சிதம்பரம்:
சிதம்பரத்தில் கோவை ஈஷா அறக்கட்டளை சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகாசத்சங்கம் நிகழ்ச்சியில் பொதுமக்கள் கேட்ட கேள்விகளுக்கு சத்குரு ஜகி வாசுதேவ் பதில் அளித்தார்.
அதன் விவரம் வருமாறு:
தாங்கள் நடராஜர் கோயிலுக்கு சென்ற நோக்கம் என்ன?
பூமியை நாம் உருவாக்கவில்லை. ஆனால் புரிந்து கொள்ள முடியாத அளவில் படைத்தல் நடந்துள்ளது. படைத்தல் மூலமாக எதுவும் புரிந்து கொள்ள முடியாததால் அதற்கு நாம் கடவுள் என்ற பெயர் கொடுத்தோம். நாம் பல்வேறு வடிவில் கடவுள்களை வணங்குகிறோம். உலகத்தில் 33 லட்சம் கடவுள் உள்ளனர். அவை போதாது என நான் நினைக்கிறேன். நம்நாட்டில் 120 கோடி மக்கள் உள்ளனர். பெற்ற தாயைப் பிடித்தால் தாயை கடவுளாக வைத்துக் கொள்ளுங்கள். எதன்மீது ஈடுபாடு உள்ளதோ அதனை கடவுளாக எடுத்துக் கொள்ளுங்கள். கோயில் என்பது பிராத்தனை செய்யும் இடம் மட்டும் என சொல்லவில்லை. குடும்ப வாழ்க்கையை தொடங்குபவர்கள் குளித்துவிட்டு முதன்முதலில் கோயிலுக்கு சென்று உட்கார்ந்து இருக்க வேண்டும். ஆனால், தற்போது கோயிலுக்கு போய் உட்கார முடியவில்லை. வேகமாக சென்று சுற்றிவிட்டு, சுவாமியிடம் விண்ணப்பத்தை கொடுத்து விட்டு வந்துவிடுகிறோம்.
கோயிலை அழகாக வைத்திருக்க வேண்டும். சுத்தமாக வைத்திருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் உள்ளவர்கள் தினமும் கோயிலுக்கு போக வேண்டும். ஆன்மிக வாழ்க்கையில் உள்ளவர்கள் கோயிலுக்கு போகத் தேவையில்லை. சிதம்பரம் கோயில் என்பது புராதனமாக பார்த்தால் பிரமாதமான விஷயம். அந்த காலத்தில் எந்தவித தொழில்நுட்பமும் இன்றி, கருவிகள் இன்றி வெறும் மனிதர்களின் திறமை மற்றும் தைரியத்தால் உருவாக்கப்பட்டது இக் கோயில். தினமும் கோயிலுக்கு செல்லும் போது இந்த தைரியமும், திறமையும் தூண்டப்படும். நம்மால் இது போன்ற ஒரு கோயிலை உருவாக்க முடியாது. முன்னோர் உருவாக்கி வைத்த கோயிலை பாதுகாக்க முடியவில்லை. பௌர்ணமிக்கு, அமாவாசைக்கு ஒருநாள் ஈஷா யோகா தொண்டர்களும், பொதுமக்களும் சேர்ந்து சுத்தம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.