கடலூர்:
வங்க கடலில் மையம் கொண்டிருந்த தானே புயல் கடந்த 30-ந்தேதி அதிகாலை கடலூர்-புதுவை இடையே கரையை கடந்தது. அப்போது பயங்கர சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில் கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவை மாநில பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
கடலூர் விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்தன.4 லட்சம் வீடுகள் சேதம் அடைந்தன. 26 பேர் உயிரிழந்தனர். மாவட்டம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. புயல் தாக்கி 5 நாட்கள் ஆகியும் இன்னும் நிலைமை சீரடையவில்லை.நிவாரண பணிகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் நிவாரண பணிகளை கலெக்டர் அமுதவல்லி, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அபூர்வா மணிவாசன் மேற்கொண்டுள்ளனர். அமைச்சர் எம்.சி. சம்பத் கடலூர் மாவட்டத்திலேயே தங்கியிருந்து நிவாரண பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார். மின்சாரம் இல்லாததால் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் குளம், குட்டைகளில் உள்ள நீரை மக்கள் குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.
குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க 60 லாரிகளில் கடலூர் நகரிலும் மற்ற பகுதிகளிலும் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. பால் தட்டுப்பாட்டை போக்க சென்னை, சேலம், விழுப்புரம் ஆகிய இடங்களில் இருந்து கடலூர் மாவட்டத்துக்கு பால் கொண்டு வரப்பட்டுள்ளது. திங்கட்கிழமை மட்டும் 20 ஆயிரம் லிட்டர் பால் சப்ளை செய்யப்பட்டது. இதனால் பால் தட்டுப்பாடு நீங்கி உள்ளது. பால் சப்ளை சீராக நடப்பதை கண்காணிக்கவும், உதவி செய்யவும் 5 பேர் கொண்ட குழுவை ஆவின் நிர்வாகம் அமைத்துள்ளது. பால் கிடைக்காதவர்கள் இந்த செல்போன் நம்பரில் தொடர்பு கொண்டால் அங்கு உடனடியாக பால் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மின்சாரத்தை சீர் செய்வதற்காக திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 1000 மின் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உள்ளூர் ஊழியர்களுடன் சேர்ந்து சீர்செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் முழுவதும் 10 ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. அவற்றில் பல கம்பங்கள் முற்றிலும் உடைந்து விட்டன. இதற்காக வெளிமாவட்டங்களில் இருந்து மின்கம்பங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. எமர்ஜென்சி மின்கம்பங்களை நட்டு மின்சாரம் வழங்குவதற்கு தாமதமாகும் என்பதால் `எமர்ஜென்சி கேபிள்' வயர்களை பொருத்தி உடனடியாக மின்சாரம் வழங்கி வருகிறார்கள்.
கடலூர் கலெக்டர் அலுவலக பகுதி மற்றும் பாரதி சாலை ஆகியவற்றுக்கு மின்சாரம் வந்துவிட்டது. இன்று மற்ற பகுதிகளுக்கு மின்சார இணைப்புகள் கொடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கிராம பகுதிகளில் மின்சாரம் இணைப்பு கொடுப்பதற்காக தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கடலூர் மாவட்டத்தில் சாலைகளில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தி விட்டனர். இதனால் போக்குவரத்து சீரடைந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் 26 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசே உணவு தயாரித்து வழங்கி வருகிறது. புயலால் தொற்று நோய் பரவி விடாமல் தடுக்க சுகாதார குழுக்களும் தயாராக வைக்கப் பட்டுள்ளன. வருவாய்த்துறை, விவசாயத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் மாவட்டம் முழுவதும் ஏற்பட்ட சேதம் குறித்து கணக்கெடுத்து வருகிறார் 3 நாளில் கணக்கெடுப்பு முடிந்துவிடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடலூர் மாவட்டத்தில் மட்டும் சேதம் ரூ.1000 கோடிக்கு மேல் இருக்கும் என்றும், விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.200 கோடிக்கு மேல் சேதம் இருக்கும் என்றும் அதிகார பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.