரி மாநிலத்தில் செயல்பட்டு வரும் முறைசாரா தொழிலாளர் நலச்சங் கத்தில், தமிழக அரசு அனுமதித்தது போன்ற அனைத்து வகைப்படுத்தப்பட்ட முறை சாரா தொழிலாளர்களையும், உறுப்பினர்களாக அனுமதிக்க அம்மாநில அரசு உத்தரவிட வேண்டும்.

                    கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் உட்பட, தொழிலாளர்கள் நலனுக்காக ஆண்டுதோறும் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, தொழிலாளர் நலப்பயன்கள் தேக்கமடையாமல் இருக்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more »

சி.ஐ.டி.யூ.,பொதுச் செயலராக சவுந்தரராசன் மீண்டும் தேர்வு

கடலூர் :

                  கடலூரில் நடந்த சி.ஐ.டி.யூ., 11வது மாநில மாநாட்டில் பொதுச்செயலராக சவுந்தரராசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

                         கடலூரில் கடந்த 4ம் தேதி  இந்திய தொழிச்சங்க மையத்தின் 11வது தமிழ் மாநில மாநாடு துவங்கியது.  இறுதி நாளான நேற்று நிர்வாகிகள் தேர்வு நடந்தது. மாநில தலைவராக பத்மநாபன், பொதுச் செயலாளராக சவுந்தரராசன், பொருளாளராக குமார், உதவி பொதுச் செயலர்களாக சிங்கரவேலு, பழனிவேலு, குமார் தேர்வு செய்யப்பட்டனர். துணைத் தலைவர்களாக ரங்கராஜன், வைத்தியநாதன், சந்திரன், ராஜாங்கம், தியாகராஜன், இந்திரா, செல்லப்பன், சேகர், அன்பழகன், கிருஷ்ணமூர்த்தி, ஆறுமுகம், விஜயன்,  மகாலட்சுமி ஆகியோரும், செயலாளர்களாக மாலதி, லதா, கருமலையன், சுகுமாறன், கணேசன், அசோகன், அண்ணாதுரை, சுப்ரமணியன், சந்திரன்(திருப்பூர்), சுந்தர்ராஜன், அப்பனு, விக்ரமன், திருச்செல்வன், பகவதி, ஜானகிராமன், ரசல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Read more »

அ.தி.மு.க., நிர்வாகிகள் தேர்தல்: வேட்புமனு தாக்கல் துவங்கியது

கடலூர் :

                        கடலூர், சிதம்பரத்தில் அ.தி.மு.க., நிர்வாகிகள் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் துவக்கியது.

                       கடலூர் நகரம், நெல்லிக்குப்பம் நகரம் மற்றும் கடலூர் ஒன்றிய நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் நேற்று வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. கடலூர் மஞ்சக்குப்பத்தில் நடந்த நிகழ்ச்சியில் மனுக்களை மாவட்ட செயலாளர் எம்.சி.சம்பத் முன்னிலையில் தேர்தல் பொறுப்பாளரான முன்னாள் அமைச்சர் வளர்மதி பெற்றுக் கொண்டார். அப்போது மாவட்ட மேற்பார்வையாளர்களாக எம்.ஜி.ஆர்., மன்ற துணைத் தலைவர் செல்வம்,  காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ராஜகோபாலன், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ஆதிநாராயணன், வக்கீல் பிரிவு இணை செயலாளர் நடராஜன், அச்சரப்பாக்கம் முன்னாள் எம்.எல்.ஏ., பூவராகமூர்த்தி செயல் பட்டனர். இன்று மற்றும் நாளை இரண்டு நாட்களில் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள். போட்டி இருந்தால் அவர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படுகிறது.

                   சிதம்பரம்: கடலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க.,வில் நகரம், ஒன்றியம், பேரூராட்சிகளுக்கான நிர்வாகிகள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று 5 இடங்களில் நடந்தது.  சிதம்பரம் கீழவீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நகர பொறுப் பாளர்கள் தேர்வுக்கான வேட்பு மனு தாக்கல் நிகழ்ச்சிக்கு தேர்தல் பார் வையாளர் முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமை தாங்கினார். தேர்தல் பொறுப்பாளர் திருவள்ளூர் மாவட்ட பேரவை செயலாளர் ரமணன் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் நடந்தது.

                       நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன், புவனகிரி எம்.எல்.ஏ.,செல்வி ராமஜெயம், வேணுகோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  இதே போன்று  அண்ணாமலை நகர் பேரூராட்சி, கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளுக்கு கட்சியினர் மனு தாக்கல் செய்தனர்.

Read more »

கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு தனி ஆட்சியர் நியமிக்க கோரிக்கை

சேத்தியாத்தோப்பு :

             சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு தனி பொறுப்புடன் கூடிய ஆட்சியர் நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

                   இதுகுறித்து எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் நலச் சங்க துணைத் தலைவர் வீரசோழன், முதல்வர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனு: 

               சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த ஒரு ஆண் டாக ஆட்சியர் பணியிடம் காலியாக உள் ளது. இந்த ஆலைக்கு நியமிக்கப்படும் ஆட்சியர்கள் ஏதேனும் காரணங்களை கூறி மாறுதல் பெற்று சென்று விடுகின்றனர். இதனால் இரண்டாம் கட்ட அதிகாரிகள் முடிவு எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

                  இதேபோன்று ஆலைக்கு ஆணி வேராக விளங்கும் கரும்புத் துறையின் தலைமை கரும்பு அலுவலர் பணியிடமும் ஓராண்டாக காலியாக உள்ளது. தற்போதைய தலைமை கரும்பு பொறுப்பு அலுவலர் முந்தைய கரும்பு அலுவலர் என்பதால் அவரை அதிகாரியாக யாரும் ஏற்க மறுத்து வருகின்றனர்.
தனது துறையை பற்றி சிந்திப்பதை விட இதே பதவியை தக்க வைக்கவே அவர் போராடி வருவதால் கரும்புத்துறை முழுவதுமாக சீர் குலைந்து ஆலை நலிவை நோக்கி சென்று விட்டது. ஆலையை நலிவிருந்து மீட்டிடவும், விவசாயிகள் நலனை காத்திட ஆட்சியர் மற்றும் தலைமை கரும்பு அலுவலர்களை உடனடியாக நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

ஆதரவற்ற மூன்று சிறுவர்கள் அரசு காப்பகத்தில் சேர்ப்பு

கடலூர் :

            ஆதரவற்ற மூன்று சிறுவர்கள் அமைச்சரின் உத்தரவால் அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.

              கடலூர் அடுத்த கோதண்டராமபுரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மாரிமுத்து (35). இவரது மனைவி அனுசுயா (30). இவர்களுக்கு மணிமேகலை (12) என்ற மகளும், ஸ்டாலின் (9), கனி அமுதன் (6) என்ற 2 மகன்களும் உள்ளனர். மூவரும் அதே பகுதியில் உள்ள பள்ளியில் முறையே 8, 4 மற்றும் 2ம் வகுப்பு படித்து வருகின்றனர். 

                  குடிப்பழக்கத்திற்கு அடிமையான மாரிமுத்து உடல் நலம் பாதிக்கப் பட்டு கடந்த 2008ம் ஆண்டு இறந்தார். இவர் இறந்த துக்கம் தாங்காமல் அவரது மனைவி அனுசுயா  2009ம் ஆண்டு அக்டோபர் மாதம் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.  பெற்றோர் இறந்ததால் மூன்று குழந்தைகளும் நிர்கதியாக நின்றனர். ஆதரவற்ற நிலையில் இருந்த சிறுவர்கள் மாரிமுத்து தாய் சின்னலட்சுமி (75) ஆதரவில் இருந்தனர். இந்நிலையில் அமைச் சர் பன்னீர்செல்வம் கோதண்டராமபுரத் திற்கு சென்ற போது சின்னலட்சுமி 3 குழந்தைகளையும் காப்பாற்ற முடியவில்லை. படிக்க வைக்க முடியவில்லை என கூறி அழுதார்.  உடன் அமைச்சர் பன்னீர்செல்வம் மூவரையும் அரசு காப்பகத்தில் சேர்க்க உத்தரவிட்டார்.

                அதன்பேரில் நேற்று மூன்று சிறுவர்களும் அமைச்சர் பன்னீர்செல் வம், கலெக்டர் சீத்தாராமன் முன்னிலையில் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் புவனேஸ்வரியிடம் ஒப்படைத்தார். இதனையடுத்து கலெக் டர் உத்தரவின் பேரில் மணிமேகலை வேணுகோபாலபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியிலும், ஸ்டாலின், கனி அமுதன் ஆகியோர் அரசு காப்பகத்தில் உள்ள பள்ளியிலும் சேர்க்கப்பட்டனர்.

Read more »

கடலூரில் 25ம் தேதி ஆர்ப்பாட்டம் : விவசாய தொழிலாளர் சங்கம் முடிவு

ஸ்ரீமுஷ்ணம் :

                           ஸ்ரீமுஷ்ணம் அடுத்த சோழத்தரத்தில் இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.

                     கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் பட்டுசாமி, வட்ட செயலாளர்கள் ராஜ், இளையபெருமாள் முன் னிலை வகித்தனர். வட்டத் தலைவர் ராமலிங்கம் வரவேற்றார். கூட்டத்தில்  விவசாய சங்க நிர் வாகிகள் கோகுல் கிறிஸ்டிபன், மாயவன், நாகப்பன், ஞானக்கண்ணன், ஆனைமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

                      கூட்டத்தில், இயற்கை சீற்றங்களில் இருந்து மக் களை காத்திட நிரந்தர தீர்வு காண வேண்டும், குடிசை வீடுகளை அகற்றி கான்கிரீட் தொகுப்பு வீடு கட்டி தந்து குடிசை இல்லாத கிராமங்களை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களை வலியுறுத்தி வரும் 25ம் தேதி இந்திய கம்யூ. எம்.எல்.ஏ.,  உலகநாதன் தலைமையில் கடலூரில் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

Read more »

வெள்ள பாதிப்பிற்கு தீர்வு காண திட்டம் தேவை! விவசாய சங்கம் புதிய யோசனை

காட்டுமன்னார்கோவில் :

                              காவிரி டெல்டாவின் கடைமடை பகுதியான கடலூர் மாவட் டத்தில் சிதம்பரம், காட்டுமன் னார்கோவில் பகுதிகள் ஆண்டுதோறும் வெள்ளத்தால் பாதிப்பதற்கு நிரந்தர தீர்வு காண தொழில் நுட்ப நிபுணர்களை கொண்டு திட்டம் தயாரிக்க வேண்டும்.

                            கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதி காவிரி டெல்டா கடை மடை பகுதியாகும். கடலூர் மாவட்டத்தையும், நாகை மாவட்டத்தையும் தமிழகத்தின் மிகப்பெரிய வடிகாலான கொள்ளிடம் ஆறு பிரிக்கிறது. இதன் குறுக்கே 1836ம் ஆண்டு ஆர்தர்காட்டன் கட்டிய கீழணை  என்ற ஒரே ஒரு நீர்தேக்கம் மட்டுமே உள்ளது.

                          இந்த நீர் தேக்கத்தின் மூலமாக வடவாறு, வடவாறு வழியாக வீராணம், வடக்கு ராஜன் வாய்க்கால், கஞ்சங்கொல்லை வாய்க்கால் மூலம் ஒரு லட்சத்து 12892 ஏக்கர், வெள்ளாறு, ராஜன் வாய்க் கால், பெருமாள் ஏரி பாசனம் மூலம் 40,207 ஏக்கர் என மொத்தம் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 99 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. இத்துடன் நாகை மாவட்டத்தில் தெற்கு ராஜன், குமுக்கி மண்ணியாறு, மேலராமன், கீழ்ராமன் வாய்க் கால் மூலம் 25,000 ஏக்கர் பாசனம் பெறுகிறது.

                               மேட்டூர் அணை நிரம்பி வழியும் போதெல்லாம் உபரி நீர் கொள்ளிடத்தில் திறந்து விடப்படுகிறது. கொள்ளிடத்தில் 2 லட்சம் கன அடிக்குமேல் தண்ணீர் வரும் போது கொள்ளிடத்தின் வட கரையான கடலூர் மாவட்டத்திலும், தென் கரையான நாகை மாவட்டமும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. குடியிருப்பு பகுதிகள், விளை நிலங்கள் தண்ணீரில் தத்தளிக்கிறது. எனவே வெள்ள பாதிப்பிற்கு நிரந்தர தீர்வு காணவும், வீணாக கடலில் கலக்கும் மழை நீரை சேமித்து பாசனத்திற்கு பயன்படுத்துவதும் அவசியமாகிறது. தண்ணீர் சேமிக்கப்படுவதால் நிலத்தடி நீர் குறையாமல் பாதுகாக்கப்படும்.

              காவிரியின் குறுக்கே 7.5 மீட்டர் உயரமும், 5 கிலோ மீட்டர் நீளத் திற்கும் கட்டப்பட்டுள்ள தடுப் பணை, ஷட்டர்கள் மேலும் கட்டப்படுவதுடன் அதே போன்று கொள்ளிடத்திலும் 7 தடுப்பணைகள் கட்ட வேண்டும். இவ்வாறு கட்டப்படும் தடுப்பணைகள் மூலம் கொள்ளிடம் ஒரு முறை நிரம்பினால் 14 டி.எம்.சி தண்ணீரை சேமித்து விவசாயத்திற்கு பயன்படுத்த முடியும் என்கின்றனர் விவரமறிந்த விவசாய சங்க பிரமுகர்கள். இதே முறையில் கடலூர் மாவட்டத்தில் கொள்ளிடம், வெள்ளாற்றிலும் தடுப்பணை மற்றும் ஷட்டர் அமைக்கலாம்.

                     மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியும், சென்னைக்கு குடி நீர் வழங்கும் ஆதாரமாக இருப்பது வீராணம் ஆகும். இதன் ஆரம்ப கால கொள்ளளவு 1.44 டி.எம்.சி யாக இருந்தது. தற்போது ஏரி தூர்ந்துபோய், ஆக்கிரமிக்கப்பட்டும் அதன் கொள்ளளவு  0.96 டி.எம்.சியாக குறைந்துவிட்டது. விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று ஏரியை தூர் வாரி ஆழப்படுத்தினால் ஏரியின் கொள்ளளவு 2 டி.எம்.சி யாக உயர்த்த முடியும். வீராணம் ஏரியின் வடிகாலான வெள்ளியங்கால் ஓடை மூலம் வெளியேற்றப்படும் தண்ணீரால் ஏற்படும் பாதிப்பை தடுக்க வெள்ளியங்காலில் குமராட்சி அருகே "ரெகுலேட்டர்' அமைத்து கால்வாய் வெட்டி கீழ்பருத்திக்குடியில் கொள்ளிடத்தில் வடித்து விடலாம். இதன் மூலம் சிதம்பரம் பகுதியில் வெள்ளம் சூழ்வதை தடுக்க முடியும்.

                           அதே போன்று வீராணம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதியாக அரியலூர் மாவட்டத்தில்  427.35 சதுர கிலோ மீட்டர் உள்ளது. இதில் செங்கால் ஓடை வழியாக வரும் நீர் நேரடியாக வீராணம் ஏரிக்கு வருகிறது. தவிர கெங்கைகொண் டசோழபுரம் அருகில் உள்ள பொன்னேரி தூர்ந்துள்ளதால் இரண்டு நாள் மழை பெய்தாலே ஏரி நிரம்பி உபரி நீர் கருவாட்டு ஓடை, வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வருகிறது. இந்த கருவாட்டு ஓடை வடிகாலை நேரடியாக கொள்ளிடத்தில் இணைக்க போடப்பட்ட திட்டம் இதுவரை செயல்படுத்தவில்லை.

                         இந்த திட்டங்களை தொழில் நுட்ப நிபுணர்களையும், பொதுப் பணித் துறை அதிகாரிகளையும் அரசு  கலந்தாலோசித்து தயாரித்து செயல்படுத்த வேண்டும் என்பதே விவசாய சங்க பிரமுகர்களின் கோரிக்கை. இப்படி செய்தால் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் தாலுகாவிலுள்ள பல கிராமங்களை வெள்ள அபாயத்தில் இருந்து நிரந்தரமாக காப்பாற்ற முடியும்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior