உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 13, 2012

தமிழ்நாடு ரயில் பயணிகள் நலச் சங்கம் சார்பில் கடலூர் மக்களவை உறுப்பினர் கே.எஸ்.அழகிரிக்கு பாராட்டு விழா




கடலூர்:
 
          இந்தியாவிலேயே வளர்ச்சி குறைந்த மாநிலமாக உள்ள பிகாரில் உள்ள ரயில்வே வளர்ச்சி கூட தமிழகத்தில் இல்லை என்று கடலூர் மக்களவை உறுப்பினர் கே.எஸ்.அழகிரி கூறினார். 
 
             திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில், புவனேஸ்வர் வாராந்திர ரயில் ஆகியவை கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்திலும், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் துறைமுகம் சந்திப்பு ரயில் நிலையத்திலும் நின்று செல்ல நடவடிக்கை எடுத்ததற்காக கடலூர் மக்களவை உறுப்பினர் கே.எஸ்.அழகிரிக்கு, தமிழ்நாடு ரயில் பயணிகள் நலச் சங்கம் சார்பில் பாராட்டு விழா கடலூரில் சனிக்கிழமை நடந்தது. 
 
பாராட்டுக்கு நன்றி தெரிவித்து கே.எஸ்.அழகிரி பேசியது: 
 
           தமிழகத்தில் குறிப்பாக விழுப்புரம்-மயிலாடுதுறை மார்க்கத்தில் நிறைய ரயில்கள் இயக்கப்பட வேண்டியிருக்கிறது. ரயில்வே துறையால் தமிழகத்துக்குக் கிடைத்த வாய்ப்புகள், வசதிகள் மிகவும் குறைவு. இந்தியாவிலேயே வளர்ச்சி குறைந்த மாநிலமாக உள்ள பிகாரில் உள்ள ரயில்வே வளர்ச்சி கூட தமிழகத்தில் இல்லை.  அதே நேரத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டாத மாநிலமும் தமிழகம்தான். விழுப்புரம்-செஞ்சி-நகரி, மற்றும் கடலூர்-புதுவை-சென்னை புதிய ரயில்பாதைத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு 6 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் நிறைவேற்றப்படவில்லை. காரணம் தமிழகம், புதுவை மாநில அரசுகள் இத்திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தவதில் ஆர்வம் காட்டவில்லை. மீட்டர் கேஜ் பாதையாக இருந்த போது இயக்கப்பட்ட அனைத்து ரயில்களும், அகலப் பாதையான பிறகும் இயக்கப்பட வேண்டும். மீட்டர் கேஜ் பாதையாக இருந்த போது எந்தெந்த ரயில் நிலையங்களில் ரயில்கள் நின்றனவோ, அவற்றில் அகலப் பாதையாக மாற்றிய பிறகும் நின்று செல்ல வேண்டும் என்று விதிமுறை இருக்கிறது. 
 
             தமிழகத்தில் தொழில் வளர்ச்சி குறைந்து வருகிறது. நிலம், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அளித்துத் தமிழகத்தில் தொடங்கப்பட்ட ஃபோர்டு, ஹூண்டாய் கார் தொழிற்சாலைகள், அண்மையில் தங்கள் கார் தொழிற்சாலை விரிவாக்கத் திட்டங்களுக்கு, குஜராத் மாநிலம் சென்றுவிட்டன. நமக்கு 50 ஆயிரம் இளைஞர்களின் வேலை வாய்ப்பு தவறிவிட்டது.  பொதுநல அமைப்புகள் பெரிய விஷயங்களைப் பற்றி பேச வேண்டும். அரசியல் கட்சியினருக்குச் சில கட்டுப்பாடுகள் இருக்கும். ஆனால் பொதுநல அமைப்புகள் பேசுவது வலிமையாக இருக்கும். அவை மக்களின் குரலாக இருக்கும். கடலூரில் கொசுத் தொல்லை பெரும் பிரச்னையாக உள்ளது. மக்களின் ஆரோக்கியத்தைக் குலைக்கும் இப்பிரச்னை குறித்து, பொதுநல அமைப்புகள் போராட்டம் நடத்த வேண்டும் என்றார் அழகிரி.
 
               நிகழ்ச்சிக்கு ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவர் ச.சிவராமன் தலைமை வகித்தார். ரயில் பயணிகள் நலச் சங்கம் தயாரித்த பயணிகள் விழிப்புணர்வு கையேட்டை கே.எஸ்.அழகிரி வெளியிட, சங்க கெüரவத் தலைவர் அருள் பெற்றுக் கொண்டார். ரயில்வே பிரச்னைகளுக்காக தொடர்ந்து போராடி வரும் வர்த்தக பிரமுகர் மகாவீர்மல் மேத்தா, ரயில்வே பயணிகள் ஆலோசனைக் குழு உறுப்பினர் பி.சிவகுமார், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன், வழக்கு தொடர்ந்த வர்த்தகப் பிரமுகர் கு.நாகராஜன், வழக்கறிஞர் சி.ஏ.தாஸ் ஆகியோரும் பாராட்டி கெüரவிக்கப்பட்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

கடலூர் புனித வளனார் கல்லூரியில் தகவல் தொடர்பு குறித்த கருத்தரங்கு

கடலூர்:
            புதிய அறிவியல் ஆய்வுகளுக்கான மாணவர்களை, பல்கலைக்கழகங்கள் உருவாக்குவது இல்லை என்று, பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவன, முன்னாள் விஞ்ஞானி டாக்டர் கே.சம்பத் குற்றம் சாட்டினார்.
கடலூர் புனித வளனார் கல்லூரி இயற்பியல் துறை சார்பில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற தகவல் தொடர்பு குறித்த கருத்தரங்கில் டாக்டர் சம்பத் பேசியது: 
            பல்வேறு காலங்களில் பொறியியல், மருத்துவம், தணிக்கையாளர் போன்ற தொழில் கல்விப் படிப்புகளை விரும்பிய பெற்றோரும் மாணவர்களும், தற்போது கணினி அறிவியல் பாடத்தைப் படிக்க விரும்புகிறார்கள்.  மேற்கண்ட படிப்புகள் அனைத்துமே நேற்றைய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் இன்றைய வளர்ச்சி ஆகும்.  மாணவர்களின் விருப்பங்களை கருத்தில் கொள்ளாமல், வேலைவாய்ப்பை மட்டுமே மனதில் கொண்டு, மாணவர்களை பெற்றோர் கட்டுப்படுத்துகிறார்கள். நமது பல்கலைக்கழகங்கள், புதிய சிந்தனைகளையும் புதிய அறிவையும் வளர்க்கும் ஆய்வுக் கேற்ற மாணவர்களை உருவாக்குவதற்குப் பதில், தொழிற்கூடங்களின் தேவைகளையும் வேலைவாய்ப்பையும் கருத்தில் கொண்டு, தொழில்நுட்ப படிப்புகளில் அதிக அக்கறை கொள்கின்றன.  
            பொறியியல் மற்றும் மருத்துவம் பயின்ற மாணவர்களில் ஏராளமானோர், விஞ்ஞானிகளாக பிரகாசிக்கிறார்கள். அறிவியல் ஆய்வுப் பணிகளில் சேர, மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.  இந்தியாவில் அறிவியல் பாடப்பிரிவுகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. அவர்களிலும் ஒரு சிலரே அறிவியல் ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறார்கள்.  வருங்காலத்தில் இப்போதுப் போல் விஞ்ஞானிகளின் தேவை, ஐந்து மடங்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார் டாக்டர் சம்பத்.  கருத்தரங்குக்கு, கல்லூரி முதல்வர் ஐ.ரட்சகர் அடிகள் தலைமை வகித்தார்.
             இயற்பியல் துறைத் தலைவர் ஏ.கிறிஸ்டி ஃபெர்டினாண்ட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இன்றைய காலக் கட்டத்தில் அறிவியல் வளர்ச்சியுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் மிகவும் முக்கியம் என்பதை வலியுறுத்தும் வகையில், கல்லூரி சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு சார்பில், கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை, டாக்டர் சம்பத் நட்டார். இதில் பேராசிரியை ஜெயந்தி ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read more »

கடலூர் நகராட்சியில் தானே புயலால் உருவான 1,500 டன் குப்பைகள் அகற்றம்

கடலூர்:
 
         கடலூர் நகராட்சியில் புயலால் உருவான 1500 டன் குப்பைகளை, முழுமையாக அகற்றும் பணியை, ஊரகத் தொழில்கள் துறை அமைச்சர் எம்.சி. சம்பத், சனிக்கிழமை ஆய்வு செய்தார். 
 
         கடலூர் பிரதானச் சாலைகளில் குப்பை அகற்றும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார். புயலினால் கடலூர் மாவட்டத்தில் விளம்பர போர்டுகள், மரங்கள், கூரைகள் மற்றும் பல்வேறு பொருள்கள் தூக்கி எறியப்பட்டு, குப்பைகளாக மாறியுள்ளன.  சாலைகளில் விழுந்துக் கிடந்த மரங்கள், கிளைகள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக கிடந்த பொருள்களை அகற்றும் பணி, புயல் பாதிப்பு ஏற்பட்ட ஓரிரு நாள்களிலேயே முடிக்கப்பட்டது. 
 
         முக்கியப் பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணியும் முடிவடைந்து உள்ளது. கடலூர் நகராட்சிப் பகுதியில் மட்டும் இன்று வரை 1,500 டன் குப்பைகள் அகற்றப்பட்டு உள்ளன.  கடலூர் மாவட்டத்தை சுத்தமான, சுகாதாரமான மாவட்டமாக மாற்றும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.  மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகள், 16 பேரூராட்சிகள், 683 ஊராட்சிப் பகுதிகளில், புயலினால் ஏற்பட்டுள்ள குப்பைகள் மற்றும் படிந்துக் கிடக்கும் மண் மேடுகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  
 
         இப்பணிகளில் உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள், அலுவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள், பள்ளி மாணவ, மாணவியர், தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். கடலூர் நகராட்சிப் பகுதியில் குப்பைகளை முழுமையாக அகற்றும் பணி தினந்தோறும் 5 வார்டுகள் வீதம், நடைபெற்று வருகிறது.  சனிக்கிழமை முக்கிய சாலைகளில் உள்ள மண் மற்றும் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்றது. இப்பணிகளில் 230 சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட்டனர். இப்பணியை அமைச்சர் எம்.சி.சம்பத் டவுன்ஹால் பகுதியில் தொடங்கி வைத்தார்.  
 
          பின்னர் நகராட்சி அலுவலகம், நியூசினிமா திரையரங்கம், அண்ணா மேம்பாலம், பேருந்து நிலையப் பகுதி, முதுநகர் ஆகிய இடங்களில் குப்பைகள் அகற்றும் பணி நடைபெற்று வருவதைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ, சார் ஆட்சியர் கிரண் குராலா, நகராட்சித் தலைவர் சி.கே.சுப்ரமணியன், துணைத் தலைவர் குமார், ஆணையர் விஜயகுமார், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கோ.அய்யப்பன், மாவட்ட ஊராட்சித் தலைவர் மல்லிகா வைத்திலிங்கம், கடலூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மணிமேகலை பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  
 

Read more »

கடலூர் கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் துப்புரவுப் பணி

கடலூர்:

           கடலூர் கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் ஞாயிற்றுக்கிழமை துப்புரவுப் பணியில் ஈடுபட்டனர்.  கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் 50 பேர் புயலில் பாதிக்கப்பட்ட சுப்புராயலு பூங்காவில் இருந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர்.  துப்புரவு முகாமை கல்லூரி முதல்வர் ரமாராணி தொடங்கி வைத்தார். என்.எஸ்.எஸ். அலுவலர் ரேணுகா, நேரு யுவகேந்திரா சண்முகம், கல்லூரி ஆசிரியைகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read more »

கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் பெற்றோர்கள் ஆலோசனைக் கூட்டம்

கடலூர் : 

        கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் மாலை நேர வகுப்பு பயிலும் மாணவிகளின் பெற்றோர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.

கல்லூரி முதல்வர் மல்லிகா சந்திரன் தலைமை தாங்கி பேசுகையில், 

           "சில நாட்களுக்கு முன் கல்லூரியில் நடந்த தீ விபத்தில் எழுது பொருட்கள் மட்டுமே எரிந்து சேதமானது. முக்கிய கோப்புகள் அலுவலகத்தில் இருந்தன. மாணவிகளின் எதிர்காலம் பாதிக்கும் வகையில் எதுவும் நடக்கவில்லை' என்றார்.
பெற்றோர்கள் பேசுகையில், 

         "மாணவிகள் ஏதேனும் தவறு செய்தால் கல்லூரி நிர்வாகம் தங்களுக்கு தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்கும் பட்சத்தில் பிள்ளைகளை கண்டிப்பதுடன் தேவையான ஆலோசனைகளை வழங்குவோம். கல்லூரியில் சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லூரியில் ஏற்படும் சில பிரச்னைகளால் மாணவிகளின் எதிர்காலம் பாதிக்கிறது' என்றனர். கூட்டத்தில் துறைத் தலைவர்கள் மற்றும் மாணவிகள் பங்கேற்றனர். 






Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior