பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகாவுக்கு உள்பட்ட மருங்கூரில் ரூ.60 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் மற்றும் 4 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கீழ் குப்பத்தில் அமைக்கப்பட்டு உள்ள துணைமின்நிலையம் திறப்பு விழா, கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 3,593 பேருக்கு தகுதி அட்டைகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் மருங்கூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.
விழாவுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். கலெக்டர் சீத்தாராமன், வேல்முருகன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். மின் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும், துணை மின்நிலையத்தையும் திறந்து வைத்து, கலைஞர் வீடு வழங்கும் திட்ட பயனாளிகளுக்கு தகுதி அட்டைகளை வழங்கி பேசியதாவது:-
தமிழகத்தில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 6 ஆண்டுகளில் 21 லட்சம் வீடுகள் கட்டப்பட உள்ளது. இந்த ஆண்டு 3 லட்சம் வீடுகள் கட்டப்படுகிறது. இதில் கடலூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 26,119 வீடுகள்கட்டப்படுகிறது. இதற்காக 195 கோடி ரூபாயை அரசு ஒதுக்கி உள்ளது. பண்ருட்டி தொகுதியில் அடுத்த 5 ஆண்டுகளில் வீடு பெற உள்ள 15,267 பேரில் 3593 பேருக்கு இந்த விழாவில் தகுதி அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளது.
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேசியது
வருகிற தேர்தலில் வேறு கட்சி ஆட்சிக்கு வந்தால் வீடு கட்டி கொடுக்க மாட்டார்கள் என்று சொன்னார். அவர் சந்தேகப்படவேண்டாம். 6-வது தடவையாக கலைஞர் தான் ஆட்சிக்கு வருவார்.
வேல்முருகன் எம்.எல்.ஏ. பேசுகையில்,
இந்த ஆட்சியில் இத்தொகுதி பெற்றிருக்கிற துணைமின்நிலையம், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பற்றியெல்லாம் எடுத்து சொல்லி நன்றி தெரிவித்தார். அவர் ஒவ்வொன்றையும் சொல்லி நன்றி தெரிவித்த போது, எனக்கு என்ன நினைவுக்கு வந்தது என்றால், நீங்கள் ஓட்டுப் போட்டு என்னை தேர்ந்து எடுத்தீர்கள், நான் உங்களுக்கு இவ்வளவு செய்திருக்கிறேன், அடுத்து நான் உங்களுடன் இருப்பேனா, இருக்க மாட்டேனா? அல்லது வேறு தொகுதிக்கு போய்விடுவேனா? என்பது தெரியவில்லை என்பது போல் இருந்தது. அவர் இந்த விழாவுக்கு வந்து, மனதில் ஒளிவு, மறைவு இல்லாமல் நன்றி கூறியது, அந்த கட்சியே நன்றி கூறியது போல் இருக்கிறது.
பண்ருட்டி தொகுதியில் உள்ள கீழ்குப்பம் கிராமத்தில் துணைமின்நிலையம் கொண்டு வரவேண்டும் என்று வேல்முருகன் எம்.எல்.ஏ. சட்டமன்றத்தில் கேட்டார். அதை நான் ஏற்றுக்கொண்டு நிறைவேற்றி தந்து இருக்கிறேன். மருங்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக மேம்படுத்தப்பட்டு உள்ளது. இனிமேல் அங்கு 24 மணி நேரமும் மருத்துவ வசதி கிடைக்கும். கலைஞர் காப்பீட்டு திட்டம் மூலம் ஏழை எளிய மக்களும், டாடா, பிர்லா சிகிச்சை எடுக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் வசதியை கலைஞர் ஏற்படுத்தி தந்து இருக்கிறார்.
அதேபோல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் கொடுத்து இருக்கிறார். எனவே நம் நாட்டில் யாருக்கும் எந்த குறையும் இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு சாதனைகளை கலைஞர் அரசு செய்திருக்கிறது. இவ்வாறு அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசினார்.
முன்னதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேசியது:-
அ.தி.மு.க. கூட்டணியில் அவர்கள்(பா.ம.க.) இருந்த போது, ஒரு மாதம் தான் தாக்குபிடித்தார்கள், அதன் பிறகு வெளியே வந்து விட்டார்கள். அந்த ஆட்சியில் ஏதாவது ஒரு திட்டத்தையாவது பண்ருட்டி தொகுதிக்கு பெற முடிந்ததா? இல்லை. ஆனால் எங்கள் கூட்டணியில் அவர்கள் இருந்த போது, இழுத்து பிடித்து நின்றார்கள், அதற்கு அமைச்சர் ஆற்காடு வீராசாமியும் ஒரு காரணம். ஆனால் எங்கள் ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி கொடுத்து இருக்கிறீர்கள் என்று வேல் முருகன் புகழ்ந்து பேசினார். அதற்கு அவர் இப்போது நன்றி சொல்ல வேண்டாம். இன்னும் 4 மாதங்களில் தேர்தல் வரப் போகிறது. அப்போது அவர் நன்றி காட்ட வேண்டும். இவ்வாறு அமைச்சர் பன்னீர் செல்வம் பேசினார்.
முன்னதாக வேல்முருகன் எம்.எல்.ஏ. பேசுகையில்,
அரசியல் தட்ப வெப்ப நிலைகள் ஒருமாதிரியாக இருக்கிறதால், நான் அமைச்சர் பன்னீர் செல்வம் அழைத்தும் கூட அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தேன். என் தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு நன்றி சொல்வதற்காக இந்த விழாவுக்கு வந்து இருக்கிறேன். முதல்-அமைச்சர் கருணாநிதியை முன்அனுமதி பெறாமல் சந்திக்கக் கூடிய ஒரே எம்.எல்.ஏ. நான்தான்.
கடலூர் மாவட்டத்துக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி வந்த போது, வேல்முருகனுக்காக தமிழ்நாட்டின் முதல் அரசு பொறியியல் கல்லூரியை பண்ருட்டி தொகுதியில் அமைக்கிறேன் என்று அறிவித்தார். இந்த 5 ஆண்டுகளில் ஒரே தொகுதியில் 177 ஊட்டச்சத்து மையங்கள் உருவாக்கப்பட்ட தொகுதி எனது தொகுதி யாகும். இதனால் நான் முழுமனதிருப்தியோடு இருக்கிறேன். முதல்-அமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் கோபாலகிருஷ்ணன், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் டாக்டர் என்.ராஜா. பஞ்சாயத்து தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். பண்ருட்டி ஒன்றியக்குழு தலைவர் எழிலரசி ரவிச்சந்திரன், மாநில தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயராமன், பண்ருட்டி நகர செயலாளர் ராஜேந்திரன், புலவர் ராமலிங்கம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அரிராமச்சந்திரன், சுந்தரமூர்த்தி, ஊராட்சிமன்ற தலைவர்கள் சீனுவாசன், தனலட்சுமி சண்முகம், சூடாமணி ராதாகிருஷ்ணன், சிவசண்முகம், கதிர்வேல் கடலூர் நகர பா.ம.க. செயலாளர் ஆனந்த், செய்திமக்கள் தொடர்பு அதிகாரி முத்தையா, உதவிமக்கள் தொடர்பு அதிகாரி சாய்பாபா, சுகாதாரபணிகள் துணை இயக்குனர் டாக்டர் மீரா மற்றும் பயனாளிகள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Read more »