உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 10, 2011

விருத்தாசலம் இறையூர் அருணா மேல்நிலைப் பள்ளி மாணவி கணக்குப் பதிவியல் பாடத்தில் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண்

 




விருத்தாசலம்:

               விருத்தாசலம் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த இறையூர் அருணா பள்ளி மாணவி கணக்குப்பதிவியல் பாடத்தில் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.  

             விருத்தாசலம் கல்வி மாவட்டம் பெண்ணாடம் அடுத்த இறையூர் அருணா மேல்நிலைப் பள்ளி மாணவி சவுந்தர்யா. இவர் கணக்குப் பதிவியல் பாடத்தை முதன்மைப் பாடமாக எடுத்து படித்து வந்தார்.   இந்நிலையில் நடைபெற்று முடிந்த பிளஸ் 2 தேர்வில் கணக்குப் பதிவியல் பாடத்தில் 200-க்கு 200 மதிப்பெண் பெற்று தமிழகத்திலேயே கணக்குப் பதிவியல் பாடத்தில் முதலிடம் பிடித்துள்ளார். இவர் பெற்ற மொத்த மதிப்பெண் 1151 ஆகும். சி.ஏ. படிக்க விரும்புகிறேன். இதுதான் என் நீண்டநாள் கனவு என தெரிவித்தார்.





Read more »

கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் மாணவிகளே சாதனை

 கடலூர் : 

                மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 26,204 மாணவ, மாணவிகளில் 40 பேர் அனைத்து பாடங்களிலும் தோல்வியடைந்துள்ளனர். 

             பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாவட்டத்தில் 165 பள்ளிகளில் இருந்து 26,204 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். அவர்களில் 21,394 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 
                
                 கடலூர் கல்வி மாவட்டத்தில் 8,452 மாணவர்கள், 10,362 மாணவிகள் என மொத்தம் 18,814பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 6,640 மாணவர்கள், 8,882 மாணவிகள் என மொத்தம் 15,522 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவர்கள் 78.56 சதவீதமும், மாணவிகள் 85.71 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

               விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் மாணவிகளின் தேர்ச்சி சதவீதத்தை விட மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. 3,877 மாணவர்கள், 3,513 மாணவிகள் என மொத்தம் 7,390 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 3,140 மாணவர்கள், 2,732 மாணவிகள் என மொத்தம் 5,872 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 77.76 சதவீதமும், மாணவர்கள் 80.99 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவிகளை விட மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிக மதிப்பெண்: 

                        நெய்வேலி ஜவகர் மெட்ரிக் பள்ளி மாணவர் ரேவந்த், நெய்வேலி குளூனி பள்ளி மாணவி கங்கா ஆகியோர் 1,182, நெய்வேலி குளூனி பள்ளி மாணவி சுவாதி 1,181, அதே பள்ளியை சேர்ந்த மாணவிகள் கிருத்திகா, நந்தினி ஆகியோர் 1,180 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களிலும், தனியார் பள்ளிகளில் மாவட்டத்தில் முதலிடத்தை பிடித்துள்ளனர்.

கல்வி மாவட்டம்: 

                 கடலூர் கல்வி மாவட்டத்தில் நெய்வேலி குளூனி பள்ளி மாணவி நந்தினி 1180, சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளி மாணவர் முனீஸ்வரன் 1,177, நெய்வேலி குளூனி பள்ளி மாணவி செரின் சல்மா, சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி மாணவர் பார்த்திபன் 1174 மதிப்பெண் பெற்று மாவட்டம் மற்றும் கல்வி மாவட்டத்தில் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர். 

                விருத்தாசலம் பாத்திமா மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் அசோக்குமார் 1,159, அந்தோபாஸ்டின் 1,156, எறையூர் அருணா மேல்நிலைப் பள்ளி மாணவர் அமுதன் 1,153 மதிப்பெண் பெற்று விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர். 

அரசு பள்ளியில் முதலிடம்: 

              அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சிதம்பரம், அபிராமி 1,137, கடலூர் துறைமுகம் பிரியா 1,134, புதுப்பேட்டை கோமதி 1,125 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவிலும், கடலூர் கல்வி மாவட்ட அளவில் அரசு பள்ளிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர். நல்லூர் மாணவர் விஜயகுமார் 1,101, காட்டுமன்னார்கோவில் காவேரி 1,087, நல்லூர் கொளஞ்சிநாதன் 1,083 மதிப்பெண் பெற்று விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர்.

நிதி உதவி பெறும் பள்ளிகளில் முதலிடம்: 

              கடலூர் புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ராஜபிரியா 1,157, நஸ்ரீன் பானு, 1,154, கலைவாணி 1,153 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவிலும், கடலூர் கல்வி மாவட்ட அளவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர். எறையூர் அருணா மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அமுதன் 1,153, சவுந்தர்யா 1,151, காட்டுமன்னார்கோவில் பி.ஆர்.ஜி., பள்ளி முத்து 1,139 மதிப்பெண் பெற்று விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர். 

40 பேர் வாஷ் அவுட்: 

         மாவட்டத்தில் 12,329 மாணவர்கள், 13, 875 மாணவிகள் தேர்வு எழுதினர். அதில் 9780 மாணவர்கள், 11,614 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2549 மாணவர்கள், 2261 மாணவிகள் தோல்வி அடைந்துள்ளனர். அதில் 2135 பேர் ஒரு பாடத்திலும், 1504 பேர் இரண்டு பாடத்திலும், 750 பேர் மூன்று பாடத்திலும், 289 பேர் நான்கு பாடத்திலும், 93 பேர் ஐந்து பாடத்திலும், 6 பாடத்தில் 40 பேர் தோல்வி அடைந்துள்ளனர். 

தோல்வியில் மாணவர்கள் அதிகம்: 

              தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை மாணவிகளைவிட 1546 குறைவாக இருந்தது. ஆனால், தோல்வி அடைந்தவர்களில் பெண்களை விட மாணவர்கள் 288 பேர் அதிகமாக உள்ளனர். 

செஞ்சுரியில் சாதனை: 

                ஒரு பாடத்தில் 99 பேரும், இரண்டு பாடங்களில் 39 பேரும், மூன்று பாடத்தில் ஒரு மாணவர் நூறுக்கு நூறு மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 82 சதவீதம் தேர்ச்சி

 கடலூர் : 

              கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் இந்த ஆண்டு மாணவர்களை விட மாணவிகள் 4 சதவீதம் பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

             கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 12 ஆயிரத்து 329 மாணவர்களும், 13 ஆயிரத்து 875 மாணவிகள் என மொத்தம் 26 ஆயிரத்து 204 பேர் பங்கேற்றனர். அவர்களில் 9,780 மாணவர்களும், 11 ஆயிரத்து 614 மாணவிகள் என மொத்தம் 21 ஆயிரத்து 394 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இதில் 2,549 மாணவர்களும், 2,261 மாணவிகள் என மொத்தம் 4,810 பேர் தோல்வியடைந்துள்ளனர். மாணவர்கள் 79.32 சதவீதமும், மாணவிகள் 83.7 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

               மாணவர்களை விட வழக்கமாக மாணவிளே இந்த ஆண்டும் 4 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.அதேப்போன்று மாவட்டத்தில் கடந்த ஆண்டு 78 சதவீதமாக இருந்த ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் இந்த ஆண்டு 82 சதவீதமாக உயர்ந்துள்ளது. 

கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி புனித ஜோசப் குளுனி பள்ளி மாணவி நந்தினி 1180 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், 

சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளி மாணவர் முனீஸ்வரன் 1177 மதிப்பெண் பெற்று இரண்டாமிடத்தையும், 

நெய்வேலி புனித ஜோசப் குளூனி பள்ளி மாணவி செரின் சல்மா, 

சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி மாணவர் பார்த்திபன் ஆகியோர் தலா 1174 மதிப்பெண் பெற்று மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அமுதவல்லி கூறியது:

                கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 4 சதவீதம் அதிகரித்துள்ளது. சேப்பாக்கம், தர்மநல்லூர் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது பாராட்டுக்குரியது. மாவட்ட அளவில் ஆதி திராவிடர் நலப்பள்ளிகளின் தேர்ச்சி சதவீதமும் கூடியுள்ளது. 

                விருந்தாசலம் கல்வி மாவட்டத்திலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு பின் தங்கிய பள்ளிகளை கண்டறிந்து துவக்கத்தில் இருந்தே அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு தேர்ச்சி பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 

                கடலூர் கல்வி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 12 மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தன. ஆனால் இந்த ஆண்டு இரு மடங்காக உயர்ந்து 24 பள்ளிகள் தேர்ச்சி பெற்றுள்ளது. பின் தங்கிய மாணவர்களை தேர்ச்சியடையச் செய்வதற்காக முக்கிய வினாக்கள் அடங்கிய கையேடு வழங்கப்பட்டது. இந்த கையேடு மாணவர்கள் தேர்ச்சியடைய மிகவும் பயனுள் ளதாக அமைந்தது. இவ்வாறு சி.இ.ஓ., அமுதவல்லி கூறினார்.

Read more »

புதுப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி கோமதி கடலூர் மாவட்ட அளவில் மூன்றாம் இடம்

கடலூர் : 

                   ""டாக்டருக்கு படிப்பதே எனது விருப்பம்'' என அரசு பள்ளிகளில் மூன்றாம் இடம் பிடித்த மாணவி கோமதி கூறினார்.

         பிளஸ் 2 பொதுத் தேர்வில் அரசு பள்ளியில் மாவட்ட அளவில் புதுப்பேட்டை அரசு   மேல்நிலைப் பள்ளி மாணவி கோமதி 1,125 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார். 

பாட வாரியாக மதிப்பெண் விவரம்:

தமிழ் 189, 
ஆங்கிலம் 172, 
இயற்பியல் 192, 
வேதியியல் 198, 
உயிரியல் 175, 
 கணிதம் 199


              என் தந்தை கணேசன், தாய் மகேஸ்வரி ஆகியோர் நெசவு தொழில் செய்கின்றனர். நான் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 484 மதிப்பெண் பெற்றேன். பள்ளியில் முக்கிய பாடங்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தியது எனக்கு உதவியாக இருந்தது. டாக்டருக்கு படிக்க விருப்பம் உள்ளது' என்றார்.

Read more »

நெய்வேலி மாணவி செரின் கடலூர் மாவட்டத்தில் மூன்றாம் இடம்

கடலூர் : 

                ""ஏரோ நாட்டிக் இன்ஜினியரிங் படிப்பதே என கனவாகும்'' என பிளஸ் 2 தேர்வில் கடலூர் மாவட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பிடித்த நெய்வேலி மாணவி செரின் சல்மா கூறினார்.

              கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் நெய்வேலி செயின்ட் ஜோசப் குளூனி பள்ளி மாணவி செரின் சல்மா 1,200க்கு 1,174 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். 

பாட வாரியாக மதிப்பெண்கள் விவரம்: 

தமிழ் 187, 
ஆங்கிலம் 187,
இயற்பியல் 199, 
வேதியியல் 199, 
கம்ப்யூட்டர் சயின்ஸ் 200, 
கணிதம் 200. 

              எனது தந்தை சையத் மெகரஸ் என்.எல்.சி., இன்ஜினியர். தந்தை மற்றும் தாய் சாஜிதா பதூல் ஆகியோர் அதிக மதிப்பெண் பெறுவதற்கு உறுதுணையாக இருந்தனர். 10ம் வகுப்பில் 500க்கு 480 மதிப்பெண் பெற்றேன். தற்போது பிளஸ் 2வில் மாவட்டத்தில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. எம்.ஐ.டி.,யில் சேர்ந்து ஏரோ நாட்டிக் இன்ஜினியரிங் படிப்பதே எனது கனவாகும்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி மாணவர் பார்த்திபன் மூன்றாம் இடம்

கடலூர் : 

                
              ""டாக்டருக்கு படிப்பதே என் விருப்பம்'' என பிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பிடித்த சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி மாணவர் பார்த்திபன் கூறினார். கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி மாணவர் 1,174 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தை பெற்றார். 

 மதிப்பெண்   விபரம் 

தமிழ் 189, 
ஆங்கிலம் 191, 
இயற்பியல் 198, 
வேதியியல் 197, 
உயிரியல் 200, 
கணிதம் 199. 

                 எனது தந்தை பழனிவேல் அரசு பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். நான் எல்.கே.ஜி., முதல் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்று வந்தேன். 10ம் வகுப்பில் 450 மதிப்பெண் பெற்றேன். தற்போது பிளஸ் 2 தேர்வில் 1,174 மதிப்பெண் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் கஷ்டப்பட்டு படித்ததற்கு பலன் கிடைத்துள்ளது. என் தாயும், தந்தையும் ஊக்கமளித்தது பெரும் உதவியாக இருந்தது. டாக்டருக்கு படிக்க விரும்புகிறேன், என பெற்றோரின் ஆசையும் அதுதான். இவ்வாறு மாணவர் பார்த்திபன் கூறினார்

Read more »

மேல்பட்டாம்பாக்கம் கிறிஸ்தவ பள்ளி மாணவி சிறப்புத் தமிழ் பாடத்தில் மாநில அளவில் இரண்டாமிடம்

நெல்லிக்குப்பம் : 

           மேல்பட்டாம்பாக்கம் கிறிஸ்தவ பள்ளி மாணவி சிறப்புத் தமிழ் பாடத்தில் மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்துள்ளார்.

                 பிளஸ் 2 பொதுத் தேர்வில் கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் பெண்கள் கிறிஸ்தவ மேல் நிலைப்பள்ளி மாணவி பிரியங்கா சிறப்புத் தமிழ் பாடத்தில் 184 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்துள்ளார். 

பாட வாரியாக அவர் பெற்ற மதிப்பெண் விவரம்:

தமிழ் 143, 
ஆங்கிலம் 123, 
புவியியல் 145, 
வரலாறு 136,
பொருளியல் 153, 
சிறப்பு தமிழ் 184.

மாணவி பிரியங்கா கூறுகையில்," 

                  மாநிலத்தில் இரண்டாமிடம் பிடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. பள்ளிக்கு நல்ல பெயரை வாங்கித் தந்துள்ளேன். தமிழாசிரியர் தனிகவனம் செலுத்தி பாடம் நடத்தியதால் ஆர்வமுடன் படித்து வெற்றி பெற்றேன். தலைமையாசிரியர், பெற்றோர், தோழிகள் ஆதரவால் வெற்றி பெற முடிந்தது' என்றார். மாணவி பிரியங்காவை தலைமையாசிரியை விமலாகிறிஸ்டி, தமிழாசிரியர் ஒப்பிலாமணி பாராட்டினர்.

Read more »

கடலூர் கல்வி மாவட்டத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 4 சதவீதம் பேர் கூடுதலாக தேர்ச்சி

கடலூர் : 

               கடலூர் வருவாய் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 4 சதவீதம் பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 

                கடந்த ஆண்டு மோசமான தேர்ச்சி சதவீதத்தில் இருந்த ஆதி திராவிடர் நலப்பள்ளிகளான சேப்பாக்கம், தர்மநல்லூர் பள்ளிகள் இந்த ஆண்டு நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. பூஜ்ஜியம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளும், 35 சதவீதத்திற்கும் கீழ் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் எதுவும் இல்லை. ஆனால் கடலூர் கல்வி மாவட்டத்தில் அதற்கு எதிர்மாறாக அமைந்துள்ளது. சிதம்பரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளி, கடலூர் மாடர்ன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் தேர்ச்சி சதவீதம் 35 சதவீதத்திற்கும் கீழ் உள்ளன. மேலும் பரங்கிப்பேட்டை மூனா ஆஸ்திரேலியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பூஜ்ஜியம் சதவீதம் தேர்ச்சியை பெற்றுள்ளது.

Read more »

எலக்ட்ரிக்கல் மோட்டார் ரீ வைண்டிங் பாடப் பிரிவில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்த கடலூர் மாணவர் அன்பரசன்

கடலூர் :

               "இன்ஜினியரிங் படிக்க விரும்புகிறேன்' என எலக்ட்ரிக்கல் மோட்டார் ரீ வைண்டிங் பாடப் பிரிவில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்த கடலூர் மாணவர் அன்பரசன் கூறினார். 

                பிளஸ் 2 பொதுத் தேர்வில் எலக்ட்ரிக்கல் மோட்டார் ரீ வைண்டிங் பாடப் பிரிவில் 599 மதிப்பெண் பெற்று (இ.எம்.ஆர்) கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி மாணவர் அன்பரசன் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். 

பாட வாரியாக அவர் பெற்ற மதிப்பெண் விவரம்: 

தமிழ் 142, 
ஆங்கிலம் 163, 
கணிதம் 170, 
எலக்ட்ரிக்கல் மோட்டார் ரீ வைண்டிங் தியரி 199, 
செய்முறை 1 மற்றும் 2ல் தலா 200. 

மாணவர் அன்பரசன் கூறுகையில், 

                 "எனது தந்தை ராஜேந்திரன் குள்ளஞ்சாவடி அடுத்த டி.பாளையம் ஊராட்சி உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். தாய் லட்சுமிகாந்தம். இருவரும் எனக்கு ஊக்கம் அளித்தனர். மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இன்ஜினியரிங் படிக்க விரும்புகிறேன். பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் அளித்த ஒத்துழைப்பே மூன்றாம் இடம் பிடிக்க காரணமாக அமைந்தது' என்றார்.

Read more »

கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளி மாணவர் ஆதித்யன் 1175 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம்

கடலூர் : 

                 கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளி மாணவர் ஆதித்யன் 1175 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். 

               கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 294 பேர் பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வு எழுதினர். இவர்களில் 291 பேர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். 

                இப்பள்ளியில் மாணவர் ஆதித்யன் 1175 மதிப்பெண் பெற்று முதலிடமும், மாணவிகள் சுகன்யா 1167, பிரீத்தி 1166 மதிப்பெண் பெற்று முறையே இரண்டு மற்றும் மூன்றாமிடங்களை பிடித்தனர். 

            மாணவர் இந்திரஜித், மாணவிகள் ஜெயதுர்கா, ஜனனி, கிருத்திகா, சுகன்யா ஆகியோர் கணிதம் பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண் பெற்றனர். மாணவர் சித்தார்த்தன் கணக்குப் பதிவியல் பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண் பெற்றார். 1150 மதிப்பெண்ணுக்கு மேல் 5 பேரும், 1100க்கு மேல் 27 பேர், 1050க்கு மேல் 45 பேர், 1000த்திற்கு மேல் 101 பேர் மதிப்பெண் பெற்றனர். தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தாளாளர் ராஜேந்திரன், நிர்வாக அதிகாரி சிரீஷா கண்ணன் ஆகியோர் பாராட்டினர்.

Read more »

சிவில் டிராப்ட்ஸ்மேன் பிரிவில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த என்.எல்.சி., பள்ளி மாணவி அனிதா

நெய்வேலி : 

                    "டிவி பார்க்கும் பழக்கம் இல்லாததால் என்னால் படிப்பில் சாதிக்க முடிந்தது' என சிவில் டிராப்ட்ஸ்மேன் பிரிவில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த என்.எல்.சி., பள்ளி மாணவி அனிதா கூறினார்.

                பிளஸ் 2 பொதுத் தேர்வில் டிராப்ட்ஸ்மேன் (சிவில்) பிரிவில் என்.எல்.சி., மேல்நிலைப் பள்ளி மாணவி அனிதா 596 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். 

பாட வாரியாக அவர் மதிப்பெண் விவரம்:

தமிழ் 181, 
ஆங்கிலம் 171, 
கணிதம் 183, 
தியரி 196, 
செய்முறை ஒன்று மற்றும் இரண்டில் தலா 200 மதிப்பெண். 

மாணவி அனிதா கூறுகையில்,"

                நான் 10ம் வகுப்பு தேர்வில் பள்ளி அளவில் முதல் இடத்தை பிடித்தேன். தற்போது பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.எ னது அப்பா கூலித்தொழிலாளி. தினமும் ஏதாவது வேலை கிடைத்தால் தான் உண்டு. எனது பெற்றோர் மட்டுமின்றி பள்ளி ஆசிரியர்கள் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர். எனக்கு "டிவி' பார்க்கும் பழக்கம் இல்லாததால் படிப்பில் முழுமையாக கவனம் செலுத்த முடிந்தது. இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்பது எனது ஆசை' என்றார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior