கடலூர் :
கடலூர் மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டிகளில் 137 பேர் பங்கேற்றனர்.
தமிழில் பேச்சாற்றல், படைப்பாற்றலை வளர்க்கும் நோக்கில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் நடந்தது. போட்டிகளை பள்ளி தலைமை ஆசிரியர் சுப்ரமணியன் துவக்கி வைத்தார். முதுநிலை தமிழாசிரியர் மஞ்சு வரவேற்றார். இதில் மாவட்டம் முழுவதும் 47 பள்ளிகளில் இருந்து 137 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு 10 ஆயிரம், இரண்டாம் பரிசு 7,000 ரொக்கப் பரிசும், சான்றிதழும் வழங்கப்படும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு சென்னையில் நடக்கும் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இதில் முதல் பரிசு 15 ஆயிரமும், 2ம் பரிசு 10 ஆயிரமும் வழங்கப்படும். இன்று கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள் பெரியார் அரசு கல்லூரியில் நடக்கிறது.