உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், நவம்பர் 18, 2009

ஆலைக் கழிவுகளால் 100 ஏக்கர் விளை நிலங்கள் பாதிப்பு


கடலூர், நவ.17:


சர்க்கரை ஆலைக் கழிவுகளால் நெல்லிக்குப்பம் அருகே 100 ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் புகார் தெரிவித்து உள்ளது.
இச்சங்கத்தின் கடலூர் ஒன்றியச் செயலாளர் எஸ்.தட்சிணாமூர்த்தி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடலூர் ஒன்றியம் பில்லாலி, குணமங்கலம், நெசனூர், மேல்பாதி ஆகிய கிராமங்களில் சர்க்கரை ஆலைக் கழிவுகளால் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. அண்மையிóல் பெய்த மழையால், ஆலைக் கழிவுநீர் வாய்க்காலில் மழைநீருடன் திறந்து விடப்பட்டது. இதனால் வாய்க்கால் நிரம்பி வழிந்து, விளைநிலங்களில் புகுந்து விட்டது.
இதனால் சுமார் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர் முற்றிலும் அழிந்து விட்டது. விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே மாவட்ட ஆட்சியர் பாதிக்கப்பட்ட விளைநிலங்களைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 23 ஆயிரம் வீதம் சம்பந்தப்பட்ட ஆலையிடம் இருந்து நிவாரணம் பெற்றுத் தரவேண்டும். திருமாணிக்குழி, ஓட்டேரி கிராமங்களுக்குச் செல்லும் பாலங்களை உயர்த்திக் கட்ட வேண்டும். பாதிக்கப்பட்ட நிலங்களை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எம்.நாராயணன், மார்க்சிஸ்ட் ஒன்றியச் செயலாளர் மாதவன் ஆகியோர் பார்வையிட்டனர். ஒன்றியச் செயலாளர் மாதவன், விவசாயச் சங்க துணைத் தலைவர் ஆறுமுகம் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Read more »

நாளை மாநில கூடைப்பந்து அணிக்கான தேர்வு

நெய்வேலி, நவ. 17:

தேசிய அளவிலான சப்-ஜூனியர் போட்டியில் பங்கேற்கவுள்ள தமிழக அணிக்கான வீரர், வீராங்கனைக்கான தேர்வு வரும் 19 மற்றும் 20 தேதிகளில் சென்னை கீழ்ப்பாக்கம் ஜேஜே உள் விளையாட்டரங்கில் நடைபெறும் என கடலூர் மாவட்ட கூடைப்பந்துக் கழக செயலர் எஸ்.நடராஜன் அறிவித்துள்ளார்.
இது குறித்து எஸ்.நடராஜன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
36-வது தேசிய சப்-ஜூனியர் கூடைப்பந்து போட்டி டிசம்பர் 4 முதல் 10-ம் தேதி வரை ராஜஸ்தான் மாநிலம் சிட்டோர்கார் எனுமிடத்தில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் தமிழக அணிக்கான வீரர் வீராங்கனைக்கான தேர்வு சென்னையில் நவம்பர் 19-ம் தேதி ஆண்களுக்கும், 20-ம் தேதி மகளிருக்கும் நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்க தகுதியுள்ள 13-வயதுக்கு உட்பட்ட மாணவ,மாணவியர் மேற்கண்ட தேதிகளில் காலை 7 மணிக்கு தங்களுடைய பிறப்புச் சான்றிதழுடன் சென்னை கீழ்ப்பாக்கம் ஜேஜே உள்விளையாட்டரங்குக்கு வருமாறு தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் சார்பில் கேட்டுக் கொள்வதாக நடராஜன் அறிவித்துள்ளார்.

Read more »

விருத்தாசலத்துக்கு நாளை கனிமொழி வருகை

கடலூர், நவ.17:

விருத்தாசலத்தில் வியாழக்கிழமை நடைபெறும் கூட்டுறவு வார விழாவில் கனிமொழி எம்.பி. (படம்) கலந்து கொள்கிறார்.
விருத்தாசலம் ராஜா மகாலில் கூட்டுறவு வாரவிழா, கூட்டுறவு சங்கங்களில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உறுப்பினருக்கான சேவையையும், அவர்களுடனான தகவல் தொடர்பினையும் மேம்படுத்துதல் நாளாகக் கொண்டாடப் படுகிறது.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தலைமை வகிக்கிறார். சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பரிசுகள் வழங்குகிறார். மாநிலங்கள் அவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசுகளை வழங்குகிறார். விழாவில் மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் கூட்டுறவுத் துறை அலுவலர்கள் பங்கேற்கிறார்கள் என்றும் கூட்டுறவுத் துறையின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

அபராதமின்றி மின் கட்டணம்: இன்று கடைசி நாள்

சிதம்பரம்,நவ.17:

சிதம்பரம் மின் கோட்டத்தை சேர்ந்த மின் நுகர்வோர்கள் 9,10-வது மாதங்களுக்கான மின் கட்டணத்தைச் செலுத்த 15-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கனமழை காரணமாக மின்கட்டணத்தை 18-11-2009 புதன்கிழமை வரை அபராதம் இன்றி செலுத்தலாம் என செயற்பொறியாளர் இரா.செல்வசேகரன் அறிவித்துள்ளார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior