உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 30, 2011

கடலூர் பாதிரிக்குப்பத்தில் ஜூன்-1 ம் தேதி இலவச அரிசி திட்டம் தொடக்க விழா : அமைச்சர் எம்.சி.சம்பத்


கடலூர்:
           அமைச்சர் எம்.சி.சம்பத் கடலூர்- நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அங்கு அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக சமூகநலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட கலெக்டர் சீத்தாராமன், வருவாய் அதிகாரி ராஜேந்திரன் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கூட்டம் முடிந்த பின்னர் அமைச்சர் எம்.சி.சம்பத் அளித்த பேட்டி:

       தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா தலைமை யிலான இந்த அரசு வருகிற 1-ந் தேதி (புதன்கிழமை) முதல் ஏழை, எளிய குடும்பங்களுக்கு 20 கிலோ அரிசியை இலவசமாக வழங்குகிறது. கடலூர் மாவட்டத்தில் இதற்கான தொடக்க விழா கடலூர் அருகே உள்ள பாதிரிக்குப்பம் ஊராட்சியில் நடக்கிறது. இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் 6 லட்சத்து 38 ஆயிரத்து 525 குடும்பங்கள் பயன்பெற உள்ளன. கடலூர் தொகுதியில் பழுதடைந்துள்ள நடை பாதைகள் சீரமைக்கப்படும்.

               கடலூர் நகராட்சி பகுதியில் காலியாக உள்ள பொது இடங்களை கண்டறிந்து அங்கு அழகிய பூங்காக்கள் அமைக்கப்படும். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தது போல கடலூர் சில்வர் பீச் அழகுபடுத்தப்படும், படகு குழாம் சீரமைக்கப்படும். அடுத்த ஆண்டு கோடை விழா கொண்டாட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

              இதில் நகர செயலாளர் குமார் என்கிற குமரன், ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட துணை செயலாளர் முருகுமணி, தொகுதி செயலாளர் சி.கே.சுப்பிரமணியன், எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் சேவல்குமார், விவசாயஅணி காசிநாதன், பேரவை இணை செயலாளர் ஏ.ஜி.மதியழகன், பொருளாளர் ஆர்.வி. ஆறுமுகம், மகளிர் அணி நாகரத்தினம், பேச்சாளர் புலிசை சந்திரகாசன், வக்கீல் மாசிலாமணி, கவுன்சிலர் கந்தன், முன்னாள் நகர பொருளாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் ஏழுமலை, ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் வீரமணி, தே.மு.தி.க. நகர செயலாளர் ஏ.ஜி.தஷ்ணா, லெனின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Read more »

என்.எல்.சியில். சி.ஐ.டி.யூ சார்பில் ஆர்ப்பாட்டம்

நெய்வேலி:

                  என்.எல்.சி. தொழிலாளர் ஊழியர் சங்கத்தின் (சி.ஐ.டி.யூ.) சார்பில் நெய்வேலி புதுநகர் 19-வது வட்டம் மெயின் பஜார் காமராஜர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் குப்புசாமி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார்.

* என்.எல்.சி. நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியத்தை அமுல்படுத்த வேண்டும்.

* அலுவலக பணி நேரம் மாற்றத் திட்டத்தை நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும்.

* இரவு பணியில் வேலை பார்க்கும் தொழி லாளர்களுக்கு, அதிகாரி களுக்கு இணையாக ரூ.60-ல் இருந்து ரூ.80 ஆக உயர்த்தி தர வேண்டும்.

* இன்கோசர்வ் தொழிலாளர்களுக்கு பணிக்காலத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு 15 ஆண்டு கள் பணி முடித்தவர்களுக்கு வெகுமதி அளிக்க வேண்டும்.

* போனஸ்- இன்சென்டிவ் அலவன்ஸ்களில் வித்தி யாசம் இல்லாமல் அதிகாரி களுக்கு இணையாக வழங்க வேண்டும்.

* உணவக தொழிலாளர்களின் பதவி உயர்வை சரி செய்ய வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
 
 
 

Read more »

கடலூர் மாவட்டத்தில் 61 ஆயிரம் விதவை- முதியோருக்கு ரூ.1000 உதவித்தொகை

 கடலூர் மாவட்டத்தில் 61 ஆயிரம் விதவை- முதியோருக்கு ரூ.1000 உதவித்தொகை: அமைச்சர் செல்வி ராமஜெயம் தகவல்
 
கடலூர்:

                சமூகநலத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் செல்விராமஜெயம் முதல் முறையாக நேற்று கடலூர் அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அங்கு கலெக்டர் சீத்தாராமன், வருவாய் அதிகாரி ராஜேந்திரன், கோட்டாட்சியர் முருகேசன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மனோகரன், செய்தி- மக்கள் தொடர்பு அதிகாரி முத்தையா உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகளும், கட்சி பிரமுகர்களும் அமைச்சருக்கு சால்வை அணிவித்தும், பூங்கொத்துகள் கொடுத்தும் வரவேற்றனர்.

           இதைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் சமூகநலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து ஊரக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், கலெக்டர் சீத்தாராமன், வருவாய் அதிகாரி ராஜேந்திரன், சமூகநலத்துறை அதிகாரி புவனேஸ்வரி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரி சீனிவாசன் ஆகியோருடன் அமைச்சர் செல்விராமஜெயம் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அமைச்சர் செல்விராமஜெயம்  கூறியது:-


            விதவை பெண்கள், முதியோர் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத பெண்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை ரூ.500-ல் இருந்து ரூ.1,000-மாக உயர்த்தி வழங்கப்படும் என அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி இந்த உதவித்தொகை வருகிற 1-ந்தேதி (புதன்கிழமை) முதல் 7-ந் தேதி (செவ்வாய்கிழமை) வரை வழங்கப்படும். இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் 61 ஆயிரத்து 984 பேர் பயன் அடைவார்கள். இதற்காக மாதந்தோறும் ரூ.6 கோடியே 19 லட்சத்து 84 ஆயிரம் செலவிடப்படுகிறது. சமூகநலத்துறையின் திட்டங்கள் கடந்த ஆட்சியை விட மிகவும் சிறப்பாக செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

                இதில் மாவட்ட மகளிர் அணி செயலாளர் நாகரத்தினம், எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் ராமலிங்கம், ஜெயலலிதா ஒன்றிய பேரவை செயலாளர் வீரமணி, முன்னாள் மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் சங்கர், ஆசிரியர் நாகராஜன், நகர பொருளாளர் சிவகுமார், நகர ஜெயலலிதா பேரவை தமிழ்செல்வன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 

Read more »

அசுத்தமாக்கப்படும் கடலூர் ஆறுகள்: நகர மக்களின் சுகாதாரம் கேள்விக் குறி


ஜவான்ஸ் பவன் அருகே குப்பை மேடாக மாற்றப்பட்டு வரும் கெடிலம் ஆறு.
 
கடலூர்:

       கடலூரில் குப்பைகளைக் கொட்டி ஆறுகள் குப்பை மேடுகளாக மாற்றப்பட்டு வருவதால், நகர மக்களின் சுகாதாரம் கேள்விக் குறியாக மாறி வருகிறது.

              பெண்ணையாறு, கெடிலம் ஆறு, உப்பனாறு ஆகியவை கடலூர் நகரம் வழியாக ஓடி வங்கக் கடலில் கலக்கின்றன.பெண்ணையாற்றிலும் கெடிலம் ஆற்றிலும் மழை காலங்களில் மட்டுமே வெள்ளப் பெருக்கு ஏற்படுகின்றன. வெள்ளைக்காரர்கள் ஆட்சி காலத்தில் நீர்வழிப் போக்குவரத்துக்காக வங்கக் கடலோரம் உருவாக்கப்பட்ட உப்பனாற்றில், பெண்ணை ஆறும் கெடிலம் ஆறும் கலந்து கடலில் சங்கமம் ஆகின்றன.இதனால் நீண்ட தூரம் உள்ள உப்பனாற்றில் ஏராளமான ரக மீன்கள் உள்ளன. 

               எனவே கடலூர் உப்பனாற்றில் சிறிய படகுகள் மூலமாகவும், தூண்டில்களைப் பயன்படுத்தியும், 300-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மீனவர் குடும்பங்கள் மீன்களைப் பிடித்து பிழைப்பு நடத்தி வந்தன.ஆனால் ஆலைக் கழிவுகளை வெளியேற்றுவதற்கு இதுதான் சரியான இடம் என்று கடலூரை மத்திய அரசு தேர்வு செய்ததால், மேல்நாடுகள் பலவற்றில் தடை செய்யப்பட்ட உயிர் காக்கும் மருந்துகள், ரசாயனப் பூச்சிக் கொல்லி மருந்துகள், சாயங்கள் போன்றவற்றைத் தயாரிக்கும் பன்னாட்டுத் தொழிற்சாலைகள், துணிகளுக்குச் சாயம் ஏற்றும் தொழிற்சாலைகள், ஏற்றுமதி தரம் வாய்ந்த ஜெல்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளிட்டவை உப்பனாற்றின் கரையில் நிறுவப்பட்டு உள்ளன.

             இவற்றின் மோசமான ரசாயனக் கழிவுகள் உப்பனாற்றிலும், கடலிலும் கலப்பதால், உப்பனாறு பெருமளவில் மாசுபட்டு மீன்களே இல்லாத நிலைக்குச் சென்று கொண்டு இருக்கிறது.இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், கடலூர் மக்களின் சுகாதாரமும் கேள்விக் குறியாக மாறிவிட்டது.தற்போது நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் எதையும் கண்டுகொள்ளாத பொறுப்பற்ற தன்மையால், கெடிலம் மற்றும் பெண்ணையாறுகளும் மாசுபட்டு வருகிறது. கெடிலம் மற்றும் பெண்ணை ஆறுகளில் நகரின் கழிவுகள் அனைத்தும் கொட்டப்படுகின்றன.

               ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள், கோழிக் கடைகள் வைத்து இருப்போர் கழிவுகள் அனைத்தையும் ஓசையின்றி ஆறுகளில் கொட்டி நகரை அசுத்தத்தின் கேந்திரமாக மாற்றி வருகிறார்கள்.பிளாஸ்டிக் குப்பைகள் அனைத்தும் ஆறுகளில் தாராளமாகக் கொட்டப்படுகின்றன. இந்த நிலையில் கடலூர் பாதாளச் சாக்கடைத் திட்டக் கழிவுகளையும் சுத்திகரித்து, உப்பனாற்றில் கலந்துவிடத் திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

           ஏற்கெனவே ஆறுகளில் 15 கி.மீ. தூரம் வரை கடல் நீர் புகுந்து விட்டதால், கடலூர் நகரில் நிலத்தடி நீர் உவர் நீராக மாறிவிட்டது. மாசுபட்ட நிலத்தடி நீர், கட்டுப்பாடின்றி கழிவுகள் கண்ட இடங்களில் எல்லாம் கொட்டிவிடும் பரிதாப நிலையால், கடலூர் நகரம் மக்கள் வாழத் தகுதியற்ற நகரமாக மாறி வருவது, மக்களை பெரிதும் கவலையில் ஆழ்த்தி வருகிறது.




Read more »

மீன்பிடித் தடைகாலம் முடிவடைந்தது : மீன்பிடிப்பில் கடலூர் மீனவர்கள்

 கடலூர்:

            நாள்கள் மீன்பிடித் தடைகாலம் முடிவடைந்ததால், கடலூர் மாவட்ட மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை மீன் பிடிக்கக் கடலுக்குள் சென்றனர்.62 கி.மீ. தூரம் கடற்கரையைக் கொண்ட கடலூர் மாவட்டத்தில் 30 ஆயிரம் குடும்பங்கள் மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு உள்ளன. 

               ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்கும் வசதி கொண்ட 1000 பெரிய படகுகள், கட்டுமரங்கள் மற்றும் 5 ஆயிரம் சிறிய படகுகள் கடலூர் மாவட்டத்தில் உள்ளன.ஏப்ரல் 15-ம் தேதி முதல் 45 நாள்கள் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலமாக இருப்பதால், மீன் வளத்தைப் பெருக்கும் வகையில், அந்தக் காலத்தில் வங்கக் கடலில் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டு இருந்தது.பெரிய படகுகளில் சென்று சிறிய மீன்களைக் கூட பிடித்துவிடும் வலைகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டு இருந்தது. 

              சிறிய படகுகள், கட்டுமரங்கள் மட்டும் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டு இருந்தன.மீன்பிடித் தடைகாலத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளையும் வலைகளையும் பழுதுபார்க்கும் பணிகளில் ஈடுபட்டு இருந்தனர்.மீன்பிடித் தடைகாலம் முடிந்து கடலூர் மீனவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன், ஞாயிற்றுக்கிழமை காலை மீன் பிடிக்கச் சென்றனர்.90 சதவீதம் படகுகள் மீன்பிடிக்கச் சென்று இருப்பதாக மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் சுப்புராயன் தெரிவித்தார். 

                இவற்றில் பெரும்பாலான படகுகள் மீன் பிடித்து கொண்டு இன்று (திங்கள்கிழமை) காலை கரை திரும்பும் என்றும், மற்ற படகுகள் ஆழ்கடலில் 3 அல்லது 4 நாள்கள் தங்கி மீன் பிடித்துவிட்டுக் கரை திரும்பும் என்றும் சுப்புராயன் தெரிவித்தார். மீன்கள் ஏராளமாகக் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.




Read more »

பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருமானம் மற்றும் முதல் பட்டதாரிச் சான்று பெற மாணவர்கள் திரண்டதால் பரபரப்பு

பண்ருட்டி:

           வருமானம் மற்றும் முதல் பட்டதாரிச் சான்று பெற மாணவர்களும், பெற்றோர்களும் பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.  

           பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பள்ளி, கல்லூரிகளில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக ஜாதி, வருமானம், இருப்பிடம் மற்றும் முதல் பட்டதாரிக்கான சான்றுகளை பெற வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு செய்துள்ளனர்.  

            பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மேற்கண்ட சான்றுகளை பெற விண்ணப்பித்துள்ளனர்.  கடந்த சில நாள்களுக்கு முன்னர் விண்ணப்பித்தவர்களுக்கு சனிக்கிழமை சான்றுகள் வழங்கப்படும் என வட்டாட்சியர் அலுவலகத்தினர் கூறியுள்ளனர்.  இதைத் தொடர்ந்து சனிக்கிழமை ஏராளமானோர் சான்றுகளைப் பெற பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன் திரண்டனர்.  ஆனால் வாயிலில் சனி, ஞாயிறு விடுமுறை என எழுதி கதவு மூடியிருந்ததால் மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் கோபமடைந்ததால் வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.   பின்னர் வட்டாட்சியர் அனந்தராம் கூடியிருந்தவர்களிடம் சமரசம் பேசி திங்கள்கிழமை சான்று தருவதாக கூறி அனுப்பி வைத்தார்.  

பின்னர் வட்டாட்சியர் அனந்தராம் கூறியது,

         முதல் பட்டதாரி, வருமானம், இருப்பிடம், ஜாதிச் சான்று கேட்டு ஏராளமானோர் விண்ணப்பித்து உள்ளனர். பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. விடுமுறை நாளான சனிக்கிழமை கூட்டம் அதிகம் வந்தனர்.  விடுமுறை நாள்களிலும் பரிசீலனைப் பணி நடைபெற்று வருகிறது. எனவே சான்று கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு திங்கள்கிழமை சான்றுகள் வழங்கப்படும் என அனந்தராம் கூறினார்.  



Read more »

கடலூர் கோயில்களில் அக்னி நட்சத்திர தோஷம் நீங்க சிறப்புப் பூஜை

கடலூர்:

           அக்னி நட்சத்திரத் தோஷம் நீங்க கடலூர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.  

             கத்திரி வெயில் எனும் அக்கினி நட்சத்திரம் மே 4-ம் தேதி தொடங்கியது. இதனால் கடலூரில் கடும் வெயில் தகித்தது.   பல நாள்களில் வெப்பம் 100 டிகிரியைத் தாண்டியது. மக்களை வாட்டி வதைத்த அக்கினி நட்சத்திரம் ஞாயிற்றுக்கிழமை முடிவடைகிறது. அக்கினி நட்சத்திர காலத்தில் மக்களுக்கு பலவேறு தோஷங்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. தோஷங்களை நிவர்த்தி செய்ய கடலூர் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டன.  

              கடலூர் திருப்பாப்புலியூர் பாடலீஸ்வரர் கோயிலில் அக்னி நட்சத்திரம் நிறைவு சிறப்பு பூஜை சனிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிவரை நடந்தது.  108 கலசங்களில் புனித நீர் ஊற்றி சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிக்கு, பாடலீஸ்வரருக்கு அந்த நீரைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.  மகாதேவ குருக்கள், நாகராஜ குருக்கள் ஆகியோர் சிறப்பு பூஜைகளைச் செய்தனர். இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ஜெகந்நாதன், செயல் அலுவலர் மேனகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



Read more »

சிதம்பரம் அருகே அமைச்சர் செல்வி ராமஜெயம் வரவேற்பு விழாவில் பட்டாசு வெடித்து தீ விபத்து

சிதம்பரம்:

            சிதம்பரம் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமூகநலத் துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் நேரில் சென்று ஆறுதல் அளித்து இலவச வேட்டி-சேலை, அரிசி மற்றும் நிவாரணத் தொகை ஆகியவற்றை வழங்கினார். 

               சிதம்பரத்தை அடுத்த பூங்கொடி, தரசூர் ஆகிய கிராமங்களில் தீவிபத்தில் 12 வீடுகள் அண்மையில் எரிந்து சேதமடைந்தன. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்களில் ஒருவரான செல்வி ராமஜெயம் ஞாயிற்றுக்கிழமை மேற்கண்ட கிராமங்களுக்குச் சென்று வேட்டி-சேலை, அரிசி மற்றும் நிவாரணத் தொகை தலா ரூ.2 ஆயிரம் வழங்கி ஆறுதல் தெரிவித்தார். 

              இந்நிகழ்ச்சியில் காட்டுமன்னார்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் நாக.முருகுமாறன், கோட்டாட்சியர் எம்.இந்துமதி, வட்டாட்சியர் ஜே.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக ஞாயிற்றுக்கிழமை காலை சிதம்பரத்தை அடுத்த புவனகிரி, கீரப்பாளையம் ஆகிய பகுதிகளில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார். அப்போது ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். 

சிறப்பான வரவேற்பு: 

               தமிழக சமூகநலத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற செல்வி ராமஜெயம் சனிக்கிழமை இரவு தனது சொந்த ஊருக்கு திரும்பினார். அப்போது சொந்த ஊரான பரங்கிப்பேட்டைக்குச் செல்லும் வழியில் சிதம்பரத்தை அடுத்த பி.முட்லூரில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பி.முட்லூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார். பி.முட்லூரில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பல்வேறு வாகனங்களில் ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டனர். இதனால் கடலூர் - சிதம்பரம் சாலையில் 20 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

கட்சி நிர்வாகிகளின் கட்டுப்பாட்டை தளர்த்துவாரா?  

வெடி கலாசாரம்:  

              தனது சொந்த தொகுதியான புவனகிரி தொகுதியில் அமைச்சர் செல்வி ராமஜெயம் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அப்போது கீரப்பாளையத்தில் நீர்மோர் பந்தல் திறப்பு விழாவுக்கு வந்தபோது சாலையில் 2 ஆயிரம் வாலா வெடியை வைத்து தீ வைத்தனர். அவ்வழியே வந்த வாகனங்களை போலீசார்  நிறுத்தாததால் அந்த நேரத்தில் சிதம்பரத்திலிருந்து கடலூர் நோக்கி வந்த அரசு பஸ்ஸின் அடியில் வெடி சிக்கி வெடித்தது. 

             இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அலறியடித்து அங்கும், இங்கும் ஓடினர். டிரைவர் உடனடியாக பஸ்ûஸ எடுத்ததால் பயணிகள் அமைதியடைந்தனர். வெடியின் மீது சிக்கிய பஸ் சிறிதுநேரம் நின்றிருந்தால் பஸ் தீப்பிடித்திருக்கும் என பயணிகள் தெரிவித்தனர். அமைச்சர் செல்லும் இடமெல்லாம் வெடி, வெடித்து கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். இச்செயல் பொதுமக்களை முகம் சுளிக்க வைத்ததை பார்க்க முடிந்தது. மேலும் செல்வி ராமஜெயத்தை மக்கள் நெருங்க விடாமல் கட்சி நிர்வாகிகள் தடையாக இருந்ததால் பொதுமக்கள் அமைச்சரிடம் சென்று தங்களது குறைகளை தெரிவிக்க இயலவில்லை என தெரிவித்தனர். 

            எனவே எதிர்காலத்தில் அமைச்சர் செல்வி ராமஜெயம் வெடி கலாச்சாரத்தை தடுத்து, கட்சி நிர்வாகிகளின் கட்டுப்பாட்டை தளர்த்து பொதுமக்களை சந்திக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.


 

Read more »

கடலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை நகர பகுதிக்கு மாற்ற வேண்டும்: ஆட்டோ ஓட்டுனர் சங்கம் வலியுறுத்தல்

கடலூர் : 

           வட்டார போக்குவரத்து அலுவலகத்தை நகர பகுதிக்கு மாற்ற வேண்டும் என கடலூர் நகர ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் கூட்டமைப்பு நலச் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 

             கடலூர் நகர ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் கூட்டமைப்பு நலச் சங்கக் கூட்டம் திருப்பாதிரிப்புலியூர் ரயில்வே ஆட்டோ சங்க அலுவலகத்தில் நடந்தது. நகர தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். செயலர் முருகேசன் முன்னிலை வகித்தார். துணைச் செயலர் சண்முகம், பொருளாளர் ஜெயக்குமார், கவுரவத் தலைவர் செல்வமூர்த்தி, துணைத் தலைவர் அமானுல்லா ஷெரீப் உள்ளிட்டோர் பேசினர். கூட்டத்தில், புதிதாக அமைந்துள்ள தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. 

             குறிஞ்சிப்பாடி தொகுதியில் அமைத்துள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தை கடலூர் நகர பகுதிக்கு மாற்ற வேண்டும். 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்க வேண்டும். பெட்ரோல் விலை மற்றும் ஆட்டோ காப்பீட்டு தொகையை உயர்த்தியதை கண்டிப்பது. பசுமை வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 



Read more »

இந்திய விமானப் படை பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர் : 

         இந்திய விமானப் படையில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் வரும் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

          இந்திய விமானப்படைக்கு வீரர்கள் தேர்வு முகாம் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. இப்பணியில் சேர விருப்பம் உள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 , இன்டர் மீடியேட் அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பாலிடெக்னிக் படித்து 50 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரம் மற்றும் விண்ணப்பம் வேண்டுவோர் ( www.indianairforce.nic.in ) என்ற இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் ஜூன் 10ம் தேதிக்குள், 

சென்ட்ரல் ஏர்மென் செலக்சன் போர்டு,
தபால் பெட்டி எண் 11807,
புதுடில்லி - 110010

என்ற முகவரிக்கு வரும் 10ம் தேதிக்குள் சாதாரண தபாலில் அனுப்ப வேண்டும்.

இதுகுறித்த விவரம் வேண்டுவோர் 

"ஏர்மென் செலக்சன் சென்டர்,
ஏர்போர்ஸ் ஸ்டேஷன்,
தாம்பரம்,
சென்னை - 600046
என்ற முகவரியிலோ

அல்லது 044-22791853, 044-22396565 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


Read more »

பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் : கடலூர் மாவட்டத்திற்கு 30 வது இடம்

தமிழக மாவட்டங்களின்  பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் வருமாறு:-

1. விருதுநகர் (95.93)
2. ஈரோடு   (93.83)
3. தூத்துக்குடி  (93.01)
4. சிவகங்கை (92.85)
5. பெரம்பலூர் (92.29)
6. தேனி (91.41),
7. தஞ்சை (90.86),
8. திருச்சி (90.25),
9.மதுரை (90.10),
10.கன்னியாகுமரி (89.21),
11. நெல்லை (88.83)
12. சென்னை (88.21),
13.ராமநாதபுரம் (88.01),
14.திண்டுக்கல் (88.00),
15 கரூர் (87.23).
 16- நாமக்கல் (86.55),
17.அரியலூர் (84.50),
18.கோவை (83.96),
19.நீலகிரி (83.76),
20.தருமபுரி (83.76)
21.புதுக்கோட்டை (83.39),
22.திருப்பூர் (83.00),
23.கிருஷ்ணகிரி (82.79),
24.நாகப்பட்டினம் (81.82),
25.வேலூர் (80.82),
26.காஞ்சீபுரம் (80.75),
27.சேலம் (80.28, )
28.விழுப்புரம் (80.03),
29.திருவண்ணாமலை (80.00).

கடைசி 3 இடத்தில் கடலூர், திருவள்ளூர், திருவாரூர் மாவட்டங்கள் இருக்கின்றன.

கடலூர் மாவட்டம் 78.85 தேர்ச்சி விகிதம் பெற்று 30-வது இடத்திலும், திருவள்ளூர் மாவட்டம் 76.51 சதவீத தேர்ச்சி பெற்று 31-வது இடத்திலும் இருக்கின்றன. எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி விகிதத்தில் திருவாரூர் மாவட்டம் 32-வது கடைசி இடத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தில் 76.10 சதவிகிதம் மாணவ-மாணவிகளே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior