'தனியார் கல்லூரிகளில் படித்து முடித்த பிசியோதெரபிஸ்ட்கள், 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உள்ளனர். அவர்களுக்கு எல்லாம் அரசு பணி கொடுக்கும் அளவு மருத்துவமனைகள் இல்லை. மேலும், அந்தளவு எலும்பு முறிவு டாக்டர்களும் (ஆர்தோ) இல்லை. இதேபோல, தனியார் கல்லூரிகளில் படித்த நர்ஸ்கள் ஏராளமாக உள்ளனர். இவர்களுக்கு எல்லாம் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு உள்ளது' என்று, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சுகாதாரத் துறைக்கான மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதம்:
பீட்டர் அல்போன்ஸ் - காங்கிரஸ்:
மத்திய அரசு, சென்னை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் ஒரு மருத்துவக் கல்லூரி அமைப்பதாக அறிவித்தது. அதுபற்றிய ஆய்வு முடிந்து அறிக்கையும் அனுப்பப்பட்டது. இந்தக் கல்லூரியில் மாநில அரசு ஒதுக்கீடாக 40 சதவீதமும், மத்திய அரசு ஒதுக்கீடாக 40 சதவீதமும், இ.எஸ்.ஐ., ஒதுக்கீடாக 20 சதவீதமும் மாணவர்களை சேர்த்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. கடந்த 2009ல் இந்திய மருத்துவக் கவுன்சில் இங்கு ஆய்வு செய்துவிட்டு, சில குறைபாடுகளை சுட்டிக் காட்டியது. அவற்றை சரி செய்து, மீண்டும் ஆய்வுக்கு அழைத்து கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் இன்னும் வரவில்லை. மத்திய அமைச்சர் காந்திசெல்வனிடம் பேசி, இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் பன்னீர்செல்வம்:
சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த இந்திய மருத்துவ கவுன்சில் தலைவரிடம் நேரடியாகவும், கடிதங்கள் மூலமும் முதல்வர் இதை தெரிவித்துள்ளார்.
அக்ரி கிருஷ்ணமூர்த்தி - அ.தி.மு.க:
திருவண்ணாமலையில் மருத்துவக் கல்லூரி துவக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடக்குமா?
அமைச்சர் பன்னீர்செல்வம்:
உறுப்பினருக்கு விதிமுறைகள் தெரியவில்லை. முதலில் மருத்துவமனை கட்ட வேண்டும். கட்டடங்கள் கட்டி, வசதிகள், கருவிகள் போன்ற அனைத்து வசதிகளும் செய்த பின் தான் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கிடைக்கும்.
வேல்முருகன் - பா.ம.க:
கடலூரில் மட்டும் மருத்துவக் கல்லூரி இல்லாமல் உள்ளது. பிசியோதெரபிஸ்ட்கள் 5,000 பேருக்கு மேல் படித்து முடித்து அரசு வேலைக்கு காத்திருக்கின்றனர். வரும் ஆண்டில் இப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். அதேபோல, மருத்துவக் கல்லூரியில் நான்கு ஆண்டுகள் படிக்கும் இவர்கள், டாக்டர் என பெயருக்கு முன் போட்டுக் கொள்ள தடை விதித்துள்ளனர்.
கோவிந்தசாமி - மார்க்சிஸ்ட்:
திருப்பூர் மாவட்ட மருத்துவமனை மிகவும் மோசமாக உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு ஏற்ப கட்டப்பட்ட இந்த மருத்துவமனையை தற்போதுள்ள 10 லட்சம் மக்கள் தொகைக்கு ஏற்ப நவீனப்படுத்த வேண்டும்.
அமைச்சர் பன்னீர்செல்வம்:
தனியார் கல்லூரிகளில் படித்து முடித்த பிசியோதெரபிஸ்ட்கள், 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உள்ளனர். அவர்களை நியமிக்கும் அளவு மருத்துவமனைகள் இல்லை. ஆரம்ப சுகாதார நிலையங்களில் இவர்களை நியமிக்க வேண்டுமானால், ஆர்தோ (எலும்பு முறிவு) டாக்டர்கள் வேண்டும். தாலுகா மருத்துவமனைகளில் நியமிக்கக் கூட போதுமான அளவு எலும்பு முறிவு டாக்டர்கள் இல்லை. தனியார் கல்லூரிகளில் நர்சிங் படித்த பலரும் அரசு வேலை கேட்கின்றனர். அவர்களுக்கு எல்லாம் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு உள்ளது. இவர்கள் அனைவரையும் நியமிக்க வேண்டுமென்றால், ஊர் முழுவதும் மருத்துவமனைகளை கட்ட வேண்டும். திருப்பூர் மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடம் கட்டப்படும்.
பிடிஎப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய
Read more »