உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், நவம்பர் 03, 2011

கடலூர் மாவட்டத்தில் சுனாமி நிவாரணப் பணிகள்: வெளிநாட்டினர் ஆய்வு

கடலூர்:

          கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சுனாமி நிவாரணப் பணிகளை, வெளிநாட்டுப் பிதிநிதிகள் திங்கள்கிழமை பார்வையிட்டனர். 

              தேசிய ஊரகப் பயிற்சி மையம் ஹைதராபாத்தில் உள்ளது. கஜகஸ்தான், நைஜீரியா, ஆப்பிரிக்கா, கியூபா, நமீபியா உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் 45 நாள் பயிற்சிக்காக ஹைதராபாத் வந்துள்ளனர்.  அவர்கள் கள ஆய்வுக்காக திங்கள்கிழமை கடலூர் மாவட்டத்துக்கு வந்தனர். மதலப்பட்டு கிராமத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் நடத்தும் தோல்பொருள்கள் தயாரிப்பு நிலையம், தாழங்குடா சுனாமி குடியிருப்பு, பெரியப்பட்டு சுயஉதவிக் குழுவினர் நடத்தும் மீன் வலை தயாரிக்கும் நிலையம், சின்னக்குமட்டியில் சுயஉதவிக் குழுவினர் நடத்தும் சிமென்ட செங்கற்கள் தயாரிப்பு ஆலை, கிள்ளை, எம்.ஜி.ஆர். திட்டு பொது சுகாதார வளாகங்கள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர். 

             பின்னர் கடலூரில் மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லியைச் சந்தித்துப் பேசினர். கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சுனாமி மறுவாழ்வுப் பணிகளை கேட்டுத் தெரிந்து கொண்டனர்.  தேசிய ஊரக பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் கிருபா சங்கர் (மத்திய அரசின் தரக்கட்டுப்பாட்டுத்துறை இணை இயக்குநர்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.








Read more »

கடலூர் நகராட்சியில் மழைநீர் தேங்கிய பகுதிகள்: நகராட்சித் தலைவர் சி.கே.சுப்பிரமணியன் ஆய்வு

கடலூர்:

              கடலூரில் மழைநீர் தேங்கிய பகுதிகளை நகராட்சித் தலைவர் சி.கே.சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார். 

             தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, கடலூர் நகரம் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அவற்றை நகராட்சித் தலைவர் சி.கே.சுப்பிரமணியன் உறுப்பினர்களுடன் சென்று பார்வையிட்டார். செல்லங்குப்பம், முதுநகர், பச்சாங்குப்பம், வண்டிப்பாளையம், சிங்காரத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளையும் அவர் பார்வையிட்டார். 

             நகராட்சியில் இருந்து பொக்ளின் இயந்திரத்தை வரவழைத்து, வாய்க்கால் அடைப்புகளை அகற்றி மழைநீர் வழிந்தோட ஏற்பாடு செய்தார்.  நகரில் எந்தெந்த சாலைகள் உடனடியாக செப்பனிட வேண்டிய நிலையில் உள்ளன என்பதை நேரில் ஆய்வு செய்தார். உடனடியாக அந்த சாலைகளைச் சீரமைக்க ஜல்லி, மணல் சிமென்ட உள்ளிட்ட பொருள்கள் சேகரிக்கப்பட்டு வருவதையும் அவர் பார்வையிட்டார். தாற்காலிக சாலைப் பணிகளை உடனடியாக தொடங்குமாறு அதிகாரிகளுக்கு  உத்தரவிட்டார்.    தொடர்ந்து கனமழை பெய்வதால் சாலைகளைத் தாற்காலிகமாக சீரமைக்கும் பணிகளைத் தொடங்க முடிவில்லை. மழை சற்று ஓய்ந்ததும் போர்க்கால அடிப்படையில் சாலைகள் சீமைக்கப்படும், பழுதான சாலைகளில் சிமென்ட் தளம் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.











Read more »

விருத்தாசலம் அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு

விருத்தாசலம்:

          விருத்தாசலம் அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த கல்லூரி மாணவர் குடும்பத்துக்கு அரசின் நிவாரண நிதி திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

             விருத்தாசலம் அடுத்த கு.நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கலைசெல்வன் மகன் உத்திரபாலன் (23). இவர் கடந்த அக்டோபர் 1-ம் தேதியன்று அரசக்குழியில் உள்ள விவசாய நிலத்துக்கு சென்றுள்ளார். அப்போது, வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை கவனிக்காமல் மிதித்திவிட்டார். இதில் மின்சாரம் தாக்கி உத்திரபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தமிழக அரசின் இயற்கை மற்றும் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வட்டாட்சியர் பிரபாகரன் மாணவரின் குடும்பத்துக்கு வழங்கினார். துணை வட்டாட்சியர் அரங்கநாதன், மண்டல துணை வட்டாட்சியர் மெகருனிசா, வருவாய் ஆய்வாளர் சுகுமார், கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.









Read more »

அண்ணாமலைப் பல்கலைக்கழக நூலகத்திற்குமுன்னாள் மாணவர்கள் வழங்கிய ரூ.2 லட்சம் புத்தகம்

சிதம்பரம்:

          சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் துறை நூலகத்திற்கு 1956-60-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் ரூ.2 லட்சம் மதிப்புள்ள புத்தகங்களை வழங்கினர்.

             இதற்கான நிகழ்ச்சி பொறியியல் புல வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தலைமை வகித்தார். பதிவாளர் எம்.ரத்தினசபாபதி புத்தகங்களின் பங்கையும், அவை மாணவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது குறித்தும் பேசினார். பொறியியல் புல முதல்வர் பி.பழனியப்பன் வாழ்த்தினார். முன்னாள் மாணவர் டி.ஆர்.ஜெகதீசன் வரவேற்றார். பி.என்.உமயரூபகன் நன்றி கூறினார்.  டி.ஆனந்தராஜன், டி.ராஜாராமன், சி.ராமலிங்கம், ஜே.கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இணைப் பேராசிரியர் ஆர்.பாஸ்கர், நூலகர் ஏ.மணிமேகலை ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.






Read more »

இந்திரா காந்தி நினைவு நாள்: கடலூரில் மாணவ, மாணவியர் பங்கேற்ற ஊர்வலம்

கடலூர்:

              முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு கடலூரில் மாணவ, மாணவியர் பங்கேற்ற ஊர்வலம் நடந்தது. 

               மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய ஊர்வலத்தை ஆட்சியர் வே.அமுதவல்லி தொடங்கி வைத்தார்.  மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.அமுதவல்லி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பொ.முத்தையா, நாட்டு நலப்பணித்திட்ட தொடர்பு அலுவலர் திருமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  ஊர்வலம் முக்கிய சாலைகள் வழியாக சென்று நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. 

ரத்ததான முகாம்:

              இந்திரா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு கடலூர் செம்மண்டலம் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள், ஆசிரியர்கள் சார்பில் ரத்ததான முகாம், கடலூர் அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்டது.  தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ஹார்லிக் செல்லதுரை தலைமை வகித்தார். 200 பேர் ரத்த தானம் செய்தனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் டி.மகேந்திரவர்மன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

காங்கிரஸ்: 

                  காங்கிரஸ் கட்சி சார்பில் திங்கள்கிழமை இந்திரா காந்தி நினைவு தினம் கடைபிடிக்கப் பட்டது. மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் இந்திரா காந்தி படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.  மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ.  பி.ஆர்.எஸ். வெங்கடேசன் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலை விஜயகுமார்,  அருள் பிரகாசம், சுப்பிரமணியன், இளைஞர் காங்கிரஸ் சட்டப் பேரவை தொகுதி தலைவர் ராமராஜ் உள்ளிட்ட பலர் இந்திரா காந்தி படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.









Read more »

கடலூரில் ரூ.1.61 லட்சம் நலத்திட்ட உதவிகள்

கடலூர்:

           கடலூரில் திங்கள்கிழமை நடந்த மக்கள் குறை கேட்கும் கூட்டத்தில், ரூ. 1.61 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி வழங்கினார். 10 பேருக்கு தலா ரூ. 2,749 மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்கள், 5 பேருக்கு தலா ரூ. 2,880 மதிப்பிலான இஸ்திரிப் பெட்டிகள், மழையினால் சுவர் இடிந்து இறந்துபோன மாணவர் கிஷோர்ராஜுவின் (6) குடும்பத்தாருக்கு, முதல் அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 1 லட்சம் வழங்கப்பட்டது.













Read more »

கடலூர் நாணமேட்டில் சுவர் இடிந்து விழுந்து பெண் சாவு

http://mmimages.mmnews.in/Articles/2011/Nov/6de0c4f2-eb57-46b1-9b33-e327b3a814e4_S_secvpf.gif



கடலூர்:

          கடலூர் அருகே உள்ள நாணமேடு பகுதியை சேர்ந்தவர் சாமிதுரை (வயது 50). கூலித்தொழி லாளி. இவரது மனைவி தையல்நாயகி (45). இவர்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். சாமிதுரை நேற்று இரவு குடும்பத்துடன் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.

             நள்ளிரவு பெய்த மழையில் அவரது வீட்டின் மதில் சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் தையல்நாயகி படுகாயம் அடைந்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை மீட்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக செத்தார்.

           இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.   கடலூர் அருகே சுவர் இடிந்து விழுந்து மற்றொரு பெண் படுகாயம் அடைந்தார். கடலூர் ரெட்டிச்சாவடி அருகே உள்ள திருப்பனாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி அய்யம்மாள் (55). நேற்று இரவு அந்த பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக இவர்களது வீட்டின் சுவரும் இடிந்து விழுந்தது.

              இதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அய்யம்மாள் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து துக்கணாம் பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior