கடலூர்:
கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் ரூ.75 ஆயிரத்தில் வீடுகளைக் கட்ட முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 200 ச.அடி கொண்ட இந்த வீடுகளைக் கட்டுவதற்கு, தமிழக அரசு தலா ரூ.75 ஆயிரம் வழங்குகிறது. இதில் ரூ.40 ஆயிரம் ரொக்கமாகவும், மீதித் தொகைக்கு சிமெண்ட், இரும்புக் கம்பி, ஜன்னல், கதவு ஆகியவை அரசு மூலமாகவும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
எனினும் ரூ.75 ஆயிரத்தில் இத்தகைய வீடுகளைக் கட்ட முடியுமா என்ற சந்தேகம் பயனாளிகள் மத்தியிலும், ஊராட்சி மன்றத் தலைவர்களிடமும் இருந்து வருகிறது. 200 ச.அடி வீடு கட்ட அரசு வழங்கும் பொருள்கள் நீங்கலாக, 8 ஆயிரம் செங்கல், 10 யூனிட் மணல், ஒரு யூனிட் கருங்கல் ஜல்லி மற்றும் பெயின்ட் செலவும் இருப்பதாகக் கூறுகிறார்கள். பயனாளிகள் சித்தாள் வேலைகளைச் செய்து, 2 கொத்தனார்கள் 15 நாள்கள் வேலை செய்தால் கட்டுமானப் பணிகளை முடிக்க முடியும் என்கிறார்கள்.
கடலூர் மாவட்டத்தில் தற்போது 4 ஆயிரம் செங்கல் விலை ரூ.13 ஆயிரமாகவும், மணல் ஒரு யூனிட் ரூ.1250 ஆகவும், ஜல்லி ஒரு யூனிட் ரூ.2700 ஆகவும் (தூரத்துக்குக் தக்கபடி விலை மாறுபடும்) இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். கொத்தனார் கூலி நாளொன்றுக்கு ரூ.400. தனியார் கட்டுமானப் பணிகள் வழக்கம்போல் நடந்து கொண்டு இருக்கும் நிலையில், கலைஞர் வீடுகள் கட்டும் திட்டத்துக்கு கொத்தனார்கள் கிடைப்பதிலும் சிரமம் உள்ளது. தற்போது வீடுகள் கட்டுவதில் 60 சதவீத செலவு, தொழிலாளர்களுக்கான கூலியாக இருப்பதாகக் கட்டுமானப் பொறியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஆனால் அரசுத் தரப்பில், 200 ச.அடி பரப்பளவு கொண்ட இந்த வீடுகளை, ரூ.75 ஆயிரத்தில் நிச்சயம் கட்ட முடியும் என்று உறுதிபடத் தெரிவிக்கிறார்கள் அதிகாரிகள். வீடுகளைக் கட்ட பயனாளிகள் தங்கள் உடல் உழைப்பையும் நல்க வேண்டும். அரசுத் தரப்பில் பலருக்குக் கொத்தனார் வேலைக்கு பயிற்சி அளிக்கப்பட்டு இருப்பதாக அரசு தெரிவிக்கிறது. அரசு ரூ.75 ஆயிரம் கொடுக்கும்போது பயனாளிகள் தங்கள் பங்காக, ரூ.10 ஆயிரம் செலவிடக் கூடாதா என்றும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.
செலவு அதிகம் ஆகிவிடுமோ என்ற அச்சத்திலும், தொடக்கத்தில் கையிலிருந்து கொஞ்சமாவது பணம் செலவு செய்ய வேண்டியது இருக்குமே என்பதாலும், பயனாளிகள் சிலர் வீடுகளைக் கட்டுவதில் தயக்கம் காட்டுவதாகவும் விவசாயிகள் சங்கத் தலைவர் கார்மாங்குடி வெங்கடேசன் தெரிவிக்கிறார்.
கலைஞர் வீடுகள் வழங்கும் திட்டப் பயனாளிகள் பலர் 100 நாள் வேலை திட்டத்தில் நாளொன்றுக்கு குறைந்தது ரூ.80 கூலி பெறுகிறார்கள். இத்திட்டத்தில், வீடுகளைக் கட்டுவதற்குக் கூடுதலாக ஆகும் செலவுக்காக, ரூ.50 ஆயிரம் வரை வங்கிக் கடனுக்கு ஏற்பாடு செய்து, அதை 100 நாள் வேலைத்திட்ட ஊதியத்தில் பிடித்தம் செய்து கொள்ளலாமே என்றும் கார்மாங்குடி வெங்கடேசன் ஆலோசனை தெரிவிக்கிறார்.
Read more »