உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 06, 2010

போலி பாஸ்போர்ட்டுகளால் பாழாகும் இளைஞர்கள்


             திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்ற சொல்லுக்கு ஏற்ப இன்றைய இளைஞர்களில் பலர் லட்சங்களைச் சம்பாதிப்பதற்காக வெளிநாடு செல்வதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.  ஆனால், நம்நாட்டிலிருந்து சென்ற பிறகு அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு குறைவில்லை என்றே கூறலாம். இவர்களில் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்களே அதிக அளவு பாதிக்கப்படுகின்றனர்.  பணம் சம்பாதிப்பதற்காக இளைஞர்கள் மட்டுமல்லாமல், நடுத்தர வயதினரும் கடல் கடந்து செல்வதைத்தான் பெரும்பாலும் விரும்புகின்றனர். குறிப்பாக, இந்த வழக்கம் கிராமங்களில் அதிகமாக உள்ளது. 

               ஒருவரைப் பார்த்து மற்றவர்களும் புற்றீசல்போல நகை, சொத்துகளை அடமானம் வைத்துச் செல்வது இன்றும் கிராமங்களில் தொடர்கதையாகவே இருக்கிறது.  மலேசியா, சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகளில் தமிழர்களாலேயே தமிழர்கள் ஏமாற்றப்படும் நிலை இன்னும் நீடிக்கத்தான் செய்கிறது. பெரும்பாலானோர் வெளிநாடுகளில் கொத்தடிமைகளாகவே வாழும் நிலை உள்ளது.   இதுஒருபுறமிருக்க, வெளிநாட்டு மோகத்தால் முறைகேடுகளில் ஈடுபட்டு போலீஸôரிடம் சிக்குவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது.  வெளிநாடு செல்லும் பெரும்பாலானவர்களுக்கு பாஸ்போர்ட், விசா எளிதில் கிடைக்காது. என்றாலும், வெளிநாட்டு மோகத்தால் தவறான வழியைப் பின்பற்றும் நிலைக்கு கிராமப்புற இளைஞர்கள் பலர் ஆளாகின்றனர்.  இவர்களிடம் ஆசை காட்டி சட்டத்துக்குப் புறம்பாக வெளிநாடு செல்வதற்கு மூளைச் சலவை செய்யும் இடைத்தரகர்கள் என்ற டிராவல்ஸ் ஏஜென்டுகள் எண்ணிக்கையும் இப்போது அதிகமாகிவிட்டன.  

                டிராவல்ஸ் ஏஜென்டுகள் சொல்லும் வார்த்தைகளை நம்பி ஏராளமான இளைஞர்கள், நடுத்தர வயதினர் ஏமாற்றமடைகின்றனர்.  ஆயிரக்கணக்கான அல்லது லட்சக்கணக்கான ரூபாய்களைப் பெறும் டிராவல்ஸ் ஏஜென்டுகள் மற்றொருவரின் அசல் பாஸ்போர்ட்டில் உள்ள புகைப்படத்தைக் கிழித்துவிட்டு, அப்பாவி மக்களின் புகைப்படத்தை ஒட்டி, பாஸ்போர்ட்டாக கொடுக்கின்றனர். வேறு ஒருவரின் பெயரில் விண்ணப்பித்து சில தில்லுமுல்லுகளைச் செய்து பணம் வாங்கியவர்கள் பெயரில் பாஸ்போர்ட் பெற்றுக் கொடுத்துவிடுகின்றனர்.  இதை வாங்கிக் கொண்டு விமான நிலையத்துக்குச் செல்லும் நபர்கள் குடியேற்றப் பிரிவு காவலர்களின் சோதனையில் சிக்கிக் கொள்கின்றனர். இதையடுத்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, சிறைக்குள் தள்ளப்படுகின்றனர்.  

                கடந்த 2008-ம் ஆண்டு மட்டும் திருச்சி விமான நிலையத்தில் 51 பேர் சிக்கினர். கடந்த ஆண்டில் 70 பேர் கைதாகினர். நிகழாண்டில் ஏப்ரல் வரை 25 பேர் பிடிபட்டுள்ளனர். இதேபோல, சென்னை, கோவை, மதுரை ஆகிய விமான நிலையங்களிலும் கைதாகும் அப்பாவி இளைஞர்கள் ஏராளம்.  போலி பாஸ்போர்ட் வழக்கில் சிக்குவோருக்குக் குறைந்தது இரண்டாண்டுகள்  தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும், அவர்கள் சம்பாதிக்க நினைத்த அளவுக்கு பணத்தை நீதிமன்றத்துக்காகச் செலவிட வேண்டியுள்ளது.  டிராவல்ஸ் நிறுவனங்கள் நம் நாட்டில் பெருகிய அளவுக்கு அதை நெறிமுறைப்படுத்துவதற்கான சட்டங்களோ அல்லது விதிமுறைகளோ இல்லை. இந்த மோசடியில் ஒரு கும்பலே இயங்கிக் கொண்டிருக்கிறது. விண்ணப்பம் செய்வதிலிருந்து, இருப்பிடச் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ், காவல் துறையின் சரிபார்த்தல் பணியும் ஆகியவை உரிய முறையில் மேற்கொள்ளப்படாததும் இதற்கு ஒரு காரணம்.    விண்ணப்பதாரர் மீது குற்ற வழக்குகள் ஏதும் இருக்கிறதா? என்பதை அறிவதற்காக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு பாஸ்போர்ட் அலுவலகம் மூலம் தகவல் அனுப்பப்படும்.  காவல் துறையினர் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரின் வீட்டுக்கே நேரில் சென்று விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதும், அந்த நபரின் முழு விவரங்களையும் சேகரித்து, பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதே விதிமுறை.  ஆனால், பல காவலர்கள் விண்ணப்பதாரரின் வீட்டைத் தேடிச் செல்வதில்லை. 

              காவலர்கள் வீடு தேடி வருவதற்குள் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களே காவல் நிலையத்தை தேடிச் செல்கின்றனர். இவர்களிடம் சில "நூறுகளைப் பெறும்' காவலர்களும் உரிய விசாரணை மேற்கொள்ளாமல் விசாரணையை முடித்து விடுகின்றனர்.  விண்ணப்பதாரர்களைப் பற்றிய முழுமையான விசாரணை இல்லாமல், அரைகுறையாக முடிக்கப்பட்டு விடுகிறது. இதனால், விண்ணப்பதாரர்கள் தவறோ அல்லது முறைகேடோ செய்திருந்தால்கூட அது மறைக்கப்பட்டு விடுகிறது. எப்படி இருப்பினும் விதிமுறைக்கு மாறாக பாஸ்போர்ட் பெற்றவர்கள் விமான நிலையத்தில் குடியேற்றப் பிரிவு போலீஸôரிடம் சிக்கிக் கொள்கின்றனர்.  பாஸ்போர்ட் விசாரணைக்காக காவல் துறையில் தனிப் பிரிவை ஏற்படுத்தினால் இதுபோன்ற முறைகேடுகளை ஓரளவு தடுக்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

இப்படியொரு சாதனை இந்தியாவுக்கு வேண்டாம்

 
            சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. மனித உயிரிழப்புகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்ற சாதனை இந்தியாவுக்கு வேண்டாம் என்பதை மக்களும் ஆட்சியாளர்களும் உணர வேண்டும்.     
 
                உலகிலேயே இரண்டாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இந்தியா இருப்பதாலோ என்னவோ இந்தியாவில் மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பெரிய மதிப்பிருப்பதில்லை.   இந்தியாவில் ஏற்படும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் தொடர்ந்து அதிகரித்து வருவதோடு சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதுதான் மிகவும் வேதனையானது. சாலை விபத்துகளும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம். சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்புவரை சீனா முதலிடத்தில் இருந்தது.  ஆனால் சீன அரசு மேற்கொண்ட கடும் முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் காரணமாக சாலை விபத்துகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டுகளை காட்டிலும் பெருமளவு குறைந்து உள்ளது.  
 
               சாலை விபத்துகளைப் பொறுத்தவரை சர்வதேச அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.  உலக நாடுகளில் ஏற்படும் மொத்த சாலை விபத்துகளில் 10 சத அளவு  இந்தியாவில் ஏற்படுகிறது.   இங்கு ஒவ்வொரு மணி நேரத்துக்கும் சாலை விபத்துகளில் சிக்கி 13 பேர் உயிரிழக்கின்றனர்.  ஆனால், வாகனங்களின் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் உலகில் உள்ள மொத்த வாகனங்களில் 1 சதம் மட்டுமே இந்தியாவில் உள்ளன.  இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சராசரியாக சாலையில் பயணிக்கும் 1000 வாகனங்களில் 35 வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகின்றன. ஆனால், உலக சராசரியாக 1000- க்கு 4 முதல் 10 வாகனங்கள் மட்டுமே விபத்தில் சிக்குகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக  ஒவ்வோராண்டும் சாலை விபத்துகளில் சிக்கி சுமார் 1 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர் என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.  
 
               ஆனால் சீனா மற்றும் அமெரிக்காவில் கடந்த ஆண்டுகளாக உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஒவ்வோராண்டும் 10 சத அளவு குறைந்து வருகிறது.  இங்கிலாந்து, அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் 52 சத வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் சாலை விபத்துகள் குறைந்து வருவதற்கு அந்த நாட்டில் உள்ள தரமான சாலைகளே முக்கிய காரணம். கடந்த 1930-ம் ஆண்டிலேயே அறிவியல் ரீதியான சாலைகளை இந்த நாடுகள் அமைத்துள்ளன என்று ஐநாவின் சாலைப் பாதுகாப்பு மையம் தெரிவிக்கிறது. சாலைவிபத்துகளில் உயிரிழப்பவர்களின் 70 சதம் பேரின் குடும்பங்கள் வருமானத்திற்கு வழியின்றி பரிதவித்து வருகின்றன. விபத்துகள் உயிரிழப்புகளை ஏற்படுத்துவதோடு மட்டுமன்றி குடும்பம் மற்றும் நாட்டின் பொருளாதார நிலையைச் சீரழித்துவிடுகின்றன.  அதிகரித்துவரும் விபத்துகளைக் குறைக்கவும் மக்களின் உயிரைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமும் ஆட்சியாளர்களுக்கு இல்லை.  சாலை விதிமுறைகளை முறையாகக் கடைபிடித்து நமது உயிரையும் சாலையில் பயணிக்கும் மற்ற அப்பாவி மக்களின் உயிரையும் காத்துக் கொள்ள வேண்டும் என்ற அக்கறை மக்களுக்கும் இல்லை. இந்த நிலை மாற வேண்டுமெனில், அரசும், அரசு அதிகாரிகளும் சாலைப் பாதுகாப்பின் அவசியத்தை உணர்ந்து உண்மையான அக்கறையோடு செயல்படத் தொடங்க வேண்டும்.  அரசு சாலைப் பாதுகாப்பிற்கான விதிமுறைகளையும் சட்டங்களையும் நெறிப்படுத்தி சட்டத்தை மீறுவோருக்குக் கடுமையான தண்டனைகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.    
 
               அரசு அதிகாரிகள் தங்கள் சுயநல எண்ணங்களை ஒதுக்கிவிட்டு அரசு இயற்றும் சட்டங்களையும் நெறிமுறைகளையும் எந்தத் தொய்வும் இன்றி அமல்படுத்த வேண்டும்.மக்களும் சாலைப் பாதுகாப்பில் தங்களுக்கு உள்ள பங்கினை உணர்ந்து பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். சாலைப் பாதுகாப்பின் அவசியத்தை முழுமையாக உணர்ந்து போதிய கவனம் செலுத்தி தங்கள் நாட்டில் ஏற்படும் சாலை விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டிய சீனாவைப் போன்று இந்திய அரசும் சாலை விபத்துகளைக் குறைக்க உறுதியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சாலை விபத்து மற்றும் உயிரிழப்புகளில் உலகிலேயே முதலிடம் என்ற சாதனை நமக்கு வேண்டாம்.  இதனை இந்தியர்கள் என்ற முறையில் ஆட்சியாளர்கள் மட்டுமல்லாது, ஒவ்வொரு குடிமகனும் உணர வேண்டும்.

Read more »

வணிகர் தினம்: கடைகள் அடைப்பு

 கடலூர்:

             வணிகர் தினத்தை முன்னிட்டு புதன்கிழமை கடலூரில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஆண்டுதோறும் மே 5-ம் தேதி வணிகர் தினமாகக் கடைபிடிக்கிறார்கள். இதையொட்டி கடலூரில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு இருந்தன. நகைக் கடைகளில் 50 சதவீதம் திறந்து இருந்தன. ஹோட்டல்கள் வழக்கம்போல் திறந்து இருந்தன. காய்கறிக் கடைகள், பெட்டிக்கடைகள், டீக்கடைகள் திறந்து இருந்தன. வணிகர் தினத்தை முன்னிட்டு திருச்சியில் நடந்த வணிகர்கள் மாநாட்டுக்கு, கடலூர் மாவட்டத்தில் இருந்து 1000 வியாபாரிகள் சென்றதாக, மாவட்ட தொழில் வர்த்தகச் சங்கத் தலைவர் டி.சண்முகம் தெரிவித்தார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

கலைஞர் காப்பீடுத் திட்டத்தில் இன்று முதல் அடையாள அட்டை

 கடலூர்:

            கலைஞரின் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான காப்பீட்டுத் திட்டத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்டவர்களுக்கு இன்று (வியாழக்கிழமை) முதல், முகாம்களில் அடையாள அட்டை வழங்கப்படும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்தார்.

ஆட்சியர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

          கலைஞரின் காப்பீட்டுத் திட்டத்தில் பயனாளிகளைச் சேர்க்க புகைப்படம் மற்றும் கைவிரல் ரேகை பதிவு செய்யும் பணி ஏற்கெனவே கிராமம்தோறும் நடைபெற்று உள்ளது. இதில் விடுபட்டவர்களுக்கு புகைப்படம் எடுக்கும் பணி வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது. கடலூர் நகராட்சிப் பகுதிகளில் புகைப்படம் எடுத்துக் கொண்டவர்களுக்கு இன்று முதல் 20-ம் தேதி வரை வார்டுகள் வாரியாக, அதற்கென குறிப்பிட்ட இடங்களில் வழங்கப்படும். அடையாள அட்டை கிடைக்காதவர்கள் சிறப்பு முகாம்களில் கலந்துகொண்டு அடையாள அட்டைகளைப் பெறலாம்.இதற்காக அவர்கள் ரேஷன் கார்டுடன் வர வேண்டும் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

Gauge conversion fails to cheer Cuddalore residents

CUDDALORE:

           The introduction of train services on the newly laid Villupuram-Mayiladuthurai broad gauge sector has not brought cheer to commuters in Cuddalore.

       The Madras-Madurai bi-weekly express and the Madras-Nagercoil daily express have scheduled halts at the Thirupadiripuliyur railway station, while other trains just pass through. Residents of Cuddalore had put up with the inconvenience of cancellation of train services for years in the hope that after gauge conversion they would get improved services.

       However, their expectations are belied because of the virtual downgrading of the Thirupadiripuliyur station by running only nominal services, thereby making them feel that at least the status quo prior to gauge conversion should be restored. Reflecting such a view in a letter addressed to the General Manager of Southern Railway, former Member of Legislative Council L. Jeyachanthran, and former Rotary Governor, said that as per the new schedule, the Chennai-Tiruchi-Chennai express was not halting at Thirupadiripuliyur on either way.

Prestigious place

          Besides being a commercial hub, Thirupadiripuliyur occupied a prestigious place in Cuddalore map, thanks to the presence of Padaleeswarar Temple and Sri Devanatha Swamy Temple in the vicinity. Moreover, it was situated close to the Cuddalore main bus stand, thereby having the potential for a better road and rail network. But these factors were overlooked while formulating the schedule, thereby disappointing traders, the elderly and students. Mr. Jeyachanthran also noted that the proposed Bhubaneswar-Rameswaram express service would skip Thirupadiripuliyur, Cuddalore Old Town and Chidambaram.
It would be a cause of concern if the authorities ignored the entire Cuddalore district while introducing new services.

           He urged the railway authorities to make arrangements for all trains passing through Cuddalore to halt at Thirupadiripuliyur station without fail. The Federation of All Residents' Welfare Associations, Cuddalore, in a representation to the Chief Passenger Traffic Manager, Southern Railway, made a plea for making Thirupadiripuliyur a full-fledged station. Federation general secretary M. Marudhavanan noted that the station was yet to get basic amenities, seating arrangements and a foot overbridge.The number of general compartments had been reduced from seven to five, and the speed of trains restricted to 75 km as against 120 km recommended by the Safety Commissioner.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

பரங்கிப்பேட்டையில் 168 வீடுகள் திறப்பு : இரண்டு அமைச்சர்கள் பங்கேற்பு


பரங்கிப்பேட்டை : 

             குடிசை மாற்று வாரியம் சார்பில் 168 குடியிருப்புகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பரங்கிப்பேட்டை சின்னூரில் நடந்தது.

             கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். சேர்மன்கள் முத்துபெருமாள், செந்தில்குமார் முன் னிலை வகித்தனர். பேரூராட்சி சேர்மன் முகமது யூனுஸ் வரவேற்றார். குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ராஜிவ் காந்தி மறுவாழ்வு திட்டத் தின் கீழ் 6 கோடியே 20 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புதியதாக கட் டப்பட்ட 168 வீடுகளை குடிசைமாற்று வாரியம் மற்றும் இடவசதி கட்டுப் பாட்டு துறை அமைச்சர் தங்கவேலன் திறந்து வைத்து பயனாளிகளுக்கு சாவிகளை வழங்கினார்.

           பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் வழங்கப்பட்ட அரசு நலத்திட்ட உதவிகளை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் வழங்கினார். விழாவில் டி.ஆர்.ஓ., நடராஜன், பரங்கிப் பேட்டை துணை சேர்மன் செழியன், குமராட்சி சேர் மன் மாமல்லன், ஊராட்சி தலைவர் பழனி, மாவட்ட பிரதிநிதி காண்டீபன், நகர செயலாளர் பாண்டியன், இளைஞரணி அமைப் பாளர் முனைவர் உசேன், கவுன்சிலர்கள் ஜெகநாதன், காஜாகமால், செயல் அலுவலர் ஜீஜாபாய், எம்.கே.எம்.எஸ்., கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர்கள் பஷீருல்லா, முஸ்தாக், புகழேந்தி, அருள்வாசகம் உட்பட பலர் பங்கேற்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

கர்நாடக முதல்வர் எடியூரப்பா இன்று திருவந்திபுரம் வருகை

General India news in detail

கடலூர் : 

              கர்நாடக முதல்வர் எடியூரப்பா குடும்பத்தினருடன் கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் தரிசனம் செய்ய இன்று காலை 9 மணிக்கு வருகிறார். இதற்காக அவர் காலை 7 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் பெங்களூரில் இருந்து புறப்பட்டு, புதுச்சேரிக்கு வருகிறார். அங்கிருந்து காரில் கடலூர் வழியாக திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலுக்கு வருகிறார். இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டி.எஸ்.பி., மகேஷ்வரன், கோவில் நிர்வாக அலுவலர் கிருஷ்ணகுமார், நரசிம்ம பட்டாச்சாரியாருடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது வெங்கடகிருஷ்ண பட்டாச்சாரியார், இன்ஸ்பெக்டர்கள் சுந்தர வடிவேலு, சுரேஷ் கண்ணன் (தனிப்பிரிவு), சப்-இன்ஸ்பெக்டர்கள் ரத்தினவேல், ஆனந்தபாபு மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

Read more »

நடராஜர் கோவிலில் மகா அபிஷேகம் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர்

General India news in detail
சிதம்பரம் : 

               சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு மகா அபிஷேகம் நடந்தது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடராஜர், சிவகாமசுந்தரிஅம்பாளுக்கு ஆண்டுக்கு ஆறு முறை மகா அபிஷேகம் நடக்கிறது. ஆனி திருமஞ்சனம், ஆருத்ரா தரிசனத்தின் போது ஆயிரங்கால் மண்டபத்திலும், நடராஜர் வீற்றிருக்கும் சித்சபையின் எதிரில் கனக சபையில் நான்கு முறையும் நடக்கிறது. சித்திரை மாதத்தில் நடக்கும் மகா அபிஷேகம் நேற்று நடந்தது. மகா அபிஷேகத்தையொட்டி, உலக நன்மை வேண்டி கோவில் நடன பந்தலில், நேற்று அதிகாலை முதல் மகா ருத்ரயாகம் நடந்தது. சபா கல்யாசபாபதி தீட்சதர் தலைமையில் 121 தீட்சதர்கள் 1,333 ஆவர்த்திகள் சொல்லி ருத்ர பாராயணம் செய்தனர். தொடர்ந்து காலை 8 மணியளவில் சித்சபையிலிருந்து நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் கனகசபையில் எழுந்தருள செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலையில் நடந்த ருத்ர ஹோமத்தில் 13 பேர் ஹோமம் செய்தனர்.மாலை 6 மணியிலிருந்து நள்ளிரவு வரை நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு குடம், குடமாக பால், தயிர், தேன், சந்தனம், பஞ்சாமிர்தம், இளநீர், விபூதி, பன்னீர், பூ ஆகியவற்றால் மகா அபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.

Read more »

திட்டக்குடி வெலிங்டன் ஏரிக்கரை சீரமைப்பு பணி எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை பார்வை


திட்டக்குடி : 

            திட்டக்குடி வெலிங்டன் ஏரிக்கரை சீரமைப்பு பணியினை எம்.எல்.ஏ., செல்வப் பெருந்தகை நேரில் பார்வையிட்டார்.

            திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் வெலிங்டன் ஏரி மூலம் திட்டக்குடி, விருத்தாசலம் தாலுகாவைச் சேர்ந்த 24 ஆயிரத்து 59 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று பயனடைந்தன. இதில் வலுவிழந்த கரைப்பகுதியான 1,700 முதல் 2,500 மீட்டர் வரையிலான 800 மீட்டர் கரைப்பகுதியை சீரமைக்க 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டது.

           கடந்த ஆண்டு முதல் பணிகள் துவங்கி 70 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. இப்பகுதியை மங்களூர் தொகுதி எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து பணிகளின் விபரம், தன்மை, நீர்ப்பிடிப்பு அளவீடு, பாதுகாப்பு குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டறிந்தார்.

              மேலும் கரை சீரமைப்பு பணி சம்பந்தமான நீர்ப்பாசன சங்க தலைவர்களின் கோரிக்கைகளை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். அப்போது பி.எஸ்.பி., மாவட்ட தலைவர் கதிர்வாணன், உதவி செயற்பொறியாளர் நாகராஜன், உதவி பொறியாளர்கள் பாலமுருகன், தாமோதரன், பாசன சங்க தலைவர்கள் வேணுகோபால், வடிவேல், மருதாச்சலம், பொன்னுசாமி, துரைராஜ், இனாயத், ஊமைத்துரை உட்பட விவசாயிகள் பலர் உடனிருந்தனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

திட்டக்குடி - சிறுபாக்கம் 30 கி.மீ., சாலை 'டர்...'


திட்டக்குடி:

             திட்டக்குடி - சிறுபாக்கம் வரையிலான 30 கிலோ மீட்டர் தார் சாலையை முழுமையாக சீரமைக்க வேண்டுமென கிராம மக்கள், பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

             திட்டக்குடியை தாலுக்காவின் தலைமையிடமாக கொண்டு இயங்கும் சிறுபாக்கம் குறுவட்டம் 32 கிலோ மீட்டர் தொலைவில், மாவட்டத்தின் கடைசியில் அமைந்துள் ளது. இங்குள்ள பெரும்பாலான கிராம மக்கள் விவசாயத்தையே பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். மங்களூர் ஒன்றியத்தின் தலைமையிடமான மங்களூர் வழியாக சிறுபாக்கம் வரை செல்ல கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் 30 கி.மீ., தூரத்திற்கு தார் சாலை அமைக்கப்பட்டது.

                இவ்வழியாக முப்பதுக்கும் மேற்பட்ட குக்கிராம மக்கள் போக்குவரத்து வசதி பெற்று பயனடைந்து வருகின்றனர். மேலும் இப்பகுதி விளை பொருட்களான கரும்பு, நெல், மணிலா, மக்காச் சோளம், எள், பருத்தி ஆகியவற்றை வியாபாரத்திற்காக திட்டக்குடி, விருத்தாசலம் பகுதிகளில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், உழவர் சந்தைகளுக்கு நேரடியாக எடுத்து செல்கின்றனர். தவிர பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் என பல தரப்பினரும் இவ்வழியை பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் மழைக் காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி, வலுவிழந்து போக்குவரத்து துண் டிக்கப்படும் நிலைக்கு மாறுகிறது. நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக 'பேட்ஜ் ஒர்க்' செய் யாத காரணத்தால் சைக் கிள் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் பெரும் அவதியடைகின்றனர்.

                இந்த சாலை கடந்த 2008ல் சாலை மேம்பாட்டு நிதியிலிருந்து 94.5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, திட்டக்குடி - சிறுபாக்கம் வரை பழுதடைந்த தார் சாலையில் குறிப்பிட்ட தூரத்திற்கு மட்டுமே சீரமைக்கப்பட் டது. பிரதான சாலைக்கே பணிகள் சரியாக நடைபெறாத நிலையில் சிறுபாக்கம் வரையிலான குக்கிராமத்திற்கு செல்லும் சாலைகளின் நிலை கேள்விக்குறியாக உள்ளது.

              திட்டக்குடி- சிறுபாக்கம் தார் சாலையை முழுவதுமாக சீரமைத்து இருவழிப்பாதையாக மாற்றினால் கள்ளக்குறிச்சி, சேலம், ஆத்தூர், பெங்களூரு, ஓசூர் உள் ளிட்ட பெரு நகரங்களுக்கு ராமநத்தம் வழியாக சென்று கொண்டிருக்கும் அரசு மற்றும் தனியார் பஸ்களை இப்பகுதி வழியாக திருப்பி விடலாம். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களால் ஏற்படும் விபத்துகளும் குறைந்து உயிரிழப்புகள் தவிர்க்கப்படுவதோடு வேப்பூர், ராமநத்தம் தேசிய நெடுஞ்சாலையில் விபத்தினால் நீண்ட நேரம் ஏற்படும் போக்குவரத்து பாதிப்பினை தவிர்க்க இந்த சாலையை மாற்று வழியாகவும் பயன்படுத்தலாம்.

               குறிப்பாக திட்டக்குடியிலிருந்து ராமநத்தம், ஆவட்டி, வேப்பூர் வழியாக கள்ளக்குறிச்சி உட்பட பல பகுதிகளுக்கு செல்லும் பஸ்களின் நேரத்தை காட்டிலும் திட்டக்குடி, ஆவட்டி, மங்களூர், சிறுபாக்கம், சின்னசேலம் வழியாக கள்ளக்குறிச்சி செல்லும் போது குக்கிராம மக்கள் பஸ்சுக்காக கால் கடுக்க காத்திருக்கும் அவல நிலை மாறும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

இறப்பு சான்றிதழ் பெற முடியாமல் தவிப்பு! நடைமுறையை எளிதாக்க கோரிக்கை


நெல்லிக்குப்பம் : 

             அறுபது வயதிற்கு மேல் உள்ளவர்கள் இயற்கை மரணம் அடைந் தால் கூட நகராட்சியில் டாக்டர் சான்று கொடுத்து இறப்பு சான்றிதழ் பெற வேண்டும் என்ற உத்தரவால் சாமானிய மக்கள் இறப்பு சான்றிதழ் பெற முடியாமல் தவிக்கின்றனர்.

              ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளாட்சிகள் மூலம் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறுவது என்பது அவசியமாக்கப்பட்டுள்ளது. பிறப்பு, இறப்புகளை அவசியம் பதிவு செய்ய வேண்டும் என அரசும் வலியுறுத்தி வருகிறது. இதற்காக பெரும் சிரத்தை எடுத்து சான்றிதழ் பெறுவதும் உண்டு. குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு பிறப்பு சான்றிதழுக்காக அலையாய் அலைவதை காணலாம். அதே போன்று ஒருவர் இறந்து விட்டால் அவரது வாரிசுகள் இறப்பு சான்றிதழ் பெற்றால் தான் இறந்தவரின் பெயரிலுள்ள பட்டா, வங்கி கணக்கு, சமையல் எரிவாயு இணைப்பு, அரசு உதவிகள் போன்றவற்றை பெற முடியும். எனவே இறப்பு சான்றிதழ் பெறுவது முக்கியமானதாகும்.

                இதுவரை 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இயற்கை மரணமடைந் தால் டாக்டர் சான்றிதழ் ஏதுமின்றி அப்படியே பதிவு செய்வார்கள். அறுபது வயதுக்குள் இறந்தால் மட்டுமே டாக்டர் சான்று பெற்று பதிவு செய்வது வழக்கம். விபத்து மற்றும் தற் கொலை செய்து கொண்டு இறப்பவர்களுக்கு போலீஸ் சான்று வாங்கித் தரவேண்டும். தற்போது 80 வயது வரை உள்ளவர்கள் இயற்கையாக இறந்தால் கூட எப்படி இறந்தார் என டாக்டர் சான்று வாங்கி கொடுத்தால் மட்டுமே நகராட்சியில் இறப்பு பதிவு செய்ய முடியும் என கூறுகின்றனர். வயதானவர்கள் உண்மையிலேயே உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்தால் கூட டாக்டர் சான்று தேவை. டாக்டர்களிடம் சான்று கேட்டால் என்னிடம் சிகிச்சை பெறவில்லை. அவர் எப்படி இறந்தார் என தெரியாது. அதனால் சான்று கொடுக்க முடியாது என மறுத்து விடுகின்றனர். டாக்டர் சான்று கிடைக் காததால் இறப்பை பதிவு செய்ய முடியாமல் சாமானிய மக்கள் தவிக்கின்றனர். ஒருவர் இறந்தால் இறப்பு பதிவு செய்ய மனு கொடுப் பார்கள். அதிகாரிகள் இறந் தவர்கள் வசித்த பகுதிக்கு நேரில் சென்று விசாரணை செய்தால் இறப்பின் காரணத்தை அறிய முடியும். இதற்கு டாக்டர் சான்று தேவையில்லை. டாக்டர் சான்று கட்டாயம் என்றால் அதிகாரிகள், இறப்பின் காரணத்தை விசாரித்து நகராட்சி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் மூலம் சான்று வழங்க நடவடிக்கை எடுக்கலாம்.

இதுபற்றி அதிகாரிகள் கூறியது 

               'நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த ஒருவர் கடலூர் அரசு மருத்துவமனையில் இறந்தால் கட்டாயமாக கடலூர் நகராட்சியில் இறப்பு பதிவு செய்வார்கள். இறந்தவரின் உறவினர்கள் அங்கு இறப்பு சான்றிதழ் வாங்கலாம். ஆனால் நெல்லிக்குப்பத்தில் இறந்தது போல் பதிய வருகிறார்கள். இரண்டு மனைவி உள்ளவர் இறந்தால் இருவரும் வெவ்வேறு ஊர்களில் இறப்பு பதிவு செய்கிறார்கள். இதனால் எங்கள் வேலைக்கு தான் ஆபத்து. இறப்புக்கான காரணம் குறித்து டாக்டர் சான்று கொடுத்தால் இதுபோன்ற தவறுகளை தடுக்க முடியும்' என கூறுகின்றனர். இறப்பு பதிவு என்பது கட்டாயம் என்பதால் அதற் கான நடைமுறையை எளிதாக்க வேண்டியது அரசின் கடமையாகும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

எஸ்.ஐ., நியமன தேர்வு கண்காணிப்பாளர்களாக வேறு மாவட்ட அதிகாரிகளை நியமிக்க வேண்டும்


கடலூர் : 

                தமிழக காவல் துறையில் சப் இன்ஸ்பெக்டர்களுக்கான தேர்வில் தவறு ஏற்படுவதை தவிர்க்க வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகளை அறை கண் காணிப்பாளர்களாக நியமிக்க வேண்டும்.

             தமிழகத்தில் காலியாக உள்ள 1,029 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்காக வரும் ஜூலை மாதம் எழுத்து தேர்வு நடக்க உள்ளது. தமிழகம் முழுவதிலுமிருந்து இதுவரை ஒன்னரை லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தொடர்ந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இத் தேர்வில் பணியில் இருக்கும் போலீசாருக்கு 20 சதவீதம் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையில் தேர்வர்கள் பங்கேற்பதால் மாவட்டம் தோறும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளது. சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் மூலம் நடத் தப்படும் இத்தேர்விற்கு அந்தந்த மாவட்ட இன்ஸ்பெக்டர் அளவிலான போலீஸ் அதிகாரிகள் அறை கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

              இவர்கள் ஒதுக்கப்பட்ட 20 சதவீத போலீசாருக்கும் பெரும்பாலும் தெரிந்த முகங்களாகவே இருக்கின்றனர். இதனால் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு விடைகளை சொல்லிக் கொடுக்க வாய்ப்பு உள்ளது. இதற்கு முன் நடந்த தேர்வுகளில் அறை கண்காணிப்பாளர்கள் சிலர் பணியிலிருக்கும் போலீசாருக்கு உதவி செய்துள்ளனர். இவர்கள் சர்வீசில் சப் இன்ஸ் பெக்டர்களாக வர வாய்ப்பு உள்ளது.

              போலீஸ் அல்லாதோர் பலர் போலீசில் சேர வேண்டும் என்ற லட்சியத்துடன், இரவு பகல் பாராதும், பயிற்சி வகுப்புகளுக்கு சென்றும் தங்களை தயார் செய்து வருகின்றனர். இவர்களுக்கு மத்தியில் தெரிந்த அதிகாரிகள் உதவியுடன் பணியில் இருக்கும் போலீசார் தேர்வில் வெற்றி பெற்றால் துறைக்கு ஆரோக்கியமாக இருக்காது. எனவே அறை கண்காணிப்பாளர்களை வேறு மாவட்டத்தை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் அல்லது ஆசிரியர்கள், வேறு துறை அதிகாரிகளை நியமித்தால் நேர்மையான முறையில் தேர்வு நடக்கும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

குடும்ப நல நிதி: கலெக்டர் வழங்கினார்


கடலூர் : 

             கடலூர் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 41 திருநங்கைகளுக்கு அடையாள அட்டையை கலெக்டர் வழங்கினார்.

           கடலூர் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் பட்டா மாறுதல், குடிநீர் வசதி, மயான பாதை, மாற்று திறனாளிகளுக்கு உதவித்தொகை, முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் 286 மனுக்கள் பெறப்பட்டது. குறைகேட்பு கூட்டத்தில் சமூக நலத்துறை மூலம் 41 திருநங்கைகளுக்கு அடையாள அட்டையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையினர் மூலம் 10 பேருக்கு இலவச தையல் இயந்திரம், டாஸ்மாக்கில் விற்பனையாளராக பணிபுரிந்து இறந்த முருகன், மனைவி மகாலட்சுமிக்கு குடும்ப நலநிதியாக 1.45 லட்சம் ரூபாய் காசோலை உள்ளிட்டவைகளை கலெக்டர் சீத்தாராமன் வழங்கினார். டி.ஆர்.ஓ., நடராஜன் உடனிருந்தார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஆட்டோ டிரைவர்களுக்கு ஆலோசனை


கடலூர் : 

           போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பது குறித்து ஆட்டோ டிரைவர்களுக்கான ஆலோசனைக் கூட டம் நடந்தது.

             கடலூரில் ஆட்டோக்கள் நினைத்த இடத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக லாரன்ஸ் ரோட்டில் வரிசையாக ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்களை நிறுத்திக் கொள்வதால் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு வட்டார போக் குவரத்து அலுவலர் ஜெயக் குமார் தலைமையில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் ராமதாஸ், சப் இன்ஸ் பெக்டர் பிரகாஷ், ஏட்டு ஞானசேகரன், கடலூர் நகரில் உள்ள ஆட்டோ சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

               கூட்டத்தில் ஆட்டோ டிரைவர்கள் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் ஆட்டோக் களை நிறுத்தக் கூடாது. டிரைவர்கள் சீருடை அணிந்திருக்க வேண்டும். ஓட்டுனர் உரிமம் மற்றும் ஆட்டோக்களுக்கான ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறின்றி நகரில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தாமல் போலீசாருடன் ஒத்துழைக்க வேண்டும் என ஆட்டோ டிரைவர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

கூட்டத்தில் ஆட்டோ டிரைவர்கள் பேசுகையில், 

                 'பஸ் நிலையத்திலிருந்து வெளியே வரும் பஸ்கள் அடுத்த பஸ் நிறுத்தத்திற்கு செல்லாமல் ஆங்காங்கே நின்று செல்வதாகவும், பஸ் நிலையத்திற்குள் வரும் போது வேகமாக வருவதால் விபத்து ஏற்படுத்துவதாகவும் கூறினர். இதுகுறித்து பஸ் டிரைவர்களுக்கு தனியாக ஆலோசனைக் கூட்டம் நடத்தி உரிய ஆலோசனை வழங்குவதாக வட்டார போக்குவரத்து அலுவலர் உறுதியளித்தார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

நெல்லிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., ஆய்வு


நெல்லிக்குப்பம் : 

          நெல்லிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் ஆய்வு செய்தார்.

         நெல்லிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி. அஷ்வின் கோட்னீஸ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். வழக்கு கோப்புகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்தார். இதனையடுத்து 25 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட் டுள்ள புதிய போலீஸ் ஸ்டேஷன் கட்டடத்தை பார்வையிட்டார். பின்னர் வளா கத்தில் மரக் கன்றுகள் நட்டார். இன்ஸ் பெக்டர் பாண்டியன் சப் இன்ஸ்பெக்டர் அன்பரசு உடனிருந்தனர்.

  பின்னர்  எஸ்.பி. அஷ்வின் கோட்னீஸ் கூறுகையில் 

                 'நெல்லிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனை தரம் உயர்த்தியதாக மாற்ற உள்துறை செயலாளர் அனுமதி கிடைத்துள்ளது. நிதித்துறை ஒப்புதல் கிடைத்தவுடன் போலீஸ் நிலையம் தரம் உயர்த்தப்படும். கூடுதலாக போலீசார் நியமிக்கப்படுவர். சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவுக்கு தனித் தனியாக இன்ஸ்பெக்டர்கள் இருப்பார்கள். இதன்மூலம் குற்றங்களை கட்டுப்படுத்த முடியும். விரைவில் இம்மாற்றங்கள் செய்யப்படும். புதிய கட்டடம் விரைவில் திறக்கப்படும்' என கூறினார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் நியமிக்க கோரிக்கை

சேத்தியாத்தோப்பு : 

        சேத்தியாத்தோப்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு டாக்டர்கள் நியமிக்க வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

 இதுகுறித்து நகர அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் மகாராஜன் அரசுக்கு அனுப்பியுள்ள மனு: 

               சேத்தியாத்தோப்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினசரி 750க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சைக் காக வருகின்றனர். ஆனால், தற்போது ஒரு டாக்டர் மட்டுமே பணியில் உள்ளார். இவருக்கு மருத்துவ முகாம், அலுவலக பணி, அவரது சொந்த பணி, விடுமுறை நாள் உட்பட வாரத்தில் ஒரு நாள் முழு நேரமும் தங்கி சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் டாக்டர் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். எனவே சேத்தியாத் தோப்பு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் டாக்டர் பணியிடங்களை உருவாக்கி டாக்டர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

பூசணி சாகுபடி வேளாண் அதிகாரி ஆய்வு


குறிஞ்சிப்பாடி : 

          குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் வேளாண்மை இணை இயக்குநர் ஆய்வு செய்தார்.

             குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் உள்ள அயன் குறிஞ்சிப்பாடி கிராமத்தில் அசோகன் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த 3 ஏக்கர் பூசணி சாகுபடியை வேளாண்மை இணை இயக்குநர் இளங்கோவன் ஆய்வு செய்தார். ஆய்வில் பூசணி பயிரிடப்பட்ட முறை குறித்தும் விவசாயிக்கு தேவையான தொழில் நுட்பங்கள், நோய் தடுப்பு முறைகள் குறித்து விளக்கினார்.துணை வேளாண்மை அலுவலர் திருஞானம், வேளாண்மை அலுவலர் பரஞ்ஜோதி, உதவி வேளாண்மை அலுவலர் தனசேகர், அயன் குறிஞ்சிப்பாடி உழவர் மன்ற தலைவர் ராமலிங்கம், தோட்டக்கலை உதவி வேளாண்மை அலுவலர் சுந்தரமூர்த்தி, ஆனந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

இ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு பயிற்சி


நெல்லிக்குப்பம் :

              நெல்லிக்குப்பம் இ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலை சார்பில் சிறுவத்தூரில் கரும்பு விவசாயிகளுக்கு மூன்று நாள் பயிற்சி வகுப்பு நடந்தது.

            கோட்ட அலுவலர் மூர்த்தி தலைமை தாங்கினார். கரும்பு ஆய்வாளர் முருகன் வரவேற்றார். மண்வளம், இயந்திர மயமாக்கல், சொட்டுநீர் பாசனம், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, கட்டைக் கரும்பு பராமரிப்பு போன்ற தொழில் நுட்பங் களை படக் காட்சிகளுடன் விளக்கினர். நேரடியாக வயல்களில் சொட்டுநீர், தெளிப்புநீர் பயன்பாடு, சோலையை பொடியாக்குதல், கங்கு அறுக்கும் இயந்திரம் செயல் விளக்கங்களை காண்பித்தனர். ஆலையில் எடைத்தளம், சர்க்கரை, மின்சாரம் உற்பத்தி முறைகளை பார்வையிட்டனர். பயிற்சி முடித்த விவசாயிகளுக்கு சான்றிதழ்களை முதுநிலை மேலாளர் சங்கரலிங்கம் வழங்கினார். விவசாய பயிற்சி அலுவலர் குருசாமி, விரிவாக்க அலுவலர் வரதராஜன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

அன்னங்கோவில் முகத்துவாரத்திற்கு நிரந்தர தீர்வு எப்போது? 30 மீனவ கிராம மக்கள் எதிர்பார்ப்பு


பரங்கிப்பேட்டை:

             பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் முகத்துவாரத்திற்கு இதுவரை தீர்வு காணப்படாததால் அடிக்கடி தூர்ந்து விடுகிறது. இதனால் அந்த பகுதிகளைச் சேர்ந்த 30 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர்.

                அன்னங்கோவில் வெள்ளாற்று வழியாக கடலுக்கு செல்ல முகத்துவாரம் உள்ளது. பரங்கிப்பேட்டை கடற்கரையையொட்டிய சாமியார்பேட்டை, வேளங்கிராயன்பேட்டை, புதுக்குப்பம், கிள்ளை, முடசல் ஓடை, பரங்கிப்பேட்டை உட்பட 30க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க இந்த முகத்துவாரம் வழியாக படகில் கடலுக்கு சென்று வருகின்றனர். அடிக்கடி முகத்துவாரம் தூர்ந்து விடுவதால் கடலில் மீன்பிடிக்க செல்ல முடியாமல் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர்.

                கடந்த 25 ஆண்டுகளாக அன்னங் கோவில் முகத்துவாரத்தை நிரந்தரமாக ஆழப்படுத்தக் கோரி 30 கிராம மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தும் இதுவரை நிரந்தர தீர்வு காணப்படவில்லை. மீன் வளத்துறை அதிகாரிகளும் இதுவரை கண்டுகொள்ளவில்லை என மீனவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலின் போது, 'உங்களின் நீண்ட கால பிரச்னையாக உள்ள அன்னங்கோவில் முகத்துவாரத்தை ஆழப்படுத்தி தருகிறோம்' என மீனவ கிராம மக்களிடம் அரசியல் கட்சியினர் ஆசை வார்த்தை கூறுவதோடு சரி, தேர்தல் முடிந்து விட்டால் அதுபற்றி யாரும் கண்டு கொள்வதில்லை.

               முகத்துவாரம் தூர்ந்து போகும் போது படகுகள் கடலுக்கு செல்ல முடியாததால் பரங்கிப்பேட்டை மற்றும் முடசல் ஓடை விசைப்படகு மீனவ சங்கத்தினர் படகு வைத்துள்ளவர்களிடம் பணம் வசூல் செய்து பொக்லைன் இயந்திரம் மூலம் தூர்வாரி வருகின்றனர். சில மாதங்களில் மீண்டும் தூர்ந்து விடுவதால் மீனவர்கள் தொடர்ந்து பாதிக் கப்படுகின்றனர். முகத்துவாரம் தூர்ந்து சீராக தண் ணீர் ஓடிய நிலையில், கடந்த மூன்று மாதத்திற்கு முன் புதுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் முகத்துவாரம் வழியாக கடலுக்கு செல்லும் போது படகு கவிழ்ந்து பலியான துயர சம்பவம் நடந்துள்ளது.

                   அன்னங்கோவில் முகத்துவாரம் வழியாக 200க்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்கு சென்று வருவதால் தினமும் சுமார் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் மீன் வகைகள் கொள்முதல் செய்யப் பட்டு கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதுகுறித்து மீன் வளத்துறை அமைச்சரிடம் புகார் செய்ததின் பேரில் கடந்த ஆறு மாதத்திற்கு முன் அமைச்சர் சாமி நேரடியாக அன்னங்கோவில் பகுதிக்கு வந்து பார்வையிட்டுச் சென்றார். ஆனால் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

                    மீன் வளத்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் அன்னங்கோவில் முகத்துவாரத்தை நிரந்தரமாக ஆழப்படுத்தியும், அன்னங்கோவில் பகுதியில் மீன் பிடி இறங்கு தளம் அமைத்துதர வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டுள்ள மீனவ கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இதில் தனி கவனம் செலுத்த வேண்டும் என முதல்வர் கருணாநிதிக்கு பரங்கிப்பேட்டை பேரூராட்சி துணைசேர்மன் செழியன் கோரிக்கை மனுவும் அனுப்பியுள்ளார்.


பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

துப்பாக்கி சுத்தம் செய்யும் பணி


கடலூர் : 

            கடலூர் போலீஸ் பயிற்சி பெறுபவர்களுக்கு துப்பாக்கி கையாளுதல் பயிற்சிக்காக துப்பாக்கிகள் சுத்தம் செய்யும் பணி நடந்தது.

             எஸ்.பி., அலுவலக வளாகத்தில் உள்ள தற்காலிக போலீஸ் பயிற்சி பள்ளியில் 150 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். மூன்று மாத பயிற்சியில் சட்டம், கலவரத்தை அடக்குதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியும் ஒன்று. கேப்பர் மலையில் துப்பாக்கி சுடும் மைதானத்தில் நடக்கிறது. இதற்காக எஸ்.பி., அலுவலகத்தில் ஆயுதப்படை பிரிவில் உள்ள துப்பாக்கிகள் சுத்தம் செய்து தயார் படுத்தி வருகின்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்


திட்டக்குடி : 

                திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது.

               டாக்டர்கள் விருத்தாசலம் சங்கரலிங்கம், திட்டக்குடி ராஜேந்திரன், (கண்) சுப்பிரமணியம், (மனநலம்) சத்தியமூர்த்தி ஆகியோர் மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்து அடையாள அட்டை வழங்கினர். முகாமில் ஆவினங்குடி மையத்தின் கீழ் செயல்படும் ஆவினங்குடி, போத்திரமங்கலம், கோடங்குடி உட்பட 14 ஊராட்சிகளை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர். அணித்தலைவர் வேல் விழி, சுபாஷ்சந்திரபோஸ், திருமாவளவன், சிந்தாமணி, சரிதா, சிறப்பு ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் ஆகியோர் முகாம் ஏற்பாடுகளை செய்தனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

மேல்புவனகிரி ஒன்றியத்தில் ரூ.54 லட்சத்தில் வளர்ச்சி பணிகள்


புவனகிரி : 

             பிற்படுத்தப்பட்ட பகுதிக்கான மானிய நிதி திட்டத்தில் மேல்புவனகிரி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள 54 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

                  மேல்புவனகிரி ஒன்றிய குழு அவசர கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. சேர்மன் தனலட்சுமி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாசுகி, ஜமுனா முன்னிலை வகித்தனர். துணை தலைவர் சிவக்குமார் வரவேற்றார். கூட்டத்தில், 2010-11ம் ஆண்டின் பிற்படுத்தப்பட்ட பகுதிக்கான மானிய நிதி திட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள கடலூர் மாவட்டத்தில் 13 ஒன்றியங்களுக்கும் அரசு மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மேல்புவனகிரி ஒன்றியத்திற்கு 54 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய் துள்ளது. இதற்கான திட்டபணிகள் தேர்வு செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு புள்ளி விபரங்கள் தெரிவிப்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்கு புது ஏற்பாடு


நெல்லிக்குப்பம் : 

             அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க புதிய முறையாக கேபிள் 'டிவி'யில் விளம்பரம் செய் துள்ளனர்.

               தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்களை அதிகளவு சேர்க்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். தனியார் பள்ளிகள் நாளிதழ்கள், கேபிள் 'டிவி' போஸ்டர் விளம்பரங்கள் என பல வழிகளில் பெற்றோர்களை ஈர்க்க முயன்று வெற்றி பெறுகின்றனர். அரசு பள்ளிகளில் செலவில்லாமல் தானாகவே மாணவர்கள் சேர்ந்தால் தான் உண்டு. ஆனால் அரசு பள்ளிகளுக்கு முன் மாதிரியாக திருக்கண்டேஸ்வரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியின் தலைமையாசிரியராக பணி புரிந்து கடந்த மாதம் ஓய்வு பெற்ற திருஞானசம்பந்தம் தனது செலவில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி கேபிள் 'டிவி'யில் விளம் பரம் கொடுத்துள்ளார். இதே போல் அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் ஆர்வமுடன் செயல்பட்டால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை உயரும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

வடலூர் உழவர் சந்தையில் காய்கறி வாங்கி பயனடைய வேண்டுகோள்


கடலூர் : 

              வடலூர் உழவர் சந்தையில் மலிவுவிலை காய்கறியை வாங்கி பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து வேளாண் துணை இயக்குனர் தனவேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

                   வடலூரில் 2009ம் ஆண்டு முதல் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. காய்கறி வரத்து மற்றும் நுகர்வோர் வருகையை அதிகரிக்கவும் உழவர் சந்தை வார விழா கடந்த 15ம் தேதி முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வார விழாவில் வேளாண்மை, தோட்டக் கலை, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை அலுவலர்கள் ஒருங் கிணைந்து வடலூரை சுற்றி அதிக காய்கறி பயிரிடும் கிராமங்களில் விவசாயிகளை சந்தித்து காய்கறி கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

                 நுகர்வோரை ஈர்க்கும் வகையில் நகர்ப்புறங்களில் உழவர் சந்தையில் விலை குறைவான, காய்கறிகள், கீரைகள், பழங்கள் கிடைக்கும் என் பதையும், பொதுமக்கள் உழவர் சந் தைக்கு வருவதன் மூலம் காய்கறிகளை மலிவான விலைக்கு வாங்கி பணம் சேமிக்கலாம் என்பது குறித்து ஒலி பெருக்கி, வீடு வீடாக துண்டு பிரசுரங்கள் மூலமாக விளம்பரம் செய்யப்படுகிறது. எனவே விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் உழவர் சந்தையை பயன்படுத் திக் கொள்ளுமாறு துணை இயக்குனர் கேட் டுக் கொண்டுள்ளார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை


ஸ்ரீமுஷ்ணம் : 

             ஸ்ரீமுஷ்ணம் அருகே பள்ளிக் கட்டடம் கட்ட ஆக்ரமிப்பை அகற்ற கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து கலெக்டருக்கு கிராம பொதுமக்கள் அனுப்பியுள்ள மனு: 

                   ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்த சாத்தாவட்டம் கிராமத்தில் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் 180 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். முன்பு தொடக்கப் பள்ளியாக இருந்த இடத்தை தற்போது தனி நபர் ஆக்ரமிப்பு செய்துள்ளார். தற்போது பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்ட இடம் தேவைப்படுவதால் மேற்கண்ட இடத் தில் உள்ள ஆக்ரமிப்புகளை உடனடியாக அகற்றி புதிய பள்ளி கட்டடம் கட்ட அனுமதி வழங்க வேண்டும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

குடிநீர் உறிஞ்சல்: ஒன்றிய கவுன்சிலர் மனு


கடலூர் : 

               கடலூர் கூத்தப்பாக்கம் பகுதியில் மின் மோட்டார் பொருத்தி குடிநீரை உறிஞ்சும் இணைப்புகளை துண்டிக்க வேண்டும் என ஒன்றிய கவுன்சிலர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து கடலூர் ஒன்றிய கவுன்சிலர் ஜோதி தமிழ்செல்வன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலருக்கு அனுப்பியுள்ள மனு: 

                 கோடை காலம் துவங்கிய நிலையில் அடிக்கடி ஏற்படும் மின் நிறுத்தத்தால் கூத்தப்பாக்கம் பகுதியில் குடிநீர் பற்றாக் குறை ஏற்பட்டுள்ளது. மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. கூத்தப்பாக்கம் பகுதியில் உள்ள பல வீடுகளில் மின் மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சப்படுகிறது. இதனால் பல வீடுகளுக்கு குடிநீர் கிடைப்பதில்லை. எனவே எல்லோருக்கும் குடிநீர் கிடைக்க மின் மோட்டார் பொருத்தி குடிநீரை உறிஞ்சுபவர்களின் இணைப்பை துண்டித்து, மின் மோட்டாரை பறிமுதல் செய்ய வேண்டும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

தொடும் தூரத்தில் மின் கம்பி: பொதுமக்கள் அச்சம்


சிதம்பரம் : 

            வயல்வெளியில் தொட்டு விடும் தூரத்தில் தாழ்வாக மின்கம்பி செல் வதால் கிராம மக்கள் அச் சத்துடன் செல்கின்றனர்.

                  சிதம்பரம் அடுத்த கவரப்பட்டு கிராமம் பெரிய தெருவில் வயல்வெளி வழியாக மின் கம்பி மிகவும் தாழ்வாக தொட்டு விடும் தூரத்தில் செல்கிறது. மின்கம்பத்தில் இருந்து மின்கம்பி கழன்று விழுந்து ஒரு ஆண்டு ஆகியும் இதுவரை மின்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. மின்கம்பி தாழ்வாக இருக் கும் இடத்தில் தலைவணங்கி குனிந்தபடி செல்ல வேண்டும். நிமிர்ந்து சென்றால் அவ்வளவுதான். அத்துடன் அந்த வயலில் வேலை செய்பவர்களும் அச்சத்துடன் நடவு செய்து, அறுவடையும் செய்துள்ளனர். காற்று பலமாக வீசினால் மின்கம்பிகள் ஒன் றோடு ஒன்று உரசி தீப்பொறி கிளம்புகிறது. மேலும் அந்த மின் கம்பிக்கு அருகிலேயே செல்லும் உயர்அழுத்த மின் கம்பியும் உராய்வதால் எந்த நேரத்திலும் பாதிப்பு ஏற்படலாம் என கிராம மக்கள் அஞ்சுகின்றனர். ஒரு ஆண்டாக இந்த நிலை இருந்தும் மின் துறை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என கூறுகின்றனர். ஊராட்சி தலைவர் பொன்னுசாமி மற்றும் கிராம மக்கள் மின் துறை அதிகாரியை நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளனர். இருந்தும் ஆபத்தான நிலை நீடித்து வருகிறது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

என்.எல்.சி.,யில் ஆர்ப்பாட்டம்


நெய்வேலி : 

               என்.எல்.சி., தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய மாற்று ஒப்பந்தத்தை விரைவில் ஏற்படுத்த வலியுறுத்தி நெய்வேலியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

                என்.எல்.சி., தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் அமைப்பது குறித்து அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் கடந்த 2 மாதங்களாக நிர்வாகத்துடன் தொடர் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. முழுமையான தீர்வு காணாததால் தொழிலாளர்களிடையே அதிருப்தி நிலவுகிறது. இந்நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு என்.எல்.சி., டவுன்ஷிப் ப்ளாக்-1 நேரு சிலை வளாகத்தில் தொ.மு.ச., மற்றும் பா.தொ.ச., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

                     ஆர்ப்பாட்டத்தில் தொ.மு.ச., தலைமை நிர்வாகிகள் வீர ராமச்சந்திரன், கோபாலன், ரகுராமன், காத்தவராயன் மற்றும் பா.தொ.ச., தலைமை நிர்வாகிகளும் பெருமாள், திலகர், ஏஞ்சலின் மோனிகா, சுப்ரமணியன் உள்ளிட்ட இரண்டாம் கட்ட நிர்வாகிகள் உட்பட 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Read more »

பெண்களிடம் நகை திருட்டு மூவர் கைது; நகைகள் பறிமுதல்


திட்டக்குடி : 

              தூங்கிய பெண்களிடம் நகை திருடிய மூவரை போலீசார் கைது செய்து 130 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

            கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகாவில் தர்மகுடிகாடு, தொளார், வேப்பூர் அடுத்த ஐவதுகுடி பகுதிகளில் வீட்டில் தூங்கிய பெண்களிடம் நகைகளை பறிக்கும் சம்பவம் தொடர்ந்தது. இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தலைமையில் தனிப்படை மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை வெலிங்டன் ஏரியின் கடைகால் ஷட்டர் அருகே நின்றிருந்த மூவரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர்.

               இதில் மங்களூர் பாஞ்சாலியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மஞ்சநாதன் என்கிற ராஜூ (32), கேரள மாநிலம் மணப்புரம் நாகராஜ் மகன் ராஜா (28), வேப்பூர் அடுத்த கோ.கொத்தனூர் சின்னையன் மகன் ராஜதுரை (28) என்பதும், திட்டக்குடி பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் மறைத்து வைத்திருந்த 130 கிராம் எடையிலான செயின், தாலிச்சரடு, மோதிரம் உள்ளிட்ட தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். இது குறித்து இன்ஸ்பெக்டர் ராமதாஸ் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்து, நெய்வேலி கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

கடலூர் மத்திய சிறையில் கைதிகளுக்குள் தகராறு


கடலூர் : 

               கடலூர் மத்திய சிறையில் இரண்டு கைதிகளுக்குள் ஏற்பட்ட தகராறு குறித்து முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

              விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தைச் சேர்ந்தவர் வீரன் (எ) வெங்கடேசன் (40). இவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். அதே போல் சின்னசேலத்தைச் சேர்ந்த சரவணன் (29) வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டார். இருவரும் விசாரணை கைதியாக கடலூர் மத்திய சிறையில் ஒரே செல்லில் அடைக்கப்பட்டிருந்தனர். நேற்று காலை 6 மணிக்கு சரவணன் தூங்கிகொண்டிருந்தபோது, வீரன் கேரம்போர்டு விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது தூக்கம் கெடுவதாக சரவணன் கூறியதால் இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த வீரன், சரவணனை திட்டி, தாக்கினார். இது குறித்து சிறை அலுவலர் வேணுகோபால் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வீரன் மீது வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

கொத்தவாசல் ஊராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல்


சிதம்பரம் : 

              ஊராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்ததாக போலீசில் புகார் செய்துள்ளார்.

              காட்டுமன்னார்கோவில் அருகே கொத்தவாசல் ஊராட்சி தலைவராக இருப்பவர் நாகராஜன். இவருக்கு தபாலில் மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதில், 'காண்ட்ராக்ட் மூலம் நீ அதிகம் சம்பாதிக்கிறாய். உன்னை 6 மாதத்திற்குள் கொலை செய்து விடுவோம்' என எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து புத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

இருசக்கர வாகனங்கள் திருடிய இருவர் கைது


குறிஞ்சிப்பாடி : 

             வடலூரில் இருசக்கர வாகனங்கள் திருடிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

                வடலூர் - கும்பகோணம் சாலையில் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்த இரண்டு பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் வடலூர் அடுத்த மருவாய் காலனி இளையபெருமாள் (40), கருவேப்பிலங்குறிச்சி சக்திவேல் (32) என்பதும், அவர்கள் வந்த மொபட் திருட்டு வாகனம் எனவும் தெரியவந்தது. மேலும் இருவரும் வடலூர் பகுதியில் பல இடங்களில் இரு சக்கர வாகனங்களை திருடி இருப்பது தெரியவந்தது. இது குறித்து வடலூர் போலீசார் வழக்குப் பதிந்து இளையபெருமாள், சக்திவேல் இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து இரண்டு மொபட் மற்றும் ஐந்து சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

வணிகர் தினத்தையொட்டி பண்ருட்டியில் கடை அடைப்பு


பண்ருட்டி : 

               வணிகர் தினத்தையொட்டி நேற்று பண்ருட்டியில் முழு அளவில் வியாபாரிகள் கடையடைப்பு செய்தனர்.

                   வணிகர் தினத்தையொட்டி வணிகர்கள் தங்களது ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக ஆண்டு தோறும் வணிகர்கள் விடுமுறை அளித்து வருகின்றனர். அதன்படி நேற்று பண்ருட்டியில் உள்ள ஜவுளி, மளிகை, காய்கறி, பழ வியாபாரம், ஓட்டல் கள், பேக்கரி, எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் முழு அள வில் விடுமுறை அளித்தனார். இதனால் கடலூர் சாலை, காந்தி சாலை, ராஜாஜி சாலை, சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை, இந்திராகாந்தி சாலை ஆகிய பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது. நகை கடை வியாபாரிகள் வழக்கம் போல் கடைகளை திறந்திருந்தனர். புதுப்பேட்டையிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

விருத்தாசலம் அருகே தீ விபத்து கன்று குட்டி, ஆடு, கோழிகள் கருகின


விருத்தாசலம் : 

              நள்ளிரவில் கூரை வீடு தீ பிடித்து எரிந்ததில் கொட்டகையில் கட்டியிருந்த பத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் தீயில் கருகின.

              விருத்தாசலம் அடுத்த கார்குடல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன் மகன் குணசேகரன். இவருக்கு கார்குடல் முனியப்பர் கோவில் தெருவில் இரண்டு கூரை வீடுகள் உள்ளது. ஒரு வீட்டில் குணசேகரன் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். மற்றொரு கூரை வீட்டில் அவரது அக்கா கொளஞ்சி வசித்து வருகிறார். கொளஞ்சி தங்கியிருக்கும் வீட்டின் பின் பகுதியில் கொட்டகை உள் ளது. இந்த கொட்டகையில் குணசேகரன் இரவு நேரங்களில் தனக்கு சொந் தமான ஆடு, மாடு, கோழிகளை அடைத்து வைத்திருப்பது வழக்கம்.

                     நேற்று முன்தினம் இரவு கொளஞ்சி கொசுவர்த்தி ஏற்றி வைத்து விட்டு தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு 1 மணிக்கு திடீரென கொளஞ்சி தங்கியிருந்த வீடு தீப்பிடித்தது. இதில் அருகில் இருந்த கொட்டகையும் தீப்பிடித்து எரிந்ததில் அங்கு இருந்த 14 ஆடுகள், 25 கோழிகள், 1 கன்று குட்டி தீயில் கருகி இறந்தன. மேலும் வீட்டில் இருந்த துணிகள், உணவு பொருள் கள் சாம்பலாயின. தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் பழனிவேல் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். தீ விபத்தில் 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

பண்ருட்டியில் குடிநீர் கேட்டு மறியல் செய்ய முயற்சி


பண்ருட்டி : 

                  பண்ருட்டி அடுத்த பெரிய எலந்தம்பட்டு ஊராட்சியில் குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயன்றனர்.

                    பண்ருட்டி அடுத்த பெரிய எலந்தம்பட்டு காலனி மாரியம்மன் கோவில் அருகில் உள்ள குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. கடந்த 7 நாட்களுக்கு முன் மோட்டார் இணைப்பு உள்ள டிரான்ஸ்பார்மர் பழுதானது. வேறு டிரான்ஸ்பார்மர் இணைப்பு மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப் பட்டது. அதிக லோடு காரணமாக டிரான்ஸ்பார்மர் அடிக்கடி பியூஸ் போனது. இதனால் கடந்த நான்கு நாட்களாக காலனி பகுதியில் குடிநீர் கிடைக்கவில்லை. இதனையடுத்து நேற்று காலை 9 மணிக்கு பெரிய எலந்தம்பட்டு மெயின்ரோடு கடலூர் - சித்தூர் சாலையில் மறியல் செய்ய 100க்கும் மேற் பட்டோர் திரண்டனர்.

                     இதுகுறித்து தகவலறிந்த தாசில்தார் பாபு, மண்டல துணை தாசில் தார் முத்துராமன், பி.டி.ஓ., சிவன், காடாம்புலியூர் சப் இன்ஸ்பெக்டர் சுப்பையா, மின்வாரிய உதவி பொறியாளர் செந் தில்குமார் ஆகியோர் பேச் சுவார்த்தை நடத்தினர். அதில் இரண்டு நாட்களில் டிரான்ஸ்பார்மர் வைக்கப் படும். அதுவரை மாற்று இணைப்பு மூலம் மின்சாரம் வழங்கி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து கொண்டனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior