தொழிலாளர் சேமநல நிதியின்(பி.எப்.,) வட்டி விகிதம் 9.5 சதவீதமாக இதுவரை இல்லாத அளவு உயர்த்தப்பட்டுள்ளது. நடப்பாண்டிற்கு இது அமலாகும். அதிக அளவில் வட்டி விகிதம் உயர்த்தப்பட வேண்டும் என்ற தொழிலாளர் கோரிக்கைக்கு தற்போது விடிவு ஏற்பட்டிருக்கிறது. இதனால், நாடு முழுவதும் 4.71 கோடி பேர் பயன் அடைவர்.
தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் நிதி அவர்களின் ஓய்வுக்காலத்திற்கு பெரிய பாதுகாப்பாகும். வீடு வாங்க, திருமணம் போன்றவற்றிற்கும் இது பெரிய உதவியாக இருக்கும். இந்த நிதியில் சேர்ந்த தனியார், பொதுத்துறை ஆகியவற்றில் அமைப்பு சார்ந்த தொழிலாளர்களுக்கு தற்போது 8.5 சதவீத வட்டி வழங்கப்பட்டு வருகிறது. இந்த அளவு வட்டியானது 2005 - 2006ம் ஆண்டு முதல் தரப்படுகிறது. இத்தடவை இது மேலும் 1 சதவீதம் அதிகரித்திருப்பது பெரிய வரப்பிரசாதமாகும். இது 2010 - 2011ம் ஆண்டுக்கு தரப்படும். நாடு முழுவதும் நான்கு கோடியே 71 லட்சம் அமைப்புசார்ந்த தொழிலாளர்கள் மூலம் வசூலிக்கப்படும் பி.எப்., தொகை, சில லட்சம் கோடிகளை தாண்டி விட்டது.
ஆனால், இந்த பி.எப்., தொகைக்கு அளிக்கப்படும் 8.5 சதவீத வட்டியை உயர்த்தும் படி தொழிற்சங்கங்கள் நீண்ட நாட்களாக வற்புறுத்தி வருகின்றன. அதே சமயம் பி.எப்., மூலம் தரப்படும் வட்டியை நிர்ணயிக்கும் மத்திய அறங்காவலர் குழு, அதிக அளவு தந்தால் அதற்கான இழப்பீட்டை அரசு சந்திக்க வேண்டி வரும் என்று கூறியது. மேலும், இந்தத் தொகையில் ஒரு பகுதியை பங்குச் சந்தை மூலதன முதலீட்டில் போடுவது உசிதமா என்ற வாதமும் நடக்கிறது. ஆனால், தொழிலாளர்களின் பணத்துக்கு எந்த பங்கமும் வந்து விடக்கூடாது, என்பதால், தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் இதில் தயக்கம் காட்டியது.
நாடு முழுவதும் பணவீக்கம் அதிகரித்த நிலையில், சேமிப்பிற்கு கிடைக்கும் வட்டி விகிதம் மிகவும் குறைவாக இருக்கிறது என்ற கருத்து நிதியமைச்சகத்தின் பரிசீலனையிலும் இருக்கிறது. எனினும் எந்த முடிவாக இருந்தாலும் அது பி.எப்., அறக்கட்டளை எடுக்கும் முடிவுக்கு ஒத்துழைப்பதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இம்மாத துவக்கத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் பி.எப்., அறக்கட்டளை கூட்டம் கூடியது.
ஆனால், எந்த முடிவும் எடுக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே நேற்று மீண்டும் இந்த கூட்டம் கூடியது. இந்த நிதிக்கு தற்போது அளிக்கப்படும் 8.5 சதவீத வட்டியை 9.5 சதவீதமாக உயர்த்த இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பி.எப்., அறக்கட்டளை எடுத்த இந்த முடிவை தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டது. இதன் மூலம் நான்கு கோடியே 71 லட்சம் தொழிலாளர்கள் பயனடைவார்கள். இந்த நிதியாண்டிலேயே இந்த வட்டி உயர்வை நடைமுறைப்படுத்த நிதி அமைச்சகத்துக்கு மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே பரிந்துரை செய்துள்ளார்.
தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் பரிந்துரைக்கு நிதி அமைச்சகம் ஒப்புதல் அளிப்பது என்பது வெறும் நடைமுறை சம்பிரதாயமே. 1 சதவீத வட்டி உயர்வின் காரணமாக 1,600 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்படும் என்று தற்போது மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் வட்டித் தொகை சஸ்பென்சாக ஏற்கனவே உள்ள 1,731 கோடி ரூபாயில் இந்த பற்றாக்குறை ஈடுசெய்யப்பட்டு விடும். தவிரவும் பி.எப்., அறக்கட்டளையில் கையிருப்பாக ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி இருப்பதாகவும், அது அடுத்த மார்ச் மாதத்திற்குள் 1.82 லட்சம் கோடியாக உயரும் என்று கூறப்படுகிறது. ஆகவே உபரிநிதி வருவாய் மூலம் இந்த அதிக வட்டி தருவதில் சிரமம் இருக்காது.
அதே சமயம் ஆண்டு தோறும் நிதியாண்டு முடிவில் ஒவ்வொரு சந்தாதாரருக்கும் அவர் பெயரில் வட்டியுடன் சேர்த்து எவ்வளவு தொகை இருக்கிறது என்ற கணக்கை உடனடியாக தரும் கணக்கு நடைமுறை இந்த பொதுநல சேமிப்பில் இன்னும் அமலாகவில்லை என்றும் கூறப்பட்டது. அதே சமயம், அதிககவர்ச்சியான சேமிப்பாக இனி பொதுநல சேமநிதி இருக்கும் என்பதால், மற்ற சேமிப்பை மையமாக உடைய எல்லா நிதி அமைப்புகளுக்கும் தாராளமாக பணம் வராது என்றும் கருதப்படுகிறது.