பண்ருட்டி :
வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிறுவன் மேல் சிகிச்சைக்காக செல்ல, "குளூக்கோஸ்' பாட்டிலுடன் பஸ் நிலையத்தில் காத்துக் கிடந்தது, பரிதாபமாக இருந்தது.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த மாளிகைமேடு ஏரிப்பாளையத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி அமுதா. கூலி தொழிலாளர்கள். இவர்களது மகன் பாண்டியன் (12). நேற்று முன்தினம் மாலை முதல் பாண்டியனுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. அபாய கட்டத்தில் இருந்ததால், பாண்டியனுக்கு இரு கைகளிலும் "குளூக்கோஸ்' ஏற்றி கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு டாக்டர்கள் சிபாரிசு செய்தனர்."ஆம்புலன்சில் செல்ல பணம் இல்லை. இங்கேயே சிகிச்சை அளியுங்கள்' என நாகராஜ், டாக்டரிடம் கெஞ்சினார்.
டாக்டர்கள் அதைப் பற்றி கவலைப்படாமல், கடலூர் அரசு மருத்துவமனைக்குச் செல்லுமாறு கண்டிப்புடன் கூறி விட்டனர்.வேறு வழியின்றி, மருத்துவமனையில் இருந்து வெளியேறி, இரு கைகளிலும், "குளூகோஸ்' ஏறிக் கொண்டிருக்கும் நிலையில், தாய், தந்தை இருவரும் தலா ஒரு, "குளூகோஸ்' பாட்டிலை கையில் பிடித்தவாறே மகன் பாண்டியனுடன் பஸ் நிலையத்திற்கு வந்து காத்துக் கிடந்தனர். தனியார், அரசு பஸ் கண்டக்டர்கள் சிறுவனின் கைகளில், குளுக்கோஸ் ' ஏறிக் கொண்டிருக்கும் நிலையைப் பார்த்தும் கொஞ்சம் கூட மனிதநேயமின்றி பஸ்சில் ஏற்ற மறுத்தனர்.
இதற்கிடையே, "குளூக்கோஸ்' இறங்குவதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சிறுவனின் உடலில் இருந்து ரத்தம் பாட்டிலுக்குள் ஏறியது. அப்போது, அருகில் இருந்த தன்னார்வ தொண்டர் ஒருவர் அதை சரி செய்தார்.அவஸ்தையுடன் காத்துக் கிடந்த அவர்களைப் பார்த்த பொது மக்கள், வியாபாரிகள் என அனைவரும் 250 ரூபாய் வழங்கி, ஒருவழியாக 12 மணிக்கு கடலூர் அரசு மருத்துவமனைக்கு ஆட்டோ மூலம் அனுப்பி வைத்தனர்.
வறுமையில் வாடிய நாகராஜ் தன் மகனை கடலூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பணம் இல்லை என்று சொன்ன பிறகாவது, டாக்டர்கள் 108 ஆம்புலன்சுக்கு சிபாரிசு செய்து அனுப்பியிருக்கலாம். உயிரைக் காப்பாற்றும் பணிக்காக வரும் டாக்டர்கள், மனித நேயமில்லாமல், "குளூக்கோஸ்' முழுவதும் இறங்குவதற்குள் மேல் சிசிச்சை என்ற போர்வையில் வெளியேற்றியது வேதனையான விஷயம்.