கடலூர் திருப்பாப்புலியூர் ரயில்வே மேம்பாலம். (வலது படம்) ரயில்வே மேம்பாலத்தின் கீழ்ப்பகுதி.
கடலூர்:
நகராட்சி முறையாகப் பராமரிக்காததால், கடலூர் ரயில்வே மேம்பாலம் பாழாகிக் கொண்டு இருக்கிறது. நகரின் மையப் பகுதியில் அமைந்து இருக்கும் கடலூர் லாரன்ஸ் சாலையில், ரயில்வே கேட் நாளொன்றுக்கு 40 முறை மூடித் திறப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இப்பிரச்னைக்குத் தீர்வு காண, 6 ஆண்டுகளுக்கு முன் ரூ. 12.5 கோடியில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. நெடுஞ்சாலைத் துறையால் கட்டப்பட்ட இப்பாலம் தற்போது, நகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேம்பாலத்தில் 32 விளக்குகள் உள்ளன. இவைகள் முழுவதும் பல நாள்கள் எரிவதில்லை. கடந்த 3 நாள்களாக ஒரு விளக்குகூட எரியவில்லை. பாலத்தை நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் எட்டிப் பார்த்து பல மாதங்கள் ஆகிவிட்டன. பாலம் குப்பைக் கூளங்கள், மணல் படிந்து அசுத்தமாகக் காட்சி அளிக்கிறது.
பாலத்தில் நீர் வழிந்தோட அமைக்கப்பட்டு உள்ள துளைகள் எல்லாம் அடைபட்டு அந்த இடங்களில், காட்டுச்செடிகள் முளைத்து உள்ளன. பாலத்தில் சேரும் மழைநீர் வழிந்தோட அமைக்கப்பட்ட 5 அங்குல விட்டம் உள்ள, பல நூறு மீட்டர் நீளம் கொண்ட பிளாஸ்டிக் குழாய்கள் அனைத்தும், சமூக விரோதிகளால் வெட்டித் திருடப்பட்டு விட்டன. தண்ணீர் முறையாக வழிந்தோடாமல் தேங்கி, அதில் உள்ள இரும்புக் கம்பிகள் துருப்பிடித்து, பாலம் சேதம் அடையும் வாய்ப்பு உள்ளதாகவும் பொறியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
பாலத்தில் இருந்து இறங்குவதற்காக அமைக்கப்பட்ட கான்கிரீட் படிக்கட்டுகள் கழிவறையாக மாற்றப்பட்டு சுகாதாரக் கேட்டுடன் அலங்கோலமாகக் காட்சி அளிக்கிறது. பாலத்தில் விளக்குகள் எரியாததால் இரவு நேரங்களில் மது அருந்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கு வருகிறது. பாலத்தில் செல்வோரிடம் திருடர்கள் வழிப்பறி செய்து தப்பிச் செல்வதற்கு ஏற்ற வசதி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து இருப்பதாகவே பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். பாலத்தின் கீழ்பகுதியில் உள்ள, விளக்குகள் ஏதும் எரியாமல், எவ்வித பாதுகாப்பும் இன்றிக் கிடப்பதால், இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் செயல்களுக்கு ஏற்ற இடமாக மாறியிருக்கிறது.
பாலத்தின் அருகே தற்போது டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு இருப்பது, சமூக விரோத செயல்களுக்கு மேலும் வசதியாக பாலத்தின் கீழே உள்ள பகுதி மாற்றப்பட்டு இருக்கிறது. சில பகுதிகளில் மாட்டுத் தொழுவங்கள், கட்டுமானக் காண்ட்ராக்டர்களின் பொருள்கள், குப்பைக் கூளங்கள், சாக்கடைக் கழிவுநீர் மண்டிக் கிடக்கின்றன. நரிக்குறவர்கள், பிச்சைக்காரர்கள், வழிப்போக்கர்கள் போன்றவர்களின் புகலிடமாகவும், பன்றிகளின் உறைவிடமாகவும் பாலத்தின் கீழ்பகுதி மாற்றப்பட்டு இருக்கிறது.
பிற நகரங்களில் எல்லாம் இத்தகைய பாலங்கள், கம்பி வேலி அமைத்து பாதுகாக்கப்பட்டு, கண்கவர் பூங்காக்களாக காட்சி தருகின்றன. பல பாலங்களின் கீழ்பகுதி கார்கள், சைக்கிள்கள் நிறுத்தும் இடமாக மாற்றப்பட்டு நகராட்சிக்கு வருவாய் தரும் வகையில் காட்சி அளிக்கின்றன. ஆனால் கடலூர் ரயில்வே மேம்பாலம் பராமரிப்பு இன்றி அறுவெறுப்பின் சின்னமாக மாறிக் கொண்டு இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.