உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 07, 2012

சிதம்பரம் அருகே தானே புயல் நிவாரணம் வழங்க விவசாயியிடம் லஞ்சம் : கிராம நிர்வாக அலுவலர் கைது

ரூ.9 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட மேலபருத்திக்குடி கிராம நிர்வாக அலுவலர் வீராசாமி (முகத்தை மறைத்துக் கொண்டிருப்பவர்).

சிதம்பரம்:

        தானே புயல் நிவாரணம் வழங்க விவசாயியிடம் ரூ.9 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கிராம நிர்வாக அலுவலரை கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.  

           சிதம்பரத்தை அடுத்த குமராட்சி ஒன்றியம், மேலபருத்திக்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆசைதம்பி. இவர் தேமுதிக ஒன்றிய துணைச் செயலராக உள்ளார். இவரது மனைவி தமயந்தி, 8-வது வார்டு ஒன்றியக் கவுன்சிலராக உள்ளார்.  இவர்களுக்கு 10 ஏக்கர் நிலம் உள்ளது. இந்நிலையில் தானே புயலால் பாதிக்கப்பட்ட பயிருக்கு ரூ.41 ஆயிரத்து 600 நிவாரணத் தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது. இதை பெறுவதற்கு தனக்கு ரூ.10 ஆயிரம் தருமாறு மேலபருத்திக்குடி கிராம நிர்வாக அலுவலர் வீராசாமி கேட்டுள்ளார். பின்னர் ரூ.9 ஆயிரமாவது தருமாறு கோரியுள்ளார். இதையடுத்து ஆசைதம்பி கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸில் புகார் அளித்தார்.  

        இந்நிலையில் போலீஸார் அறிவுறுத்தலின்படி ஆசைதம்பி, கிராம நிர்வாக அலுவலர் வீராசாமியை சிதம்பரம் காந்தி சிலை அருகே வந்து செவ்வாய்க்கிழமை பணம் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்தார்.  அதன்படி வீராசாமியிடம், ஆசைதம்பி ரூ.9 ஆயிரம் ரொக்கத்தை கொடுத்துள்ளார். அப்போது அங்கு மாறுவேடத்திலிருந்த கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையிலான போலீஸார் லஞ்சம் பெற்றதாக வீராசாமியை (55) கைது செய்து, அவரிடமிருந்து ரூ.9 ஆயிரம் ரொக்கத்தை கைப்பற்றினர்.   

















Read more »

கடலூர் மாவட்டத்தில் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

கடலூர் : 

     முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

          கடலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் 2.5 ஏக்கர் நஞ்சை அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் சொந்தமாக வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகள், கூலி வேலை செய்பவர்கள் இத்திட்டத்தில் பயன்பெறலாம். தற்போது கிராம நிர்வாக அலுவலர் மூலம் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. கணக்கெடுப்பில் விடுபட்ட விவசாயிகள் 10ம் தேதிக்குள் சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்தால் மட்டுமே இத்திட்டத்தில் பயன்பெற முடியும்.
 

       இத்திட்டத்தில் பதிவு பெற்ற உறுப்பினர் விபத்து மரணத்திற்கு ஒரு லட்ச ரூபாயும், இயற்கை மரணத்திற்கு 10 ஆயிரம் ரூபாயும், ஈமச்சடங்கிற்கு 2,500 ரூபாயும் வழங்கப்படுகிறது. விபத்தினால் உறுப்புகள் இழப்பு மற்றும் கொடுங்காயம் ஏற்படுவோருக்கு தன்மைக்கேற்ப 2,000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. பதிவு பெற்ற உறுப்பினர் மற்றும் உறுப்பினரின் குழந்தைகளுக்குத் திருமணம் நடைபெற்றால் பெண்களுக்கு 10 ஆயிரம் ரூபாய், ஆண்களுக்கு 8,000 ரூபாயும் திருமண உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 60 முதல் 65 வயதுக்குட்பட்ட ஆதரவற்ற, முதுமை காரணமாக உடல் உழைக்கும் திறனற்ற உறுப்பினர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
 

      பதிவு பெற்ற உறுப்பினருடைய குழந்தைகள் ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் உட்பட பல்வேறு படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விடுதியில் தங்குவோர் உட்பட அனைவருக்கும் 1,250 முதல் 1,750 ரூபாய் வரை படிப்பிற்கேற்ப கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த கல்வி உதவித்தொகை உட்பட அனைத்து உதவிகளையும் பெற பொது மக்கள் தாசில்தாரை (சமூக பாதுகாப்புத் திட்டம்) அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.













Read more »

குள்ளஞ்சாவடி அருகே முந்திரி தோப்புக்குள் பெண் பிணம் : கொலையா என விசாரணை

நெய்வேலி:
 
          நெய்வேலியை அடுத்த குள்ளஞ்சாவடி கிருஷ்ணன்குப்பம் மேலத்தெருவை சேர்ந்தவர் பிலோமினாம்மாள், மூதாட்டி. இவர் தனது மகள் மேரிகிளாரா குடும்பத்தினருடன் சேர்ந்து வசித்து வந்தார். நேற்று முன்தினம் காலையில் பிலோமினாம்மாள் அதே பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்துக்கு புறப்பட்டு சென்றார்.
         வெகுநேரமாகியும் மீண்டும் அவர் வீடு திரும்பவில்லை.   இதனால் அதிர்ச்சி அடைந்த மேரி கிளாரா குடும்பத்தினர் பிலோமினாம்மாளை பல இடங்களிலும் தேடினர். அப்போது அதே பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் ஒரு பெண் பிணமாக கிடப்பதாக தகவல் பரவியது. இதுபற்றி அறிந்த மேரிகிளாரா மற்றும் உறவினர்கள் அங்கு சென்று பார்த்த போது இறந்து கிடந்தவர் பிலோமினாம்மாள்தான் என தெரிய வந்தது.அவரது உடலை கண்டு அவர்கள் கதறி அழுத்தனர். பிலோமினாம்மாளின் மர்ம சாவு குறித்து குள்ளஞ்சாவடி போலீசில் புகார் செய்யப்பட்டது.
          உடனே தடய வியல் நிபுணருடன் போலீசார் முந்திரி தோப்புக்கு விரைந்து வந்தனர். பிலோமினாம்மாள் இறந்து கிடந்த பகுதியில் தடயங்களை சேர்த்தனர். பின்னர் அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.  சர்ச்சுக்கு சென்ற பிலோமினாம்மாள் காட்டுக்குள் பிணமாக கிடந்தது எப்படி? அவரது உடலில் காயம் ஏதும் இல்லாததால் மர்ம மனிதனால் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது அவரது சாவுக்கு காரணம் என்ன? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior