உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 14, 2009

சேத்தியாத்தோப்பு பாழ்வாய்க்காலில் புதிய ரெகுலேட்டர்

சிதம்பரம்,நவ.11:

ரூ.6 கோடியில் சேத்தியாத்தோப்பு பாழ்வாய்க்காலில் புதிய ரெகுலேட்டர் அமைக்கப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.
இது குறித்து சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி:
கடலூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை 382.13 மி.மீ. மழை பெய்துள்ளது. செவ்வாய்க்கிழமை மட்டும் 34.6 மி.மீ. மழை பெய்துள்ளது. அதிகளவாக ஞாயிற்றுக்கிழமை 108.54 மி.மீ. மழை பெய்துள்ளது. சிதம்பரம், புவனகிரியில் அதிகமாக மழை பெய்துள்ளது. விருத்தாசலம், திட்டக்குடி பகுதிகளில் குறைந்தளவு மழை பெய்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்ட உடன் நவம்பர் 6-ம் தேதி எனது தலைமையில் கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளை அழைத்து வெள்ளத்தடுப்பு குறித்தும், வெள்ள நிவாரணம் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
பின்னர் நவம்பர் 7-ம் தேதி சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் உள்ள 20 புயல் பாதுகாப்பு மையங்களை அனைத்து துறை அதிகாரிகளுடன் பார்வையிட்டு வெள்ள தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளை தயார் நிலையில் வைக்க உத்திரவிட்டேன். அன்றைய தினமே விருத்தாசலம் வெலிங்டன் ஏரியை பார்வையிட்டு வெள்ளத்தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டேன். மேலும் அங்கு ஏரியை பலப்படுத்த ரூ.20 கோடி செலவில் திட்ட மதிபீட்டு தயார் செய்யப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
நவம்பர் 7-ம் தேதி வீராணம் ஏரிக்கு பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள் பெய்த மழை நீர் கருவாட்டுஓடை, செங்கால்ஓடை வழியாக கூடுதலாக நீர் வந்தது. இந்த நீரை நேரடியாக கடலுக்கு அனுப்பாமல் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வெள்ளியங்கால் ஓடையில் 2 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. இதனால் அருகே உள்ள நந்திமங்கலம், எடையார் உள்ளிட்ட சுமார் 20 கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்தது என தகவல் வந்தது. உடனடியாக வெள்ளியங்கால்ஓடையில் வெளியேற்றப்படும் நீர் நிறுத்தப்பட்டு சேத்தியாத்தோப்பு வி.என்.எஸ். அணைக்கட்டு மற்றும் பாழ்வாய்க்கால் வழியாக வெள்ளாற்றில் வெளியேற்றப்பட்டது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நந்திமங்கலம் கிராமத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்று ஆய்வு மேற்கொண்டேன். அப்போது அங்குள்ள மக்கள் கோரிக்கை விடுத்ததன் பேரில் நந்திமங்கலம் - பூலாமேடு இடையே ரூ.4 கோடி செலவில் பாலம் அமைக்க திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் குமராட்சி - வல்லம்படுகை வரை 13.4 கி.மீ. சாலையை உயர்த்தி அமைக்க ரூ.1 கோடியே 40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
வீராணம் ஏரியை தாற்காலிகமாக சீரமைக்க ரூ.23 கோடி செலவில் புதிய திட்டம் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. தற்போது அந்த பணிகளுக்கு முழு விவரம் அளிக்கப்பட்டுள்ளது. ஏரியின் ஷட்டர்கள் சீரமைக்க ரூ124 லட்சமும், புதிய ஷட்டர்கள் அமைக்க ரூ.48 லட்சமும், வடவாற்றை பலப்படுத்த ரூ.300 லட்சமும், ஏரியின் 28 சப்ளை சேனல்களை சீரமைக்க ரூ.1256 லட்சமும், இதர பணிகள் ரூ.40 லட்சமும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் பணி தொடங்கப்படும்.
மேலும் கடலூர் அருகே நானமேடு-உப்பலவாடி இடையே ரூ.1.50 கோடி செலவில் புதிய பாலம் அமைக்கப்படும்.
கடலூர் மாவட்டத்தில் கனமழையினால் 20,500 ஏக்கர் நிலங்களில் தாற்காலிகமாக நீர் புகுந்துள்ளது. டெல்டா பகுதிகளில் மட்டும் 18 ஆயிரம் ஏக்கரில் நீர் புகுந்துள்ளது. இதனால் எந்தவித சேதமும் இல்லை. 32 வீடுகள் முழுமையாகவும், 135 வீடுகள் பகுதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இயற்கை இடர்பாடுகளினால் 4 பேர் இறந்துள்ளனர். 3 மாடு, 1 கன்று, 4 செம்மறி ஆடுகள் ஆகியவை இறந்துள்ளனர் என ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன், கோட்டாட்சியர் ஜி.ராமலிங்கம், குமராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் இரா.மாமல்லன் ஆகியோர் உடனிருந்தனர்.

Read more »

மழை பாதிப்பு: நகர்மன்ற தலைவர் ஆய்வு

கடலூர்,நவ.11:

கடலூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, கடலூர் நகர்மன்றத் தலைவர் து.தங்கராசு புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடலூரிóல கடந்த 10 நாள்களாக பெய்த அடை மழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. குழந்தை காலனி பகுதியில் 45 குடிசைகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நகர்மன்றத் தலைவர் தங்கராசு, துணைத் தலைவர் தாமரைச் செல்வன், கடலூர் வட்டாட்சியர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
தேங்கி நின்ற மழைநீர் வடிய உடனே நடவடிக்கை எடுத்தனர். அப்பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேணடும் என்று தாமரைச்செல்வன் கேட்டுக் கொண்டார்.

Read more »

சட்டப்பேரவை மனுக்கள் குழுவுக்கு புகார்களை அனுப்பலாம்

கடலூர், நவ.11:

கடலூர் மாவட்டத்துக்கு விரைவில் வருகை தர இருக்கும் சட்டப்பேரவை மனுக்கள் குழுவுக்கு புகார்களை அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு சட்டபேரவை மனுக்கள் குழு செயலாளர் செல்வராஜ் அண்மையõல் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சட்டப்பேரவை மனுக்கள் குழு (2009-10) விரைவில் கடலூர் மாவட்டத்துக்கு வர இருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள தனி நபர்களோ, சங்கங்களோ, தீர்க்கப்பட வேண்டிய பொதுப் பிரச்னைகள், குறைகள் குறித்த மனுக்களை அனுப்பலாம். மனுக்களை தமிழில் 5 நகல்கள் எடுத்து, மனுதாரரின் முகவரி மற்றும் கையெழுத்துடன், தலைவர் மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டப்பேரவை, சென்னை- 600009 என்ற முகவரிக்கு நவம்பர் 29-க்குள் அனுப்பலாம்.
மனுக்கள் பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் பொதுப் பிரச்னைகள் குறித்தவைகளாக இருக்கலாம். எந்த மனுவும் ஒரே ஒரு பிரச்னையை உள்ளடக்கியதாகவும் ஒரே ஒரு துறையை சேர்ந்ததாகவும் இருத்தல் வேண்டும். பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
மனுக்கள் குழு கடலூர் மாவட்டத்துக்கு வருகை தரும்போது மனுக்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும். ஆய்வுக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட அலுவலரிடம் மனுவில் உள்ள பொருள் குறித்து உண்மை நிலவரம் கேட்டறியப்படும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பின்னர் தனியாகத் தகவல் அனுப்பப்படும்.

Read more »

மழைக்கு 4 பேர் பலி

கடலூர்,நவ.11:

கடலூர் மாவட்டத்தில் இதுவரை மழைக்கு 4 பேர் பலியாகி உள்ளனர்.
இம்மாவட்டத்தில் இடைவிடாது பெய்த அடைமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் பண்ருட்டி பெரிய பகண்டை பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (32), காட்டுமன்னார்கோயில் சித்தரசூர் பகுதியைச் சேர்ந்த மாயாவதி (65), நந்தீஸ்வரமங்கலத்தைச் சேர்ந்த நடராஜன் (50), பண்ருட்டி விஸ்வ ரெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி (9) ஆகியோர் பலியாகி உள்ளனர். இதனிடையே கடலூர் பெண்ணை ஆற்றுப் பாலத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடந்தார். அவர் யார் என்று தெரியவில்லை.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior