உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 20, 2010

வெள்ளத்தடுப்பு பணிக்கு ரூ.470 கோடி குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டர் தகவல்

கடலூர் : 

                                 மாவட்டத்தில் உள்ள குளம், வாய்க் கால், ஏரிகளில் 470 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மராமத்து மற்றும் வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மன்ற கூடத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., நடராஜன், திட்ட அலுவலர் ராஜஸ்ரீ, வேளாண் இணை இயக்குனர் இளங்கோவன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடந்த விவாதம்:
 

மா. கம்யூ., ரவீந்திரன் பேசுகையில் "ஒரு  லட்சம் உண்மையான ரேஷன் கார்டுதாரர்களை நீக்கம் செய்து விட்டு மேல் முறையீடு என்ற பெயரில் அலைகழிக்கப்படுகின்றனர். மாவட்டத்தில் வெள்ளத் தடுப்பு பணிகளை துவங்க வேண்டும்.' 

விவசாயி ரவீந்திரன் பேசுகையில் "மழை வெள்ள காலங்களில் பாசிமுத்தான் ஓடையிலிருந்து வெளியேறும் தண்ணீரால் வெள்ள காலங்களில் சிதம்பரம் நகரம் மூழ்குகிறது. இதனை தடுக்க நடவடிக்கை மேற்கெள்ள வேண்டும்.' 

 ராமானுஜம் பேசுகையில் "வாலாஜா ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி  ஆழப்படுத்த வேண்டும்' எனவும் 

வீரபாண்டி பேசுகையில் "விருத்தாசலத்தில் பாலம் கட்டுவதால் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் போக்குவரத்தை மாற்றி அமைக்க வேண்டும்.' 

வேங்கடபதி பேசுகையில் "சொட்டு நீர் பாசனத்திற்காக அரசு 65 சதவீதம் மானியம் தருகிறது. 1 ஹெக்டேருக்கு 90 ஆயிரம் ரூபாய் செலவானால் 37 ஆயிரத்து 500 ரூபாய்தான் மானியம் கிடைக்கிறது.
 
கலெக்டர் பேசுகையில் "470 கோடி ரூபாயில் குளம், வாய்க்கால், ஏரிகளில் மராமத்து மற்றும் வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது' என்றார்.

Read more »

காசநோய், எய்ட்ஸ் நோய் தடுப்பிற்கு பள்ளி மாணவர்கள் 2.29லட்சம் நிதி


சிதம்பரம் : 

                            சிதம்பரம் அண்ணாமலைநகர் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் காசநோய் மற்றும் எய்ட்ஸ் நோய் தடுப்பிற்காக 2லட்சத்து 29 ஆயிரம் நிதி திரட்டி வழங்கியுள்ளனர். காசநோய், எய்ட்ஸ், தொழுநோய், புற்றுநோய், பார்வையின்மை ஆகியவற்றால் பாதித்தவர்களுக்கு  சேவை செய்யும் வகையில் "இந்தியன் டெவலப்மெண்ட் பவுன்டேஷன்' என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. மும்பையை தலைமை இடமாக கொண்டு தேசிய அளவில் இயங்கி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனம் இந்தியா முழுவதும் 17 மருத்துவமனைகளை நடத்தி வருகிறது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இந்த நிறுவனத்திற்கு கடந்த நான்கு ஆண்டுகளாக சிதம்பரம் அண்ணாமலைநகர் ராணி சீதை ஆச்சி பள்ளி மாணவர்கள் நிதி திரட்டி வழங்கி வருகின்றனர்.
 
                         இந்த ஆண்டு மாணவ, மாணவிகள் 2 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் நிதி திரட்டி அளித்தனர். எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஷைலோ ஜெர்சிபிரான்சிஸ்கா மட்டும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் நிதி திரட்டி வழங்கினார். கடந்த ஆண்டு இதே மாணவி 2 லட்சம் வழங் கினார். இந்த நிதி நேற்று தொண்டு நிறுவன தென் மண்டல மேலாளர் சிதம்பரம் என்பவரிடம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அமுதவள்ளி வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் தர்பாரண்யன் வரவேற்றார். அண்ணாமலை பல்கலை பதிவாளர் ரத்தினபாபதி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ரவிச்சந் திரன் பங்கேற்றனர்.  அதிக நிதி திரட்டி தந்த மாணவி ஷைலோ ஜெர்சி பிராசிஸ்காவை முதன்மை கல்வி அலுவலர் மற்றும் பதிவாளர், தலைமை ஆசிரியர் பாராட்டினர்.

Read more »

ஏஜன்டுகளால் ஏமாற்றப்படும் ஏழை விவசாயிகள் நடவடிக்கை எடுக்க நல்லகண்ணு வேண்டுகோள்

கடலூர் : 

                           கடலூர் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சிக்காக விவசாயிகள் முன்வந்து நிலத்தை கொடுத்தாலும் ஏஜன்டுகள் விலையில் பாரபட்சம் காட்டி   வருகின்றனர் என இந்திய கம்யூ.,கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் நல்லகண்ணு பேசினார். கடலூர் அடுத்த புதுச்சத்திரம், சாமியார் பேட்டை பகுதியில் கப்பல் கம்பெனி, பவர் கார்ப்பரேஷன் கம்பெனிகளுக்காக  நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டு வருகிறது. இதில் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு நிலத்தை வாங்கி ஏமாற்றப் படுவதை கண்டித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே உண் ணாவிரதம் இருந்தனர்.ஒருங்கிணைப்புக்குழு தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார், ராமலிங்கம், மாரியப்பன் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூ., விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் நாகராஜன், துணைத் தலைவர் சேகர், செயலாளர் சுப்ரமணியன், ஏஐடியுசி., மாவட்ட செயலாளர் சேகர், இந்திய.கம்யூ., மாவட்ட செயலாளர் மணிவாசகம் பங்கேற்று பேசினர்.

முன்னதாக இந்திய கம்யூ., மத்திய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் நல்லகண்ணு  உண்ணா விரதத்தை துவக்கி வைத்து பேசியதாவது:

                        பரங்கிப்பேட்டை பகுதியில் பவர் கம்பெனி, கப்பல் கம்பெனிக்காக நிலம் ஆர்ஜிதம் செய்து வருகின்றனர். அந்த பகுதி விவசாயிகளும் தொழில் வளர்ச்சியை கருதி, நிலத்தை கொடுப்பதற்கு முன் வந்தனர். ஒரு கம்பெனி நேரடியாக நிலத்தை வாங்காமல், ஏஜன்டுகள் மூலம் நிலத்தை வாங்குகிறது. இதனால் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்காமல் மோசடி நடக்கிறது. ஒரே சர்வே எண் உள்ள இடத்திற்கு அண்ணனுக்கு ஏக்கர் 4 லட்சம் ரூபாய் எனவும், தம்பிக்கு 8 லட்சமும், தங்கைக்கு 13 லட்சமும் கொடுத்து வாங்குகின்றனர். ஏன் இந்த வித்தியாசம். இதனால் ஏழை விவசாயிகள் ஏமாற்றப்படுகின்றனர்.  ஏஜன்டுகள் நிலம் வாங்க யார் அதிகாரம் கொடுத்து. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அனைத்து கட்சியினரையும் ஒருங்கிணைந்து போராட் டம் நடத்தப்படும்.மேலும் இந்த பிரச்னையை இந்திய.கம்யூ., கட்சி சட்டமன்றத்திலும் எழுப்பவுள்ளது எனப் பேசினார்.

Read more »

எஸ்.ஐ., உள்ளிட்ட மூவருக்கு தலா 10 ஆண்டு சிறை பெண் தற்கொலை வழக்கில் தீர்ப்பு


கடலூர் : 

                  வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் உள்ளிட்ட மூன்று பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா 1.55 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கடலூர் மகளிர் கோர்ட் தீர்ப்பளித்தது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் ஆணிக்காரன் தெருவைச் சேர்ந்தவர் மோட்சகுரு(60). ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ் பெக்டர். இவரது மனைவி சந்திரா(52). இவர்களின் மகன் குமார்(29). சென்னை  ரயில்வே போலீசில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர்.குமாருக்கும், சிதம்பரம் அடுத்த மீதிக்குடி கிராமம் வீரபாண்டியன் மகள் வசந்தபிரியா (24)விற்கும் திருமணம் டந்தது. வசந்தபிரியாவின் பெற்றோர் வரதட்சணையாக 25 சவரன் நகை,  ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமாக கொடுத்தனர்.இந்நிலையில் கணவர் குமார், மாமனார் மோட்சகுரு, மாமியார் சந்திரா மூவரும் வரதட்சணை கேட்டு  வசந்தபிரியாவை துன்புறுத்தி வந்தனர்.கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி வசந்தபிரியா தனது பெற்றோருக்கு போனில் தகவல் கூறினார்.

                                      அதன்பேரில் வீரபாண்டியன், குமார் வீட்டிற்கு வந்து, சம்பவம் குறித்து விசாரித்தார். அப்போது குமார் வீட்டில் இல்லை என்பதால் பிறகு வந்து விசாரிப்பதாக கூறிவிட்டு வீரபாண்டியன் தனது வீட்டிற்கு சென்றுவிட்டார். சற்று நேரத்தில் வசந்தபிரியா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். வரதட்சணை கொடுமையினால் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக வீரபாண்டியன் போலீசில் புகார் செய்தார்.  சிதம்பரம் டவுன் போலீசார்  குமார், மோட்சகுரு, சந்திரா ஆகியோரை கைது செய்தனர். வழக்கை விசாரித்த கடலூர் மகளிர் கோர்ட் நீதிபதி அசோகன், வசந்தபிரியாவை தற்கொலைக்கு தூண்டிய அவரது கணவர் குமார், மாமனார் மோட்சகுரு, மாமியார் சந்திரா ஆகியோருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா 1.55 லட்சம் அபராதமும் விதித்து நேற்று  தீர்ப்பளித்தார். மேலும் அபராதத்தொகையில் 4 லட்சம் ரூபாயை, இறந்த வசந்தபிரியாவின் தந்தை வீரபாண்டியனுக்கு இழப்பீடாக வழங்க உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு வக்கீல் சிவராஜ் ஆஜரானார்.

Read more »

தனியார் பஸ்களில் கட்டண உயர்வு வாபஸ்

சிதம்பரம் : 

                                 கடலூர் மாவட்ட தனியார் பஸ்களில் 50 பைசா கட்டண உயர்வு, மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கையால் நேற்று திடீரென வாபஸ் பெறப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் தனியார் பஸ்களில் திடீரென 15 நாட்களாக 50 பைசா சொச்சமாக இருந்த பஸ் கட்டணம் "ரவுண்டு' செய்யப்பட்டு குறைந்த கட்டணம் 3.50ல் இருந்து 4 ஆக உயர்ந்தது. அதே போன்று 4.50, 6.50, 8.50 என இருந்த கட்டணம் 50 பைசா உயர்த்தப்பட்டது. பஸ்சில் 50 பைசா சில்லரை பாக்கி கொடுக்கும் பிரச்னையில் பயணிகளுக்கும் பஸ் ஊழியர்களுக்கும் ஏற்பட்டு வந்த பிரச்னையை தவிர்க்க இந்த கட்டண உயர்வு என கூறப்பட்டது. ஆனால் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகுதான் பஸ்களில் அதிக அளவில் பிரச்னை ஏற்பட்டு வந்தது. அறிவிக்கப்படாத கட்டண உயர்வால் பள்ளி மாணவ, மாணவிகள், ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டனர்.இந்த 50 பைசா கட்டண உயர்வை முன்னோட்டமாக வைத்து, பயணிகளின் நிலையை அறிந்து அனைத்து கட்டணத்தையும் கணிசமாக உயர்த்த திட்டமிட்டிருந்தமாகவும் கூறப்பட்டது.

                                 இந்நிலையில் 50 பைசா கட்டண உயர்வால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், கலெக்டர் வரை புகார் செய்ய, மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. கலெக்டர் நேற்று நேரிடையாக சோதனை நடத்த ஆயத்தமாகியதாக கூறப்படுகிறது.  இதை அறிந்த பஸ் உரிமையாளர்கள் உஷாராகினர். உடனடியாக பஸ்  கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும், பஸ் கட்டணம் உயர்த்தியதற்கான தடயங்கள் ஏதும் சிக்கி விடாதபடி டிரிப் ஷீட், டிக்கெட் புக் மாற்றவும், டிக்கெட் இயந்திரத்தில் கட்டணத்தை மாற்றி அமைக்க பஸ் உரிமையாளர்கள் தங்களது ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து அனைத்து தனியார் பஸ்களிலும் நேற்று காலை 11 மணிக்கு அதிரடியாக கட்டணம் குறைக்கப்பட்டது.  அதிரடி கட்டண குறைவு மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கைக்கு முன்பே குறைக்கப்பட்டதால் பயணிகள் நிம்மதியடைந்துள்ளனர்.

Read more »

வைத்தியநாதசுவாமி கோவிலில் 208 சித்தர்களின் சிறப்பு யாக பூஜை

திட்டக்குடி : 

                          திட்டக்குடியில் வைத்தியநாத சுவாமி கோவில் கும்பாபிஷேக பணிகள் துரிதமாக நடைபெறவும், உலக நன்மை வேண்டியும் 208 சித்தர்களின் சிறப்பு யாகபூஜை இன்று நடக்கிறது. திட்டக்குடி அசனாம்பிகை அம்மன் உடனுறை வைத்தியநாத சுவாமி கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகள் விரைவில் நடைபெற வேண்டியும், திருக்குளம் சீரமைவும், இயற்கை வளம், மனித நேயம், மத நல்லிணக்கம், மாணவர்களின் கல்வி நலன், மழை, வியாபார அபிவிருத்தி வேண்டி 208 கலச பூஜை, கோ பூஜை, 108 சங்காபிஷேகம், 208 சித்தர்களின் சிறப்பு யாக பூஜை இன்று (20ம் தேதி) நடக்கிறது. கலெக்டர் சீத்தாராமன் தலைமையில், விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி., மாசானமுத்து, இணை ஆணையர்கள் தங்கராஜி, ஜெகநாதன், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் சடையப்பன், சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலையில் நடக்கிறது.
                            பெரம்பலூர் சித்தர் ராஜ்குமார் குருஜி யாகபூஜையை துவக்கி வைக்கிறார்.தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானத்தை சிவகாமசுந்தரி மாசானமுத்து வழங்குகிறார். தொழுதூர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரி தாளாளர் கிருஷ்ணசுவாமி தலைமையில் பூர்ணாஹூதி நடைபெறுகிறது.

Read more »

கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம் : சம்பத் எச்சரிக்கை

கடலூர் : 

                         குறிப்பிட்ட காலத்திற்குள் பாதாள சாக்கடை திட்டப்பணியை முடிக்கவில்லை எனில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என அ.தி.மு.க., மாவட்டச் செயலாளர் சம்பத் பேசினார். கடலூரில் மந்தமாக நடக்கும் பாதாள சாக்கடை திட்டத்தை கண்டித்து கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் உழவர் சந்தை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இளைஞரணி செயலாளர் ஆதி ராஜாராம் தலைமை தாங்கினார். நகர செயாளர் குமரன் வரவேற்றார். 

மாவட்ட செயலாளர் சம்பத் முன்னிலை வகித்து பேசியதாவது: 

                        தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது.  கடலூரில் மந்தமாக நடக்கும் பாதாள சாக்கடை திட்டப் பணியால் ரோடுகள் பழுதடைந்துள்ளன. அடிக்கடி விபத்துக் கள் நடக்கிறது. கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது.

                        இதனால் கடலூர் மக்களுக்கு புதுப்புது நோய்கள் பரவுகின்றன. ஒரு மாதத்தில் கலெக்டர் தலைமையில் நகராட்சி, குடிநீர் வடிகால் வாரியம், நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுடன் கூடி ஆலோசனை செய்து கடலூர் நகரில் பாதாள சாக்கடை திட் டத்தை விரைந்து முடிக்க குறிப்பிட்ட கால கெடுவை தெரிவிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் பாதாள சாக்கடை திட்டப் பணி முடிக்கவில்லை எனில் மக்களை திரட்டி கலெக்டர் அலுவலகம், நகராட்சி அலுவலகம், அமைச்சர் அலுவலகங் களை முற்றுகையிடுவோம் என்றார். ஆர்ப்பாட்டத்தில் சட்டசபை தொகுதி செயலாளர்கள் கடலூர் சுப்ரமணியன், விருத்தாசலம் அரங்கநாதன், இணை செயலாளர்கள் ராமசாமி, பாலகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன், முன்னாள்  நகர செயலாளர் குமார், மாவட்ட தலைவர் அருணாசலம், ஒன்றிய செயலாளர்கள் பழனிசாமி, முத்துக்குமாரசாமி, டாக்டர் லஷ்மி நாராயணன், சக்திவேல், விவசாய அணி காசிநாதன், மீனவரணி தண்டபாணி, ஒன்றிய துணை செயலாளர் ஏழுமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

அமைதிக்குழு கூட்டம் பாதியில் நின்றது

திட்டக்குடி : 

              திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரிடையே மோதல் சூழ்நிலை உருவானதால் அமைதிக்குழு கூட்டம் பாதியில் நின்றது. திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவில் திருக்குளத்தை சீரமைக்க வலியுறுத்தி வரும் 24ம் தேதி கோவில் முன்பாக சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக சிவனடியார்கள் திருக்கூட்டத்தினர் அறிவித்தனர். அதனையொட்டி நேற்று காலை 11 மணிக்கு தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கண்ணன் தலைமையில் அமைதிக்குழு கூட்டம் நடந்தது. அதில் இந்துசமய அறநிலைய ஆட்சித்துறை  இணை ஆணையர் ஜெகநாதன், பேரூராட்சி தலைவர் மன்னன், இந்து முன்னணி நகர தலைவர் செந்தில் மற்றும் திருக்குள ஆக்கிரமிப்பாளர்கள், சிவனடியார்கள் பங்கேற்றனர்.

                     கூட்டத்தில்,திருக்குளம் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதால் சுத்தம் செய்யக் கூடாது எனவும், கலந்து பேசி முடிவெடுக்க மூன்று மாதம் அவகாசம் வேண்டும் என ஒரு தரப்பினர் கூறினர். அதில் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் ஆக்கிரமிப்பாளர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால் அமைதிக்குழு கூட்டத்தை ஒத்தி வைப்பதாக தாசில்தார் அறிவித்தார்.  அப்போது சிவனடியார்கள் திட்டமிட்டபடி வரும் 24ம் தேதி சாகும் வரை உண்ணாவிரத போராட் டம் நடைபெறும் என அறிவித்தனர்.

Read more »

வேப்ப மரத்தில் பால் வடிகிறது

 நெல்லிக்குப்பம் : 

                   நெல்லிக்குப்பம் அருகே வேப்பமரத்தில் பால் வடிவதை காண கூட்டம் அலைமோதியது. கடலூர் அடுத்த வெள்ளப்பாக்கத்தில் கெங்கையம்மன் கோவில் அருகே வேப்பமரம் உள்ளது. இந்த மரத்தின் இருந்து திடீரென பால் வடிய துவங்கியது. இதையறிந்த சுற்றுப்புற மக்கள் குவிந்தனர். பூசாரி முருகன், வேப்பமரத்திற்கு புடவை கட்டி பூஜைகள் செய்தார்.

Read more »

கண்கள் தானம்

சிதம்பரம் : 

              இரு மூதாட்டிகளின் கண்கள் தானமாக  பெறப்பட்டது. சிதம்பரம் காரைக் காட்டு வெள்ளாழ தெருவைச் சேர்ந்த இருசாயி அம்மாள்(80), ஜெயலட்சுமி(70) இருவரும் நேற்று இறந்தனர். இவர்களின் கண்களை சிதம்பரம் காஸ்மோ பாலிட்டன் அரிமா சங்க தலைவர் கமல்கிஷார் ஜெயின், செயலாளர் விஜயகுமார்,  உள்ளிட்டோர் தானமாக பெற்று புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.

Read more »

அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் 119 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

சிதம்பரம் : 

                        சென்னையில் நடைபெறவுள்ள அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் 119 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்படும் என முன்னாள் எம்.பி., வள்ளல்பெருமான் தெரிவித்தார

திருக்குலம் சிந்தனையாளர் மைய நிறுவனரும் முன்னாள் எம்.பி., யுமான வள்ளல்பெருமான் வெளியிட்டுள்ள அறிக்கை:

                    திருக்குலம் சிந்தனையாளர் மையம் சார்பில் அம் பேத்கரின் 119வது பிறந்த தின விழா வரும் ஏப். 18ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடக்கிறது.

                    மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் நடைபெறும் விழாவில் மத்திய தொழிலாளர் நலம் மற்றும் வேலை வாய்ப்பு துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே, மத்திய சமூக நலத்துறை அமைச்சர் முகுல் வாஸ்னிக், மத்திய வெளிநாட்டு வேலை வாய்ப்பு துறை அமைச்சர் வயலார் ரவி மற்றும் தமிழ்நாடு காங்., தலைவர், எம்.பி. எம்.எல்.ஏ.,க் கள், அரசு அதிகாரிகள், தலித் அரசியல் இயக்க தலைவர்கள் பங்கேற்கின்றனர். விழாவில் "சமூக நீதியும்- தலித் மக்களின் பயன்பாடும்' எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடக்கிறது. அம்பேத்கரின் 119வது பிறந்த தினத்தையொட்டி ஏழை குடும்பத்தை சேர்ந்த 119 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. சமூக நீதிக்காக பாடுபட்டு வரும் சான்றோர்களுக்கு "அம்பேத்கர் சேவா ரத்னா' விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகின்றனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Read more »

கடலூரில் அனுமதியின்றி வளர்த்த யானை வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைப்பு

கடலூர் : 

                           கடலூரில் அனுமதியின்றி வளர்க் கப்பட்ட  யானையை மீட்ட வனத்துறையினர் கோர்ட் உத்தரவின்படி வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் நேற்று ஒப்படைத்தனர். கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் அனுமதியின்றி வளர்க்கப்பட்ட யானையை கடந்த 17ம் தேதி வனத்துறையினர் கைப்பற்றினர். யானை உரிமையாளர் பழனி மற்றும் பாகன் ராஜேந்திரனை கைது செய்தனர். யானை பாலூர் அடுத்த சித்தரசூரில் உள்ள தென்னந்தோப்பில் வனத்துறையினர் பாதுகாப்பில் இருந்தது. இந்நிலையில் யானையை எங்குவிடவேண்டும் என்பது குறித்து வனத் துறை சார்பில் நேற்று முன்தினம் கடலூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் ரமேஷ், வழக்கு முடியும் வரை யானையை வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

                   அதன்படி வண்டலூருக்கு யானையை அழைத்து செல்வதற்காக சி.என்.பாளையம் கால்நடை மருத்துவர் கமலக்கண்ணன் பரிசோதனை செய்து சான்று வழங்கினார். பின்னர் நேற்று காலை 6 மணிக்கு வன சரகர்கள் பன்னீர்செல்வம், சீனிவாசன், வனவர் கள் ஞானசுந்தரம், மணி, வனகாப் பாளர்கள் ராஜேந்திரன், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் யானையை லாரியில் ஏற்றிச் சென்று பகல் 12 மணிக்கு வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா காப்பகத்தில் ஒப்படைத்தனர். அங்கு யானையை மருத்துவர்கள் சோதனை செய்து உணவு வழங்கினர்.

Read more »

ஸ்டாலினுக்கு கருப்பு கொடி எம்.ஜி.ஆர்., இளைஞரணி எச்சரிக்கை

கடலூர் : 

                          பாதாள சாக்கடை திட்டம் எத்தனை மாதத்திற்குள் முடிக்கப்படும் என்பதை உள்ளாட்சி துறை அமைச்சர் ஸ்டாலின் தெளிவுப்படுத்தாவிட்டால், அவர் கடலூருக்கு வரும் போது கருப்பு கொடி காட்டுவேம் என எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாநில செயலர் ஆதி ராஜாராம் பேசினார். 

கடலூரில் பாதாள சாக்கடை திட்டத்தை மந்தமாக செயல்படுத்தி வரும் நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது: 

                           கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் கடலூர் நகரில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த 40.44 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்கு பின் தி.மு.க., ஆட்சியில் அதே திட்டத்திற்கு மேலும் 25 கோடி ரூபாய் சேர்த்து திட்டம் நிறைவேற்றபட்டுள்ளது. இதற்கான காலக்கெடு முடிந்து 20 மாதம் ஆகியும் பணிகள் முடியவில்லை. பாதாள சாக்கடை பணி எத்தனை மாதத்தில் முடிக்கப்படும் என்பதை உள்ளாட்சி துறை அமைச்சர் ஸ்டாலின் தெளிவுப்படுத்த வேண்டும். இல்லையெனில் கடலூருக்கு ஸ்டாலின் வந்தால் கருப்புக்கொடி காட்டுவோம். அவர் காரை முற்றுகையிடுவோம்.இவ்வாறு அவர் பேசினார்.

Read more »

திருவந்திபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா

கடலூர் : 

                    மாணவ சமுதாயத்திற்கு பண்பு, பணிவு, படிப்பு அவசியம் இருக்க வேண்டும் என திருவந்திபுரம் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சேஷாத்திரி அய்யங்கார் பேசினார். கடலூர் அடுத்த திருவந்திபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இலக்கிய மன்றம், விளையாட்டு , ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று நடந்தது. தலைமையாசிரியர் பழனி வரவேற்றார். சிறப்பு விருந்தினர் புதுச்சேரி தினமலர் நிர்வாகி கே.வெங்கட்ராமன்,  புதுப்பிக்கப்பட்ட கம்ப்யூட்டர் அறையை திறந்து வைத்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.உதவி தலைமையாசிரியர்கள் கண் ணன் ஆண்டறிக்கையும், சக்கரவர்த்தி இலக்கிய மன்ற அறிக்கையும் வாசித் தனர்.

                          தமிழாசிரியர் மரியஜோசப் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். திருவந்திபுரம் ஊராட்சி தலைவர் ராஜேந்திரன்,  ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் நரசிம்மன், ஓய்வு பெற்ற தமிழாசிரியர் துரை வளவன், ராஜகோபாலன் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.அரையாண்டு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகள் மற்றும் விளையாட்டு, வினாடி வினா, கோலம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது.பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சேஷாத்திரி அய்யங்கார் தலைமை தாங்கி பேசுகையில்,"தற்போது அரசு, கல்வி முறையில் சமச்சீர் கல்வியை கொண்டு வரப்போகிறது.
                          இதனால் மெட்ரிக்குலேஷன், ஸ்டேட் போர்டு எல்லாம் ஒரே கல்வியின் கீழ் வந்து விடும். அரசு பள்ளி, மெட்ரிக் பள்ளி என இருக்காது.  கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக சைக்கிள், சீருடை உள்ளிட்ட அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. இப்பள்ளியை பொறுத்தவரை அனைத்து வசதிகளும் செய்து, சுற்றுச் சுவரும் கட்டிக் கொடுத்துள்ளேன். சைக்கிள் ஸ்டாண்டு விரைவில் கட்டிக் கொடுக்கப்படும். மாணவ, மாணவிகளுக்கு பக்தி, பண்பு, படிப்பு ஆகியவை அவசியம் இருக்க வேண்டும். மாணவ சமுதாயம் எதிர்காலத்தில் நன்றாக வந்தால் தான் ஜனநாயகம் நீடிக்கும். ஜனநாயகம் முக்கியம் என கருதுவதால் தான் தினமலர் நாளிதழ் கல்விக்கு முக்கியத்துவம் தருகிறது. 10 மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகள் தைரியமாக வருகின்ற தேர்வை எதிர் கொள்ள வேண்டும்' என்றார்.

Read more »

தானியங்கள் மூலம் மிக நீளமான ஓவியம் ஸ்ரீமுஷ்ணம் கல்லூரி கின்னஸ் சாதனை

ஸ்ரீமுஷ்ணம் : 

                         ஸ்ரீமுஷ்ணம் பி.பி.ஜே. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஜெயந்தி பத்மநாபா ஆசிரியர் பயிற்சி நிறுவனம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் பி.பி.ஜே. கலை கல்லூரி மற்றும் ஜெயந்தி பத்மநாபா ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்பில் உலக கின்னஸ் சாதனை நிகழ்ச்சி நடந்தது. காலை 6.10 மணிக்கு கின்னஸ் உலக சாதனை ஓவியம் வரையும் நிகழ்ச் சியை நிறுவனர் பத்மநாபன் துவக்கி வைத்தார். கின்னஸ் பார்வையாளர் டாக்டர் பிரதீப்குமார், தி.மு.க., நகர செயலாளர் ஆனந்தன் முன்னிலை வகித்தனர். கல்லூரி நிர்வாகி பிரகாஷ் வரவேற்றார். தொடர்ந்து கல்லூரி மற்றும் ஆசிரியர் பயிற்சி மாணவ, மாணவிகள் 547 பேர் காலை 6.10 மணிக்கு ஓவியம் வரையத் துவங்கி பகல் 11.55 மணிக்கு முடித் தனர். இதில் 315.8 மீட்டர் தூரத்திற்கு அரிசி, பருப்பு, கோதுமை, கேழ்வரகு, கம்பு, துவரம் பருப்பு, உளுந்து  உள்ளிட்ட 13 தானியங்களை கொண்டு உலகின் மிக நீளமான ஓவியம் வரையப்பட்டது. தொடர்ந்து கின்னஸ் சாதனை ஆய்வாளர் பிரதீப்குமார் மாணவ, மாணவிகள் வரைந்த ஓவியத்தை லண்டனில் உள்ள கின்னஸ் சாதனை புத்தக நிறுவனத்தாரிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய் தார்.

                           பின்னர் நோட்டரி பப்ளிக்  பாரி மற்றும் "டிவி' மீடியா மற்றும் பத்திரிகைகளின் சாட்சியங்களின் அடிப்படையில் கின்னஸ் நிறுவனத்தினரால் ஒப்புக் கொள்ளப்பட்டது. இதன் மூலம் உலகிலேயே தானியங்களால் வரையப்பட்ட மிக நீளமான ஓவியம் என்ற சாதனையை ஸ்ரீமுஷ்ணம் பி.பி.ஜே. கலை அறிவியல் கல்லூரி, ஜெயந்தி பத்மநாபா ஆசிரியர் பயிற்சி நிறுவனம் பெற் றுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து கின்னஸ் சாதனை வெற்றி ஊர்வலம் நடந்தது. இதில் புவி வெப்பமயமாதலை தடுத்தல், விவசாயத்தை ஊக்குவித்தல் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை பிடித்தவாறு மாணவ, மாணவிகள் ஊர்வலமாக சென்றனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் 2 போலீஸ் ஸ்டேஷன் கடலூரில் ஐ.ஜி., ராஜேஷ்தாஸ் தகவல்

கடலூர் : 

                       "கடலோர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது' என, கடலோர காவல் படை ஐ.ஜி., கூறினார்.
 
                          கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க, மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதையொட்டி, தமிழகத்தில் இந்திய கடற்படை, கடலோர காவல் படை மற்றும் தமிழக போலீசார் இணைந்து, கடலோர கிராமங்களில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை 1,100 கி.மீ., தூரம் கடற்கரை வழியாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த 16ம் தேதி, தமிழக கடலோர காவல்படை ஐ.ஜி., ராஜேஷ்தாஸ் தலைமையில், கமான்டன்ட் சக்திவேல் உள்ளிட்ட 15 பேர், சென்னையிலிருந்து புறப்பட்டனர். இவர்களில் 10 பேர் மோட்டார் சைக்கிளில் கடற்கரை சாலை வழியாகவும், ஐந்து பேர் நீர் மற்றும் மணலில் செல்ல பிரத்யேகமாக வடிவமை க்கப்பட்ட "ஆல்ட்ரைன்' வாகனங்களிலும் பயணம் மற்கொண்டுள்ளனர். கடந்த 17ம் தேதி கடலூர் வந்த இக்குழுவினர், தேவனாம்பட்டினம் பகுதி மீனவர்களிடம், கடல் வழி பாதுகாப்பு குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்தினர். நேற்று காலை கடலூரில் இருந்து கடற்கரை வழியாக பிச்சாவரம் புறப்பட்டனர்.ஐ.ஜி., ராஜேஷ்தாஸ் கூறியதாவது:"ஆல்ட்ரைன்' வாகனங் கள்  100 முதல் 160 கி.மீ., வேகம் செல்லும். வாகனத்திலிருந்து ஐந்து கி.மீ., தூரத்திற்கு கடலில் கண் காணிக்க முடியும்.  இந்த வாகனம் செல்வதற்கு  நான்கடி அகல பாதை இருந்தால் போதும்.  75 டிகிரி உயரமுள்ள மேட்டை யும் எளிதில் கடக்கலாம். தேவைப்பட்டால், வனத் துறை மற்றும் சுங்க இலாகா துறை அதிகாரிகளையும் அழைத்துக் கொள்வோம். பயணத்திற்கு ஆறுகள் சிறிது இடையூறாக உள் ளன. பயணத்தின்போது மீனவ கிராமங்களில் விழிப் புணர்வு ஏற்படுத்த, மீனவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறோம்.  மார்ச் 3ம் தேதி பயணம் முடிகிறது. எல்.டி.டி.இ., இயக்கத் தினர் சிலர் மிஞ்சிருக்கலாம். அவர்கள் தமிழகத்திற்குள் வராமல் இருக்க தீவிரமாக கண்காணித்து  வருகிறோம். மேலும் கடலோர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு ராஜேஷ்தாஸ் கூறினார்.

பரங்கிப்பேட்டை அடுத்த புதுக்குப்பம் மீனவ கிராமத்திற்கு வந்த  ஐ.ஜி., ராஜேஷ்தாஸ்  கூறுகையில், 

                     "தமிழகத்தில் 25 கிலோ மீட்டருக்கு ஒரு கடலோர போலீஸ் நிலையம் அமைக்கப்படும்.  தற்போது 12 கடலோர போலீஸ் நிலையம் உள்ளது. இன் னும் 42 போலீஸ் நிலையம் விரைவில் அமைக்கப்படும். கடலூர் மாவட்டத்தில் கடலூர், பிச்சாவரம் இடங்களில் கடலோர போலீஸ் நிலையம் அமைக்கப்படும் என்றார்.அவருடன் பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் புகழேந்தி, பேரூராட்சி துணை சேர்மன் செழியன், கடலோர காவல் படை சப் இன்ஸ்பெக்டர் காளியப்பன், கிராம நிர்வாகிகள் இருந்தனர். பரங்கிப்பேட்டைக்கும் கிள்ளைக்கும் குறுக்கே வெள்ளாறு ஓடுவதால் பரங்கிப்பேட் டையில் இருந்து சிதம்பரம் வந்து அங்கிருந்து கிள் ளைக்கு சென்றனர். அங்கிருந்து படகில் கடலில் சென்று ஆய்வு செய்தனர்.

Read more »

விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக திருவிழா துவக்கம்

விருத்தாசலம் : 

               விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமகப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. பகல் 12.10 மணியளவில் கோவில் வளாகத்தில் உள்ள ஐந்து கொடிமரங் களிலும் மேளதாளம் முழங்க கொடி ஏற்றப்பட் டது. முன்னதாக வினாயகர், விருத்தகிரீஸ்வரர், சுப்ரமணியர், விருத்தாம்பிகை அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Read more »

டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து திருட்டு

நெய்வேலி : 

                        டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து 23 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பிராந்தி பாட்டில்களை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர். மந்தாரக்குப்பம் மெயின் ரோட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. இதன் மேற் பார்வையாளர் மோகன் நேற்று காலை கடையை திறக்க வந்தபோது கதவில் இருந்த பூட்டு உடைந்திருந்தது. சந்தேகப்பட்டு திறந்த பார்த்தபோது கடையினுல் வைத்திருந்த 23 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 7 பெட்டி குவார்ட்டர் பிராந்தி பாட்டில்கள் திருடு போயிருந்தது. இதுகுறித்து மோகன் கொடுத்த புகாரின் பேரில் மந்தாரக்குப்பம் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

பஸ் நிலையத்தில் நகை அபேஸ்

கடலூர் : 

                 கடலூர் பஸ் நிலையத்தில் 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை திருடிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் அடுத்த பாதிரிக்குப்பம் அன்பு நகரைச் சேர்ந்த ஜெயபாலன் மனைவி கஸ்தூரி(60). இவர் நேற்று காலை கடலூர் பஸ் நிலையத்திலிருந்து பாதிரிக்குப்பம் பஸ் ஏறினார். அப்போது அவரது பையில் இருந்த மணி பர்சை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றுள்ளனர். திருடு போன மணி பர்சில் 5 சவரன் செயின் மற்றும் ஒரு சவரன் வளையல் இருந்துள்ளது. இதன் மதிப்பு 60 ஆயிரம் ரூபாய் ஆகும். இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார்  விசாரித்து வருகின்றனர்.

Read more »

மின்மோட்டார் ஒயர் திருடர்கள் கைது

திட்டக்குடி : 

                        மின்மோட்டார்  மற் றும் காப்பர் ஒயர் களை திடிய மூவரை போலீசார் கைது செய்தனர்.  பெண்ணாடம் பகுதிகளில் விவசாய நிலங்களில் இருந்த மின் மோட்டார்கள், மின் மாற்றிகளில் உள்ள காப்பார் ஒயர்கள் அதிக அளவில் திருடுபோயின. அதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர்  ஸ்ரீதரன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் கிடைத்த தகவலின் பேரில்  இறையூர் நாராயணசாமி மகன் சசிகுமார் (27), விருத்தாசலம் அடுத்த கார்குடல் ராமலிங்கம் மகன் அருள் மணி (25), கோவிந்தசாமி மகன் பிரபு (25) ஆகியோரை கைது செய்தனர்.

Read more »

சாட்சிகளை திரட்டியவரை கொல்ல முயற்சி பதுங்கியிருந்த இருவர் துப்பாக்கியுடன் கைது

கடலூர் : 

                             பண்ருட்டி அருகே முந்திரிதோப்பில் துப்பாக்கியுடன் பதுங்கியிருந்த கொலை, வழிப்பறி சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த நாட்டு துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். கடலூர், மாவட்டம் நெய்வேலி பகுதியில் செயின் பறிப்பு சம்பவம் அதிகரித்ததை தொடர்ந்து எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் உத்தரவின் பேரில் காடாம்புலியூர் இன்ஸ் பெக்டர் மணவாளன் மற் றும் சிறப்புப்படை சப் இன்ஸ்பெக்டர் அமீர்ஜான் தலைமையிலான இரு குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.அதில், கிடைத்த தகவலின் பேரில் காடாம்புலியூர் அருகே முந்திரிதோப்பில் பதுங்கியிருந்த மூன்று நபர்களை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்தனர். அவர்களில் ஒருவர் ஓடிவிட்டார். நாட்டு துப் பாக்கியுடன் இருவர் சிக்கினர். 

                                காடாம்புலியூர் நாராயணசாமி மகன் ஆறுபடையன்(30), சுப்ரமணியன் மகன் சக்திதாசன்(28) என்பதும், தப்பியோடிவர் ராஜ் மோகன் என்பதும் தெரியவந்தது. இவர்கள் மூவரும் பா.ம.க., பிரமுகர் சீனுவாசன் கொலை வழக்கின் குற்றவாளிகள், இவர்கள் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆடு திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக் குள் நிலுவையில் இருப் பது தெரிய வந்தது. சீனுவாசன் கொலை வழக்கில்  ஆறுபடையனுக்கு எதிராக சாட்சிகளை திரட்டிய ராமலிங்கம் என்பவரை துப்பாக்கி காட்டி கொலை செய்ய முயன்றதும் தெரியவந்தது.அதன்பேரில், காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து, ஆறுபடையன், சக்திதாசன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்கள் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய ராஜ்மோகனை தேடி வருகின்றனர்.

Read more »

பணியிலிருந்த இன்ஸ்பெக்டர் திடீர் மரணம்


கடலூர் : 

                   கடலூரில் பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் வலிப்பு ஏற்பட்டு இறந்தார். திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்தவர் பாலசுப்ரம ணியன்(55). இவர் விழுப்புரம் மாவட்டம்  உளுந்தூர் பேட்டையில் உள்ள  தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் 10வது பட்டாலியனில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தார். இவர் நேற்று கடலூர் அடுத்த தாழங்குடாவில் உள்ள கடலோர பாதுகாப்பு பிரிவு செக்போஸ்ட் கேம்ப்பில் பணியிலிருந்த போது  திடீரென வலிப்பு ஏற்பட்டு இறந்தார். புதுநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior