உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 23, 2010

மூடியே கிடக்கும் துணை சுகாதார நிலையம்

பண்ருட்டி:     

                    தொடங்கப்பட்ட நாள் முதல் இயங்காமல் மூடியுள்ள கீழிருப்பு துணை சுகாதார நிலையத்தில், மருத்துவரையும், மருத்துவ உதவியாளர்களையும் நியமித்து கிராமப்புற மக்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லை என்றால் கிராம மக்களை திரட்டி சாலை மறியல் போராட்டம் செய்யவுள்ளதாக இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் வெ.பழனிமுருகன் தெரிவித்துள்ளார். 

 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:  

                              பண்ருட்டி வட்டம் கீழிருப்பு கிராமம் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் மருத்துவ வசதி பெறுவதற்காக, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் துணை சுகாதார நிலையம் கீழிருப்பில் கட்டப்பட்டது. கட்டப்பட்ட நாள் முதல் மூடியே உள்ளதால், கிராம மக்கள் சிகிச்சைக்காக பண்ருட்டிக்கு செல்கின்றனர். பிரசவம் பார்பதற்காகவும், அவசரக் கால சிகிச்சைக்காகவும் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம் மூடியுள்ளதால், பிரசவம் மற்றும் அவசர உதவி பெற முடியாத நிலை உள்ளதால் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் குடிநீர் வசதிக்காக கட்டப்பட்ட தொட்டி குப்பைகள் நிறைந்து சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. மிகுந்த பொருள் செலவில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையத்துக்கு மருத்துவரையும், மருத்துவ உதவியாளரையும் பணியமர்த்தி கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சிகிச்சை கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.  இல்லை என்றால் அரசின் அலட்சியப் போக்கை கண்டித்து, கிராம மக்களை திரட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக இந்து மக்கள் கட்சியின் கடலூர் மாவட்டத் தலைவர் வெ.பழனிமுருகன் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும் கீழிருப்பு கிராம சாலைகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளன. பல ஆண்டுகளாக சாலைகள் போடாததாலும், போதிய பராமரிப்பு இல்லாததாலும் பழுதடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொது மக்களும் பாதிப்படைந்து வருகின்றனர். எனவே இப்பகுதியில் சாலைகள் அமைத்து தரவேண்டும் எனவும் வெ.பழனிமுருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Read more »

வட்டாட்சியர் அலுவலகங்களில் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்

கடலூர்:  

                    முதல்வர் கலைஞரின் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான காப்பீட்டுத் திட்டப் பயனாளிகள் பட்டியலில் சேர்க்க, புகைப்படம் எடுக்கும் 2-ம் கட்டப் பணியும் முடிவடைந்து விட்டதால், இனி அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் உறுப்பினர் சேர்க்கைப் பணி நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) எஸ்.நடராஜன் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

                             முதல்வர் கலைஞரின் உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான காப்பீட்டுத் திட்டத்தில் பயனாளிகள் பட்டியிலில் சேர்க்க, 30-8-2009 முதல் 2-12-2009 வரை புகைப்படம் மற்றும் கைவிரல் ரேகைப் பதிவு செய்யும் பணி, முதல் கட்டமாக கிராமங்கள் தோறும் நடைபெற்றது. முதல் கட்டப் பணியின் போது விடுபட்டவர்களுக்கு 2-ம் கட்டமாக இப்பணி 21-12-2009 முதல் 13-1-2010 வரை கிராமங்கள் தோறும் நடத்தப்பட்டது. இரு கட்டங்களிலும் புகைப்படம் எடுத்துக் கொள்ளாமல், விடுபட்ட தகுதியானவர்களை இத்திட்டத்தில் சேர்க்க, அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் குழு ஒன்று 20-1-2010 முதல் 3 மாதங்களுக்குச் செயல்பட உள்ளது. இத்திட்டத்தில் சேர 26 நல வாரிய உறுப்பினர்களும், ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்குக் கீழ் உள்ள, ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் தகுதியானவர்கள். அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோர், இ.எஸ்.ஐ. திட்டத்தில் உறுப்பினர்களாக உள்ளோர் இத்திட்டத்தில் சேரத் தகுதி அற்றவர்கள்.

                              விடுபட்டவர்கள் இத்திட்டத்தில் சேர வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு புகைப்படம் எடுத்துக் கொள்ள வருவோர், ரேஷன் கார்டுடன் நலவாரிய அடையாள அட்டை, நலவாரியங்களில் உறுப்பினர்களாக அல்லாதோர் கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து பெறப்பட்ட வருமானச் சான்று ஆகியவற்றுடன் வர வேண்டும் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

இருளில் மூழ்கும் ரயில்வே மேம்பாலம்

சிதம்பரம்: 

                        சிதம்பரம்-அண்ணாமலைநகர் இடையே அமைக்கப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலம் திறக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இதுவரை மின்விளக்கு பொருத்தப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர்  விடுதியில் தங்கி பயிலுகின்றனர். அதுமட்டுமல்லாமல் நேரடியாக ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் இந்த ரயில்வே மேம்பாலத்தை கடந்து சென்று வருகின்றனர்.  இவையல்லாமல் அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் இப்பாலத்தை கடந்து செல்கின்றனர். மேம்பாலத்தில் தினமும் 20-க்கும் மேற்பட்ட மாடுகள், ஆடுகள் படுத்து உறங்குகின்றன. இதைக் கடந்து வாகனங்கள் செல்வது கடினமாக உள்ளது. மேம்பாலத்தை, அமைச்சர்கள் வெள்ளக்கோவில் சுவாமிநாதன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து பல மாதங்கள் ஆகியும் பாலத்தில் மின்விளக்கு வசதி செய்யப்படவில்லை. இதனால் தினந்தோறும் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும் பாலத்தின் இருசந்திப்பிலும் எந்த வழியாக எந்த வாகனம் வருகிறது எனத் தெரியாமல் பல விபத்துகள் நடைபெறுகிறது.

              எனவே இருசந்திப்பிலும் ரவுண்டானா அமைக்க வேண்டும் என தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி மாநில செயல் தலைவர் இளங்கோயாதவ் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

Read more »

கிளேடிஒலஸ் மலர் விற்பனை

சிதம்பரம்:

               சிதம்பரம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட வட மாநில வண்ண மலரான கிளேடிஓலஸ் மலர் விற்பனை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்க விரிவுரையாளர் தி.ராஜ்பிரவீன் மற்றும் ஜம்மு மாநில தோட்டக்கலைத்துறை விஞ்ஞானி மனோஜ்நாசர் ஆகியோரால் இம்மலர் அறிமுகப்படுத்தப்பட்டு சிதம்பரத்தை அடுத்த சி.முட்லூர் கிராமத்தில் 2007-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது சி.முட்லூர் முன்னோடி விவசாயிகளின் தோட்டங்களில் வெற்றிகரமாக சாகுபடி செய்யப்பட்டு அதிகளவில் கிளேடிஒலஸ் பல வண்ணங்களில் பூக்கத் தொடங்கி உள்ளது. கிளேடிஒலஸ் வண்ண மலர்களின் விற்பனை தொடக்க விழா சிதம்பரம் தெற்குவீதி ஏசியன் வணிக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் ஹெச்.பௌஜியாபேகம் தொடங்கி வைத்தார். சி.முட்லூர் கிளேடிஒலஸ் சாகுபடி செய்துள்ள முன்னோடி விவசாயிகள் சீனுவாசப்பெருமாள், பானுசந்தர், அருள் உள்ளிட்டோர் வேளாண் அனுபவங்களை விளக்கி கூறினர். ÷விரிவுரையாளர் தி.ராஜ்பிரவீன் நன்றி கூறினார்.

Read more »

ஆதிதிராவிடர் பகுதி கோயில்களை புனரமைக்க தலா ரூ.25 ஆயிரம் நிதி

கடலூர்:  

                     கடலூர் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள 30 கோயில்களைப் புனரமைக்க, தலா ரூ. 25 ஆயிரத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை வழங்கினார். இத் திட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் 30 கோயில்களுக்குத் தலா ரூ. 25 ஆயிரம் வழங்கப்படுகிறது.  நிகழ்ச்சியில், கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கரசு, இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் ஆர்.ஜெகன்னாதன், திருவந்திபுரம் தேவனாத சுவாமி கோயில் நிர்வாக அலுவலர் கிருஷ்ணகுமார், கோயில் ஆய்வாளர்கள் தேவராஜ், நாகராஜன், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read more »

வீராணம் ஏரியில் கூடுதல் நீர் தேக்குவதால் பயிர்கள் பாதிப்பு

கடலூர்:  

                       வீராணம் ஏரியில் கூடுதல் நீர் தேக்குவதற்கு கடலூர் மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) எஸ்.நடராஜன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடந்தது. கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

                       வீராணம் விவசாயிகள் சங்கத் தலைவர் இளங்கீரன்: வீராணம் ஏரியின் தற்போதைய நீர்மட்டம் 36 அடி. சென்னைக்குக் குடிநீர் கொண்டு செல்வதற்காக  இதை 37.5 அடியாக உயர்த்த அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். வீராணம் ஏரியில் 36 அடி நீர் இருக்கும்போதே ஏரியின் எதிர்கரையில் (மேற்குக் கரை) இருக்கும் 5 ஆயிரம் ஏக்கர் நெல் வயல்கள் தண்ணீரில் மூழ்கி விட்டன. வீராணம் ஏரியின் நீர் மட்டத்தை மேலும் உயர்த்தினால், அறுவடைக்குத் தயாராக இருக்கும் இந்த வயல்களில், 2 அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் தேங்கி அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்படும். எனவே பிப்ரவரி 10-ம் தேதி வரை வீராணம் ஏரியின் நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது.

                                பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன்: கடலூர் மாவட்டத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள பழைய மின் மோட்டார்களை மாற்ற 50 சதவீதம் மானியம் அளிக்கும் திட்டத்தில் 900 பேர் கடலூர் மாவட்டத்தில் இருந்து மனு அளித்தனர். ஆனால் 250 பேருக்குத்தான் வழங்கப்பட்டது. ஆனால் விழுப்புரம் மாவட்டத்தில் 850 பேருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் கடந்த ஆண்டு மானிய விலையில் வழங்க கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கு தலா 20 டிராக்டர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் விழுப்புரம் மாவட்டத்துக்கு 30-ம், கடலூர் மாவட்டத்துக்கு 10 மட்டுமே வழங்கப்பட்டது.

                        இந்த பாரபட்சமான போக்கு மாற வேண்டும். 100 நாள் வேலைத் திட்டப் பணிகளை ஆய்வு செய்ய சமுதாயப் பணிக் குழு அமைக்கப்பட இருக்கிறது. இக்குழுவில் விவசாயிகளும் இடம்பெற வேண்டும்.÷வெலிங்டன் ஏரி நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் மருதாச்சலம்: வெலிங்டன் ஏரி கரை சீரமைப்புப் பணிகளை கண்காணிக்கும் பொறியாளர்கள் நடைபெறும் பணிகள் குறித்து விவசாயிகளுடன் ஆலோசனை பெறவேண்டும். பணிகள் முடிந்ததும், வாய்க்கால்களில் ஒழுங்காக ஏரி நீர் செல்வதை உறுதி செய்ய வேண்டும்.

                         மாவட்ட விவசாயத் தொழிலாளர் சங்கச் செயலாளர் ரவீந்திரன்: கடலூர் மாவட்டத்தில் நிரந்தர வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சிறப்புத் திட்டம் தயாரித்து அரசுக்கு அனுப்பப்பட்டு இருப்பதாக அறிகிறோம்.

                                     இது குறித்து கடலூர் மாவட்ட விவசாயிகளுடன் விவாதிக்க வேண்டும். தொலைநோக்குடன் இந்தத் திட்டம் அமைய வேண்டும். காவிரி டெல்டா பாசனப் பகுதிகளுக்கு தாமதமாகத் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் மார்ச் 30-ம் தேதி வரை மேட்டூர் அணை நீர் கிடைக்க வேண்டும். வெலிங்டன் ஏரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பெண்ணாடம் சோமசுந்தரம்: அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் தூற்றும் இயந்திரங்கள் நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் கூடுதலாக வழங்க வேண்டும். 

             வட்டாட்சியர் அலுவலகங்களில் பட்டா மாறுதல் பணி மிகவும் மந்தமாக நடக்கிறது. இது தொடர்பாக விண்ணப்பம் செய்வோர் சீனியாரிட்டி பட்டியல் பராமரிக்கப்பட வேண்டும். விவசாயிகளின் குறைகள் பரிசீலிக்கப்பட்டு ஆவன செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) உறுதி அளித்தார். கூட்டத்தில் வேளாண் இணை இயக்குநர் இளங்கோவன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மணி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Read more »

சுனாமி நகரில் மர்ம தீ விபத்து ரூ.15 லட்சம் சுருக்கு வலை சேதம்

கடலூர் :

            நள்ளிரவில் ஏற்பட்ட மர்ம தீ விபத்தில் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுருக்கு வலை எரிந்து சேதமானது. கடலூர் தேவனாம் பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் முத்து, உதயவாணன், வேலு, விக்னேஷ் உள்ளிட்ட 10 பேருக்கு சொந்தமான சுருக்கு வலை சுனாமி நகரில் கடந்த இரண்டு நாட்களாக பழுது நீக்கும் பணி நடந்தது.

                       இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவுக்குப் பின் சுருக்கு வலை வைத்திருந்த கொட்டகை தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த கடலூர் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் கொட்டகைக்கு முன் வைத்திருந்த 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுருக்கு வலை முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

துப்பாக்கியால் சுட்டு கொள்ளை முயற்சி வழக்கு: இரண்டு பேர் கைது

கடலூர் :

                    வடலூரில் நகைக் கடை உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டு கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் என எஸ்.பி., அஷ்வின் கோட்னீஷ் தெரிவித்தார்.

அவர் நேற்று  கூறியதாவது:

                  கடலூர் மாவட்டம் வடலூர் சீத்தாராமன் நகரைச் சேர்ந்தவர் சிங்காரம்(49). நெய்வேலி மெயின் ரோட்டில் லட்சுமி ஜூவல்லரி நகை கடை வைத்துள்ளார். டிச., 19ம் தேதி இரவு 9.30 மணிக்கு வீட்டிற்கு மோட்டார் பைக்கில் சென்றபோது அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள் சிங்காரத்தை துப்பாக்கியால் சுட்டு, கத்தியால் வெட்டி நகைகள் இருப்பதாக கருதி மோட்டார் பைக்கை பறித்துக்கொண்டு தப்பினர்.

                        ஐந்து சிறப்பு படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தோம். இந்த வழக்கில் சீர்காழி தாலுகா வெள்ளப்பாக்கம் கலியமூர்த்தி மகன் பாக்கியா (எ) பாக்யராஜை பிடித்து விசாரணை செய்தோம். கடலூர் அடுத்த மேலக்குப்பம் சேகர் (எ) சங்கர், வெள்ளப்பாக்கம் வினோத், சசி மற்றும் இவர்களுக்கு உடந்தையாக வினோத்தின் தாய் மரகதம் இருந்தது தெரிந்தது. பாக்கியராஜ், மரகதம் இருவரும் கைது செய்யப்பட்டனர். வினோத் வீட்டிற்கு அருகே குப்பையில் பதுக்கி வைக்கப் பட்டிருந்த இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றபட்டன.

                  முக்கிய குற்றவாளிகளான சங்கர், சசி, வினோத் ஆகியோருக்கு கோயம்புத்தூர், சேலம், திருநெல்வேலி, ஆந்திரா உட் பட பல பகுதிகளைச் சேர்ந்த குற்றவாளிகளிடம் தொடர்பு உள்ளது.சங்கர் வானூர் இரட்டை கொலை வழக்கு, கிருமாம்பாக்கம், கிராண்ட் பஜார், திருக்கனூர், வில்லியனூர், பொறையார், கோட்டுச்சேரி, கண்டமங்கலம் பகுதிகளில் வீடு புகுந்து கொள்ளை, வழிபறி உட்பட 12 வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர். மேலு<ம் சங்கர் நாட்டு வெடிகுண்டு தயாரிக்க தெரிந்தவர், இவரிடம் நாட்டு வெடி குண்டுகள், நாட்டு துப்பாக்கிகள் உள்ளன.

             தேடப்பட்டு வரும் வினோத், சங்கர், சசி விரைவில் கைது செய்யப்படுவார்கள். இவர்கள் குறித்த தகவல் தெரிந்தவர்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு எஸ்.பி., கூறினார்.

Read more »

சிதம்பரம் அருகே மாருதி வேன் தீப்பிடித்தது வேனில் இருந்தவர்கள் ஓடியதால் பரபரப்பு

பரங்கிப்பேட்டை :

                      சிதம்பரம் அருகே கேஸ் சிலிண்டர் வெடித்து மாருதி ஆம்னி வேன் தீப்பிடித்தது. வேனில் இருந்தவர்கள் இறங்கி ஓடியதால் தப்பினர். வடலூர் இ.பி., நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (50). இவரின் உறவினர் திருமணத்தில் கலந்து கொள்ள செல்வராஜ் உள்ளிட்ட ஆறு பேர் மாருதி ஆம்னி வேனில் வடலூரில் இருந்து புதுச்சத்திரத்திற்கு புறப்பட்டனர்.

              வயலாமூர் அருகே வரும்போது சாலையில் காயவைத்திருந்த வைக்கோலில் மாருதி ஆம்னி வேன் சிக்கிகொண்டது. அப்போது திடீரென சைலன்சரிலிருந்து தீப்பிடித்து வேன் எரிய தொடங்கியது. உடன் காரில் இருந்த அனைவரும் இறங்கி ஓடினர். சிறிது நேரத்தில் சிலிண்டர் வெடித்து வேன் எரிந்தது.

                  மேலும் அப்பகுதியில் காய வைத்திருந்த மூன்று ஏக்கர் வைக்கோலும் தீயில் கருகியது. இந்த சம்பவத்தில் வேனிலிருந்தவர்கள் தப்பியோடியதால் உயிர் தப்பினர். தகவலறிந்த சிதம்பரம் தீயணைப்பு நிலையத்திலிருந்து வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். இருந்தும் மாருதி ஆம்னி வேன் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

Read more »

அரசு பஸ் பழுதால் பயணிகள் கடும் அவதி மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு

திட்டக்குடி :

                       திட்டக்குடி அருகே பழுதான பஸ்சிலிருந்து இறக்கப்பட்ட பயணிகள் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூரிலிருந்து நேற்று மதியம் 3.10 மணியளவில் திருச்சி மார்க்கமாக சுமார் 90 பயணிகளுடன் அரசு பஸ் புறப்பட்டது. பஸ் திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி அருகே வந்து கொண்டிருந்த போது, பஸ்சின் பின்புற டயருக்கு மேல்புறம் செல்லும் ஆங்கர் திடீரென பழுதானது. பஸ்சை ஓட்டி வந்த கடலூர் டிரைவர் ராஜாஜி, திட்டக்குடி பஸ் நிலையத்தில் 30 பயணிகளை இறக்கிவிட்டார்.

                         பின்னர் திட்டக்குடி பணிமனைக்கு முன்பாக இறக்கி விடப் பட்ட பயணிகளில் சிலர் நிறுத்தப்பட்ட பஸ்களில் ஏறி சென்றனர். ஆனால் திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை வரை செல்வதற்காக குழந்தைகளுடன் நின்றிருந்த பயணிகள் சுமார் 20 பேர் மாற்று பஸ் இல்லாமல் ஒன்னே முக்கால் மணி நேரம் அவதியடைந்தனர்.

                     இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்த திட்டக்குடி இன்ஸ் பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட முயன்ற பயணிகளை சமாதானம் செய்து, திருச்சி நோக்கி சென்ற அரசு பஸ்சை நிறுத்தி ஏற்றிவிட்டனர். இந்த சம்பவத்தால் திட்டக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Read more »

மாற்று இடத்தில் நினைவுத்தூண் திட்டக்குடியில் பதட்டம் தணிந்தது

திட்டக்குடி :

                    திட்டக்குடியில் நேற்று முன்தினம் முதல் பதட்டம் நிலவி வந்த நிலையில், விடுதலை சிறுத்தை கட்சியினர் வேறு இடத்தில் நினைவுத் தூணை அமைத்ததால், பதட்டம் தணிந்தது. திட்டக்குடியில் கடந்த 1995ம் ஆண்டு நடந்த துப்பாக்கி சூட்டில் இறந்த வதிஷ்டபுரம் சண்முகம், தொளார் ரமேஷ் ஆகியோருக்கு நினைவு தூண் அமைக்க விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் இளமங்கலம் கிராமத்தில் இடம் தேர்வு செய்யப் பட்டது.

                    இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே பதட்டம் நிலவியது. இந்நிலையில் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் நேற்று திட்டக்குடியில் கூடி ஆலோசனை செய்தனர். அதில் மதியம் ஒரு மணிக்கு இளமங்கலம் கிராமம் வரை நடத்த இருந்த அமைதி ஊர்வலத்தை கைவிட்டு, வதிஷ்டபுரம் காலனிக்கு செல்லும் வழியில் நினைவுத்தூண் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

                      அதன்படி மாவட்ட துணை செயலாளர் முத்தமிழ்மாறன் தலைமையில், மாவட்ட பொருளாளர் அன்பழகன் முன்னிலையில், மாவட்ட செயலாளர் திருமாறன் நினைவுத் தூணை திறந்து வைத்தார். நகர அமைப்பாளர் குமார், செயலாளர் ஜேம்ஸ், மாணவரணி செயலாளர் சுப்ரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

                  நினைவுத் தூண் அமைப்பதில் பிரச்னை ஏற்படாமல் இருக்க நகரின் முக்கிய பகுதிகளில் டி.எஸ்.பி., இளங்கோ, இன்ஸ்பெக்டர்கள் ராமதாஸ்,தமிழ்மாறன், பெரியண்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நினைவு தூணை வதிஷ்டபுரம் பகுதியில் திறந்ததால் பதட்டம் தணிந்தது.

Read more »

வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

கடலூர் :

                     சி.பி.ஐ., தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை கண்டித்தும் சென்னை வக்கீல்களுக்கு ஆதரவாகவும் கடலூர் மாவட்டத்தில் வக்கீல்கள் நேற்று கோர்ட் புறக்கணித் தனர்.சென்னை ஐகோர்ட் வளாகத்தில் நடந்த போலீஸ் - வக்கீல்கள் மோதல் சம்பவம் தொடர்பாக வக்கீல்கள் மீது சி.பி.ஐ., குற்றப்பத் திரிகை தாக்கல் செய்தது.

                   இதனை கண்டித்து தமிழகத்தில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் மற்றும் புதுச் சேரி வக்கீல்கள் கூட்டமைப்பு சார்பில் கடலூர் வக்கீல் சங்க தலைவர் லோகநாதன், செயலாளர் பிரேம்குமார் ஆகியோர் தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி ஒரு நாள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

Read more »

மாரத்தான் ஓட்டப்போட்டி மருத்துவ பரிசோதனை

கடலூர் :

                 கடலூரில் நடைபெறும் மாரத்தான் ஓட்டப் போட்டியில் பங்கேற் போருக்கான மருத்துவ பரிசோதனை நடந்தது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாநில அளவிலான மினி மாரத்தான் ஓட்டப் போட்டி சென்னையில் வரும் பிப்ரவரி மாதம் நடக்கிறது. இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களை தேர்வு செய்ய கடலூர் மாவட்ட அளவிலான மாரத்தான் ஓட்டப் போட்டி நாளை (24ம் தேதி) நடக்கிறது.

                    இதில் பங்கேற்பவர்களுக்கு நேற்று கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் மருத்துவப் பரிசோதனை நடந்தது. டாக்டர் சரவணன் தலைமையிலான டாக்டர்கள் பரிசோதித்து மருத்துவ சான்றுடன் கூடிய அடையாள அட்டை வழங்கினர்.

Read more »

தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் முறைகேடு விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் குற்றச்சாட்டு

கடலூர் :

                  தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் மாவட்டத்தில் உளுந்து உற்பத் தியை அதிகரிக்க அரசு வழங்கிய 80 கோடி மானியம் வழங்கப்படவில்லை என குறைகேட்பு கூட்டத் தில் விவசாயிகள் பகிரங்கமாக குற்றம் சாட்டினர்.

                  மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் கடலூர் மாவட்ட வளர்ச்சி மன்ற கூடத்தில் நடந்தது. டி.ஆர்.ஓ., நடராஜன் தலைமை தாங்கினார். வேளாண் உதவி இயக்குநர் இளங்கோவன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) மணி, நபார்டு வங்கி பொதுமேலாளர் ராஜகோபால் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

                      கூட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ரவீந்திரன் பேசுகையில், தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் மாவட்டத்தில் உளுந்து உற்பத்தியை அதிகரிக்க அரசு மானியம் வழங்கி வருகிறது. அதில் முதல் இரண்டு கட்டமாக 30 கோடி ரூபாயும், இந் தாண்டிற்கு 50 கோடி வழங் கியுள்ளது. இந்த மானியம் விவசாயிகளை சென்றடைய வில்லை.

                 உளுந்து விதைக்க போதிய விதை உளுந்து மற்றும் அதற்கான மானியம், அறுவடைக்கு பின் விவசாயிகளிடமிருந்து விதைக்காக பெறப்படும் உளுந்துக்கு வழங்க வேண் டிய மானியமும் வழங்கவில்லை. அரசின் வழிகாட்டும் நெறிமுறைகளை மீறி முறைகேடு நடந்துள்ளது. இந்த குற்றச்சாட்டை பல விவசாயிகள் ஆமோதித்ததால் திடீர் பரபரப்பு ஏற் பட்டது.

                        தொடர்ந்து பேசிய ரவீந்திரன், மாவட்டத்தில் வெள்ளச்சேதங்களை கட்டுப்படுத்த "மாஸ்டர் பிளான்' தயாரித்த பின்னர் மாவட்ட விவசாயிகள் மற் றும் பொதுமக்களின் கருத் துக்களை கேட்டறிந்த பின் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

                   பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்க ரவீந்திரன் பேசுகையில், மாவட்டத்தில் 30 ஆண்டிற்கு மேலாக பயன்படுத்தப் பட்டு வரும் மின் மோட் டார்களை, மின் சிக்கனத்தை கருத்தில் கொண்டு அரசு பழைய மின்மோட்டார்களை மாற்ற 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என அறிவித்தது. அதில் நமது மாவட்டத்திற்கு 250 மோட்டார்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் விழுப்புரம் மாவட்டத்திற்கு 850 வழங்கப்பட்டுள்ளது.

                       மானியத்தில் வழங்க இரு மாவட்டத்திற்கும் 40 அறுவடை இயந்திரத்தில் 10 மட்டுமே கடலூர் மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அனைத்திலும் கடலூர் மாவட்டம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.தேசிய வேலை உறுதித் திட்டத்தை கண்காணிக்க சமுதாய பணிக்குழு நியமிக்க உத்தரவிடப்பட் டுள்ளது. இதில் அந்த பகுதி விவசாயிகளை சேர்க்க வேண்டும் என்றார்.

                    விவசாயி இளங்கீரன் பேசும்போது, சென்னை குடிநீருக்காக வீராணம் ஏரியில் அதிகளவு தண்ணீர் தேக்கியதால் வீராணம் பகுதியில் உள்ள 12 கிராமங்களில் உள்ள 5 ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்கு தயாராக உள்ள நிலத்தில் தண்ணீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்னும்10 நாட்களில் அறுவடைமுடிந்துவிடும் அதற்குபின் தண்ணீரை தேக்கிக்கொள்ளுங்கள் என கேட்டுக்கொண்டார்.

                      இதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் தெலுங்கானா பிரச்னை காரணமாக சென்னைக்கு வரவேண்டிய கிருஷ்ணா நதி நீர் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது வீராணம் தண்ணீர் மட்டுமே. எனவே விவசாயிகள் விரைவில் அறுவடையை முடித்துக் கொள்ளவேண்டும் என கூறினார். இதைத் தொடர்ந்து பேசிய டி.ஆர்.ஓ., நடராஜன், விவசாயிகளுக்கு பாதிப்பில்லாமல் படிப்படியாக தண்ணீரை தேக்கவேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Read more »

துப்பாக்கி உரிமம் புதுப்பிக்க மாஜி நீதிபதி அலைக்கழிப்பு

சிதம்பரம் :

                      கைத்துப்பாக்கி உரிமத்தை புதுப்பிக்க, ஓராண்டுக்கு மேலாக அலைகழிக்கப் பட்டு வருகிறார் சிதம்பரத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி. சிதம்பரம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் மணி. கிருஷ்ணகிரியில் 2005ம் ஆண்டு முதன்மை மாஜிஸ்திரேட் கோர்ட் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றார்.

                  இவர் கடந்த 92ம் ஆண்டு, விழுப்புரத்தில் மாஜிஸ்திரேட்டாக பணிபுரிந்தபோது இலங் கைத் தமிழர் ஒருவர் நள்ளிரவில் அவரது பங்களாவிற்கு வந்து, தான் ஒரு கன்றுகுட்டியை கொன்றுவிட்டதாக கூறி சரணடைந்தார். அவரது உடலில் ரத்த காயங்கள் இருந்ததால், போலீசாரை வரவழைத்து அவரை அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைத்தார்.

                        நள்ளிரவில் நடந்த சம்பவத்தை தொடர்ந்து, மாஜிஸ்திரேட் மணிக்கு அப்போதைய விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., ஜெகதீசன், துப்பாக்கி உரிமம் பெற்று தந்தார். அது முதல் பாதுகாப்பு கருதி கைத்துப்பாக்கியை பயன்படுத்தி வரும் நீதிபதி மணி, முறைப்படி மூன்றுஆண்டிற்கு ஒருமுறை துப்பாக்கி உரிமத்தை புதுப்பித்து வந்துள்ளார்.

                 இறுதியாக கிருஷ்ணகிரியில் 2005ம் ஆண்டு புதுப்பித்தார்.பணி ஓய்வு பெற்றபின், தற்போது சிதம்பரத்தில் வசித்து வரும் அவர், கடந்த 2008ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி, தனது துப்பாக்கி உரிமத்தை புதுப்பித்து தரக் கோரி சிதம்பரம் ஆர்.டி. ஓ.,விடம் விண் ணப்பித்தார். 10 மாதங்களுக்கு பிறகு அப்போதைய ஆர்.டி.ஓ., ராமலிங்கம், தாசில்தார் தனவந்தகிருஷ்ணன் ஆகியோர், நீதிபதி வீட்டிற்கு சென்று விசாரித்துவிட்டு உரிமம் வழங்கலாம் என, மாவட்ட வருவாய் அலுவலருக்கு பரிந்துரை செய்தனர்.

              ஆனால் ஓராண்டிற்கு மேலாகியும் உரிமம் புதுப்பித்து தரவில்லை. அவர் நீதிபதியாக இருந்தபோது, வீடு தேடிச் சென்று உரிமத்தை புதுப்பித்து தந்த அதிகாரிகள், அவர் ஓய்வு பெற்ற பின் அலைக்கழித்து வருவது வேதனையான விஷயம்.

Read more »

சிதம்பரம் தாசில்தார் அலுவலகம் முற்றுகை ரேஷன் கார்டுகள் நீக்கத்தால் திடீர் பரபரப்பு

சிதம்பரம் :

                        முறைகேடாக நீக்கப் பட்ட குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் வழங்க கோரி கிராம மக்கள் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

                        சிதம்பரம் அடுத்த பரமேஸ்வரநல்லூர் கிராமத்தில் வி.எஸ்.ஆர்.நகர் ரேஷன் கடையில் உள்ள சுமார் 300 குடும்ப அட்டைகள் எந்த ஒரு விசாரணையும் இல்லாமல் , வீடுகளுக்கு எந்த அதிகாரிகளும் வராமலும் குடும்ப அட்டைகளை நீக்கப்பட்டதை கண்டித்தும், நீக்கப்பட்ட அட்டைகளுக்கு உடனடியாக பொருட்கள் வழங்க வலியுறுத்தியும், விசாரணை இல்லாமல் குடும்ப அட்டையை நீக்கிய அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிதம்பரம் தாசில்தார் அலுவலகம் முன்பு குடும்ப அட்டையுடன் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
    
                         உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் 28ம் தேதி ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பு போராட் டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.இதே போன்று நெய் வேலி டவுன் ஷிப்பில் வட்டம் 2 ல் உள்ள ரேஷன் கடையில் என்.எல்.சி., தொழிலாளர்கள் மற்றும் பிளாக்-1 சிலோன் குவார்ட்ரஸ் குடியிருப்பில் பொதுமக்கள் கார்டுகள் நீக்கப்பட்டதால் முற்றுகையிட்டனர். 

                           பிரச்னைக்கு தீர்வு ஏற்படாவிட்டால் வரும் 25ம் தேதி ரேஷன் கடைக்கு பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட போவதாக எச்சரித்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் திடீர் பதட்டம் ஏற்பட்டது.

Read more »

மகள் இறப்பில் சந்தேகம் பெரியம்மா போலீசில் புகார்

திட்டக்குடி :

                  மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெரியம்மா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.  திட்டக்குடி அடுத்த சாத்தநத்தத்தை சேர்ந்தவர் சேகர் மனைவி சத்யா (22). திருமணமாகி ஐந்தாண்டு ஆகும் இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சத்யா நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு தூக்கு போட்டு இறந்ததாக கூறி, மாலை 3 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டார்.

                   இதனை அறிந்த சத்யாவின் பெரியம்மா மீனாட்சி, தனது தங்கை மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக திட்டக்குடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

Read more »

இரு இடங்களில் விபத்து கார் டிரைவர் கைது

காட்டுமன்னார்கோவில் :

                   சிதம்பரத்தில் இருந்து ஜெயங்கொண்டம் சென்றபோது இரு இடங்களில் விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர். ஜெயங்கொண்டம் இந் திரா நகரை சேர்ந்தவர் அசோகன் (46). டிரைவரான இவர் நேற்று மாலை சிதம்பரத்தில் இருந்து ஜெயங் கொண்டத்திற்கு காரை ஓட்டிச் சென்றார். தவர்த் தாம்பட்டு அருகே சென்றபோது மல்லிகா என்பவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

                 இதில் படுகாயமடைந்த மல்லி காவை சிதம்பரம் அரசு மருத் துவனையில் சேர்த்தனர். அதே கார் சிறகிழந்தநல்லூர் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மீது மோதியது. இதில் கீழே விழுந்த அவர்களில் ஒருவருக்கு காலில் எலும்பு முறிவும் பலத்த காயமும் ஏற்பட்டது. தகவல் அறிந்த வீரநத்தம் கிராம மக்கள் அந்த காரை நிறுத்த முயன்றனர். கார் நிற்காமல் சென்றது. தகவலறிந்த காட்டுமன்னார்கோவில் போலீசார் கடைவீதியில் காரை மடக்கி பிடித்து டிரைவர் அசோகனை கைது செய்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior